இலக்கிய நடையில் யதார்த்தத்தைச் சொன்ன கருணாநிதி!

By தங்க.ஜெயராமன்

பேசிப் பகிர்ந்துகொள்ள பேச்சு வராத துக்கத்தை இரண்டு முறை தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன். 2001-ல் கருணாநிதியைக் கைதுசெய்து சிறைக்குக் கொண்டுசென்றபோதும் அவர் மறைவின்போதும். தொட்டுவிடலாம்போல இடத்தை அடைத்துக்கொண்டு இரண்டு முறையும் அந்தத் துக்கம் எதிரே நின்றது.

ஆட்சிக்கு வந்த பிறகு சிலர் அரசியல் பழகுவார்கள். தமிழகத்தில் இது விசித்திரமல்ல. அரசியல்வாதியாக இருந்தே ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதற்குப் பிறகு சிலர் வெறும் நிர்வாகியாகியாவார்கள். நிர்வாகத்துக்கு விதிகள் போதும். அரசியல் சித்தாந்தம் வேண்டியதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் கருணாநிதி அசல் வார்ப்பான அரசியல்வாதி.

அவராவது அரசியல்வாதி

ஒருமுறை முன்னாள் முதல்வர் பக்தவத்சலம், “கலைஞராவது அரசியல்வாதி” என்றார். அரசியல்வாதியின் அடையாளம் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆட்சி அதிகாரத்தில் வரும் நாட்டம். அந்தக் கொள்கையை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் என்பதெல்லாம் வேறு விஷயம். தன்னையும் மீறி சிலர் அவரை அரசியல்வாதியாக நேசித்தார்கள்.

பழனிவேல்ராஜன் மதுரையில் கருணாநிதிக்குப் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லை. விழாவுக்குப் பக்தவத்சலத்தையும் அழைத்திருந்தார். இயலாது என்று சொல்ல பக்தவத்சலத்துக்குத் தன் முதுமையோடு வேறு காரணங்களும் இருந்தன. ஆனாலும், எதையும் பொருட்படுத்தாமல் விழாவுக்குச் சென்றுவந்தார்.

நான் காங்கிரஸ்காரன். பக்தவத்சலத்தின் ஆதரவாளனும்கூட. பல்கலைக்கழகம் வந்த முதல்வர் கருணாநிதிக்குக் கருப்புக்கொடி காட்ட நூறு மாணவர்கள் நின்றுகொண்டிருந்தோம். காரில் மறுபக்கம் அமர்ந்து வந்தால் அவர் எங்களைப் பார்க்காமலேயே சென்றுவிடலாம். அதைத்தான் நாங்களும் எதிர்பார்த்தோம். அவரோ எங்கள் பக்கமே அமர்ந்து, சிரித்து, கையசைத்துச் சென்றார். எதிராளியைப் பார்த்தவுடன் கையிலிருந்த ஆயுதங்களை நழுவவிட்ட வீரர்களைப் போல் இருந்தது. அரசியல் வேறுபாடுக்கு அப்பாற்பட்டு என் திருமண வரவேற்புக்குக் கருணாநிதியும் மாறனும் வந்திருந்தார்கள். கருணாநிதி உரையாற்றியபோது நான் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தேன். “நாம் பேசுவதெல்லாம் இப்போது மாப்பிள்ளையின் காதில் விழாது” என்று அவர் சொல்ல நானும் கூட்டத்தோடு சேர்ந்து சிரித்தேன்.

கலாச்சார வறுமையில்லை

கருணாநிதி பிறந்த திருக்குவளை, திராவிட ஊர் அமைப்பின் பாணியில் அமைந்த அழகான ஊர். கீழத் தஞ்சையின் பல ஊர்களுக்கு இந்த அமைப்பு பொதுவானது. ஊரில் பெரிய சிவன் கோயில். கோயில் அளவுக்கு அதன் எதிரே குளம். இரண்டையும் சுற்றி நான்கு வீதிகள். தெற்கு வீதியின் நீட்சியான குளத்தின் தென்கரையில் கருணாநிதியின் வடக்கு பார்த்த ஓட்டு வீடு. திண்ணை, கூடம், காமரா உள், கசாலை வைத்த வீடு. வீதியின் மேல்கோடியில் அங்காளம்மன் கோயில். ஊரைச் சுற்றி நெல் வயல். ஊருக்குக் காவிரியின் கிளையான அரிச்சந்திர நதி பாசனமாக இருக்கலாம். சிவன் கோயிலை சம்பந்தரும், அப்பரும் சுந்தரரும் பாடியிருக்கிறார்கள். கோயில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருவாரூரோடு சேர்த்து ஏழு விடங்கத் தலங்களைச் சொல்வார்கள். திருக்குவளையும், தெற்கில் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்மூரும் அவற்றுள் இரண்டு. இரண்டுக்கும் இடையில் அருணகிரிநாதர் பாடிய முருகனின் எட்டிக்குடி. திருவாரூர் தியாகராஜா கோயில் சன்னதித் தெருவில் கருணாநிதியின் சகோதரி வீடு. முற்றம் வைத்து, தெற்கு பார்த்த விசாலமான சுற்றுக்கட்டு ஓட்டு வீடு.

மரபுகள் என்ன என்றே தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நாம் இருக்கும் இடமே நமக்கு மறுத்திருக்கலாம். இருக்கும் இடம், சார்ந்திருக்கும் சமூகம், வாழ்ந்த காலம் காரணமாக ஒருவருக்கு நேரும் கலாச்சார வறுமை கருணாநிதிக்கு இளமையில் இருந்ததில்லை. அதற்காக இந்த இடங்களைப் பற்றிச் சொன்னேன். அந்தக் கலாச்சாரத்தில் அவர் வெறுத்தவையும் உண்டு, விரும்பியவையும் உண்டு. அது வேறு. அரசியல் உத்தியாக அவரைத் தாழ்த்திப் பேசியவர்களுக்குத் தமிழக சமூக வரலாறு தெரியாது.

புதிய ரசனை

நவீனத்துவம் கொண்டுவந்த ஜனநாயக சிந்தனை, சமத்துவ வேட்கை, தனி நபர் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை — இவையெல்லாம் பண்பாட்டை ஒரு சுயவிமர்சனத்துக்கு அப்போது தயார் செய்தன. திராவிட அரசியலின் சமூகப்பார்வை ஒரு சுயவிமர்சனம். தீவிர சமூக விமர்சனத்துக்கு புதிய மொழி வேண்டும். கொள்கை மட்டும் போதாது. அந்த மொழிக்கென்று புதிய ரசனை உருவாக வேண்டும். ஒரு மொழியையும் அதற்கான ரசனையையும் உருவாக்கிக்கொண்டது கருணாநிதியின் சாதனை.

வைணவ மரபில் ‘வாய் விளக்கம்’ என்று சொல்வது உண்டு. சூழ்நிலையின் உணர்வை இழைத்து, கேட்பவர்கள் நெகிழச் சொல்லும் திறமை. கருணாநிதியின் மொழி இந்த வாய் விளக்கத்தின் உச்சம். அது இலக்கிய நடையில் யதார்த்தத்தைச் சொல்வது. நீலமேனியில் செம்பவள வாய்போல் பொருளும் மொழியும் ஒன்றால் மற்றொன்று விளக்கம் பெறும்.

கல்லூரியில் அன்றைய பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அது 1976. நண்பர்கள் சிறையில் இருக்கும் துயரத்தைச் சொல்லி எலியட்ஸ் சாலை யோக லட்சுமி திருமண மண்டபத்தில் கருணாநிதி உரையாற்றிக்கொண்டிருந்தார். தான் செய்த தவறுகளாக சிலவற்றைச் சொல்லிக்கொண்டே அவை ஒவ்வொன்றையும், “அதற்காக அனுபவிக்கிறேன்” என்று அற்புதமாக முடித்தார். தன் பொல்லாமையைச் சொல்லிப் புலம்பும் ஒரு கதாபாத்திரத்தின் இடத்தில் தன்னை நிறுத்திக்கொண்டு பேசுவது ஒரு இலக்கிய உத்தி. வேறு ஒருவர் இதைக் கையாண்டிருந்தால் எடுபட்டிருக்காது.

கருத்து வேறு, கற்பனை வேறு என்று இரண்டாகவும், அவற்றை எதிர் எதிரானவையாகவும் பார்க்கும் மரபுக்குப் பழகியவர்கள் நாம். கருணாநிதிக்குக் கற்பனைத் தளத்தில் இயங்கும் சிந்தனை. அவரது மனுநீதி நாள், வள்ளுவர் கோட்டம் சமத்துவபுரம் எல்லாமே இது சிந்தனை, இது கற்பனை என்று பிளவுபடாதவை. இலக்கிய நடையும் யதார்த்தமும், கற்பனையும் சிந்தனையும் கலந்து கல்லிழைத்த கனகச்சரடாவது அரிதான சுவையின் அனுபவம்தானே!

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்