கேரளத்தின் வரலாறு காணாத பெருவெள்ளத்துக்குக் காரணம் சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபடும் உரிமை கோருவதும் சிறுபான்மை மதங்களை அம்மாநில மக்கள் பின்பற்றுவதும்தான் என்று வழக்கம்போல அறிவிலிக் கருத்துகள் பொதுவெளியில் பரப்பப்படுகின்றன. இந்தப் பேரிடருக்கான அறிவியல்பூர்வமான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளை எதிர்காலத்திலாவது செயல்படுத்தத் தயாராக வேண்டும்.
ஐக்கிய முற்போக்கு அரசு, உலகப் பொக்கிஷமான மேற்கு மலைத் தொடரைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை வழங்க மாதவ் காட்கில் தலைமையில் ஒரு குழுவை அமைந்தது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் சூழலியல் அறிவியல் மையத்தின் நிறுவனத் தலைவராகச் செயல்பட்டவர் மாதவ் காட்கில்.
புறந்தள்ளப்பட்ட ஆலோசனை
முன்னோடி சூழலியல் ஆராய்ச்சியாளரான மாதவ் காட்கில், அறிவியல்பூர்வமாகவும் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டும் உண்மையிலேயே பயனளிக்கக்கூடிய யோசனைகளை அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால், அவரின் அறிக்கையைப் புறந்தள்ளிவிட்டு, கஸ்தூரிரங்கன் தலைமையில் இன்னொரு குழுவை அமைத்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான அரசும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மாதவ் காட்கில் அறிக்கையை எதிர்ப்பதாகவே சொன்னது. மத்திய அரசு மட்டுமில்லை, மேற்கு மலைத் தொடர் உள்ள மாநிலங்களில் ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளும் காட்கில் அறிக்கையைக் கடுமையாக எதிர்த்தன. அவற்றில் மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகத்துடன் கேரளமும் அடக்கம்.
இன்றைக்கு வெள்ளத்தால் கேரளம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்குக் கடும் மழை மட்டுமே காரணமல்ல. மாதவ் காட்கில் அறிக்கையை ஏற்று நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தால், இன்றைக்கு நேர்ந்துள்ள சேதத்தின் அளவீட்டை நிச்சயமாகக் குறைத்திருக்க முடியும். அந்த அறிக்கை முன்வைத்த பரிந்துரைகள் எதிர்கால இயற்கைச் சீற்றங்களின்போதும் உதவியிருக்கும்.
மாதவ் காட்கில் தலைமையிலான மேற்கு மலைத் தொடர் சூழலியல் நிபுணர் குழு 2011-ல் அளித்த முக்கியப் பரிந்துரைகள்தான் என்ன? 1. ஒட்டுமொத்த மேற்கு மலைத் தொடரையும் சூழலியல்ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூன்று மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும். அதன்படியே வளர்ச்சித் திட்டங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2. சூழலியல் பாதிக்கப்படக்கூடிய மண்டலம் 1 பகுதியில் எந்தப் பேரணைகளும் கட்டப்படக் கூடாது. இதில் கேரளத்தின் அதிரப்பள்ளி, கர்நாடகத்தின் குண்டியா நீர்மின் திட்டங்கள் அனுமதிக்கப்படக் கூடாது. 3. கனிமச்சுரங்க மாஃபியாவால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் கோவா மாநிலத்தில் புதிய கனிமச்சுரங்கத் திட்டங்கள் அனுமதிக்கப்படக் கூடாது, ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 4. மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி, சிந்துதுர்க் மாவட்டம் மட்டுமின்றி மேற்கு மலைத் தொடர் பகுதிகளில் சூழலியலை மாசுபடுத்தும் திட்டங்களை முற்றிலும் நிறுத்தியாக வேண்டும். ஏற்கெனவே, இருக்கும் நிலக்கரி அனல்மின் நிலையங்களின் மாசுபாட்டை முற்றிலும் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக சூழலியல் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, பொறுப்புணர்வை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முடிவெடுத்தலிலும் நிர்வகிப்பதிலும் மக்களை ஈடுபடுத்த வேண்டும். வன உரிமைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துதல், சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்று வழங்குதலில் அறிவியல்பூர்வமான மாற்றங்கள், மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாக வெளியிடுதல், சமூகத் தணிக்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென காட்கில் அறிக்கை பரிந்துரைத்தது. இந்த அறிக்கையைப் புறக்கணித்ததன் பலனைத்தான் மிக மோசமான வகையில் இப்போது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
நிலச்சரிவு வெள்ளத்தாலா?
கனிமச் சுரங்கங்களும், மலைகளை உடைத்தலுமே நிலச்சரிவுகள், சேற்றுப் பகுதிச் சரிவுகளுக்கு முக்கியக் காரணம் என்கிறார் மாதவ் காட்கில். நிலத்தடியில் நீரைப் பிடித்து வைக்கக்கூடிய மலைப் பகுதிகளும் சுரங்கங்களும் அகற்றப்படுவதால், அங்கு இயற்கையாகச் சேமிக்கப்பட்ட, சேமிக்கப்படக்கூடிய நிலத்தடி நீருக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே நிலச்சரிவு, சேற்றுப் பகுதி சரிவுக்கு அடிப்படைக் காரணம். சட்டத்துக்குப் புறம்பான - கல்குவாரிகள், மணல் குவாரிகள், தடுப்பணைகள் போன்றவை நேரடியாக நிலச்சரிவைத் தூண்டிவிடுகின்றன. கேரளப் பேரிடர் நிர்வாக ஆணையத்தின் கணக்கீட்டின்படி கேரள நிலப்பரப்பில் 14% நிலச்சரிவு ஏற்படுவதற்கு சாத்தியமுள்ள பகுதி. இதில் பெருமளவு மேற்கு மலைத் தொடர் பகுதியிலேயே அமைந்துள்ளன. நிலச்சரிவால் உயிரிழப்பு மட்டுமில்லாமல் வீடுகளும் வயல்களும் அழிகின்றன. கேரள மேற்கு மலைத் தொடரில் 2,700 குவாரிகள் இருப்பதாக காட்கில் குழு தெரிவித்திருந்தது. இவற்றில் 1,700 குவாரிகள் கல்லை உடைத்து மண்ணாக்கும் வேலையைச் சட்டத்துக்குப் புறம்பாகச் செய்துவந்தன. சுரங்கம் - குவாரிகள், நிலப் பயன்பாடு மாற்றம், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்றவற்றை கேரளக் காடுகள் - மலைப் பகுதிகளில் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று காட்கில் அறிக்கை பரிந்துரைத்திருந்தது.
எதிர்ப்புகளின் பின்னணி
கேரளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் 123 கிராமங்கள் காட்கில் பரிந்துரைத்த சூழலியல்ரீதியில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மண்டலத்தின் கீழ் வருகின்றன. சுற்றுலாத் தொழிலை மையமாகக் கொண்ட சட்டத்துக்குப் புறம்பாக தங்கும் விடுதிகளை நடத்துபவர்களும் காடுகளை ஆக்கிரமித்த பெருவிவசாயிகளும் இந்தப் பரிந்துரைகளுக்கு அன்றைக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். வயல்களையும் நீர்நிலைகளையும் பொதுநலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தலாம் எனக் கேரள வயல் மற்றும் நீர்நிலைச் சட்டத்தில், அம்மாநில அரசு சமீபத்தில் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம் வெள்ள வடிகால்கள் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தும் அதிகரித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமே இந்த உலகையும் மக்களையும் எதிர்காலத்தில் பாதுகாப்பதற்கான ஒரே ஆயுதம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு வழிப்பாதை அல்ல. எதை நாம் விதைக்கிறோமோ, அதை மட்டுமே அறுவடை செய்ய முடியும்.
- ஆதி.வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago