கால்டுவெல்: திராவிட முகவரி

By வைரமுத்து

ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பெளதிகப் பெயர் கால்டுவெல்.

அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற - எவராலும் பின்தொடர முடியாத தனித்தன்மை மிக்கதாகவும் திகழ்ந்தது. அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை.

வசீகரமானது அவரது வாழ்வு; ஆனால் வலிகளால் நிறைந்தது.

கால்டுவெல் கடந்து வந்த பாதை

அயர்லாந்தில் பிறந்து, தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு 10 வயதில் இடம்பெயர்ந்து, 16 வயது வரை ஆங்கில இலக்கண இலக்கியக் கல்வி பெற்று, கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று, பின்னர் மெய்யுணர்வு நாட்டம் பெற்று, சமயப் பணியே தம் பணி என்று இறுதியாக உறுதியுற்று, லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் 20 வயதில் இணைந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஐரோப்பியத் தொன்மொழிகளின் நீதி நூல்களையும் சமய நூல்களையும் தேர்ந்து கற்றுத் தெளிவு பெற்று, டேனியல் சேண்ட்ஃபோர்டு என்ற மொழிநூல் மேதையிடம் கிரேக்க மொழியை உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்து, சமயத் தொண்டர் சங்கம் ஆற்றுப்படுத்த, தென்தமிழ்நாட்டின் திருப்பணிக்காக 24 வயதில் கப்பலேறி, நான்கு மாதக் கப்பல் பயணத்தில் ஆந்திரம் - ஆரியம் இரண்டும் கற்று, 1838-ல் சென்னையில் இறங்கி ‘ட்ரூ’ என்னும் ஆங்கில அறிஞரோடு மூன்றாண்டு வாசம் புரிந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழர் பண்பாட்டையும் உயிருக்குள் உள்வாங்கி, 400 மைல் தூரத்தையும் நடந்தே கடப்பதென்று பாண்டி நாட்டுக்குப் பயணப்பட்டு, சோழ நாடடைந்து, காவிரியோடு நடந்து, சிதம்பரம் - மயிலாடுதுறை வழியே தரங்கம்பாடி சென்று தங்கி, குடந்தை அடைந்து, நிலவளம் - நீர்வளம் - மொழிவளம் - பண்பாட்டு வளத்தை உற்றறிந்து, திருவரங்கம் புகுந்து நீலகிரி அடைந்து கோவை வழியே மதுரை அடைந்து, பொருனை வழியே பாளையங்கோட்டை கடந்து நாசரேத் சென்று தன் இறுதி எல்லையான இடையன்குடியை ஓர் இரவிலே அடைந்து, அங்கேயே தங்கி, தன் தேகம் வருத்தித் தெருக்கள் திருத்தி, தெருப் பணியோடு திருப்பணி தொடங்கி, 29 வயதில் நாஞ்சில் நாட்டில் வளர்ந்த நங்கை எலீசா என்னும் கிறித்துவத் திருமகளை மணம்புரிந்து, சமயப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றிமுடித்து, 33 ஆண்டுகள் முயன்று கிறித்துவக் கோயில் கட்டியெழுப்பி, தமது 77-ம் வயதில் இயற்கை கொழிக்கும் கொடைக்கானலில் இயற்கை எய்தி, இடையன்குடியில் தான் கட்டிய கோயிலில் அடக்கஞ்செய்யப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒருவரிச் சரிதை.

கால்டுவெல்லின் வாழ்க்கை இத்தோடு கழிந்திருந்தால் காலப் பெருவெள்ளத்தில் மற்றுமொரு குமிழியாய் ஓசையின்றி உடைந்திருப்பார். ஆனால் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற பேராய்வுதான் அவருக்குக் கால முகவரி தந்தது; திராவிடம் என்ற இனத்துக்கு மூல முகவரி தந்தது.

18-19-ம் நூற்றாண்டுகளில் தமிழ் இனத்தின் மீது ஒரு கெட்டி இருட்டு கொட்டிக் கிடந்தது. சூரியக் கதிர்களும் துளைக்க முடியாமல் இறுகிக் கிடந்தது அந்த இருட்டு. அந்த வெளியேறாத இருட்டை வெட்டியெடுத்த ஐரோப்பியக் கோடரி கால்டுவெல்.

சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - பண்பாடு - கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் - காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர்.  இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே.

கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது. 1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மார்பில் பூணூல் தரித்து, கிறித்துவ மதம் பரப்பிய தத்துவ போதக சுவாமி என்ற ராபர்ட் டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வருகைதந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தரையில் கால் மடக்கி அமர்ந்து மணலில் விரல் செலுத்தி எழுதித் தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து  வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திருநெல்வேலியில் ‘சாந்தபுரம் -

சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடிகள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் ஆகிய பெருமக்கள் செய்த பெருந்தொண்டு தமிழையும் ஒரு மொழியென்று முன்னிறுத்தியது மேற்குலகில்.

ஆனால், தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சம்ஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல்லமை கொண்டதென்றும் ஐரோப்பிய அறிவுலகம் அறிந்து மதித்தது கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ 1856-ல் இங்கிலாந்தில் வெளிடப்பெற்ற பிறகுதான். அதுவரை இந்திய மொழிகளின் மூலம் குறித்து ஐரோப்பாவில் நம்ப வைக்கப்பட்ட பிம்பம் கண்ணாடி நிழல் மீது கற்பாறை விழுந்ததுபோல் உடைந்து சிதறியது. திராவிடம் என்பது மொழிப்பரப்பு மட்டுமன்று; அது ஒரு நிலப்பரப்பு மற்றும் பண்பாட்டுப்பரப்பு என்றும் பின்பு ஐரோப்பா அறிந்தது.

தொல்காப்பியம் முதல் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் வரையிலான நூல்களெல்லாம் தமிழின் அமைப்பிலக்கணம் கூறுவன. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சிதான் முதன்முதலில் தமிழின் ஒப்பிலக்கணம் கூறியது. ஒப்பிலக்கணம் என்பது மொழிப்புலத்தின் புத்தறிவியல். தீயும் சக்கரமும் கண்டறியப்பட்ட பிறகு மனித குலப் பயணம் புதுப்பாய்ச்சல் கொண்டதுபோல, ஒப்பிலக்கணம் என்ற மொழிஅறிவியல் தோன்றிய பிறகுதான் மொழிக் குடும்பங்கள் புத்தொளி பெற்றன.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், சம்ஸ்கிருதம்தான் தமிழுக்குத் தாய் என்ற கருத்தை முதலில் கருக்கலைப்புச் செய்தது. மனிதர்களுக்கு மரபணுக்கள் மாதிரி மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் என்று கண்டறிந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்களை ஒப்பிட்டு உறழ்ந்து, தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பதை உலகமே ஒப்புக்கொள்ள ஓங்கி உரைத்தது. திராவிடம் என்பது, ஓர் ஆதி இனத் தொகுதியின் அடையாளக் குறி - இந்த மண்ணும் மண் சார்ந்ததுமான உரிமை உயில் என்பதை உறுதி செய்தது.

திராவிடம் எனும் ஆதிச் சொல்

திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச் சொல்.

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்று மனோன்மணிய ஆசிரியரும், ‘திராவிட உத்கல வங்கா’ என்று மகாகவி தாகூரும், ‘திராவிடத்திலே’ என்று தாயுமானவரும் சுட்டுவதற்கு முன்பே 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கியமான லீலா திலகம் ‘திராவிடம்’ என்பதைப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. 8-ம் நூற்றாண்டில் குமாரில பட்டர் என்ற வடமொழி ஆசானும் ‘ஆந்திர திராவிட பாஷா’ என்று குறிக்கிறார். பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை ‘திராவிட மன்னன்’ என்றே அழைக்கப்படுகிறான்.  விஷாலர் என்று மனுதர்ம சாஸ்திரம் இழியினத்தாராக அழைக்கும் பட்டியலில் ஒட்டரர் - காம்போஜர் - யவனர் - சாகர் - பாரதர் - சீனர் - கிராதர் இவர்களோடு திராவிடர் என்ற பெயரையும் எழுதிப்போகிறது. இப்படி இலக்கிய இலக்கண புராண முற்சுட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள்சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.

இந்தி - வங்காளம் போன்ற கெளரிய மொழிக் குடும்பத்தில் சதையும் நரம்புமாய் ஒட்டிக்கிடக்கும் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கத்தை ஆய்ந்து அந்த மொழிகள் வடமொழிச் சிதைவில் பிறந்தவை என்று மொழி வல்லார் முடிவு கட்டினர். மெழுகுவத்தியை ஊதி அணைத்தவர்கள் விண்மீனையும் அப்படியே அணைத்துவிடலாம் என்று கருதி, உச்சி வானம் பார்த்து உதடு குவித்ததுபோல, இந்திக்கும் வங்காளத்துக்கும் வைத்த அளவுகோலையே திராவிட மொழிகளுக்கும் நீட்டித்தனர். அவையும் வடமொழி வழிவந்தவையே என்று நம்பினர்; ஐரோப்பிய அறிவுலகத்தையும் நம்ப வைத்தனர்.

வடமொழியைக் கழித்துவிட்டால் இந்தியும் வங்காளமும் இயங்கவே இயங்கா. அதேபோல், தெலுங்கும் மலையாளமும் கன்னடமும்கூட இயங்குவது அரிது; அல்லது கடிது. ஆனால், வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்த பிறகும் வாழ வல்லதும் வளர வல்லதும் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் தமிழ் மொழி ஒன்றே என்று கால்டுவெல் நிறுவினார். ஒரு மொழி தன் வேர்ச்சொற்களை எப்படி வினைப்படுத்துகிறது என்ற அளவுகோல் கொண்டுதான் அதன் பிறப்பும் இருப்பும் பெருமையும் பெறப்படும் என்று கணக்கிட்ட கால்டுவெல்லின் ஆராய்ச்சிகள் அரிதானவை. அறிவுலகத்தால் மறுக்க இயலாதவை.

அவர் எழுதுகிறார்: “திராவிட மொழிக் குடும்பங்களின் வேர்ச்சொற்கள் ஓரசைத் தன்மை உடையவை; உயிர் நெடில் உடையவை; குறிலோடு உயிர்கூடிய மெய்யீறு கொண்டவை.” இதை மெய்ப்பிக்க அணுவைப் பிளப்பதுபோல் சொல்லைப் பிளக்கிறார். ‘பெருகுகிறது’ என்ற சொல் ஆறசை உடையதாயினும் உண்மையில் அதன் வேர் ஓரசையே என்று உணர்த்துகிறார்.

பெருகுகிறது என்ற சொல்லில் ஈற்றசையாகிய ‘அது’ அஃறிணை ஒருமை விகுதி; ‘கிறு’ என்பது நிகழ்கால இடைநிலை. இரண்டையும் கழித்தால் ‘பெருகு’ என்பதே வினையின் பகுதி. ‘கு’ என்பது தன்வினை உணர்த்தும் அஃறிணைச் சொல்லாக்கம். எனவே ‘பெரு’ என்பதே வினைமூலம் என்று பெறப்படும். இதிலும் ஒலிநயம் கூட்ட வரும் உகரம் களைந்தால் ‘பெர்’ என்பதே வேர்ச்சொல்லாய்ப் பெறப்படும். திராவிட மொழிகள் அனைத்துக்கும் இந்த வேர்ச் சொல் விதி பொருந்தும்; வேர்ச் சொல் அடிப்படையில் ஆராய்ந்து திராவிடமும் சமஸ்கிருதமும் வெவ்வேறு குருதிக்குடும்பம் என்று விளக்கமுறச் செய்தார் கால்டுவெல்.

“திராவிட மொழிகளில் சமஸ்கிருதச் சார்புத் தன்மைகளைவிட எதிர்த்தன்மைகளே மிகுதி. திராவிட மொழிகளின் இடப்பெயர்களும் எண்ணுப் பெயர்களும் பெயர்வினை என்ற சொல்லாக்கங்களும் சம்ஸ்கிருதத்தோடு முற்றிலும் வேறுபட்டவை. தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் அளவு, ஆங்கிலம் கடன் வாங்கிக்கொண்ட இலத்தீனைவிடக் குறைவுதான்” என்று நீண்ட ஆய்வுகளில் நிறுவினார் கால்டுவெல். இந்த ஆய்வுகளால் தமிழைக் கட்டிப்போட்ட சம்ஸ்கிருதத்தின் நூற்றாண்டு முடிச்சுகளை நுட்பமாக அவிழ்த்தார் கால்டுவெல்.

திருந்திய மொழிகளும், திருந்தா மொழிகளும்

திராவிடக் குடும்ப மொழிகள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எண்ணுப் பெயர்கள் கொண்டு எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். தமிழின் ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் மலையாளத்திலும் ஏழு, கன்னடத்தில் ஏளு, துளுவில் ஏளு, தெலுங்கில் ஏடு என்று வழங்கப்படுகிறது. தமிழ் ‘ழ’கரம் தெலுங்கில் ‘ட’கரமாகும், கன்னடத்தில் ‘ள’கரமாகும். ஆகவே அவையாவும் ஒரே குடும்பம் என்று உறுதிசெய்தார்.

மலையாளம் என்ற மொழிப்பெயரை ‘மலய’ என்ற வடமொழியின் திரிபு என்று கருதுவாருண்டு. அது அவ்வாறன்று. தமிழில் வழங்கும் ‘மல்’ என்ற வேர்ச் சொல்லுக்கு வளம், வலிமை என்று பொருள். அதனால்தான் பெருங்குன்றுக்கு ‘மலை’ என்று பெயர் வந்தது. எனவே மலையாளம் என்ற மொழிப்பெயரே அது தமிழ்க் குடும்பம் என்று சுட்டுகிறது.

தெலுங்கு மொழியை ஆதிப் புலவர்கள் அழைத்த பெயர் தெனுகு அல்லது தெனுங்கு என்பதே. அது அவ்வாறாயின் ‘தேன்’ என்ற வேரடியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. இது ஏற்புடைத்தாயின் தமிழ் வேரிலிருந்தே நமது சகோதரத் தெலுங்கு மொழியும் பெயர்பூண்டிருக்க வேண்டும் என்று பெறப்படும்.

வடமொழியில் இருந்து பிறந்ததே ‘கர்நாடகம்’ என்று சிலர் கருதுவர். ஆனால், மொழி அறிஞர் குண்டர்ட் கூற்றுப்படி ‘கரு+நாடு+அகம்’ என்ற தமிழடியாகப் பிறந்தது என்பதே சால்புடைத்து.

துளு மொழிக்கு எழுத்துருவும் இல்லை; இலக்கியமும் இல்லை. ஆனால் அது அச்சு வடிவம் கண்டதென்னவோ கன்னட எழுத்துருவைக் கடன்வாங்கித்தான். எனவே, அதுவும் திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கம் என்பது ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது.

பிறப்புமுறை - ஒலிப்புமுறை - அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் அவரே உணர்த்தினார்.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

தமிழ் - மலையாளம் - தெலுங்கு - கன்னடம் - துளு - குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் - கோதம் - கோண்ட் - கூ - ஓரியன் - ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். சம்ஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதென்பதைத் திருந்தா மொழிகளைக்கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

“திராவிட மொழிகளைச் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். சம்ஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதனவென்று மதிப்பதில்லை.” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண முதல் பாகத்தில் கால்டுவெல் கூறும் கட்டியம் இது. இந்தக் கருத்தை வெறுப்பாருண்டு; மறுப்பாரில்லை.

மறதியின் புழுதி மறைத்த அருந்தொண்டுகள்

கால்டுவெல் ஊர் திருத்தியும் சீர்திருத்தியும் பேர்திருத்தியும் ஆற்றிய பெருந்தொண்டுகள் பலவற்றை மறைத்துவிட்டது மறதியின் புழுதி.

ஒன்பது பள்ளிகள் உண்டாக்கி, பிள்ளைகளுக்கு அவர் மதிய உணவு தந்த மாண்பு மறந்து போயிற்று. வேட்டி கட்டிய விலங்குகளாய்த் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சமூக மரியாதை பேசப்படவில்லை பெரிதாய். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பேரொளியின் முன்னே அவர் எழுதிய ‘தாமரைத்தடாகம்’, ‘ஞான ஸ்நானம்’, ‘நற்கருணை’, ‘திருநெல்வேலிச் சரித்திரம்’ போன்ற தீபங்கள் மங்கிப்போயின. குங்குமத்தின் குழந்தை போன்ற தேரியின் செம்மண்ணை வியன்னா ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, உலகில் எங்குமே அறியக் கிடைக்காத அரிய மண் அதுவென்று நெல்லைச் சீமைக்கு அவர் பெற்றுத்தந்த பெரிய பெருமை பெரிதும் அறியப்படவில்லை. படைப்போவியமாய் எழுதிப்பார்த்துப் புடைப்போவியமாய் அவர் எழுப்பிய கிறித்துவத் திருக்கோயில் போதிய கீர்த்தி பெறவில்லை. அந்த இடையன்குடி ஆலயத்திலேயே அவர் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிவுலகம் தவிரப் பிற உலகம் அறியவில்லை.

சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் சமுதாயப் பணியும் ஆற்றி, திராவிடம் என்ற கருத்தியலை இமயத்தில் ஏற்றி வைத்து இங்கேயே - இந்த மண்ணிலேயே தன் பூத உடலைப் புதைத்துக்கொண்டார். இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை - சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப்பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது.

இதை எனது கூற்றாக முன்வழிவதைவிடக் கலாநிதி க.கைலாசபதியின் கூற்றை வழிமொழிவதே வழிகாட்டுதலாகும். “தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” என்பது அவரது திறனாய்வுத் தீர்ப்பு.

நன்றி அய்யனே! ஒரு தலைமுறைக்கே தலையறிவு தந்தவனே! எங்கள் மூல முகவரி அறிந்து சொன்ன மூதறிஞனே! தாய்க்கு முகமெழுதிய தனயனே! அயர்லாந்தில் கருவுற்று இடையன்குடியில் திருவுற்றவனே! பைன் மரங்களுக்கிடையே கண் விழித்துப் பனை மரங்களுக்கிடையே கண்மூடியவனே! உனக்கும் கிறித்துவச் சமுதாயத்தின் பெருந்தொண்டுக்கும் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்க உன் புகழ் என்று வானம் பாடுகிறது. தெற்கத்திக் காற்று ‘ஆமென்’ சொல்கிறது. திராவிடச் சமுதாயம் ஆமென்று சொல்கிறது!

மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் ஆகஸ்ட் 25  அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்