கவிஞர் வைரமுத்து ‘தமிழாற்றுப்படை’ வரிசையில் எழுதியுள்ள ‘கால்டுவெல்: திராவிட முகவரி’ கட்டுரையைக் கண்டேன்.சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் குடும்ப உறவுடையவை என்பதை முதலில் நிறுவியவர் வில்லியம் ஜோன்ஸ். ஒப்பீட்டு மொழியியலில் ஒரு புரட்சியாக இக்கண்டுபிடிப்பு கருதப்படுகிறது. இதன் துணைவிளைவே திராவிட மொழிகளும் சம்ஸ்கிருதத்தினடியாகப் பிறந்தவை என்ற கருதுகோள். ஆனால், பிரசுரம் ஆகியுள்ள கட்டுரையில் ஜோன்ஸ் பெயரே இல்லை. மாறாக, மாக்ஸ் முல்லர் பெயரை முதலில் சுட்டுகிறார் வைரமுத்து.
முல்லர் ஜோன்ஸுக்கு இரண்டு தலைமுறை இளையவர். முல்லர் பெயருக்குப் பிறகு ‘கோல் புரூக் காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம்’ என்றனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இவர்கள் இருவர் அல்லர்; மூவர். கோல்புரூக் (Henry Thomas Colebrook), கேரி (William Carey), வில்கின்ஸ் (Charles Wilkins) ஆகியோரைத்தான் வைரமுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார் என ஊகிக்கிறேன். வில்கின்ஸும் கோல்புரூக்கும் ஜோன்ஸின் சமகாலத்தவர் (கல்கத்தாவில் புலமை மையமாக விளங்கிய ஆசியக் கழகத்தில் (Asiatic Society) இணைந்து பணியாற்றியவர்கள்); கேரி அடுத்த தலைமுறையினர்.
கால்டுவெல் ஒப்பிலக்கண நூலை 1856-ல் வெளியிட்ட பிறகுதான், தென்னிந்திய மொழிகள் சம்ஸ்கிருதவழிப்பட்ட இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தோடு தொடர்பில்லாத தனி மொழிக் குடும்பம் என்பதை அறிவுலகம் உணர்ந்தது என்பது சரியல்ல. கால்டுவெல் தம் நூலை வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னரே 1816-லேயே எல்லிஸ் இதை நிறுவிவிட்டார். இதனை மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மென் பல கட்டுரைகள் வாயிலாகவும், தன்னுடைய நூல் வாயிலாகவும் (Languages and Nations: The Dravidian Proof in Colonial Madras) விரிவாகப் பேசியிருக்கிறார். 2006-ல் கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடாக வந்த இந்நூல் அடுத்த ஆண்டே பேராசிரியர் இராம. சுந்தரத்தின் தமிழாக்கத்தில் ‘திராவிடச் சான்று’ என்ற தலைப்பில் வெளிவந்து பரவலான கவனிப்பைப் பெற்றது (சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் காலச்சுவடு இணை வெளியீடு).
கால்டுவெல்லின் சாதனை என்பது எல்லிஸ் சுருக்கமாக முன்வைத்த புலமைக் கருத்தாக்கத்தை மிக விரிவான மொழியியல், மானிடவியல் செய்திகளோடும் அரசியல் உணர்வோடும் முன்வைத்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முகிழ்த்த தமிழ்/திராவிட அரசியலுக்கும் இது ஒரு கொத்தளமாக விளங்கியது.
கால்டுவெல் பற்றி தமிழ் அறிவுலகம் தொடர்ந்து விவாதித்துவருகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண நூலைத் தொடர்ந்து அச்சிட்டுவருகிறது. இதுவரை நானறிந்து நான்கைந்து பதிப்புகள் வந்துவிட்டன. ‘ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ்’ என்ற பதிப்பகமும் இந்நூலைத் தொடர்ந்து அச்சிட்டு விற்றுவருகிறது. கால்டுவெல் மறைந்த 22 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியான மூன்றாம் பதிப்பின் (1913) மறுஅச்சாகும் இவை. இம்மூன்றாம் பதிப்பில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், கால்டுவெல் காலத்திலேயே வெளியான இரண்டாம் பதிப்பை (1875) கவிதாசரண் 2008-ல் முழுவதுமாகப் பதிப்பித்தார். அதே ஆண்டில் ‘மாற்றுவெளி’ ஆய்விதழ் கால்டுவெல் சிறப்பிதழை வெளியிட்டது.
சென்னை கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர் வின்சென்ட் குமாரதாஸ் 2007-ல் வெளியிட்ட தன்னுடைய நூலில் (Robert Caldwell: A Scholar Missionary in Colonial South India) ஏராளமான புதிய சான்றுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
கால்டுவெல் தமிழிலேயே எழுதிய ‘பரத கண்ட புராதனம்’ நூலைப் பொ.வேல்சாமி 2012-ல் மறுபதிப்பிட்டார். ‘உங்கள் நூலகம்’ கால்டுவெல் இருநூற்றாண்டுச் சிறப்பிதழை 2014-ல் வெளியிட்டது. கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாற்றின் தமிழாக்கமும் வெளிவந்துள்ளது (மொழியாக்கம்: கிருஷ்ணா சஞ்சீவி; காவ்யா வெளியீடு).
கால்டுவெல்லின் கிறிஸ்தவச் செயல்பாடுகள் பற்றிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அகராதியியல் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன் செய்துவரும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் முழு தமிழ் மொழிபெயர்ப்பைத் தமிழுலகம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நீ.கந்தசாமிப் பிள்ளை ‘தமிழ்ப்பொழில்’ இதழில் எழுதிய ‘கால்டுவெலும் அவர் வாழ்ந்த காலமும்’ என்ற கட்டுரையும் தமிழன்பர் பலரும் அறிந்தது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியதாக வைரமுத்துவின் கட்டுரை அமைந்துள்ளது.
ஆ.இரா.வேங்கடாசலபதி, வரலாற்றுப் பேராசிரியர்.
தொடர்புக்கு: chalapathy@mids.ac.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago