ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 வந்தால் இந்தியர்கள் தேசப்பற்று கொப்பளிக்க உணர்ச்சிவசப்படுவது வழக்கம். காரணம், அது நமக்கு மிகவும் முக்கியமான நாள். நம்முடைய நாட்டையும் நம் நாட்டின் நிலையையும் அனைவரும் புகழ்ந்து மட்டுமே பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். யாராவது விமர்சிப்பதைப் போலப் பேசிவிட்டாலும் உடனே நிராகரித்துவிடுகிறோம்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். திபெத்தியர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்த 60-வது ஆண்டு நிகழ்ச்சி அது. இந்தியாவைப் பொறுத்தவரை அது பெரிய நிகழ்வு. சீனத்தின் கடுமையான ஆட்சேபங்களைப் பொருட்படுத்தாமல், தலாய் லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் தங்கிக்கொள்ளவும், ‘நாடு கடந்த அரசு’ அமைத்துக்கொள்ளவும் அனுமதித்தார் நேரு.
நேருவின் மனம் எவ்வளவு பெரிய அருங்குணத்தைக் கொண்டிருந்தது என்பதை இன்றைய அரசின் ரோஹிங்கியா அகதிகள், அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு ஆகியவற்றின் பின்னணியில் நாம் உணர முடியும்.
லாமாவின் நன்றியுரை
சீனர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி உயிருக்குப் புகலிடம் தேடி வந்த தங்களுக்கு இந்தியா அளித்த பாதுகாப்பை தலாய் லாமாவை விடவும் நன்றியுடன் நினைவுகூர்ந்தவர்கள் இல்லை. தலாய் லாமாவுக்குப் புகலிடம் அளித்ததன் மூலம் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தோம். இருப்பினும், சமீபத்திய நிகழ்ச்சியில் லாமாவின் ஒரு கருத்துக்கு செய்தித்தாள்கள் முக்கியத்துவம் அளித்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டன.
“இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தடுக்கக் கிடைத்த ஒரு தார்மிக வாய்ப்பு நழுவவிடப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பதவி முகம்மது அலி ஜின்னாவுக்குத் தரப்பட வேண்டும் என்று காந்தி கூறினார். நேரு அந்த யோசனையை நிராகரித்தார்.
காரணம், இந்தியாவின் பிரதமராகப் பதவி வகிக்க நேரு விரும்பினார்” என்று தலாய் லாமா பேசினார் எனச் செய்தித்தாள்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. சில நாட்கள் கழித்து தலாய் லாமா தான் வெளியிட்ட கருத்தைத் திரும்பப் பெற்றார். தான் கூறிய கருத்து இந்தியர்களின் மனங்களைப் புண்படுத்திவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், நாட்டின் மீதுள்ள பற்று காரணமாக, நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பதே உண்மை. தலாய் லாமா நேருவை விமர்சிக்கவில்லை. நேருவின் ‘உலக வரலாற்றுப் பார்வைக்கும்’ அப்பால் சற்றுப் பயணித்திருக்கிறார். தன் மீதும் - தான் யாருக்காகப் பேசுகிறோமோ அவர்கள் மீதும் உள்ள நம்பிக்கையால் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
ஆன்மிகத் தலைவர் – தேர்ந்த அரசியல்வாதி என்று இரு வகைகளிலும் செயல்படும் லாமா, ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்கு தீர மாற்று வழிகளைக் கையாளுங்கள்’ என்று மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.
நம்முடைய ‘அதிதீவிர தேசியவாதம்’, மாற்று வழிகளைப் பார்க்க முடியாமல் நம் கண்களை மறைக்கிறது. ‘வரலாறு என்பது நடந்து முடிந்தவற்றைப் பற்றியது - இனி விதிப்படி நடக்கட்டும்’ என்ற கண்ணோட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் விஷயத்தில், மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறார் தலாய் லாமா. காந்திஜியின் மகத்துவமே, இந்த விஷயத்தை அவர் ஆரம்பித்திலேயே சரியாக அணுகியதுதான்.
ஜின்னா எதிர்பார்த்திராத, பிளவுபடாத இந்தியாவின் பிரதமர் பதவியை அவருக்கு அளித்தால் பிரிவினையை அவர் வலியுறுத்த மாட்டார் என்று கருதினார் காந்தி. காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குத் தார்மிக துணிச்சல் வேண்டும். நாட்டைத் துண்டாட வேண்டும் என்று நினைக்காமல் ஒன்றுபட்ட இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபடுங்கள் என்ற வாய்ப்பை ஜின்னாவுக்கு அளிக்க விரும்பினார் காந்தி. மத அடிப்படையிலான பிளவுக்கு, நினைத்துப் பார்க்கவே முடியாத சுமுகத் தீர்வை முன்மொழிந்தார் காந்தி.
நேரு அந்த வாய்ப்பை நிராகரித்தார். காரணம், ‘இது நிறைவேற்ற முடியாதது’ என்பதை நேருவுக்குள் ஒளிந்திருந்த வரலாற்று ஆசிரியர் உணர்ந்திருந்தார். இந்தியா எதிர்கொண்டிருந்த யதார்த்தத்தை காந்தி உணரவில்லையோ என்றுகூட நேரு வியப்படைந்தார். அன்றைய அரசியல் நிலவரத்துக்கேற்ப ஜின்னா, நேரு, மவுன்ட் பேட்டன் செயல்பட்டனர். அந்த நிலையில்தான் வரலாறும் நிகழ்ந்தது, நாடும் பிளவுபட்டது.
தார்மிகக் கற்பனை
தலாய் லாமா வரலாற்றைப் புரிந்துகொண்டிருக்கிறார். அரசியல் தலைவர் என்ற வகையில் அதில் நல்ல ஞானம் உள்ளவர். ஆன்மிகத் தலைவர் என்ற வகையில், அதே வரலாற்றைத் தார்மிக வழியில் மாற்றியிருந்திருக்கலாம் என்றும் கூறுகிறார். ஜின்னாவே திகைத்துப்போகும் அளவுக்கு ஐக்கிய இந்தியாவின் தலைமைப் பொறுப்பை அவரிடம் அளித்திருக்கலாம் என்பது காந்தியின் தார்மிகக் கற்பனை. முஸ்லிம்களுக்குத் தனி நாடு என்பதைத் தாண்டியும் சிந்தியுங்கள் என்று ஜின்னாவுக்கு ஒரு வாய்ப்பு தர காந்தி விரும்பினார்.
காந்தியின் பேச்சைக் கேட்டிருந்தால், இது நடைபெற முடியாத சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது. எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பார்த்தால் ‘பாகிஸ்தா’னுக்கு இந்தியா அன்று அளித்திருக்கக்கூடிய மிகப் பெரிய கொடை இதுதான். இதன் விளைவு நாடு இரண்டு துண்டாகியிராது.
பாகிஸ்தான் ராணுவ நாடாகியிருக்காது. வங்கதேசத்தில் இனப் படுகொலைகளுக்கே வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இது நடந்திருந்தால் மிகவும் உன்னதமாகியிருக்கும். உள்ளபடி தலாய் லாமா நேருவைக் கண்டிக்கவில்லை. வழக்கமான வரலாற்றுக் கட்டமைப்பைத் தாண்டி தார்மிகக் கற்பனை விரிந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தலாய் லாமாவின் விமர்சனம் இக்காலத்துக்கும் பொருந்துவது. அதிதீவிர தேசியவாதம் பேசும் இப்போதைய அரசு, வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும் என்கிறார். பிரச்சினைக்கான காந்தியத் தீர்வையும் முன்வைக்கிறார். காஷ்மீர் அல்லது அசாம் பிரச்சினைகளுக்கு ‘ஆன்மிகத் திருப்புமுனை’ என்று அவர் கூறும் யோசனைகளைக் கருதலாம். வரலாற்றைத் திருத்தி எழுத முடியாது என்பது லாமாவுக்கும் தெரியும்.
அதற்கு மாறாக, ஏராளமானோர் ரத்தம் சிந்திய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ வேண்டுமா என்று மறைமுகமாகக் கேட்கிறார். நேருவும் காந்தியும் இப்போது இருந்திருந்தால் அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சட்டென்று புரிந்துகொண்டிருப்பார்கள். தேசபக்தியை ஒரு பண்டமாகப் பார்க்கும் இப்போதைய அரசுக்கு இது புரியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தமிழில்: சாரி,
‘தி இந்து’ ஆங்கிலம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago