வயதானால் உடல்நலக் குறைபாடு, தள்ளாமை, மருத்துவமனை, உடல் சித்ரவதைகள் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால், முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைபாடுகளையும் மருத்துவமனையையும் அணுகிய விதம் நிச்சயமாக பிரத்யேகமானது. எப்போதுமே அவருடைய மனோதைரியம் அசாத்தியமானது. இன்று எவ்வளவு வலியையும் அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்ற கேள்விக்கு, அவருடைய கடந்த கால அனுபவங்களில் பதில் இருக்கிறது. 2009-ல் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே தருகிறோம். கூடவே, கருணாநிதியின் அசாத்தியமான மனவலிமையையும்!
25-01-2009
கடந்த ஓரிரு மாதங்களாக என்னுடைய முதுகுப் புறத்தில் தாங்கமுடியாத வலியிருந்தபோதிலும், அதனைப் பொறுத்துக்கொண்டு - அதைப் பெரிதுபடுத்தினால் மருத்துவர்கள் படுக்க வைத்து விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டே வெளியே யாரிடத்திலும் சொல்லாமல் - குடும்ப டாக்டர் கோபால் அவர்களிடம் கூறி - அவர் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மயில்வாகனன் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து - வலிக்கின்ற இடத்தில் மின் ஒத்தடம் கொடுக்கச் செய்தும் - தற்காலிக வலி நீக்கத்திற்கான மாத்திரைகளைப் போட்டுக்கொண்டும் காலம் கடத்திப் பார்த்தேன்.
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் பத்து மணி நேரம் என்னுடைய முதுகு வலியை மறந்துவிட்டு அமர்ந்திருந்தேன். தமிழின் இனிமையில் முதுகு வலி தெரியவில்லை. ஆனால், விழா முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு தாங்கொணா வலி. நான் துடிதுடிப்பதைப் பார்க்க முடியாமல் வீட்டார் ஏன் அவ்வளவு மணி நேரம் விழா நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தீர்கள் என்று கடுமையாகக் கோபித்துக்கொண்டார்கள்.
அன்று நள்ளிரவு நேரம் ஆக ஆக, வலி குறைவதற்கான அடையாளம் தெரியவில்லை. குடும்ப மருத்துவர் கோபாலும் என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் மயில்வாகனன் அவர்களின் யோசனையையும் பெற்று, ராமச்சந்திரா மருத்துவமனையின் எலும்புச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் அவர்களை வீட்டிற்கு வரவழைத்தார். டாக்டர் மார்த்தாண்டம் அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு, நான் படும் வேதனையைக் கண்டு உடனடியாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்ந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது இரவு மணி 1. எனவே உடனடியாகப் புறப்பட்டு, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இரவு 2 மணிக்கு சென்றடைந்தோம்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்காக படுக்க வைக்க முயன்றபோதே வலி தாங்க முடியாமல் ‘ஓ’வென அலறிவிட்டேன். ‘எக்ஸ்ரே எல்.எஸ். ஸ்பைன்’ மற்றும் ‘எம்.ஆர்.ஐ. ஆப் எல்.எஸ். ஸ்பைன்’ எடுக்கப்பட்டதில் - முதுகுத் தண்டில் எல்.2 மற்றும் எல்.3 இடையே உள்ள ஜவ்வு (டிஸ்க்) ஒரு கணு விலகி, நரம்புப் பகுதியை அழுத்திக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எழுதுவதற்காக நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கின்ற காரணத்தாலும் மற்றும் வயதான காரணத்தால் முதுகுத் தண்டுவடத்திலும் தேய்மானம் ஏற்பட்டிருப்பது நன்கு தெரியவந்தது. வலி கொஞ்சம்கூடக் குறையாத அளவிற்கு என்னைத் துடிக்க வைத்துக்கொண்டே இருந்தது. எந்தப் பக்கமும் புரள முடியவில்லை. மருத்துவர்கள் வலி நிவாரணத்திற்கான மாத்திரைகளை அளித்தார்கள். அந்த மாத்திரைகள் ஓரளவிற்குத்தான் என் வலியைக் குறைத்தன.
26.01.2009
4.30 மணி அளவிலேயே மருத்துவமனையில் இருந்தபோதே - உதவியாளரை அழைத்து காலையில் குடியரசு நாளையொட்டி - ஆளுநருடன் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாது. எனவே பேராசிரியரைத் தொடர்புகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு அவரை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்வதோடு, அந்தத் தகவலை ஆளுநருக்கும், தலைமைச் செயலாளருக்கும் தெரிவித்துவிடு என்று கூறினேன்.
27-01-2009
மருத்துவமனையிலே எனது இரண்டாவது நாள் வாழ்க்கை தொடங்கியது. வலியைக் குறைப்பதற்காக ‘பிசியோதெரபி’ (டென்ஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்றிலிருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கொடுத்தார்கள்.
28-01-2009
என்னால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக விரைந்து வந்து வலியைக் குறைப்பதற்காக ஊசி போடலாம் என்று முடிவுசெய்து ஊசி போட்டார்கள்.
29-01-2009
விடியற்காலையிலேயே வலி என்னால் தாங்க முடியவில்லை. மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு அன்று காலையிலும் மாலையிலும் வலியைக் குறைப்பதற்கான ஊசிகள் போடப்பட்டன.
30-01-2009
கடுமையான முதுகு வலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே நான் இருந்த நிலையிலேகூட - என்னை இயங்க வைக்க வேண்டுமென்ற அக்கறையோடு - எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா பல்வேறு கேள்விகளைக் கேட்டு - என்னை மிகவும் கடுமையாகத் தாக்கி - தன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். என் தாங்க முடியாத வலியைக் குறைப்பதற்கு - மருத்துவர்களின் மருந்துகளைவிட சக்திவாய்ந்தது எழுத்துதான் என்பதால் - ஜெயலலிதாவின் கேள்விகளுக்குப் பதில் கூறி - மருத்துவமனையில் படுத்துக்கொண்டே எழுதினேன். முடியாத நிலையில் பதில்களை உதவியாளர் மூலமாக ‘டிக்டேட்’ செய்தேன்.
31-01-2009
நான்கைந்து நாட்களாக வலி குறையாததாலும், அவ்வப்போது திடீர் திடீரென வலி அதிகமாகி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமையாலும், மருத்துவர்கள் ஆய்வுசெய்து என்னுடைய முதுகுத்தண்டிலேயே வலி குறைப்புக்கான மருந்தினை ஊசியின் மூலம் போட முடிவுசெய்து, அதுகுறித்து என் வீட்டாரோடும், உறவினரோடும் கலந்துகொண்டு 4.2.2009 அன்று போடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
என்னுடைய உடல் வலியையும் மீறி - உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதைப் பெரிதும் பாதித்தது.
கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்புகொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது - தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன்.
01-02-2009
ஜனவரி சென்று பிப்ரவரியும் வந்தது. ஆனால் வந்த வலி மட்டும் சென்றபாடில்லை. இரவு 9 மணியளவில் திடீரென உடல் சோர்வும், வியர்வையும் அதிகரித்தது.
இதயத்தில் ஏதாவது பிரச்சினையோ என்று மருத்துவர்களின் யோசனையின்பேரில் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டு, டாக்டர் தணிகாசலம் அதன் முடிவுகளைப் பார்த்துவிட்டு அதிலே எந்த விதமான மாறுதலோ, பயப்படுவதற்கான நிலையோ இல்லை என்று கூறினார்.
மூன்றாம் தேதியன்று அண்ணா நினைவு நாள். அண்ணா மறைந்த 1969-ம் ஆண்டிலிருந்து ஒரு ஆண்டுகூட நான் தவறாமல் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவந்தவன் என்ற முறையில் - இந்த ஆண்டு எப்படியும் அங்கே சென்று வந்துவிட வேண்டுமென்ற விழைவினைத் தெரிவித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னோடிகளும் உடல் நலிவு இந்த நிலையில் இருக்கும்போது நான் வர வேண்டாமென்றும், என் சார்பில் மற்றவர்கள் எல்லாம் சென்று வருவதாகவும் கூறினார்கள். இருந்தாலும் என் மனம் கேட்கவில்லை.
மருத்துவர்களையெல்லாம் அழைத்து எப்படியாவது நான் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று வந்தாக வேண்டுமென்று உறுதியாகக் கூறினேன். அவர்களால் என் வலியுறுத்தலை மறுக்க இயலவில்லை. ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் - நான் பயணம் செய்வதற்கேற்ற வகையில் மாறுதல் செய்து - மருத்துவர்கள் உடன் வர - நேரில் அண்ணா நினைவிடத்திற்கு மருத்துவமனையிலிருந்து காலை 9 மணி அளவில் புறப்பட்டுச் செல்வதென்றும் - அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, நேராக அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று நிதிநிலை குறித்த அமைச்சரவைக் கூட்டத்திலே கலந்துகொள்வதென்றும், அதன் பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று இலங்கைத் தமிழ் இனப் படுகொலை குறித்து அவசரமாகக் கூட்டப்பட்ட கழகச் செயற்குழுவிலே கலந்துகொண்டுவிட்டு, மருத்துவமனைக்குத் திரும்பி தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
02-02-2009
மருத்துவமனையிலே இருந்தபோதும், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருந்த நிலை வேறு மனதிற்கு மிகவும் வேதனை கொடுத்துக்கொண்டிருந்தது.
எனவே, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசுவதற்காக மருத்துவமனையிலேயே அனைத்து தமிழ் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தேன். மாலை 6 மணி அளவில் மருத்துவமனையில் எனது அறைக்குப் பக்கத்து அறையிலேயே அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் - மறுநாள் 3-ம் தேதி நடைபெறவிருந்த கழகச் செயற்குழுவில் கொண்டுவரப்பட வேண்டிய தீர்மானங்களையெல்லாம் எழுதி முடித்தேன்.
03-02-2009
இன்று அண்ணா நினைவு நாள். ஒரு வார காலமாக தொடர்ந்து மருத்துவமனையிலே படுக்கையிலேயே இருந்த காரணத்தால், ஏற்கனவே திட்டமிட்டபடி, பயணத்திற்கேற்றவாறு உடல் நிலையைத் தயார் செய்துகொண்டு, சரியாக 9 மணிக்கு ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வேனில் படுத்துக்கொண்டே அண்ணா நினைவிடத்திற்குப் புறப்பட்டுவிட்டேன்.
டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் கோபால் மற்றும் குழுவினரும், உதவியாளர்களும் உடன் வந்தனர். அண்ணா நினைவிடத்தில் பேராசிரியரும், கழக முன்னணியினரும் குழுமியிருந்தனர். அனைவரோடும் சேர்ந்து அண்ணாவுக்கு; சக்கர நாற்காலியிலே அமர்ந்தவாறே அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து தலைமைச் செயலகம் சென்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதைப் பற்றியும், அதில் முக்கியமாக எதையெதை இணைக்க வேண்டுமென்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்று கழகச் செயற்குழுவிலே கலந்துகொண்டேன்.
செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்தேன். பின்னர் 1 மணி அளவில் அண்ணா அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு நேராக ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் திரும்பினேன்.
என் முதுகுத் தண்டிலேயே வலியைக் குறைப்பதற்கான ஊசியைப் போடலாம் என்று ஏற்கனவே எடுத்த முடிவின்படி டாக்டர்கள் எல்லாம் என்னை அணுகி அதைப் பற்றிய சாதக பாதகங்களையெல்லாம் விவரித்தார்கள். என்னுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான் அந்த ஊசியைப் போடலாமென்றும் தெரிவித்து, அதற்கான அனுமதியையும் பெற்றார்கள். அதற்கான ஒப்புதல் கையெழுத்தை என்னிடமும், ஸ்டாலினிடமும் பெற்றார்கள்.
இந்த ஊசியைத் தாங்கிக்கொள்ளக் கூடிய அளவிற்கு என் இதயம் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்ய ‘எக்கோ-கார்டியோகிராம்’ சோதனை செய்யப்பட்டது. மாலையில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மருத்துவமனைக்கு வருகை தந்து என் உடல் நலம் விசாரித்தார்.
04-02-2009
முதுகுத்தண்டில் இன்றுதான் எனக்கு ஊசி போடப்பட்டது. அந்த ஊசியை அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்று அங்கேதான் போடவேண்டுமென்று கூறி, படுக்க வைத்த நிலையிலேயே அறுவை சிகிச்சை அரங்கிற்கு காலை 6 மணி அளவில் அழைத்துச் சென்றார்கள். வெற்றிகரமாக என் முதுகுத் தண்டில் ஊசி போடப்பட்டது.
பெரிய அளவில் வலி தெரியாமல் அந்த ஊசி போடப்பட்டது. 7 மணி அளவில் நான் மீண்டும் என் அறைக்குத் திரும்பினேன். அதன் பின்னர் அந்த ஊசியின் விளைவு என் உடல் நிலையில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமோ என்று சோதிப்பதற்காக அன்று நாள் முழுவதும் சோதனையிலேயே வைக்கப்பட்டேன்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து முதல்-அமைச்சர் விரைவில் முழு உடல் நலம் பெற்று பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் - அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும் - அதிகாரப் பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட; தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகச் செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட, இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்குத் துணை அமைப்பாக – உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர்களைக் கொண்ட குழு ஒன்றினை மருத்துவமனையில் இருந்தவாறே அறிவித்தேன். அவர்கள் பல்வேறு நாடுகளிலே உள்ள ஆர்வலர்களோடு தொடர்புகொண்டு, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள் என்றும் அறிவித்தேன்.
05-02-2009
இன்றைய தினம் கடுமையான வலி. வலியைக் குறைப்பதற்கான ஊசி உடனடியாகப் போடப்பட்டும், வலி குறையவில்லை.
நேரம் அதிகமாக அதிகமாக வலியும் அதிகமாகவே, நரம்பியல் நிபுணர் டாக்டர் வேல் முருகேந்திரன் வரவழைக்கப்பட்டார். அவர் என் உடல் நிலையைப் பரிசோதித்து, நரம்புகள் தளர்ச்சியடையாமல் இருக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஊசி போட வேண்டுமென்று பரிந்துரை செய்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவ்வாறே ஊசி போடப்பட ஒப்புக்கொள்ளப்பட்டது.
காலை ஏடுகளில் இலங்கைத் தமிழர்களுக்காக திமுக எதையும் செய்ததில்லை என்பதைப் போல ஒரு சிலர் அறிக்கைகளை விடுத்திருந்ததைப் படித்துவிட்டு - வலியைப் பொருட்படுத்தாமல் - பல்வேறு காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்னென்ன செய்தது, எந்தெந்தப் போராட்டங்களில் ஈடுபட்டது என்பதையெல்லாம் நினைவிலே கொண்டுவந்து பட்டியலிட்டுக் கட்டுரை எழுதினேன்.
06-02-09
பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழக முன்னணியினரும், அமைச்சர்களும் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து என் உடல் நிலையைக் கேட்டறிந்தும் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து நிலைமைகளை விளக்கியும் சென்றனர்.
என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், என் மகள்கள் செல்வி, கனி ஆகியோரும் செவிலியர்களோடு செவிலியர்களாக என்னைக் கவனித்துக்கொண்டார்கள்.
செல்வி தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது. கனியும் பல பொறுப்புகளுக்கிடையே நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது.
என் மருமகள்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் மருத்துவமனைக்கு வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர்.
தம்பிகள் பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராஜா ஆகியோர் அன்றாடம் இரவில் மருத்துவமனையிலேயே தங்கி, ஒத்துழைப்பாக இருந்தனர். வேறு சில நாட்களில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கே.என்.நேரு ஆகியோரும் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோரும் மருத்துவமனையிலே தங்கியிருந்தனர்.
என் வயதில் அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது என்றாலும், முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வலி நீங்குவதற்கு வழி என்று என் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து டாக்டர் மார்த்தாண்டம், டாக்டர் மோகன்தாஸ் கூறினர். அபாயகரமான விஷயங்களை என்னிடம் சொல்வதற்கு எனது குடும்பத்தார் முன்வராமல், அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது என்றும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சமாதானப்படுத்தினர். ஆனால், அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்துகொண்டேன்.
ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்தும் வருவதற்குக் கண்ணீர் காத்திருந்தது. எனவே, நானே அவர்களுக்குத் தைரியம் கூறினேன்.
07-02-09
அப்போலோ மருத்துவமனையின் முதுகெலும்பு டாக்டர் சாஜன் ஹெக்டேவும் அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியானது என்றும் கருத்து தெரிவித்தார். மாலையில் டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் வந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டமும் என்னைப் பரிசோதித்தனர். தை மாதம் என்பதால் `தை' (தொடை) வரை வலி இருக்கிறது என்று நகைச்சுவையாகக் கூறினேன்.
வலியில்கூட ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் ஏடுகளைப் படிக்க நான் தவறியதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சகோதர யுத்தம் இங்கும் கூடாது என்றும் குறிப்பாக தமிழகத்திலே உள்ள அனைவரும் இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்றும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’ என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்.
அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியும், மிகவும் இழிவுபடுத்திப் பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ, இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டுமென்று எழுதினேன். விவசாயிகளுக்காகக் கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று ஜெயலலிதா குற்றம்சாட்டினார். இதற்கும் பதிலளித்தேன்.
மருத்துவமனைக்கு வந்து டாக்டர் அன்புமணி எனது உடல்நலம் விசாரித்தார்.
09-02-09
நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து தனி அறையில் அதிகாரிகளுடன் காலை, மாலையில் விவாதித்தேன். 5 நிமிடங்கள் சந்திப்பதாகக் கூறி வந்த ‘இந்து’ பத்திரிகைச் செய்தியாளர், ஐம்பது நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். “மருத்துவமனையிலே இருக்கும்
போதும் அதிகமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, “மக்கள் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை நம்பிக் கொடுத்திருக்கும்போது, படுக்கையில் இருப்பதாலேயே நான் மக்களுக்காகப் பணியாற்றுவதை நிறுத்த முடியுமா?” என்று பதில் கூறினேன். முக்கிய கோப்புகளில் மருத்துவமனைக்கு வரவழைத்து கையெழுத்திட்டேன்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
36 secs ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago