அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், லட்சக்கணக்கானோர் தங்கள் எதிர்காலம் என்னவாகும் என்று பரிதவித்து நிற்கிறார்கள். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சிக்கலான இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் யுத்தங்களும் தொடங்கியிருக்கின்றன. பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மண்ணில், அடையாளமற்றுத் தனித்துவிடப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள், 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். என்ன நடக்கிறது அசாமில்?
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் மிக முக்கியமான பிரச்சினையாகக் கருதப்படுவது சட்டவிரோதக் குடியேறிகள் பிரச்சினை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அசாம் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர். கிழக்கு வங்காளத்திலிருந்தும் ஏராளமான உழைக்கும் மக்கள் வந்தனர். விடுதலைக்குப் பிறகு, பல்வேறு காரணங்களால் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளிகள் வந்த நிலையில், 1951-ல் அசாமில் குடிமக்களையும் சட்டவிரோதக் குடியேறிகளையும் கண்டறியும் வகையில், பிரத்யேகமாக தேசியக் குடிமக்கள் பதிவேடு முறையை அரசு கொண்டுவந்தது.
1971-ல் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைப் போரின்போது ஏராளமான வங்காளிகள் அசாமுக்கு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். வங்கதேசம் தனிநாடான பிறகும் பிழைப்பு தேடி அசாமுக்கு சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அதிகம். இதனால், 1951-1961-ல் 36% ஆக அதிகரித்த அசாம் மக்கள்தொகை, அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் முறையே 22%, 25% அதிகரித்தது. இது அசாம் வாக்காளர் பட்டியலிலும் எதிரொலித்தது. 1971-க்குப் பிறகு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 1971-1991 காலகட்டத்தில் அசாம் வாக்காளர்கள் 89% அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதிய அசாம் பூர்வகுடி மக்கள், வங்காளிகளுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
1985-ல் அசாம் மாணவர் சங்கம் தலைமையிலான அசாம் போராட்டக் குழுக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் குழுக்கள் இணைந்து அசாம் கண பரிஷத் உருவானதும். பிரபுல்ல குமார் மொஹந்தா தலைமையில் அக்கட்சி ஆட்சியைப் பிடித்ததும் தனி வரலாறு.
அசாம் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் தேசியக் குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிப்பது. 1951 முதல் 1961 வரை அசாமுக்கு வந்த குடியேறிகளுக்கு வாக்குரிமை உட்பட குடியுரிமை வழங்குவது என்றும், 1961 முதல் 1971 வரை வந்தவர்களுக்கு வாக்குரிமை தவிர எல்லா உரிமைகளும் வழங்கப்படும் என்றும், 1971-க்குப் பிறகு வந்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தமானது. எனினும், இதில் பல ஆண்டுகளாக மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. அசாமில் என்ஆர்சி புதுப்பிக்கப்படும் என்று 2005-ல் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் தொடங்கினாலும் பெரிய அளவில் நடைபெறவில்லை. இந்நிலையில், 2012-ல் வங்கதேசக் குடியேறிகளுக்கும் போடோ இனத்தவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதைத் தொடர்ந்து, குடிமக்கள் சட்டம் 2003-ன்கீழ் என்ஆர்சி பட்டியலைப் புதுப்பிக்குமாறு அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2015 முதல் நடந்துவந்த இந்தப் பணிகள், 2016 அசாம் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்த பின்னர் முழுவேகத்தில் முடுக்கிவிடப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, “வங்கதேசத்தவர்கள் மூட்டை முடிச்சுடன் அசாமை விட்டுக் கிளம்புவார்கள்” என்று என்று பிரதமர் பேசியது இங்கு நினைவுகூரத்தக்கது.
2017 டிசம்பர் 31-ல் இதன் முதல் வரைவு வெளியிடப்பட்டது. ஜூன் 30-ல் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரு மாத காலநீட்டிப்புக்குப் பின்னர் ஜூலை 30-ல் வரைவுப் பட்டியலை அசாம் அரசு வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முக்கியமான பிரச்சினையாக விவாதிக்கப்பட்டுவருகிறது என்ஆர்சி வரைவுப் பட்டியல் வெளியீடு.
விண்ணப்பித்த 3.3 கோடிப் பேரில் 2.9 கோடிப் பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள். 40 லட்சம் பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. இவர்களில் 37.59 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. 2.48 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. வரைவுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், என்ஆர்சி அசாம் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலாவும் விளக்கமளித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 28 வரை மறு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரைவுப் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள்தான் அசாம் மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன. தந்தை பெயர் இருந்தால் மகன் பெயர் இல்லை. இரண்டு எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும்கூட பட்டியலில் இல்லை. தனிநாடு கோரிப் போராடிவரும் உல்ஃபா தலைவர் பரேஷ் பருவாவின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஃபக்ருதி அலி அகமதுவின் உறவினர் ஜியாவுதீன் அலி அகமது இடம்பெறவில்லை. ஆதார், பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் பட்டியலில் இடம்பெறாதது சர்ச்சையாகியிருக்கிறது. “முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என்று பிரதீக் ஹஜேலாவும் பாஜக அரசும் கூறிவந்தாலும், வங்கதேசக் குடியேறிகளை அடையாளம் காண்பது எனும் போர்வையில் அசாம் முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை இது என்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கிடையே, 1955 குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு விரும்புகிறது. அதன்படி ஆப்கன், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சி, கிறிஸ்துவர்கள் ஆகிய சிறுபான்மையினர் – குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலோ, டிசம்பர் 31 2014-க்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்திருந்தாலோ அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள் முஸ்லிம்கள்தான். இது அசாம் ஒப்பந்தத்தை மீறுவது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முஸ்லிம் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காது என்று உறுதியான நிலையில் பாஜக துணிந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள்.
ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படும் அளவுக்குத் துல்லியமான நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாத ஒரு நாட்டில், 40 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள்தான் இனி வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்ற அழுத்தத்தை மக்களுக்குத் தருவது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. என்ஆர்சி பட்டியல் முழுமையடைந்தால் தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் முடிவுக்கு வரும் என்று நம்பிய முஸ்லிம்கள் பலரும் தற்போது கலக்கமடைந்திருக்கிறார்கள். சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் (டி-வோட்டர்ஸ்) என்று முத்திரை குத்தப்பட்ட வங்காளிகள் பலர் (இவர்களில் இந்துக்களும் உண்டு) எல்லை போலீஸாரின் தொந்தரவுக்கு ஆளாகிவந்தனர். அவர்களுக்கு இந்த வரைவுப் பட்டியல் எந்தத் தீர்வையும் தரவில்லை என்று பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அச்சமடைந்த பலர் அருகில் உள்ள அருணாசல பிரதேசம், திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் வேலையில் அந்த மாநிலங்கள் இறங்கியிருக்கின்றன. நாடற்றவர்களாக்கப்படுபவர்களின் எதிர்காலம் என்ன? அவர்களுக்கு அரசு சுகாதாரத் திட்டங்கள் கிடைக்குமா? பொதுப் பள்ளிகளில் அவர்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்குமா? அவர்கள் வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது இங்கேயே அகதி முகாம்களில் அடைக்கப்படுவார்களா என்று பல கேள்விகள் பதில்களுக்காகக் காத்திருக்கின்றன!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago