கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிறகு, திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலினின் தோள்களில் முழுச் சுமைகளும் இறங்கியிருக்கின்றன. கருணாநிதியின் வேலைகளை ஒருவர் பதிலீடு செய்வது சாத்தியமற்றது - ஒரே நேரத்தில் பல தளங்களில் இணையான தீவிரத்தோடு அயராது இயங்கியவர் அவர்.
ஸ்டாலின் ஈடுகொடுக்க முயற்சிக்கிறார். ஒரு தலைவராகத் தன்னுடைய வழிகாட்டியான தந்தையைப் பற்றி ஆத்மார்த்தமாகப் பேசினார்.
பிள்ளைகளுடனான உறவு உங்கள் அப்பாவுக்கு எப்படி இருந்தது?
எனக்கு மட்டும் இல்லை, சின்ன வயசுல எங்க அண்ணன் தங்கச்சி எல்லோருக்குமே அம்மாதான் நெருக்கமா இருந்தாங்க. அவங்க மூலமாதான் எந்தக் காரியமும் நடக்கும். மாசத்துக்கு ஒரு முறை தலைவரோட பேச முடிஞ்சா அதிசயம். மாடியில அவரோட அறை. நேரா அங்கே போய்டுவார், சாப்பாடு - குளியல் எல்லாமே அங்கேதான். கிளம்பும்போதும் மாடியிலேர்ந்து இறங்கி நேரா வெளியே போய்டுவார். உண்மையைச் சொல்லணும்னா, அவரோட கட்சித் தோழர்கள் பலருக்கு அவர்கூட கிடைச்ச நேரத்துல சொற்பம்கூட எங்க யாருக்கும் கிடைக்கலை. எங்களோட படிப்பு விஷயங்களையெல்லாம்கூட மாறன் மாமாதான் கவனிச்சார். ஆனா, ஒரு பெரிய பிரியம் எங்க மேல அவருக்கு உண்டுங்கிறதை மட்டும் எப்படியோ உணர்த்திட்டார். மத்த அப்பாக்கள் மாதிரி அவர் இல்லைங்கிற குறை தோணியது இல்லை. பொங்கல் அன்னிக்கு வீட்டோட உள்கூடத்துல எல்லோரும் தலைவர்கூட உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுவோம். அப்புறம், வெளியூர் பயணங்கள் புறப்படுற அன்னிக்கு வழியனுப்புறதுக்கு அவருக்கு எல்லோரும் இருக்கணும். அவங்க அம்மா, அப்பா படத்தை வணங்குவார். எங்க எல்லோரையும் பார்த்து, பெயர் சொல்லித் தனித்தனியா ‘போய்ட்டு வர்றேன்’னு சொல்வார். அதுவே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.
பிரியத்தை உணர்த்துவார் என்றால், எப்படி?
அவர் எங்களை அடிச்சதே இல்லை. ஒரே ஒரு முறை அடி வாங்கின நெனைப்பு இருக்கு... அவ்வளவுதான். அம்மா அடிச்சா, திட்டினாக்கூட அவங்களைத் திட்டுவார். வீட்டுல யாருக்கும் உடம்புக்கு முடியலைன்னா அவர் எங்கே இருந்தாலும் வீட்டுக்கு போன் வந்துக்கிட்டே இருக்கும். அது அவர் கூடவே இருக்குற மாதிரி தோணும். சில சமயங்கள்ல அரிதா சினிமா, டூர் போகும்போது எங்களையும் அழைச்சுக்கிட்டுப் போவார். அறைக்குள்ள உட்கார்ந்து வசனம் எழுதிக்கிட்டே இருப்பார்னாலும், சாயுங்காலம் ரெண்டு மணி நேரம் பீச்சுக்கோ பார்க்குக்கோ எங்ககூட வருவார். விளையாடுவார். பேசிக்கிட்டிருப்பார். பேச்சுன்னா கட்சியோட முன்னோடிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு அதைத் தூக்கி நிறுத்தினாங்கங்கிறதுதான் பெரும்பாலும் இருக்கும். ஒவ்வொருத்தர் பட்ட கஷ்டத்தைக் கேட்கும்போதும், நம்ம தலைவரும் அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறார்போலன்னு தோணும். மாறன் மாமா என்னையும் செல்வியையும் சர்ச் பார்க் கான்வென்ட்டுல சேர்க்க அழைச்சுக்கிட்டுப் போயிருந்தார். அப்போ அங்கே கோ-எஜுகேஷன் சிஸ்டம் இருந்துச்சு. “ஸ்டாலின்கிற பெயரை மாத்தினாதான் சேர்த்துக்க முடியும்”னு சொல்லிட்டாங்க. தலைவருக்கு மாமா போன் பண்ணினார். “ஸ்டாலின்கிற பெயரை மாத்தணும்னு சொன்னா, அந்தப் பள்ளிக்கூடமே நமக்கு வேணாம்”னு சொல்லி, வேற ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லிட்டார். வீடு திரும்பின எங்ககிட்ட “எப்பவும் நாம நாமளா இருக்கணும்பா”ன்னார் தலைவர். அப்போ ஒண்ணும் புரியலை. பின்னாடி புரிஞ்சப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
நீங்களும் சரி, கனிமொழியும் சரி; அப்பாவைத் தலைவர் என்றே குறிப்பிடுகிறீர்கள். இது என்ன வீட்டில் அரசியல்ரீதியாக அளிக்கப்பட்ட பயிற்சியா?
நானும் கனிமொழியும் மட்டும் அல்ல; அண்ணன், செல்வி, மாமா பசங்க யாரோட பேசினாலும் ‘தலைவர்’ னுதான் அவரைக் குறிப்பிடுவாங்க. இதுல ஒண்ணும் அரசியல் வியூகம்லாம் இல்லீங்க. ‘அப்பா, அப்பா’ன்னு கூப்பிடுற சூழல்ல அவர் வீட்டுக்குள்ள இருந்தது இல்லை. அன்றாடம் நூற்றுக்கணக்கான கட்சிக்காரங்க பொழங்குற வீடு எங்களது. ‘தலைவர்’னுதான் அவங்க எல்லாரும் சொல்வாங்க, நாங்களும் அவங்ககிட்ட அப்படித்தான் பேச வேண்டியிருக்கும். மாடிக்குப் போனாலும் பெரும்பாலும் கட்சித் தோழர்கள் மத்தியிலதான் இருப்பார். எங்க அம்மாவே ‘தலைவர்’னுதான் எங்ககிட்டேயே அவரைக் குறிப்பிடுவாங்க. சின்ன வயசுலேர்ந்தே இது பழகிடுச்சு.
அப்பா ஒரு அரசியல்வாதி என்பதை எந்த வயதில் உணர்ந்தீர்கள்?
குளித்தலை தொகுதியில அவர் முதல் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கே எங்களை அழைச்சுக்கிட்டுப் போயிருந்தார். அப்போ எனக்கு நாலு வயசு. ரொம்ப மங்கலாத்தான் ஞாபகம் இருக்கு. ஆனா, 1962 தஞ்சாவூர் தேர்தல் நல்லா நினைவுல இருக்கு. அஞ்சுகம் பாட்டி அப்போ உயிரோட இருந்தாங்க. அவங்களும் கூட இருந்தாங்க. பரிசுத்தம் நாடார் காங்கிரஸ் சார்புல நிக்குறார். கடுமையான போட்டி. 1957 தேர்தல்ல திமுக சார்புல ஜெயிச்ச 15 பேரையும் தோற்கடிக்க காங்கிரஸுல தீவிரமான வேலை பார்த்திருந்தாங்க. அந்த 15 பேருல தலைவர் மட்டும்தான் மீறி ஜெயிச்சார். பரிசுத்தம் நாடார் பெரிய செல்வந்தர். கட்சி செல்வாக்கு, தனிப்பட்ட செல்வாக்கு, பணபலம் இது எல்லாத்தையும் தாண்டித் தலைவர் ஜெயிச்சார். பிரச்சார சமயத்துல கட்சிக்காரங்க மத்தியில பேசும்போது, அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருந்தது இன்னிக்கும் நினைவுல இருக்கு: “கடுமையான உழைப்பும் வியூகமுமே நம்மைக் கரை சேர்க்கும்!”
சின்ன வயதில் உங்கள் கனவு என்னவாக இருந்தது? அரசியல்வாதியாக வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தீர்கள்?
தஞ்சாவூர் தேர்தலைப் பக்கத்துல இருந்து பார்த்தேன்ல, அப்போவே தலைவர் மாதிரி நாமளும் வரணும்னு முடிவெடுத்துட்டேன். கூட்டம் போடுறது, பேசுறது இதெல்லாம்தான் ஆர்வமா இருந்துச்சு. பன்னெண்டு, பதிமூணு வயசுல எல்லாம் கோபாலபுரத்துல நாங்க ஒரு பத்துப் பதினஞ்சு பசங்க சேர்ந்து ‘இளைஞர் திமுக’னு தொடங்கி, வருஷா வருஷம் அண்ணா பிறந்த நாள் கூட்டங்களை நடத்த ஆரம்பிச்சுட்டோம். கோபாலபுரத்துல அப்போ சண்முகம்னு ஒரு அண்ணன் சலூன் வெச்சிருந்தார். அவரோட கடைதான் நாங்க கூடுற இடம். 1967-ல எனக்கு 14 வயசு. அந்த வருஷம் கூட்டத்துக்கு ஏற்பாடும் செஞ்சு, அண்ணாவையே கூப்பிடப் போய்ட்டேன். அப்போ அவர் முதல்வர் ஆயிட்டார். ‘நீங்க வந்தாலே வரணும்’னு நிக்குறேன். ‘உங்கப்பனை மாதிரியே நீயும் பிடிவாதக்காரனா இருக்கியேடா!’ன்னார். தேதி கொடுத்துட்டார். ஆனா, அதுக்குள்ள உடம்பு முடியாம அமெரிக்கா போற சூழல் ஆயிடுச்சு. அவர் இல்லாட்டினாலும் பெரிசா கூட்டம் நடத்தினோம்.
அப்பா இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தாரா?
ம்ஹூம்... அவருக்கு நாங்க நல்லாப் படிக்கணும்கிற எண்ணம்தான் இருந்துச்சு. கூப்பிட்டுச் சொல்வார். அம்மாவையும் அழைச்சுக் கண்டிப்பார். நாங்க ஜூட் விட்டுருவோம். அவரும் சின்ன வயசுல அப்படித்தானே இருந்துருக்கார், அதனால விட்ருவார். ஆனா, இந்த ஆர்வம்லாம் ஒரு வயசோட போயிடும்னு நெனைச்சு ஆதரவு கொடுத்தார். பின்னாடி, அது அப்படி இல்லைன்னு தெரிஞ்சப்போ ரொம்ப சங்கடப்பட்டார். எப்போ தெரிஞ்சுதுன்னா, 1971 தேர்தல் சமயத்துல ‘முரசொலி’ அடியார் எழுதின ‘முரசே முழங்கு!’ நாடகத்தைத் தமிழ்நாடு முழுக்க 40 இடங்கள்ல போட்டேன். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த நாடகத்தோட வெற்றி விழா நடத்தினேன். தலைவர் தலைமை. எம்ஜிஆர் முன்னிலை. தலைவர் என்னைக் கூப்பிட்டு, ‘வெற்றி விழாங்கிறதுக்குப் பதிலா நிறைவு விழான்னு அழைப்பிதழ்ல போடு’ன்னார். எனக்குப் புரியலை. விழாவுல எம்ஜிஆர் பேசினப்போ அதுக்கு அர்த்தம் புரிஞ்சுது. ‘நான் பெரியப்பா சொல்றேன். ஸ்டாலின் கேட்கணும். அப்பா ரொம்பக் கவலைப்படறார். இதோட இந்த நாடகம் போடுறதையெல்லாம் விட்டுட்டுப் படிப்புல கவனம் செலுத்தணும்’னார். நாங்க யாரும் அரசியலுக்கு வந்ததுல தலைவருக்கு விருப்பம் இருந்துச்சுன்னு சொல்ல மாட்டேன்.
ஆனால், குடும்ப அரசியல்தான் அவர் வாழ்வில் எதிர்கொண்ட மிகப் பெரிய குற்றச்சாட்டு…
இது ரொம்ப சிக்கலான பிரச்சினை. மாறன் மாமா அண்ணா காலத்துல அரசியலுக்கு வந்தவர். அண்ணாவோட தொகுதியில அண்ணாவால் நிறுத்தப்பட்டவர். தலைவருக்கும் அவருக்கும் 10 வயசுதான் வித்தியாசம். அதனால, தலைவர் ஏதோ குடும்ப அரசியல் செஞ்சு உள்ளே கொண்டுவந்தார்னு சொன்னா அது அபத்தம். கட்சிக்குள்ள விசாரிச்சுப் பார்த்தீங்கன்னா தெரியும், கட்சிக்காக இந்தக் குடும்பத்துல எவ்வளவு பேர் தங்களோட வாழ்க்கையைக் கொடுத்திருக்காங்கன்னு. செல்வம், தமிழரசு இவங்க எல்லாம் கட்சிக்குக் கொடுத்தது அதிகம். ஆனா, எந்தப் பதவிக்கும் வரலை. தலைவர் ரொம்பக் கவனமாத்தான் இருந்தார். அப்புறம் நான்.
அரசியல்ல நான் உள்ளே நுழைஞ்சு இப்போ 50 வருஷங்கள் ஆகுது. கடுமையா உழைப்பைக் கொடுத்து, படிப்படியா, எல்லோரோட அங்கீகாரத்தோடதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். பிற்பாடு சங்கடமான சில விஷயங்களும் நடந்துச்சு. ஆனா, தவறுகள் சரிசெய்யப்பட்டிருக்கு. திமுக என்னிக்குமே விமர்சனங்களுக்கு ஆரோக்கியமா முகம் கொடுக்கும். அதேசமயம், இன்னொண்ணையும் கவனிக்கணும். குடும்ப அரசியல் இந்தியா முழுக்க இருக்கு - எல்லாக் கட்சிலேயும் இருக்கு. நான் அதை நியாயப்படுத்தலை. ஆனா, அது நம்ம கலாச்சாரத்தோட ஒரு பகுதியா இருக்கு; திமுகவுல மட்டுமே இல்லைனு சொல்றேன். இன்னும் சொல்லப்போனா, அரசியல்ல மட்டும் இல்லை; எல்லாத் துறையிலேயும் இது இருக்கு. ஒரு மருத்துவரோட மகன் மருத்துவராகுறதுல, பேராசிரியரோட மகன் பேராசிரியராகுறதுல இருக்குற நியாயம் அரசியல்லகூட இருக்கலாம்தானே! இங்கே திமுகவுல இன்னொரு பாரம்பரியம் இருக்கு - இது குடும்பமா கட்சியில இருக்குற, கட்சிக்கு உழைக்குற கட்சி. எங்க கட்சி மாநாடுகளுக்கு நீங்க வாங்க... கட்சிக்காரங்க எப்படிக் கணவன், மனைவி, பிள்ளைகள்னு குடும்பம் குடும்பமா வருவாங்கன்னு அங்கே காட்டுறேன். இன்னிக்கு அப்பா, நாளைக்குப் பிள்ளைன்னு கட்சிக்கு உழைக்கிறவங்களை அவங்க குடும்பமா இருக்கிறதை மட்டும் காரணம் காட்டிப் புறக்கணிச்சுட முடியாது. அதேசமயம், அப்பா, பிள்ளை, பேரன்னு நியாயம் இல்லாம வாரிசு அரசியல் தொடர்கிற சூழலையும் அனுமதிக்க முடியாது.
அப்பா இதுகுறித்து தீவிரமாக என்றைக்காவது குடும்பத்துடன் விவாதித்திருக்கிறாரா?
விவாதிச்சிருக்கார், நடவடிக்கையும் எடுத்திருக்கார்.
உங்கள் குடும்பத்திலேயே பலர் அரசியலில் இறங்கியபோதும் அவருக்கு அடுத்த நிலையில் அவர் உங்களையே தேர்ந்தெடுத்தார். இந்தத் தேர்வுக்கான அடிப்படை எதுவென்று உங்களிடத்திலோ, குடும்பத்தின் ஏனையோரிடத்திலோ சொல்லியிருக்கிறாரா?
ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னார், ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ன்னு. இதை உங்க கேள்விக்கான பதிலா மட்டும் சொல்லலை. என் வாழ்க்கையில வாங்கின பெரிய சான்றிதழாவும் சொல்வேன். ஏன்னா, காலமெல்லாம் ஓய்வில்லாம உழைச்சவர் அவர். அவர் வாயால் இப்படி ஒரு பாராட்டு வாங்குறதைக் காட்டிலும் நான் பெறப்போகும் பெருமை வேறு என்ன இருக்கு!
அப்பா உங்களுக்கு அதிகம் சொன்ன அறிவுரை என்ன?
எல்லோரையும் அனுசரிச்சுப் போ. இதைத்தான் அடிக்கடி சொல்வார். எனக்கு அவர் வாயால் அதிகம் சொன்னது கட்சியோட வரலாற்றையும், கட்சிக்காரங்க செஞ்சிருக்குற தியாகத்தையும்தான். கட்சிக்குள்ள இருக்குற பிரச்சினைகளைப் பத்தியெல்லாமும் சொல்வார். ‘ஆனா, இதையெல்லாம் தெரிஞ்சுக்கோ, வெளியில விவாதிக்காதே!’ன்னு சொல்வார். கட்சிங்கிறது அவரைப் பொறுத்த அளவுல குடும்பம் மாதிரிதான். சின்ன வயசுல அண்ணா பிறந்த நாள் கூட்டம் நடத்துறப்போ ஒருமுறை கொஞ்சம் பெரிசா பந்தலைப் போட்டுட்டோம்.
தெருவுல இருக்குற கிருஷ்ணன் கோயிலை இந்தப் பந்தல் மறைச்சுடுச்சு. அப்போலாம் எங்க தெரு பிராமணர்கள் அதிகம் வசிச்ச தெரு. எங்க குடும்ப டாக்டர் கிருஷ்ணன் - அவரும் பிராமணர்தான் - ‘மூணு நாளைக்கு வீட்டிலிருந்தபடி சுவாமியைச் சேவிக்க முடியாம செஞ்சுட்டான் உங்க பிள்ளை!’ன்னு தலைவர்கிட்ட சொல்லிட்டார்.
அன்னிக்கு சாயுங்காலம் கூட்டத்துல பேசினப்போ, “நேற்று ஸ்டாலின் கனவில் வந்த கிருஷ்ணன், ‘எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காவது கோயிலுக்கு வந்து கும்பிடச் செய்’ என்று சொல்லித்தான் ஸ்டாலின் இந்த வேலையைச் செய்துவிட்டார்போலும்” என்று ஹாஸ்யமாகச் சொல்லிச் சமாளித்த தலைவர், ராத்திரி என்னை அழைச்சார். “நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்குதா, இல்லையாங்கிறது வேறு; கடவுள் நம்பிக்கை உள்ளவங்களோட நம்பிக்கையை மதிக்கிறது வேறு. அறியாமைகூட சில சமயங்கள்ல அலட்சியம் ஆகிடும்னு உணரணும்பா”ன்னார். இது ஒரு பெரிய பாடமா அமைஞ்சுச்சு.
இப்போது, அப்பாவின் உடல்நிலை முடக்கத்துக்குப் பின் பெரிய இழப்பாக எதை உணர்கிறீர்கள்?
ஓய்வில்லாம உழைச்சவர் அவர். வயோதிகத்துல உடல் நலக் குறைவு ஏற்படுறதை நாம ஏத்துக்கத்தான் வேணும். ஆனா, அவரோட பெரிய பலம், அவரோட நினைவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல். இந்த மூணையும் ஒருசேர அவர் இன்னிக்கு இழந்திட்டிருக்குறதைப் பெரிய இழப்பா உணர்றேன். இந்த இழப்பு என்னோடது மட்டும் இல்லை; ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட இழப்பு.
அப்பாவின் எந்தப் பழக்கத்தை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இரவு படுக்கைக்குப் போகும்போது அவர் கையில ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும். அன்றாடம் நேரில் நூறு பேரையாவது சந்திச்சுடுவார். இது ரெண்டையும் தக்கவெச்சுக்கணும்னு நெனைக்கிறேன்!
-சமஸ்
தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும்
‘கேஎஸ்எல் மீடியா’வின்
‘தமிழ்-திசை’ பதிப்பகம்
கொண்டுவந்திருக்கும்
‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ நூலிலிருந்து...
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago