சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவ ஒப்பந்தம் ஒன்று தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்குத் தரப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் கொள்கை முடிவுகள் இதே ரீதியில் தொடருமானால் போர் விமானங்களை மட்டுமல்ல, வருங்காலத்தில் துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், கண்டம்விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள், நைட்ரஜன் மற்றும் அணுகுண்டுகளையுமேகூட உற்பத்தி செய்து சர்வ வல்லமை கொண்டதாகத் தனியார் நிறுவனங்கள் மாறலாம்!
இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களை முடிவுசெய்வது கார்ப்பரேட் முதலாளிகள்தான் என்றாகிவிட்ட நிலையில், ஆயுதங்களை உற்பத்திசெய்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அதேசமயம் விஜய் மல்லையா, நீரவ் மோடி எனத் தலைமறைவாகும் முதலாளிகளைப் பிடிக்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்ட தேசத்தில், பாதுகாப்புத் துறையில் தனியாரை அனுமதிப்பது தேசப் பாதுகாப்பை நிச்சயம் கேள்விக்குறியாக்கும்.
இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்களின் அஸ்தமனக் காலம் இது. தாராளமயமாக்கல் தொடங்கியபோதே அதற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டாலும் இப்போது அது அழிவின் உச்சகட்டத்தில் இருக்கிறது. நிர்வாகச் சீர்கேடுகளால் அழிவைச் சந்திப்பது ஒரு ரகம் எனில் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளால் அழிவைச் சந்திப்பது மற்றொரு ரகம். அந்த வகையில், ஆட்சியாளர்களின் கொள்கை முடிவால் மிகப் பெரிய துரோகத்தை சந்தித்திருக்கிறது ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்’ பொதுத் துறை நிறுவனம்.
ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த நிறுவனம் தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை தயாரித்த பெருமைக்குரியது. ரஷ்யாவின் சுகோய் கார்ப்பரேஷனின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பு, போயிங் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மிக் 29-கே விமானத்தின் ‘டர்போஃபேன்’ இன்ஜின் தயாரிப்பு இதிலெல்லாம் இந்த நிறுவனத்தின் பங்கு மிகப் பெரியது.
தயாரிப்பு, தனியாரிடம் சென்ற சூட்சமம்!
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கான அஸ்தமனக் காலமும் தொடங்கிவிட்டது எனலாம். கடந்த 2014 மே மாதம் பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து ‘ரஃபேல்’ போர் விமானம் தொடர்பாக நடக்கும் சம்பவங்களை உற்று கவனித்தால் அவற்றில் தெளிவானதொரு திட்டமிடல் தென்படும். சாதாரண திட்டமிடல் கிடையாது அது. கார்ப்பரேட் பாணியிலான திட்டமிடல் அது. எப்படி என்று பார்ப்போம்.
ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2007-ல் காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 2008-ல், நடந்த டெண்டரில் அமெரிக்காவின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களான ஃபால்கனின் எஃப் - 16, போயிங்கின் எஃப்.ஏ -18 சூப்பர் ஹார்னெட், ஈரோ ஃபைட்டர் தைப்பூன் ஆகியவற்றுடன் ரஷ்யாவின் மிக் -35, ஸ்வீடனின் ஜாஸ்-39, பிரான்ஸ் டஸ்ஸு நிறுவனத்தின் ரஃபேல் ஆகிய விமானங்கள் பங்கு கொண்டன. உலகின் மிகப் பெரிய ராணுவ வணிகம் என்று சொல்லப்பட்ட இந்த டெண்டரைக் கடும் போட்டிகளுக்கிடையே கைப்பற்றியது ரஃபேல். அதன்படி, 2012-ல் அந்த நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 126 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.52,000 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டது. அதன்படி 2015-க்குள் 18 விமானங்கள் போர் முனைக்குத் தயார் நிலையில் இந்தியாவில் தரையிறக்கப்பட வேண்டும். எஞ்சிய 108 விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துடன் இணைந்து ‘தொழில்நுட்பம் பரிமாற்ற’ ஒப்பந்தம் அடிப்படையில் பிரான்ஸின் டஸ்ஸு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்துதர வேண்டும்.
‘தொழில்நுட்ப பரிமாற்ற’ ஒப்பந்தத்தின்படி ரஃபேல் போர் விமானத்தின் மொத்த தொழில்நுட்பமும் இந்தியாவின் வசப்படும். அதன் பிறகு இந்தியா நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பிரான்ஸ் நிறுவனத்தின் தயவு இல்லாமல் ரஃபேல் போர் விமானங்களை இஷ்டம்போல தயாரித்துக்கொள்ளலாம். அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இந்த விமானத்தின் விலையும் ரூ.90,000 கோடி வரை உயர்ந்தது.
அதேசமயம், ஒப்பந்தம் போடப்பட்ட அடுத்தடுத்த நாட்களிலேயே உள்நாட்டில் அரசியல் உள்ளடி வேலைகள் தொடங்கின. ஒருகட்டத்தில் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது காங்கிரஸ் அரசு. இதற்கிடையே 2012 பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் பாதுகாப்புத் துறையில் இறங்குகிறது. முன்னதாக 2011-ம் ஆண்டே அந்த நிறுவனம் போயிங் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான விவேக் லாலை ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’ நிறுவனத்துக்குத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டே மாதங்களில் அது பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துகிறது. 2015 மார்ச் இறுதியில் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’ நிறுவனம் தொடங்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி, பிரான்ஸ் செல்கிறார். அவருடைய நண்பர் அனில் அம்பானியும் செல்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. நண்பர்கள் நாடு திரும்புகிறார்கள்.
ஹெச்.ஏ.எல்-க்கு இழைக்கப்பட்ட துரோகம்!
இப்போது முற்றிலும் புதிய ஒப்பந்தம். முதல் வேலையாக ஒப்பந்தத்திலிருந்து எந்தக் காரணமும் சொல்லாமல் ஹெச்.ஏ.எல். கழட்டிவிடப்பட்டிருந்தது. 126 விமானங்கள் ரூ.90,000 கோடிக்கு பதிலாக 36 விமானங்கள் ரூ.60,000 கோடிக்கு வாங்குவதாக மாற்றப்பட்டிருந்தது. ஒரு விமானத்துக்கான விலை ரூ.714 கோடியிலிருந்து ரூ.1,611 கோடியாக உயர்ந்திருந்தது. மிகப் பெரிய அதிர்ச்சியாக ‘தொழில்நுட்ப பரிமாற்றம்’ ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதனால், நம் வசமாகவிருந்த மிகப் பெரிய விமான தொழில் நுட்பத்தை நாடு இழந்தது. இதை எல்லாவற்றையும்தான் நாடாளுமன்றத்தில் கேட்டார் ராகுல். ஆனால், எல்லாவற்றுக்கும் ஒரே பதிலாக மோடி, “நான் ஏழைத் தாயின் மகன்” என்கிறார். பதில் இது அல்லவே மோடி!
விலை உயர்வுக்கு சொல்லும் காரணம் என்ன?
புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி போர் விமானத்தில் புதியதாக மீட்டியோர் மிஸல் பொருத்தப்படுகிறது. பார்வை புலத்துக்கு அப்பால் தொலைதூரம் வரும் எதிரி விமானத்தைக் கண்டறிந்து சொல்லும் ரேடார் தொழில்நுட்பத்துக்கான சாதனம் இது. அதன் விலை சுமார் 13 கோடி ரூபாய். கூடுதலாக ஹெல்மெட் மவுன்டட் டிஸ்பிளே சிஸ்டம் பொருத்தப்படுகிறது. திரையில் தெரியும் எதிரி விமானத்தைக் குறிவைத்து தாக்குவதற்கான தொழில்நுட்பம் இது. இதன் விலை சுமார் இரண்டரை கோடி ரூபாய். இதையெல்லாம் கணக்கிட்டால்கூட விமானத்தின் விலை 730 கோடியைத் தாண்டாது. ஹெல்மெட் மவுன்டட் டிஸ்பிளே சிஸ்டம் உற்பத்தியை இஸ்ரேலைச் சேர்ந்த ‘எல்பிட்’ என்கிற நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவிலுள்ள ‘ஏரோ டிஃபென்ஸ் சிஸ்டம்’ என்கிற தனியார் நிறுவனத்துடன் ‘எல்பிட்’டும் இணைந்து தயாரிக்க கடந்த 2016 மார்ச்சில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனம் அதானி குழுமத்தைச் சேர்ந்தது. இதை மோடி பிரான்ஸிலிருந்து திரும்பிய இரண்டே மாதத்தில் 2015 ஜூலையில் தொடங்கியிருக்கிறார்.
சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா நாடு?
நடக்கும் மொத்த விஷயங்களையும் முடிச்சிட்டுப் பார்த்தால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது பாதையிலிருந்து படிப்படியாக விலகி, அறிவிக்கப்படாத சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதோ எனச் சந்தேகங்கள் எழுகின்றன. ஜனநாயகத்தின் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் சர்வாதிகாரம் இன்னும் ஆபத்து நிறைந்தது. ஏற்கெனவே, இந்தியாவில் இஸ்ரோவின் ராக்கெட் தயாரிப்பு தொடங்கி பாதுகாப்புத் துறை தொடர்பான திட்டங்கள் பலவும் தனியார் கரங்களுக்குள் சென்றுகொண்டிருக்கின்றன. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் 49% அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கும் நிலையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தனியாரைப் பாதுகாப்புத் துறைக்கான பொருள்கள் உற்பத்தியில் மேலும் உள்ளே இழுக்கும் வேலைகளை பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் தாரளமயமாக்கல் அடிப்படையில் ஆயுத உற்பத்தியும் பரவலாக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான விதிமுறைகளும் தளர்த்தப்படும். இது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதைப் போல் அபரிமிதமான ஆயுதக் கலாச்சாரத்தையே வளர்க்கும். நாட்டில் துப்பாக்கிச் சூடுகளுக்கும் படுகொலைகளுக்கும் பஞ்சம் இருக்காது! இதைத்தான் இந்த தேசம் விரும்புகிறதா?
- டி.எல்.சஞ்சீவிகுமார்,
தொடர்புக்கு sanjeevikumar.tl@kamadenu.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago