சென்ற ஒரே மாதத்தில் இருமுறை காவிரியிடம் தோற்று கொள்ளிடத்தில் தஞ்சமடைந்தது காவிரிப் படுகை. கொள்ளிடமே இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்? மழை என்று வானத்திலிருந்து துளிகூட விழாமல் கல்லணைக்குக் கீழே உள்ள காவிரிப் படுகை புதிரான வெள்ளம் ஒன்றில் மிதந்திருக்கும்.
காவிரித் தண்ணீரை கொள்ளிடத்துக்குத் திருப்பினால் அது வெள்ளம். அதையே காவிரியில் திறந்தால் பாசன நீர். முக்கொம்பிலிருக்கும் மேலணை இப்படி காவிரி நீருக்கு அடையாளம் சொல்லிப் பிரித்து அனுப்பும். கொள்ளிடம் ஒரு வடிகால். ஒரு மாதமாகக் காவிரியைக் கொள்ளிடத்தின் துணை வடிகாலாக மாற்றியிருக்கிறோம்.
வெள்ளத்தைப் பிடித்துவைக்க முடியாது. இருந்தாலும், கடைமடைக்குத் தண்ணீர் எட்டாதபோது கொள்ளிடத்துக்கு அதையே வெள்ளமென்று அனுப்புவது தோல்விதான்.
அனுமானம் சரிதானா?
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்ற அனுமானம் ஒன்றில் நிர்வாகம் நிரந்தரமாக உறைந்துவிட்டது. வழக்கமாக, ஜூன் 12 தண்ணீர் திறப்பார்கள். அதைத் தாண்டி, ஜூலை, ஆகஸ்ட் வரை செல்லும் பல பராமரிப்பு, கட்டுமான வேலைகள் காவிரியின் போக்கில் நடந்துகொண்டிருந்தன. அணை திறந்தபோது இதனால் சில ஆறுகளில் தண்ணீர் திறக்க முடியவில்லை.
சிலவற்றில் தாமதித்துத் திறந்தார்கள். ஜூன் 12-க்குப் பிறகு முடியும் வேலைகளுக்கு அனுமதி தருவது காவிரிப் படுகைக்கு ஏற்றதல்ல என்பதை நமக்கு வெள்ளம் வந்துதான் சொல்லித்தர வேண்டுமா?
‘வா’ என்றால் வராது காவிரி. ‘இரு’ என்றால் அணையில் இருக்காது. போகும்போது நம் சொல்லுக்காகக் காத்திருக்காது. தன் போக்குக்குப் போகும் உயிர்ப்பு அதற்கு உண்டு. இந்த உயிர்ப்பையும் நீர்மேலாண்மைக்கு ஒரு ஆதார அனுமானமாகக் கொள்ள நாம் பழக வேண்டும்.
செப்டம்பர் வரை வெள்ளம் வர வாய்ப்பு உண்டு. ஆனால், தண்ணீர் வராது என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஏற்கெனவே எழுபது, எண்பது அடி நீர் இருந்தாலும் மேட்டூர் அணையை மூடித்தான் வைத்திருப்போம்.
வெள்ளம் வந்தது. அவசரமாக அணையைத் திறந்தார்கள். “இன்னும் இருபது நாள் கழித்துத் திறக்க வேண்டும் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பே திறந்திருக்க வேண்டும்” என்றார்கள் விவசாயிகள். நீர் மேலாண்மைக்கு அடிப்படையாக நிர்வாகம் வைத்துக்கொண்டிருக்கும் எதிர்மறை அனுமானம் சரிதானா என்று அது இப்போது பார்க்க வேண்டும்.
கரையை நம்பத் தயக்கம்
மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவை நாம் பயன்படுத்த முடிவதில்லை. 120 அடி உயரமுள்ள அணையில் கீழிருந்து இருபது அடி உயரத்துக்காவது வண்டல் படிந்திருக்கும். அந்த அளவுக்கு அணையின் கொள்ளளவும் குறையும்.
முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீரை வாங்கிக்கொள்ளும் நிலையில் ஆறுகள் இல்லை. 24 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீரை வாங்கும் அமைப்பில் 22 ஆயிரம் கன அடிக்கு மேல் திறப்பதற்குத் தயங்குகிறார்கள். வெண்ணாற்றில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து அதன் கிளையான வெட்டாறு உடைத்துக்கொள்ளுமோ என்று எட்டிப்பார்க்கிறார்கள்.
தண்ணீர் திறந்தபோதே தஞ்சாவூருக்கு மேற்கில் கல்லணைக் கால்வாய் உடைப்பெடுத்தது. 4 லட்சம் கன அடி வெள்ளத்தை வாங்கும் கொள்ளிடம் 2 லட்சத்துக்குக் கொஞ்சம் கூடுதலாக வரும்போதே அதன் கரை பஞ்சையாகி, தண்ணீரும் ஊரைச் சூழ்ந்துகொண்டது.
மணலின் மகத்துவம்
மணல் அற்றுப்போன ஆறுகள் கடலுக்கோ, கடைமடைக்கோ இயல்பான வேகத்தில் ஓட இயலாது. வாய்க்காலிலும் ஏறிப் பாயாது. மேல்தண்ணீர் ஓடும் வேகத்துக்கு ஆற்றின் கீழ்த்தண்ணீர் ஓடாது. மணலோ தளம் பாவிய தரைபோல ஆற்றின் போக்குக்கு வேகத்தைத் தரும். மணல் இருந்தால் நீரை பூமி உறிஞ்சிக்கொள்ளத் தடுப்பணைகள் தேவையில்லை.
1980-களில் வேலைவாய்ப்பைப் பெருக்க பொருளாதார நிபுணர்கள் கட்டுமானத் தொழிலை ஊக்குவித்தார்கள். அப்போதிருந்து ஒரு மணல் சந்தை உருவாகித் தழைத்தது. அது ஒரு காரணத்தின் விளைவாகி, அந்த விளைவே மற்றொரு விளைவுக்குக் காரணமாகி தொடராக நீண்டுகொண்டிருக்கிறது. மனித நாகரிகத்தின் இந்த மாற்றத்தில் காவிரியும் சிக்கியது.
அருகிலேயே ஆறு ஓடினாலும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. ஆக்கிரமிப்பாலும், அலட்சியத்தாலும் தூர்ந்துபோன வாய்க்கால் எப்படி குளத்துக்குக் காவிரி நீரைக் கொண்டுவரும்? சமுதாய விளிம்பில் இருக்கும் மக்களை ஆறு, குளங்களின் விளிம்புக்குத் தள்ளிவிடும் கலாச்சாரத்தில் காவிரி மட்டும் எப்படித் தப்பும்?
நிர்வாகக் குறை மட்டுமா?
விவசாயம், பாசன அமைப்பெல்லாம் மனித நாகரிகம் என்ற நதியின் மூலம். ஆற்றில் வெள்ளமே வந்தாலும் வாய்க்காலும், குளமும் வற்றித்தான் கிடக்குமென்றால் அது கலாச்சாரக் குறை. நம் வாழ்க்கை முறையின் குறை. வெள்ளத்தின் வேகத்தை நீரின் ஓட்டமாகத் தணித்து வேண்டிய இடத்துக்கு அதைக் கொண்டுபோகவில்லை. இதை நிர்வாகக் குறை என்று சொல்லலாம். அதையும் கலாச்சாரக் குறையின் அங்கமாக வைத்து விரிவான பின்னணியில் பேச வேண்டும்.
ஆறு, பாசனம் என்ற அடிப்படையில் இயங்கிய கலாச்சாரம் இன்று வேறு ஒரு அடிப்படையில் இயங்கலாம். இவையெல்லாம் இப்போது நிர்வாகத்தின் முதல் கவலைகளாக இருக்காது. இந்த நூதன கலாச்சாரத்தில் ஆறும், அதன் பராமரிப்பும் முக்கிய அங்கமல்ல. அநேகமாக அப்போதைக்கு அப்போது நிவாரணமும், ஊக்கத்தொகையும் புது நிர்வாகக் கலாச்சாரத்தின் நிரந்தர அக்கறைகளாகலாம். நிதி ஒதுக்கீட்டு முன்னுரிமையில் காவிரியும், கிராமமும், விவசாயமும் கீழிறங்கியிருக்கலாம்.
காவிரியில் வந்த வெள்ளம் பழைய மையத்திலிருந்து நம் கலாச்சாரம் விலகியிருப்பதைச் சொல்லிவிட்டது. இனி வரும் வெள்ளங்கள் பயன்பட வேண்டுமானால் நம் கலாச்சாரம் ஒரு மாற்று மையத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். அந்த அக்கறை இல்லையென்றால் என்ன நடக்கும்? காவிரி வழக்கில் நாம் கர்நாடகத்தை ஒருமுறை வென்றிருக்கலாம். ஆனால், காவிரியிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டிருப்போம்!
- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர் | தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago