ஒவ்வொரு கிராமமாகக் கடக்கிறேன். இரவுகள் கொடூர இரவுகளாக நகர்கின்றன. எங்கும் குதறிக் கிடக்கின்றன கடலும் கரையும். மக்களோ சிதறிக்கிடக்கிறார்கள்.
பிரிவினை வெடிகுண்டு
‘‘என்னிக்கு இந்தத் தொழிலு வந்துச்சோ, அன்னிக்கே ஊரு நாலாயிடுச்சு. கம்பு, கத்தி காலமெல்லாம் போயி வெடிகுண்டு காலம் வந்துடுச்சு. சாதியை வெச்சு வாயடைக்கணுமா, சாதியை வெச்சு அட. மதத்தை வெச்சு வாயடைக்கணுமா, மதத்தை வெச்சு அட. ரெண்டுக்கும் மூடாத வாயைக் காசை வெச்சு அட. அதுக்கும் அடங்காதவனை மூட்டிவிட்டு அட. இதாம் கணக்கு. எத்தினி பேரை ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சிருக்காங்க தெரியுமா?’’
பேசிக்கொண்டே வரும் ‘.......' அந்த இருட்டிலும் இடையே குறுக்கிடும் குழாய்களைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். ‘‘பார்த்து நடங்க. நெடுவ, நீங்க கடக்கரையைத் தோண்டிப் பாத்தீங்கன்னா கட வாயில பல எடங்கள்ல இப்பிடிக் குழாய்க தென்படும். மண்ணை அள்ளுறதோட இல்ல, கழிவையும் இப்பிடி நேரே கடலுக்குள்ள அனுப்பியூடுறங்க. எல்லாம் ரசாயனக் கழிவையும் கதிரியக்கத்தையும் சொமந்துக்கிட்டு வர்ற தண்ணீ. நாம பார்த்துப்புட்டு ஊரைக் கூட்டியாந்து ‘ஏ... யய்யா இது நியாயமா?'னு கேட்க போனா, என்னாவும் தெரியுமா? இந்த எடத்துல இந்தக் குழாய் தென்படாது. அது மேல ஒரு வண்டி மண்ணைக் கொட்டி மறைச்சுட்டு, இன்னொரு எடத்துல குழாயைப் பதிச்சுடுறது. பெறவு, கேள்வி கேட்க போறவனை பைத்தியக்காரனாக்கி கேள்வி கேக்குறது. நம்ம வாயை மூடலாம். கடலுக்குள்ள போற தண்ணீ வாய மூட முடுயுமா? அது திரும்ப நம்ம வாய்க்கே வந்து ஒலை வைக்குது.
கர எதுக்கு இருக்கு? ஒவ்வொண்ணுக்கும் காரண காரியம் இருக்கு. கரைதான் ஊருக்கும் கடலுக்கும் எடையில இருக்குற தடுப்பணை. அமாவாசையோ, பௌர்ணமையோ, அஷ்டமி, நவமியோ கட அலை மேல ஏறி எறங்கி வரும். ஒரு எடத்துல ஏறுனா, இன்னொரு எடத்துல எறங்கும். அத அனுசரிக்கத்தாம் கர.
இப்பம் கரைய நோண்டிப்புட்டோம். கடல்லேயும் கைய வெச்சாச்சு. கடலு சும்மா வுடுமா? இங்கன நீங்க கைய வெச்சா, கொஞ்சம் தள்ளி அது கைய வைக்கும். வெச்சிடுச்சு. பல ஊர்கள்ல கர உடைஞ்சி கடல் ஊருக்குள்ள வந்தாச்சி. கட அரிக்க அரிக்க ஓடுறம். எவ்வளவுக்கு ஓட?’’
பெரியவர் அயர்ந்து நிற்கிறார்.
கொள்ளும் கடல்
கனிம மணல் அகழ்வால் விளையும் பெரும் துயரங்களில் கடல் அரிப்பு முக்கியமானது. தமிழகத்தின் கடலோரக் கிராமங்கள் பல கடலின் வாய் நுனியில், அபாயத்தின் நுனியில் நிற்கின்றன. கரையில் வள்ளங்களை நிறுத்த முடியாது என்பதோடு, பல இடங்களில் குடியிருப்புகள் அடியோடு அரித்த நிலையில் நிற்கின்றன. கடல் அரிப்புக்குக் காரணமான கடல் கொள்ளையைத் தடுக்க முடியாதவர்கள் அலைகளின் சீற்றத்தை எதிர்கொள்ள ஊருக்கு ஊர் தூண்டில் வளைவு கேட்டு அரசுக்கு மனு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை எவ்வளவு தீவிரமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்குக் கடியப்பட்டி ஓர் உதாரணம். கடியப்பட்டியில், எந்த வீட்டில் எந்த விசேஷம் என்றாலும், ஊர்க்காரர்கள் தூண்டில் வளைவுக்கு நன்கொடை அளிக்க வேண்டும். ‘‘தூண்டி வளைவு செலவுல அரசாங்கத்தோட செலவை நாங்களும்கூடப் பகிர்ந்துக்க தயாரா இருக்கோம்’’ என்று நிதி சேர்த்துக்கொண்டிருக்கின்றனர். வீடு, பிழைப்பு, உயிர் என அனைத்து உயிராதாரங்களையும் நோக்கிப் பாயும் கடலைப் பார்த்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
உணரப்படாத விபரீதம்
‘‘பெரிய நாசத்தை உண்டாக்கக் கூடிய விபரீதம் கடலோட விளையாடுறது. ஆனா, கடக்கரைக்கு வெளியிலேர்ந்து பார்க்குறவங்களுக்கு இந்தப் பிரச்சினையோட வீரியம் புரியலை. கடலைச் சூறையாடுறதும் கடல்ல கதிரியக்கக் கழிவுகளைக் கொண்டுசேர்க்குறதும் பெரிய சூழலியல் ஆபத்து.
உலகத்துல ஏதோ ஒரு மூலையில கடல்ல தவறிடுற வெள்ளைக்காரங்க பிணம் இங்கே சின்னவிளையில வந்து ஒதுங்கும். நீவாடு அப்பிடி. ராமேஸ்வரத்துல பெய்யுற மழைக்கும் அந்தமான் தீவுல இருக்குற காட்டுக்கும் சம்பந்தம் உண்டு. காத்துவாக்கு அப்பிடி. இங்கே ஆபத்து கண்ணுக்கு நேரே தெரியுது. தெரியாத ஆபத்தை நகரத்து மக்கள் அனுபவிக்கிறாங்க. அவ்வளவுதான்.
ஏதோ, இந்த மாதிரி திட்டங்களால அரசாங்கத்துக்குப் பெரிய வருமானம்னு வேற மக்கள்கிட்ட ஒரு மாயையை உருவாக்கிடறாங்க. உண்மை என்ன தெரியுமா? சர்வதேச அளவுல, ஒரு டன் கனிம மணலோட மதிப்பு ஒரு லட்ச ரூபா. இவங்க ஒரு ஏக்கருக்கு அரசாங்கத்துக்குக் கொடுக்குற ஒரு வருஷ குத்தகைத்தொகை அதிகபட்சமே முந்நூத்தி எண்பத்தி ரெண்டு ரூவாதான். வளர்ச்சித் திட்டம்னு சொல்லப்படுற பல திட்டங்களோட கதை இதுதான். இதுக்கு எத்தனை பேர் உயிரைப் பணயம் வெப்பீங்க?’’ என்கிறார் முகிலன். தமிழகத்தில் கனிம மணல் கொள்ளையின் கோர முகத்தை விரிவாகச் சொல்லும் ‘தாது மணல் கொள்ளை' நூலின் ஆசிரியர்.
கொள்கையர்களை என்ன செய்வது?
கனிம மணல் கொள்ளையைப் பெரிய அளவில் அம்பலப்படுத்தியவர்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் அமைப்பாளரும் உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சே. வாஞ்சிநாதனும் முக்கியமானவர். இவர் தலைமையில் சென்ற வழக்கறிஞர்கள் குழு சுமார் 10 நாட்கள் நேரடி ஆய்வில் வெளியிட்ட ‘தாது மணல் கொள்ளை - உண்மை அறியும் குழு அறிக்கை' சிறு நூலும் பல உண்மைகளை வெளியே கொண்டுவந்தது.
‘‘இந்தப் படத்துல இருக்குறது யார் தெரியுதா?’’
கணினியில், வாஞ்சிநாதன் சுட்டிக்காட்டும் படத்தில், வி.வி. மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு விருது அளிக்கிறார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அடுத்தடுத்த படங்களில் பிரணாப் முகர்ஜி, கமல்நாத் ஆகியோர். எல்லாம் வி.வி.மினரல் நிறுவனத்துக்கு விருதுகளை அளிக்கும் படங்கள்.
‘‘ஆஷீஷ் குமாரோட அறிக்கையை வெச்சிக்கிட்டு, எல்லாரும் அரசாங்கத்துக்கு ஏற்படுத்தின இழப்பை மட்டும் வெச்சு, இதை ஒரு முறைகேடுன்னும் வைகுண்டராஜன் மேல மட்டும்தான் தப்பு இருக்குன்னும் பேசுறாங்க. அவங்க கணக்கை சரியா காட்டிட்டதாவே வெச்சுக்குவோம். இது சரியாயிடுமா?
அடிப்படையில, இது ஒரு ஆள் பிரச்சினை மட்டும் இல்ல. நம்ம அரசாங்கம் வகுக்குற கொள்கைகளுக்கும் ஆளுற வர்க்கத்துக்கும் இதுல பங்கு இருக்கு. வைகுண்டராஜன் வளர்ந்த காலகட்டம் ஒரு வகையில, இந்திய அரசியல் பொருளாதார வரலாற்றுலேயும் முக்கியமானது. இந்தியா புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறின காலகட்டம் அது. 1990 வரைக்கும் இந்திய அரசோட தொழில் கொள்கையில, கனிம வளங்களைக் கையாள்றதுல தனியாருக்கு நிறையக் கட்டுப்பாடு இருந்துச்சு. புதிய பொருளாதாரக் கொள்கைக்கு மாறினப்போ, அதையெல்லாம் அடிச்சி நொறுக்கி, தனியாரையும் முழுசா கனிமத் தொழில்ல உள்ளே விட்டாங்க. சரியான வார்த்தைகள்ல சொல்லணும்னா 1990-க்கு முன்னாடி சட்ட விரோதமா இருந்த நெறைய விஷயங்கள் 1991-ல் சட்டபூர்வமா ஆயிடுச்சு. விளைவுகளை இப்போ அனுபவிக்கிறோம்.
நெனைக்கவே கஷ்டமாயிருக்கு. பல்லாயிரம் வருஷமா அவங்க பாதுகாத்துப் புழங்குன கடக்கரையில கால் வைக்க அனுமதி வாங்கணும்கிற சூழலை. பாரம்பரிய உரிமைகள்னெல்லாம் வாய் கிழியப் பேசுறோமே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இந்த நாட்டுல இருக்கு? எந்தக் கடக்கரைக் கிராமத்துல நொழைஞ்சாலும், புத்துநோய், சிறுநீரகக் கோளாறு, தைராய்டுன்னு தெருக்குத் தெரு சீக்கு. நேத்துக்கூட ஒரு சின்ன புள்ள, எலும்புப் புத்துநோய், வலி தாங்க முடியாம துடிக்குது. என்ன மாரி நாட்டை நாம அடுத்தத் தலைமுறைக்கு விட்டுட்டுப் போவப்போறோம்? பணம் பணம்னு ஓடுறோமே, அப்படி எதைக் கொண்டுக்கிட்டு போவப்போறோம்?
ஒட்டுமொத்தமா இந்தத் தொழில்ல தனியார் ஈடுபடுறதையே தடை விதிக்கணும். மக்களையும் இயற்கையையும் பாதிக்காம எல்லாத் தொழில்களையும் அரசாங்கம் கையில எடுக்கணும். அதுக்கான முதல் படியா இந்த விவகாரம் மாறணும்…’’
வாஞ்சிநாதன் பேசிக்கொண்டிருக்கிறார். நான் விருது படத்தில் சிரிக்கும் சிதம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். செல்பேசி அழைக்கிறது. ‘‘யண்ணா… கடலூருக்கு எப்போண்ணா வருவீங்க?’’
‘‘நாளைக்கு வர்றேன்ப்பா!’’
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: sams@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago