பெரியாரின் பிள்ளை அம்பேத்கரின் தளபதி!

By வா.ரவிக்குமார்

கருணாநிதிக்கு மாநில உரிமைப் போராளி, சமூக நீதிக் காவலர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என எத்தனையோ சிறப்புப் பெயர்கள் உண்டு. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்டவர் என்ற விதத்தில் சமூக நீதிக் காவலர் என அவரைப் போற்றுவார்கள். இந்திய அரசியல் அரங்கில் சமூக நீதி என்பது பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு உரிமை என்ற குறுகலான பொருளில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. கருணாநிதி முன்னெடுத்த சமூக நீதி என்பது அத்தகைய ஒன்று அல்ல. அந்தச் சொல்லுக்கு சமத்துவம் என்ற உயிரைக் கொடுத்தவர் அவர். பெரியாரின் மாணவராக அண்ணாவின் தம்பியாக அறியப்பட்ட கருணாநிதி, சமூக நீதிக் கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தியவர்.

திருவள்ளுவரைச் சாதாரண மக்களுக்கும் கொண்டுசேர்த்தார் கருணாநிதி. திருக்குறளுக்குப் புதிய உரை எழுதியது மட்டுமின்றி, வள்ளுவத்தின் உயிர் நாடியாக இருப்பது சமத்துவம்தான் என்பதைக் கண்டறிந்து அதை முன்வைத்தார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவனின் வாய்மொழி அவரால் புதிய அரசியல் பரிமாணம் பெற்றது.

துணிச்சல் மிக்க சீர்திருத்தவாதி

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய சிறப்பு கருணாநிதிக்கு உரியது. அவர் அம்பேத்கரின் மாணவர் என்பது இன்னொரு சிறப்பு. சாதியை ஒழிப்பதற்கானத் திட்டத்தை அம்பேத்கர் தனது ‘சாதியை ஒழிக்கும் வழி’ நூலில் முன்வைத்திருக்கிறார். அந்நூலில் அம்பேத்கர் கூறிய திட்டங்களை நடைமுறையில் செய்துகாட்டிய பெருமை இந்தியாவில் கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.  “பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு நாளில் சேர்ந்து உண்பதால் சாதி ஒழிந்துவிடாது” என்று கூறிய அம்பேத்கர், “இந்து மதமானது சாதிகளைத் தனித்தனி அறைகளாகப் பிரித்துவைத்திருக்கிறது. சாதிகளுக்கு இடையே கலப்பு ஏற்பட வேண்டும், அதற்குக் கலப்புத் திருமணம் ஒன்றே வழி” என்றார். இதைக் கோட்பாட்டளவில் அம்பேத்கர் கூறினாரே தவிர, அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறவில்லை. ஆனால், கருணாநிதி கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் சார்பில் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஊக்கத் தொகை, தங்கப் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. அதன் மூலம், கலப்பு மணத் தம்பதிகளுக்கு அரசின் அங்கீகாரமும், பாதுகாப்பும் கிடைத்தன. இதை இந்தியாவில் சாதித்துக் காட்டியவர் கருணாநிதி மட்டும்தான்.

சமூகச் சீர்திருத்தத்துக்காகப் போராடுவதே மிகவும் கடினமான பணி என்பதை வலியுறுத்திய அம்பேத்கர், “அரசுக் கொடுங்கோன்மையைவிட சமூகக் கொடுங்கோன்மையே மோசமானது. அதை எதிர்த்துப் போராடுகிற சீர்திருத்தவாதி, அரசியல்வாதியைவிட துணிச்சல் மிக்கவர்” என்று குறிப்பிட்டார். அந்த அடிப்படையில் பார்த்தால், கருணாநிதியை ஒரு அரசியல்வாதி என்பதைவிட, துணிச்சல் மிக்க ஒரு சமூகச் சீர்திருத்தவாதி என்றே கூற வேண்டும்.

“சாதி என்பது பௌதீகமான பொருள் அல்ல. இரண்டு சாதிகளுக்கு இடையே கல்லால் ஆன சுவர் எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை. சாதி என்பது ஒரு கருத்தாக்கம். சாதியை ஒழிப்பது என்பது அந்தக் கருத்தாக்கத்தை மாற்றுவதுதான். சாதி என்ற கருத்தாக்கத்துக்கு மதம்தான் நியாயத்தை வழங்குகிறது. அதுதான் சாதியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது” என்று கூறிய அம்பேத்கர், “சாதியை ஒழிக்க வேண்டும் என்று முற்படுகிற ஒருவர் முதலில் அதற்கு ஆதாரமாக இருக்கும் சாத்திரங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். கருணாநிதியின் கவிதைகள், கட்டுரைகள், உரைகள் என்று எதுவும் அவரது பகுத்தறிவுப் பார்வையையே பிரதிபலித்தன. அந்த வகையில் சாதிக்கு அடிப்படையான சாத்திரங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும் எனும் அம்பேத்கரின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் கருணாநிதிதான்.

“சாதி அமைப்பு இரண்டு விதமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று அது மனிதர்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கிறது. இரண்டாவது அந்த சாதிப் பிரிவுகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி ஒரு ஏற்றத்தாழ்வான அமைப்பை நிலைபெறச் செய்கிறது” என்று அம்பேத்கர் குறிப்பிட்டார். இதை மாற்ற வேண்டும் என்றால் இப்படி பிரித்து வைக்கப்பட்டிருக்கிற மனிதர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். சாதிப் பிரிவினை என்பது வாழிடப் பிரிவினையாக மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு சாதியினர் வெவ்வேறு தெருக்களிலும் வாழ்கின்றனர். அவர்களையெல்லாம் ஒன்றாக வாழவைப்பதற்கு இந்தியாவில் எந்தவொரு அரசும் முயல்வதில்லை. ஆனால், கருணாநிதிதான் சமத்துவபுரம் என்ற குடியிருப்புகளை உருவாக்கி அங்கே தலித்துகள் உட்பட பல்வேறு சாதியினரும் அருகருகே குடியிருக்க ஏற்பாடு செய்தார். அவரால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் இன்று இந்தியாவிலேயே முன்மாதிரியாக விளங்குகின்றன. இது, அம்பேத்கரின் கனவை நனவாக்கியதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

“மதத்தில் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்றால் அர்ச்சகர் பதவியானது, பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்” என அம்பேத்கர் வலியுறுத்தினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை இயற்றியதோடு, தலித்துகள் உட்பட எல்லா சாதியினரும் வேத ஆகமங்களில் பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆவதற்குப் பயிற்சிப் பள்ளிகளையும் அவர் உருவாக்கினார். அதில், பயிற்சி பெற்ற பிராமணர் அல்லாத ஒருவர் இப்போது அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து சாதியினரையும் கல்வித் தகுதி அடிப்படையில் அர்ச்சகர் ஆக்குவதற்கு சட்டம் இயற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தால் இன்று சாமானியர்களும் அதிகாரத்தைச் சுவைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பெயரைப் பயன்படுத்தி எத்தனையே அரசியல் கட்சிகள் இந்தியாவில் உருவாகியுள்ளன. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல மாநிலங்களில் முதலமைச்சர்களாகவும், இன்னும் பல பதவிகளிலும் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எவருமே செய்யத் துணியாத செயல்களைச் செய்துகாட்டியவர் கருணாநிதி. துணிச்சல் மிக்க சமூகப் போராளியான கருணாநிதியைப் பெரியாரியவாதிகள் மட்டுமின்றி அம்பேத்கரியவாதிகளும் போற்றிக் கொண்டாடுவது அதற்காகத்தான்!

- ரவிக்குமார், எழுத்தாளர், விசிக பொதுச் செயலாளர்.

தொடர்புக்கு: manarkeni@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்