ஒக்கி விதவையரின் கண்ணீர் துடைப்போம்!

By வறீதையா கான்ஸ்தந்தின்

மரணம் நெய்தல் நிலத்துக்குப் புதிதல்ல. மரணமும் நிச்சயமின்மையும் கடல் வாழ்வின் விலக்க முடியாத கூறுகள். பேரிடர்களும் உயிர் அபாயமும் அங்கு இயல்பானவைதாம். ஆனால், கடலில் நிகழும் ஒரு மரணம், வாழ்வாதாரத்துக்காக அவரை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தைச் சீர்குலைத்துவிடுகிறது. ஒக்கிப் புயலில் உயிரிழந்த, காணாமலான ஒவ்வொரு ஆணும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விடிவெள்ளி. அந்த வெள்ளி இனிமேல் முளைக்காது என்று உணரும் தருணம், பெண்ணுக்கு ஏற்படுத்தும் மனமாச்சரியம் அளவிட முடியாதது. பேரிடரைப் பெண்களின் கண்கள் வழியாக நாம் இன்னும் பார்க்கத் தொடங்கவில்லை.

கணவனைப் பறிகொடுத்த பெண்கள் மூன்று பெருஞ்சுவர்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஒன்று, துணைவரின் இழப்பிலிருந்து உளநலரீதியாக மீண்டெழுந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது. இரண்டு, மாற்று வாழ்வாதாரங்களை அடையாளம் கண்டு களமிறங்குவது. மூன்று, பிள்ளைகளின் படிப்பைத் தொய்வின்றித் தொடரவைப்பது. கண்ணீர், சடங்கு எல்லாம் முடிந்து, அவளும் பிள்ளைகளும் தனித்து விடப்படும்போது, வாழ்க்கையை அவள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறாள்?

“இந்த பச்சப் புள்ளைக்கிப் பாலு வாங்குறதுக்குக்கூட காசில்ல. மூத்தவனுக்கு மூணு மாசமா ஸ்கூல் பீஸ் கட்டல. அரசாங்கம் ஒண்ணுமே சொல்லல.” - தேவனாம்பட்டினம் சுனாமி மீனவர் காலனி இலஞ்சியம் (29) பேசியதிலிருந்து ஒரு குறிப்பு இது. சுனாமியில் மனைவியை இழந்தவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட மறுமணம் செய்துகொண்டார்கள். ஆனால், கணவனை இழந்த ஏராளமான இளம் விதவையரைப் பொறுத்தவரை மறுமணம் என்பது வெறும் கனவு. கடல் பழங்குடிச் சமூகம், தாய்மை அக்கறையோடு இயங்கும் சுதந்திரமான சமூகம் என்பது ஒப்புக்குத்தான். “வேணாட்டுக் கடற்கரைப் பெண்களின் சிக்கல்களை விதவைகளின் பிரச்சினையாகக் குறுக்கிவிட முடியாது” என்கிறார் கன்னியாகுமரி மறுவாழ்வுக் கள நிபுணர் லோபிதாஸ்.

“வேணாட்டுக் கடற்கரையில் மதுப் பழக்கம், போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருக்கிறது. மீனவர் குடும்பங்களில் குடும்பப் பிளவு, மணமுறிவு, பிரிந்து வாழ்தல் போன்ற பிரச்சினைகள் இந்த அளவுக்கு முன்பு இருந்ததில்லை” என்கிறார் லோபிதாஸ்.

நெய்தல் சமூகங்களின் பொருளாதாரம் பெண்ணின் தோள் மீதுதான் உட்கார்ந்திருக்கிறது. ஆனால், நெய்தல் பெண்களின் நேரடிப் பொருளாதாரப் பங்களிப்பு சூனியமாகிவிட்ட நிலையில், வாழ்வாதார முதலீடுகளின் வீழ்ச்சி அந்தச் சமூகங்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.  இழப்புகளின் நேரடிப் பாதிப்புகளுடன் ஏராளமானோர் உள்ளனர். எல்லா ஆறுகளும் கடலில் சேர்வதுபோல் குடும்பத்தினரின் ஒட்டுமொத்தத் துயரமும் பெண்களை வந்தடைகிறது.

மீனவர்கள் கடலைத் தவிர வேறு எதையும் நிரந்தரச் சொத்தாய்ப் பார்ப்பதில்லை. கடற்கரைப் பொருளாதாரம் என்பது கடன் பொருளாதாரம். அம்மக்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்க ஆண் மையமானது. அந்த ஆண்களைக் கடல் விழுங்கிவிட்டது; அவர்களின் ஒரே முதலீட்டையும் கடல் கொண்டுவிட்டது. பிற சமூகங்களைப் போன்று ‘ஆணில்லாத சூழலில் அவன் மனைவிக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை’ என்கிற அணுகுமுறை இங்கே எடுபடாது.

கடல் விதவைகள்/ அபலைகள் தோழமை வழியாக மாற்று வாழ்வாதாரங்களைக் கூட்டுமுயற்சியாக உருவாக்குவது இதற்கு அருமையான தீர்வாகலாம். பேரிழப்பைச் சந்தித்தவர்கள் ஒன்றுகூட வேண்டும்; சிறு குழுக்களாகக் குடிசைத்தொழில் முனைவுகளை ஆராய வேண்டும். கூட்டுறவு முயற்சி தனிநபர் முனைவுகளைவிட வலுவானது. உற்பத்தி, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி என்பதாக அவை விரிவுபெற முடியும். 2004 சுனாமிக்குப் பிறகு, நாகை மாவட்டத்தில் ‘கலங்கரை’ என்னும் தொண்டு அமைப்பு இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறது. நாகப்பட்டினம் விதவைகள் தோழமை இன்று 1,500 உறுப்பினர்களுடன் தமிழ்நாடு முழுவதும் பரந்திருக்கிறது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, கடலூர் மாவட்டங்களில் ஒக்கி விதவைகள் / அபலைகளின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும். இவர்களில் 35 வயதுக்கு உட்பட்ட விதவைகள் ஏராளம். தேவனாம்பட்டினத்திலும் வேணாட்டிலும் 24–30 வயது வரம்புக்குள் விதவைக்கோலம் பூண்ட பலரைச் சந்தித்தேன்.

“இளம் விதவைகளை மறுமணம் செய்துகொள்ள அந்தச் சமூகத்தைச் சார்ந்த, முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்ணியச் செயல்பாட்டாளர் செல்வி (44). விதவைகள் மறுவாழ்வு என்றாலே தையல், உணவுப் பண்டம் தயாரிப்பு போன்ற பரிந்துரைகள்தான் முன்வைக்கப்படுகின்றன. இது பொருத்தமற்ற ஏற்பாடு என்று சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்காக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு கடன்களை விதவைகளுக்கு ஒதுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட முடியும். சமூக ஆர்வலர்கள் இதைக் கோரிக்கையாக எடுத்துச்செல்ல வேண்டும். அரசுத் துறைகள் வழியாக விதவைகள் வாழ்வாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது நெடுந்தொலைவுப் பயணம். ஆனால் ‘சமூகக் கடப்பாட்டை’ முன்னிட்டுப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும் நிதியை ஆண்டுதோறும் ஒதுக்குகின்றன. விதவைகள் மறுவாழ்வுக்காகக் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு இந்த நிதியை ஒதுக்கலாம். அந்த நிறுவனங்களில் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பிலும் ஒதுக்கீடு வழங்கலாம். கூட்டுமுயற்சியாகத் தொழில் தொடங்குவதற்கு சிஎஸ்ஆர் நிதியுதவி பேருதவியாய் அமையும்” என்கிறார் செல்வி.

“கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட கடலோரப் பெண்கள் ஒருங்கிணைவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தங்கள் சிக்கலுக்கான தீர்வுகளுக்கு அவர்களே இணைந்து குரலெழுப்புவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தர வேண்டும். மக்கள் அரசியலில் அவர்களுக்கான பங்கை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாய் நிற்பதுதான் சமூக உணர்வாளர்களின் அதிமுக்கியக் கடமை” என்கிறார் சமூகப் போராளி பாத்திமா பாபு.  ஒக்கிப் பேரிடர் நேர்ந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. ஒக்கி விதவைகளின் மறுவாழ்வு குறித்துத் தீவிரமாய் யோசிப்பதற்கான காலம் வந்துவிட்டது!

- வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர், கடல் சூழலியல் -

வள அரசியல் ஆய்வாளர்,

தொடர்புக்கு: vareeth59@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்