பயணிகள் மீது பழி போடாதீர்கள்… ரயில்களை அதிகமாக்குங்கள், மெட்ரோ – பஸ் கட்டணத்தைக் குறையுங்கள்!

By புதுமடம் ஜாபர் அலி

புதுமடம் ஜாபர்அலிசென்னையில், ரயிலில் தொங்கியபடி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் நிலையத்தில் ஓடும் பாதையை ஒட்டியுள்ள கட்டுமானத்தில் மோதி அடிபட்டு, உயிரிழந்த செய்தி தமிழ்நாட்டு மக்களை அதிரவைத்திருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தாம்பரம் – கடற்கரை ரயில் தடத்தில் பயணிப்பவர்களுக்குத் தெரியும், இப்படியான விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன, குறிப்பாக பரங்கிமலை ரயில் நிலையத்தில் பாதிப்புகள் அதிகம். அடிபடாவிட்டாலும், சென்னைக்குள் ரயில்களில் பயணிப்போர் தினமும் மரணத்துடன் போரிட்டபடிதான் வீடு திரும்புகின்றனர்.

பலரும் இதைப் பயணிகளின் தவறாக முடித்துவிட முற்படுகின்றனர். படிகளில் பயணிப்பதே இப்படியான விபத்துகளுக்கான காரணம் என்று தீர்ப்பெழுதி அரசின் தவறுகளிலிருந்து ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விடுவித்துவிட முயற்சிக்கின்றனர். படிகளில் பயணிப்பது தவறுதான். ரயிலுக்குள் இடம் இருந்தும் திமிர்த்தனமாக வாசலில் நின்றபடி பயணித்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். கேள்வி என்னவென்றால், அலுவலக நேரங்களில் எந்த ரயிலில் அல்லது பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருக்கிறது? மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3,600+  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிப்போர் 45 லட்சம் பேர். ரயில்வே 700+ மின்சார ரயில் சேவைகளை இயக்குகிறது. இவற்றில் பயணிப்போர் சுமார் 7 லட்சம் பேர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் நின்றபடி, தொங்கியபடி பயணிக்கிறார்கள் என்பதைத்தானே இந்த எண்கள் சொல்கின்றன?

இந்தக் கூட்டத்தை எதிர்கொள்ள என்ன உருப்படியான நடவடிக்கைகளை இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் எடுத்திருக்கின்றனர்? எந்த அளவுக்குப் பொதுப் போக்குவரத்தை மக்கள் நலனுடனும் சுற்றுச்சூழல் அக்கறையுடனும் இவர்கள் அணுகுகின்றனர்? இவர்களுடைய அக்கறையை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். சென்னை மெட்ரோ திட்டம் என்ன காரணத்துக்காகக் கொண்டுவரப்பட்டது? ஒரு கோடியைத் தொடும் சென்னையின் மக்கள்தொகையும் போக்குவரத்து நெரிசலும் விரிந்தபடியே இருக்கின்றன. இருக்கிற போக்குவரத்துக் கட்டமைப்பு போதவில்லை. அதையொட்டியே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.  சென்னை பெருநகரத்தின் போக்குவரத்தைச் சீர் செய்வதற்கான மிகப் பெரிய திட்டம் மெட்ரோ ரயில் திட்டம்.

பல நாடுகளிலும், இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களிலும் வெற்றியடைந்த மெட்ரோ ரயில், சென்னையிலும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டே இந்தத் திட்டத்துக்கு ஏற்பாடானது. மீனம்பாக்கம் – மத்திய ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டை – பரங்கிமலை, மாதவரம் – சிறுசேரி, மாதவரம் – சோழிங்கநல்லூர், விவேகானந்தர் இல்லம் - கோயம்பேடு என்று இதுவரை திட்டமிடப்பட்டிருக்கும் ரயில் தடங்களும் சரி, ரயில் நிலையங்களும் சரி; பணிகள் முடித்து ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும் தடங்களும் சரி; யாவுமே நல்ல போக்குவரத்து நெரிசல் மிக்கவை. ஆனால், முதல் கட்டப் பணிகள் முடிந்து தொடங்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவை ஏன் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை?

முக்கிய காரணங்களில் ஒன்று, ரயில் கட்டணம் அதிகமாக இருப்பது. இந்தியாவிலேயே அதிகமாக மெட்ரோ ரயில் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது சென்னை மெட்ரோ. டெல்லியில் முதல் 12 கி.மீ. தூரத்துக்கு ரூ.30 கட்டணம் வாங்குகிறார்கள் என்றால், சென்னையில் முதல் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கே ரூ.40 வாங்குகிறார்கள். இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும்பான்மை மெட்ரோ ரயில் சேவைகளை அரசு நிறுவனங்களே நடத்துகின்றன. லாபம் பார்க்க அல்ல; மக்கள் நலனை மையமாகக் கொண்டே நஷ்டத்தையும் அவை சுமக்கின்றன. இந்த இழப்புடன் ஒப்பிட சுற்றுச்சூழலுக்கு உண்டாகும் பாதிப்பால் நாட்டுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்று அவை உணர்ந்திருக்கின்றன. ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ்!

இதே மனநிலைதான் ஏற்கெனவே இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புறநகர் ரயில் சேவை இயக்கத்திலும் வெளிப்படுகிறது. நகரம் எவ்வளவோ விரிவடைந்துவிட்டிருக்கிறது. ரயில் பாதைகள் விரிவாக்கமும் ரயில்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப விரிவாக்கப்படவில்லை. ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் போதுமானதாக இல்லை. இந்த ரயில்களில் பயணிப்போரில் 99% பேர் தனியார் நிறுவனங்களில், அதிலும் பெரும்பான்மையோர் 10-6 வேலைகளில் இருப்பவர்கள். குறித்த நேரத்தில் அலுவலகத்தில் இல்லை என்றால், எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். பல நேரங்களில் ரயில் சேவை தாமதாகும்போது, ஒரு ரயில் சேவை தடைப்பட்டு இன்னொரு ரயில் வரும்போதோ வழமையான கூட்டம் கணப்பொழுதில் பெருகிவிடும். எல்லாமும் சேர்ந்துதான் தொங்கிக்கொண்டு போகும் பயணத்துக்கு வித்திடுகின்றன.

மக்கள் மீது கரிசனம் உண்டென்றால், கூடுதல் ரயில்களை இயக்குங்கள். ரயில் பாதைகளை விரிவாக்குங்கள். முக்கியமாக மெட்ரோ ரயில், டவுன் பஸ் கட்டணத்தைக் குறையுங்கள். நிர்வாகக் கேடுகளாலேயே மக்கள் சாகிறார்கள். சாவுக்கான பழியையும் செத்தவர்கள் மீதும் அடிபட்டவர்கள் மீதும் போட்டு தப்பிப்பது அக்கிரமம்!

- புதுமடம் ஜாபர்அலி,

தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்