காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினோடு நானும் டெல்டா மாவட்டங்களுக்குப் போயிருந்தேன். ஒரு நாள் நடைப்பயணத்தை முடித்துவிட்டு, திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லத்துக்குப் போய் தேநீர் அருந்தினோம். அந்தக் கிராமத்தையும் அந்த வீடு அமைந்திருக்கும் தெருவையும் பார்த்தபோது அங்கிருந்து ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியும் என என்னால் நம்பவே முடியாமல் இருந்தது. இப்போதே அப்படியென்றால், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அங்கு பிறந்த ஒரு மனிதர் தமிழ்நாட்டின் வரலாற்றில் அரை நூற்றாண்டுக் காலத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்றால், அது நினைத்தாலே மலைக்கவைக்கும் மகத்தான சாதனைதான்.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, அந்தப் பொறுப்பில் 49 ஆண்டுகளை முடித்து, இந்த ஜூலை 27 அன்று 50-வது ஆண்டில் நுழைந்துள்ளார். இந்திய அளவில் வேறெவரும் ஐம்பதாண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் பெருமையைப் பெறவில்லை என்பதைத் தாண்டி, அந்தப் பதவியைப் பயன்படுத்தி அவர் ஏற்படுத்தியிருக்கும் முன்னுதாரணங்களே முக்கியமானவை என்று நினைக்கிறேன். குறிப்பாக, உட்கட்சி ஜனநாயகத்தைப் பேணுவதில் அவர் தேசியக் கட்சிகளுக்கே முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.
இந்திய ஜனநாயகம் என்பது ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகமாகும். தேர்தல் முறைதான் அதன் அடிப்படை. ஆட்சி அதிகாரத்துக்கு வருபவர்கள் ஜனநாயகபூர்வமாக நடந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியும் அதன் தலைமையும் ஜனநாயகத் தன்மையோடு இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையமும் சட்ட ஆணையமும் தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்வதற்குக் காட்டும் கவனத்தில் பத்து சதவீதத்தைக்கூட அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்துவதற்குக் காட்டுவதில்லை.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறினாலும் அப்படி நடத்தாத கட்சிகள் மீது அது எந்தவொரு நடவடிக்கையையும் இங்கே எடுப்பதில்லை. உட்கட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் சட்டம் எதுவும் நமது நாட்டில் இல்லையென்பதால், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வணிக நிறுவனங்கள்போலவே மாறிவிட்டன. உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்ட விவரங்களைத் தெரிவிக்குமாறு கடந்த 2011-ல் தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியது. ஆனால் அதற்குப் பெரும்பாலான கட்சிகள் பதில்கூட அளிக்கவில்லை.
இந்தியாவில் ஏப்ரல் 2018 நிலவரப்படி 7 தேசியக் கட்சிகளும், 24 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளும் 2,044 பதிவுசெய்யப்பட்ட கட்சிகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200 வரை புதிய அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படுகின்றன. 2018 ஜூன் 20 முதல் ஜூலை 19 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 'மக்கள் நீதி மய்யம்' உட்பட 15 புதிய அரசியல் கட்சிகள் பதிவாகியுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. அவற்றுள் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தாண்டி முறைப்படி கட்சித் தேர்தலை நடத்துவது திமுக மட்டும்தான்.
2015-ல் திமுகவின் கட்சிப் பதவிகளுக்கான 14-வது தேர்தல் நடைபெற்றது. அதில் சுமார் 85 லட்சம் உறுப்பினர்கள் பங்கேற்ற இத்தேர்தலில் கிளை, ஊராட்சி, ஒன்றியம், பேரூர், நகரம், மாவட்டம் எனப் பல அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான பதவிகள் தேர்தலின் மூலம் நிரப்பப்பட்டன. கருணாநிதி 11-வது முறையாகத் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உட்கட்சித் தேர்தலை முறையாக நடத்துவதைத் தொடர்ந்தது ஒரு கட்சித் தலைவராக கருணாநிதியின் முதல் முக்கியமான பணி..
உட்கட்சி ஜனநாயகத்தின் அடுத்த அம்சம் கட்சிப் பதவிகளில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதாகும். இந்தியாவிலுள்ள கட்சிகளில் பெண்களுக்கும் தலித் சமூகத்தினருக்கும் சிறுபான்மையினருக்கும் போதிய அளவு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. பெண்கள் தலைவர்களாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் போன்றவற்றிலும்கூட பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருப்பதில்லை.
ஊராட்சி அமைப்பு தொடங்கி தலைமை அமைப்பு வரையிலான பொறுப்புகளுக்கு நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு அமைப்பிலும் மூன்று பேர் துணைச் செயலாளர்களாகத் தேர்வுசெய்யப்பட வேண்டுமென்றும் அவர்களில் கட்டாயமாக ஒருவர் தலித் சமூகத்தினராகவும், ஒருவர் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்றும் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் திமுகவின் சட்டதிட்டப்படியுள்ள எந்தவொரு அமைப்பிலும் தலித் சமூகத்தினருக்கும், பெண்களுக்கும் கட்டாயம் பிரதிநிதித்துவம் உண்டு என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடு வேறு எந்தக் கட்சியிலும் கிடையாது. இது கருணாநிதி மேற்கொண்ட இரண்டாவது முக்கியப் பணி.
இந்திய ஜனநாயகத்தைப் பீடித்துள்ள நோயாக தனிநபர் வழிபாட்டைக் கூறலாம். ஒரு அரசியல் தலைவர் புனித உருவாக வணங்கப்படும்போது அவருக்கும் அக்கட்சியின் தொண்டர்களுக்குமான உறவு ஆண்டான் அடிமை உறவாகவே இருக்கும். அத்தகைய தலைவர்கள், தொண்டர்களால் எளிதில் அணுக முடியாதவர்களாகத் தம்மை வைத்துக்கொள்வார்கள். தொண்டர்களை அச்சத்தால் கட்டுப்படுத்தி வைக்க முனைவார்கள். இதற்கான உதாரணங்களை நாம் தமிழ்நாட்டிலேயே காட்ட முடியும். கருணாநிதிக்கும் வழிபாட்டு மனநிலை கொண்ட பெரும் கூட்டம் உண்டு என்றாலும், தன்னைத் துண்டித்துக்கொள்ளாமல் தொண்டர்களோடு ஐக்கியப்படுத்திக்கொண்டவர் அவர்.
தொண்டர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் வீடு அவருடையது. எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாகக் கட்சி நிர்வாகிகள் அவரை அணுகும் நிலையிலேயே தன்னை வைத்துக்கொண்டார். முக்கியமான விவகாரங்களில் நிர்வாகிகள் தொடங்கி கார் ஓட்டுநர் வரை அபிப்ராயம் கேட்டு அதனடிப்படையில் முடிவெடுப்பது அவரது இயல்பு. அவரை நினைவுகூரும் எவரும் அவர் தன்னோடு பகிர்ந்துகொண்ட ஒரு நகைச்சுவையைச் சொல்லாமல் இருக்க முடியாது. தன்னை அவர் ஏனையோரோடு ஐக்கியப்படுத்திக்கொள்ளும் அணுகுமுறையின் வெளிப்பாடுகளில் ஒன்று அது.
ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்காமல் போராட்டக் களத்திலேயே இருக்கும் ஒரு அரசியல் கட்சியை வழி நடத்துவது ஒப்பீட்டளவில் எளிது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் ஒரு கட்சியின் போர்க்குணத்தைக் காப்பாற்றுவது மிகப் பெரிய சவால். சிறிய அச்சுறுத்தலைக்கூட எதிர்கொள்ள முடியாமல் கட்சியின் பெயரையே மாற்றிய அரசியல் தலைவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், முதலமைச்சராகப் பதவி வகித்தபோதும் ஆட்சியே பறிபோகும் என்றாலும் அஞ்சாமல் நெருக்கடிநிலையை எதிர்த்த வரலாறு அவருக்கு உண்டு.
ஒரு தலைவரின் தலைமைத்துவத்தைத் தேர்தல் களத்தில் அல்ல; போராட்டக் களத்திலேயே மதிப்பிட வேண்டும். கருணாநிதியை ஐந்து முறை முதல்வராக்குவதற்காகத் தொண்டர்கள் செலுத்திய உழைப்பைவிடவும் மாநில உரிமைகளுக்காகவும், இந்தி எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்புப் போராட்டங்களின்போதும் அவரது நிலைப்பாட்டை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் சிறைப்பட்டார்களே அதுதான் அவரது தலைமைத்துவத்தின் வெற்றி.
ஒரு கட்சித் தலைவராக கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இதுதான்: கட்சியில் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பேணினால் மட்டும்தான் ஒருவர் ஆட்சியிலும் அதைப் பின்பற்ற முடியும்!
-ரவிக்குமார், எழுத்தாளர்,
விசிக பொதுச்செயலாளர்,
தொடர்புக்கு: manarkeni@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago