முதலில் வந்து சேர்பவர்களுக்கு தங்கக் காசு!- அரசுப் பள்ளியைக் காக்க அதிரடி ஆஃபர்!

By கா.சு.வேலாயுதன்

து ஒரு அரசு ஆரம்பப் பள்ளி. ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது விடுவிடுவென வகுப்பறைக்குள்ளே நுழைகிறார் சேகர். ஆசிரியரின் அனுமதியுடன், அவர் பாடம் எடுக்கும் நேர்த்தியை வகுப்பறையில் உட்கார்ந்து கவனிக்கிறார். அடுத்த நாள் தனது மகனுடன் பள்ளிக்கு வரும் அவர், “இவன் என் பிள்ளை. இவன் இங்கதான் படிக்கணும். நல்லா கவனிச்சுப்பீங்கல்ல?” என்று ஆசிரியரின் ஒப்புதல் வாங்கிக்கொண்டு மகனைப் பள்ளியில் சேர்த்துவிட்டுப் போகிறார்.

இரண்டு ஆண்டுகள் நகர்கின்றன. மீண்டும் சேகர் தனது அடுத்த பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வருகிறார். “மூத்த பையன் நல்லா படிக்கிறான். இவனையும் இந்த வருசம் பால்வாடியில் சேர்த்துக்குங்க” என்கிறார். ஆசிரியரோ, “சேர்த்துக்கலாம், ஆனா... இப்ப 4 பசங்கதான் இந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க. செப்டம்பருக்குள்ள இந்த எண்ணிக்கை ரெட்டை இலக்கத்துக்கு உயரலைன்னா, இந்த வருஷமே இந்தப் பள்ளியை மூடிருவாங்களே!” என்று தயங்கியபடியே சொல்கிறார். இதைக் கேட்டதுமே அதிர்ந்த சேகர், அடுத்ததாகச் சொன்னதும் செய்ததும் யாரும் சிந்திக்காத சிறப்பு. “என் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகள்ல படிக்க வெச்சிருந்தா இருபதாயிரம், முப்பதாயிரம்னு பீஸ் கட்டுவேன்ல. அதை இந்தப் பள்ளிக்கூடத்தை மூடாம பாதுகாக்கத் தர்றேன். இங்க புதுசா வந்து சேர்ற முதல் பத்துப் பிள்ளைகளுக்கு ஒரு கிராம் தங்கக் காசு தர்றோம்னு விளம்பரப்படுத்துங்க. அதுக்கான செலவை நான் ஏத்துக்குறேன்” என்கிறார் சேகர்.

ஆசிரியர்களும் அவர் சொன்னதை அப்படியே நோட்டீஸாக அச்சடித்து வீடு வீடாகக் கொண்டுபோய் கொடுத்தார்கள். இதைப் பார்த்த ஊர்த்தலைவர் செல்வராஜ், “முதலில் சேரும் பத்து மாணவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், 2 செட் சீருடையும் நான் தர்றேன்” என்று அறிவிக்கிறார். கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகிலுள்ளது கோனார்பாளையம். இங்குள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில்தான் இந்தக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் 300 குடும்பங்கள் வசித்த இந்த கிராமத்தில் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் இப்போது சுமார் 60 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. “இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானூர்புதூர் கிராமத்து ஆரம்பப்பள்ளியில் 80 பேர் படிக்கிறாங்க. பக்கத்துல இருக்கிற சின்னக்கானூர் கிராமத்துல ஆரம்பப் பள்ளியுடன் உயர்நிலைப் பள்ளியும் இருக்கு. அதுல 60 பேர் படிக்கிறாங்க. கோனார்பாளையம் ஊர் சின்னதாச் சுருங்கிட்டதால மாணவர் எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு” என்று சொன்ன தலைமையாசிரியர் ஒய்.ராஜேந்திரகுமார், தங்கக்காசு ஆஃபர் விஷயத்துக்கு வந்தார்.

“சேகர் இதே ஊர்க்காரர்தான். திருப்பூர்ல பிரின்டிங் பிரஸ் வெச்சிருக்கார். அவரோட வசதிக்கு பிள்ளைகளத் தனியார் ஸ்கூல்ல தாராளமா சேத்தலாம்தான். ஆனா, என் புள்ளை தமிழ் மீடியத்துலதான் படிக்கணும்னு பிடிவாதம் பிடிச்சு இங்கக் கொண்டாந்து சேர்த்தார். இந்த நிலையில, இந்தப் பள்ளிக்கூடத்தை மூடிருவாங்களோன்னு அவருக்குக் கவலை வந்துருச்சு. தங்கக் காசு ஆஃபர் அறிவிச்சதோட அவரு நிக்கல. லீவு நாட்கள்ல எங்ககூட வீடு வீடா வந்து மக்கள்கிட்ட கேன்வாஸ் பண்ணிட்டு இருக்காரு. 2 கிமீக்கு அப்பால இருந்து வர்ற பசங்களை ஏத்திட்டு வர்றதுக்காக அவரே இலவசமா கார் வசதியும் செஞ்சு குடுத்துருக்கார். அதுக்கான பெட்ரோல் செலவுகூட அவரோடதுதான். குழந்தைகள் விளையாட, அறிவு வளர கீபோர்டு வேணும்ன்னு சொல்லி அவரே 8,000 கொடுத்து அதை வாங்கித் தந்திருக்கார். குழந்தைகளுக்கு யோகா கத்துக் கொடுக்க மாஸ்டர் ஒருத்தரையும் சேகரே அரேஞ்ச் பண்ணியிருக்கார்” என்று முடித்தார் ராஜேந்திரகுமார்.

சேகரைத் தொடர்ந்து ஊர்த்தலைவர் செல்வராஜும் ஆஃபரை அறிவித்த பிறகுதான் மக்களும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். “மக்களின் ஆதரவுடன் எப்படியும் இந்த மாதத்துக்குள் பத்து பேருக்கு மேல் சேர்த்து பள்ளியை மூடாமல் தக்கவைத்து விடுவோம்” என்கிறார் இன்னொரு ஆசிரியர் ஜே.பானுமதி. தங்கக் காசு, பணம் இவற்றைக் கையில் கொடுத்தால் உடனே செலவழிக்க வாய்ப்புண்டு. தவிர, ஆஃபருக்காக பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு பிறகு இடைநிறுத்தவும் கூடும் என்பதால் இந்த ஊக்கப்பரிசுகளைச் சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெயரால் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்துவிடும் யோசனையில் இருக்கிறார்களாம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சேகர், “நான் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ்டூ படிச்சவன்தான். தமிழ் மீடியம் புக்கை ரெஃபரன்ஸிற்கு வச்சு எவ்வளவு சிரமப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும். புரியாமப் படிச்சு எழுதற அந்நிய மொழிப் படிப்பு நமக்கு எதுக்கு? இங்கிலீஷ்தான் தெரியணும்ன்னா, லண்டன்ல போய் நாலு நாள் இருந்தா தானா தெரிஞ்சுட்டுப் போகுது. அதனாலதான், என் பிள்ளைகளைத் தாய்மொழிப் பள்ளியில சேர்த்திருக்கேன். இந்தப் பள்ளியை மூடிடக் கூடாதேன்னும் இவ்வளவு அக்கறைப்படுறேன்” என்றார்.

ஊர்த்தலைவர் செல்வராஜ் நம்மிடம், “நம்ம ஊருப் பள்ளிக்கூடத்தை நம்மதான் காப்பாத்தணும்ங்கிற எண்ணம் எல்லாருக்கும் வேணும். ஊருக்குள்ள நிறைய பேர் இதை உணர்ந்துட்டாங்க. ஆனா, எப்படி இங்கிலீஷ் மீடியம் படிக்கிற பசங்களைப் பாதியில மாற்றி இங்கே கொண்டுவந்து விடறதுன்னுதான் யோசிக்கிறாங்க. ‘அடுத்தடுத்த புள்ளைங்களை இங்கே கொண்டாந்து சேர்க்கறோம்’னு அவங்க சொல்றதே மனசுக்கு நிறைவா இருக்கு” என்றார் நெகிழ்ச்சியுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்