அரசியல் களத்தில் மட்டும் தாக்கம் செலுத்திய தலைவர்கள் மத்தியில் பல்வேறு தளங்களில் தனித்தன்மையுடன் இயங்கியவர் கருணாநிதி. பொழுது புலர்வதற்கு முன் ஒரு கதையோ கட்டுரையோ எழுத உட்காருகின்ற எந்தவொரு தமிழ் எழுத்தாளரின் மனதிலும் எழுதுமேஜையின் முன் அமர்ந்திருக்கும் கருணாநிதியின் உருவம் மின்னி மறையும். மேடையில் ஏறி நின்று எதிரிலிருப்பவர்களுக்கு வணக்கம் சொல்லி தனது பேச்சைத் தொடங்குகிற ஒவ்வொரு பேச்சாளரின் மனதிலும் கருணாநிதியின் கரகரத்த குரல் ஒலிக்கும். பொதுப் பிரச்சினை ஒன்றுக்காகத் தெருவுக்கு வந்து முழக்கமிட ஆயத்தமாகும் எந்தவொரு அரசியல் செயல்பாட்டாளர் மனதிலும் கருணாநிதியின் ஆவேசம் குமிழியிடும்.
அந்த எழுத்தாளர் கருணாநிதியை ‘பிரச்சார எழுத்தாளன்’ என்று நிராகரிப்பவனாக இருக்கலாம். அந்தப் பேச்சாளர் தயாராவது கருணாநிதியைத் திட்டுவதற்காகவும்கூட இருக்கலாம். அந்த சமூகச் செயல்பாட்டாளர் போராட்டத்துக்குத் தயாராவது கருணாநிதியின் ஆட்சியை எதிர்த்தும்கூட இருக்கலாம். அவருக்கும் கருணாநிதிதான் ஆதார சக்தி. தமிழ் எழுத்துலகமும் அரசியல் களமும் கடந்த அரை நூற்றாண்டு இப்படித்தான் கடந்துவந்திருக்கிறது. கறாரான எந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் இந்தப் பார்வையை மறுக்க முடியாது!
ரசவாதி!
உடன்பிறப்புகளாகிவிட்ட தொண்டர்களிடம் மட்டுமல்ல, தன்னை விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று எல்லோர் கருத்திலும் கருணாநிதி ஊடுருவி வேதிவினைகளை நிகழ்த்தியிருக்கிறார். அந்த வகையில் அவர் ஒரு ரசவாதி. திமுக தொண்டர்கள் கரைவேட்டியிலும் மஞ்சள் துண்டிலும் தங்களது அபிமான கருணாநிதியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வெளியே காட்டிக்கொள்வதில்லை. ஆனாலும், ஒவ்வொரு தமிழருக்குள்ளும் கருணாநிதி உண்டு. அவர்கள் மனசுக்குள் மட்டுமே மஞ்சள் துண்டு அணிபவர்கள். கருணாநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’யின் முதலிரண்டு பாகங்களையும் இதயப் படபடப்போடு படித்து முடிக்காத அரசியல்வாதிகள் தமிழகத்தில் யாராவது இருக்கிறார்களா என்ன? அவர்கள் எந்த அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது இயக்கத்துக்கான எரிபொருட்களில் ‘நெஞ்சுக்கு நீதி’யும் ஒன்று என்பதை யாராவது மறுப்பார்களா? அந்தப் புத்தகம், திராவிட இயக்கத் தலைவர் ஒருவரின் சுயசரிதை மட்டுமல்ல. சமூக அக்கறை கொண்ட ஒரு இளைஞன் உணர்ச்சிப் பெருக்கோடு அரசியலுக்குள் தன்னைக் கரைத்துக்கொள்ளும் கதை.
வழிகாட்டும் ஒளிவிளக்கு
தமிழ் நிலத்திலிருந்து அரசியலுக்குள் அடியெடுத்துவைக்கும் எந்த இளைஞனையும் அது பித்தேற்றிப் பேய் நடனம் புரியவைக்கும் புத்தகம். தமிழ் இளைஞர்களின் அரசியல் அரிச்சுவடிகளில் அதுவும் ஒன்று. எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த பிறகு, அரிச்சுவடிகள் அவசியப்படாமல் போகலாம். காலவோட்டத்தில் தன் மீது விழுந்த கறைகளுக்கெல்லாம் கருணாநிதி தனது சுயசரிதையில் சமாதானம் சொல்லியிருக்கிறார் என்று இளம் வாசகர் ஒருநாள் விமர்சகராக மாறி எதிர்க்கேள்வியும் கேட்கலாம். ஆனால், எந்தக் கொள்கையை முன்னெடுத்தாலும் அதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை விலையாகக் கொடுக்க வேண்டும் என்பதை அவர் ஒருபோதும் மறுக்கவே மாட்டார்.
வாழ்வின் துயரார்ந்த தருணங்களில் சிக்கிக் கிடப்பவர்களுக்குக் கருணாநிதி ஒரு ஒளிவிளக்கு. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நிற்காதே, தொடர்ந்து முன்னேறு என்று கண் முன்னால் வாழ்ந்த உதாரணம் அவர். தொடர் தோல்விகளா? அயர வேண்டாம். ‘ஞாலம் கருதுபவன் கலங்காது காலம் கருதியிருக்க வேண்டும்’ என்று குறளுக்குத் தன்னையே ஓவியமாக்கிக்கொண்டவர். அவமானமா? துடைத்து தூரப் போடு. அவதூறா? காது கொடுக்காதே... எழுத்து, திரைப்படம், அரசியல் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழரும் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு மேலேறிவந்திருக்கிறார்கள்.
பள்ளிப் பருவத்தில் பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் நெஞ்சுக்கு நீதியைப் படித்தவன் நான். அந்த ஊரில் நான் அமர்ந்த அடுத்த நூலகம் பெரியார் படிப்பகமாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இளவரி, நா.இராமாமிர்தம், சந்திரன் என்று மூத்த பெரியாரியவாதிகளிடையே பெரியாரையும் அண்ணாவையும் கருணாநிதியையும் பாடம் கேட்கும் வாய்ப்பு அந்த இளம் வயதில் எனக்குக் கிடைத்தது. பள்ளி வயதிலேயே அது வாய்த்ததே என்று எனக்குள் எந்தப் பெருமிதமும் இதுவரை எழுந்ததில்லை. ‘மாணவநேசன்’ பற்றிய செய்தி என்னையும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தவைத்தது, எழுத்தாளனாக்கியது பத்திரிகையாளனாக்கியது, நூலகமும் பொதுக்கூட்ட மேடைகளுமே தினசரி வாழ்க்கையென அலையவைத்தது.
விமர்சகர்களால் விரும்பப்பட்டவர்
2001 சட்ட மன்றத் தேர்தல். திராவிடர் கழகம் அப்போது திமுகவை எதிர்த்து அதிமுகவுக்கு ஆதரவாகப் பெரும் கூட்டணியை ஒருங்கிணைத்தது. ‘ராஜகுரு’ என்று கி.வீரமணி கொண்டாடப்பட்ட காலக்கட்டம் அது. நான் வாக்களித்த முதல் தேர்தல். அப்போதைய தேர்தல் பிரச்சாரங்கள் எனக்கு ஏற்படுத்திய வியப்பு இன்னும் நீங்கவில்லை. தினசரி மேடையேறி கருணாநிதியை திட்டித் தீர்க்கும் கருப்புச் சட்டைக்காரர்கள் படிப்பகம் வந்ததும் முதலில் முரசொலியைத்தான் கையிலெடுத்து பக்கம் தவறாமல் படித்து முடிப்பார்கள். திட்டுகிறவர்களாலேயே வளர்ந்தவர் கருணாநிதி என்பது எப்படி உண்மையோ அதுபோல திட்டுபவர்களால் நேசிக்கப்பட்டவரும் அவராகத்தான் இருக்க முடியும். கருணாநிதி எனும் ஆளுமை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இதுதான். தமிழகத்தில் ஒவ்வொருவர் மனதிலும் இப்படி ஓராயிரம் அனுபவங்கள் இருக்கும். நதிமூலங்களை ஆராயக் கூடாது என்பதுபோலவே, நதிகள் தனது பயணத்தின் ஆதாரப்புள்ளியைப் பற்றி அறிவித்துக்கொள்ளவும் செய்வதில்லை. அதுவே நியதி.
உள் நின்று எரியும் நெருப்பு
அரசியலுக்கு வருபவர்கள் பேசினால் மட்டும் போதாது, எழுதும் திறமையையும் பெற்றிருக்க வேண்டும் என்பது அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியால் ஒரு அடிப்படைத் தகுதியாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்கூட அந்தத் தகுதிகளைக் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு அரசியல் கட்சி, தனது கட்சியின் செயல் வீரர்களை மட்டுமல்ல, படித்த இளைஞர்களையும் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும். கருணாநிதி ஆரம்பித்துவைத்த அந்த அணுகுமுறையைத்தான் அவரை எதிர்த்துநின்ற எம்ஜிஆர் இன்னும் அழுத்தமாகப் பின்பற்றினார். பெரியாரைத் துணைகோடாமல் ஆட்சி சிறப்பதில்லை என்ற சங்க கால மரபைக் கருத்தூன்றிப் படித்ததோடு அதை எளிமைப்படுத்திச் சொல்லவும் தெரிந்திருந்த கருணாநிதி, அதைச் செய்தும் காட்டினார். அவருக்குப் பின்பு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கும் அந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தான் சார்ந்த கட்சியில் மட்டுமில்லை, தன்னை எதிர்க்கும் கட்சிக்காரர்களிடம் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் கருணாநிதி. நடை, உடை, பாவனைகளில் அதன் பிரதிபலிப்பை மறைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் திறமைசாலிகள். ஒரு எழுத்தாளரின் படைப்பு வேகம், அவரது நிழலைப் போலப் பின்தொடர்ந்து ஓடிவர வேண்டும். கருணாநிதியின் கட்டற்ற எழுத்தியக்கத்தைப் பின்தொடர்பவர்களில், அதை மறைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் திறமையான எழுத்தாளர்கள். இமை திறக்கும் அடுத்த நொடியே ஒரு பிரளயத்தை எதிர்கொள்ளவும் தயாராகவே உறங்கச் செல்ல வேண்டும். அந்த சாசகத்தை விரும்புவர்கள் அதை மறைத்துக்கொள்ளவும் கூடுமென்றால், அவர்கள் சிறந்த அரசியல் தலைவர்கள். கருணாநிதி – ஒவ்வொருவர் மனதிலும் உள் நின்று எரியும் நெருப்பு!
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு:
puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago