அன்னக்கிளியும் கவிக்குயிலும் பத்ரகாளியும் வெளிவந்ததற்குப் பிறகான காலகட்டம் அது. இளையராஜா என்னும் மாய மகுடிக்காரர் தமிழ் சினிமாவின் இசை ரசிகர்களை, பாம்புகளாக ஆட்டி வைத்துக்கொண்டிருந்த தருணம். அதுவரை நாங்கள் பார்த்த இயற்கைக் காட்சிகளுக்கு வயலின் கோர்வையால் வண்ணமேற்றி, எங்கள் கற்பனையை விரித்த இசைக் கலைஞனின் வசந்த காலம்.
நான் என்பது அப்போது நான் மட்டுமல்ல. முருகேசன், வாசு, பாலு, ஞானசேகரன், கார்த்தி, சேகர் என்ற நண்பர் குழாம். தினமும் எல்லோரும், தளத்தெரு என்ற எங்கள் கிராமத்திலிருந்து, இரண்டு கி.மீ. தூரத்திலிருந்த காரைக்காலுக்கு சைக்கிள் களில் பயணிப்போம். இப்போதைய பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால்தான் எங்களுக்குப் பிடித்தமான இலவச இசையரங்கம். கடையின் இருபுறமும் கம்பீரமாக வீற்றிருக்கும் ஆளுயுர ஒலி பெருக்கிகளிலிருந்து இளையராஜாவின் பாட்டருவிகள் இரவு பகல் பேதமின்றி வழிந்துகொண்டேயிருக்கும்.
எங்கள் கூட்டாஞ்சோறு காசைப் போட்டு, நூறு கிராம் அல்வாவும் நூறு கிராம் வெங்காய பக்கோடாவும் வாங்கிக்கொண்டு, பேருந்து நிலையத்தில் பயணிகளின் இயக்கத்தைப் பராக்குப் பார்த்தபடி, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நிற்போம். ஆறுமுகம் கடை அல்வாவும் ராஜாவின் இசையும் சுவையில் போட்டி போடுவதை மனதுக்குள் ஆராதித்த நாட்கள் அவை.
பேருந்து நிலையத்தின் தென்புறம் இருந்த தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டல் வேறு வகை. எப்போதும் கூட்டம் அலைமோதும் அந்தப் புகழ்பெற்ற கீற்றுக் கொட்டகை அசைவ உணவகத்திலும் அருள்பாலித்தார் இளையராஜா. பிரம்மாண்டமான தோசைக் கல்லில் முட்டை பரோட்டா அடிக்கும் டம்ளர் சத்தம், பாடல்களின் தாளத்துக்கேற்ப லயசுத்தமாக இயைந்து ஒலிப்பது இன்றும் என் செவிப்பறைகளில் எதிரொலிக்கிறது.
என் நண்பன் வாசுவின் அப்பா, கோவில்பத்து என்ற இடத்தில் ‘பழனி ஆண்டவர் டீ ஸ்டால்' என்ற பெயரில் ஒரு டீக்கடை நடத்திவந்தார். அந்தக் கடைக்குப் பக்கத்துக் கடை ‘அன்புராஜ் சவுண்ட் சர்வீஸ்' என்ற மைக் செட் கடை. அங்கு பாடல்கள் ஒலிபரப்ப அவர் வைத்திருந்த கருவி பழைய ரெக்கார்டு பிளேயர். சாவி கொடுத்து இயங்கும் ரெக்கார்டு பிளேயரில் கொஞ்ச நேரத்தில் பாட்டு ஈனஸ்வரத்தில் இழுக்கத் தொடங்கும். மீண்டும் சாவியை முடுக்கினால்தான் சராசரி வேகத்தில் இசைத்தட்டு சுழலும். ஒரு நாள் அந்த உபாதையிலிருந்து விடுதலை கிடைத்தது.
அன்புராஜ் ஒரு நேஷனல் பானாசோனிக் டேப் ரெக்கார்டரை வாங்கினார். அதில் துல்லியமான ஒலியுடன் ஒலிக்கத் தொடங் கியது ராஜாவின் இசை. குறிப்பாக, ‘தாலாட்டுதே வானம்' என்னும் ‘கடல் மீன்கள்' படத்தின் பாடல் தந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. அன்புராஜிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஓர் இரவுக்கு மட்டும் அந்த டேப் ரெக்கார்டரை என் வீட்டுக்கு இரவல் வாங்கி வந்தேன். ‘தாலாட்டுதே வானம்' பாடலை விடியும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். எப்போது அந்தப் பாடல் என் செவிகளை வருடினாலும் அந்த ஆனந்த இரவை, பழைய நேரலையாய்க் காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
‘கிழக்கே போகும் ரயில்' காரைக்கால் டைமண்ட் தியேட்டரில் வெளியாகியிருந்தது. படம் வந்த அன்றே பார்ப்பது என்பது சினிமா ரசனையின் அன்றைய உச்சபட்ச சுவாரசியம். ஆளுக்குக் கொஞ்சம் காசு தேற்றிக்கொண்டு, எங்கள் நண்பர் குழாம் அன்றிரவு இரண்டாம் ஆட்டத்துக்குப் போகத் திட்டம் தீட்டியது. நண்பர்களில் ஒருவன், வீட்டுக்கு ‘டேக்கா' கொடுப்பதில் தாமதம் செய்ய, கடைசியில் டிக்கெட் கிடைக்காமல் போனது.
அந்த ஏமாற்றத்தை எங்களால் தாங் கவே முடியவில்லை. துயரம் தோய்ந்த முகங்களுடன், அப்படியே டைமண்ட் தியேட்டருக்குப் பின்புறம் உள்ள மைதானத்தில் நடந்தோம். அப்போது திரையின் பின் பக்கச் சுவரிலிருந்து ‘பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதி வந்தாச்சு...' பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் எங்களின் முகங் களும் சட்டென மகிழ்ச்சியால் பூத்தன. படம் முடியும் வரை வசனங்களையும் பாடல்களையும் ஒலிச்சித்திரமாகக் கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தோம்.
அந்த டைமண்ட் தியேட்டர், இன்று டென்னிஸ் கோர்ட் ஆக உருமாறிவிட்டது. தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டல் இருந்த இடத்தில் இப்போது ஒரு சைவ உணவகம் இருக்கிறது. ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டாலும் அன்புராஜ் சவுண்ட் சர்வீஸும் இருந்த இடங்களில் கைபேசிக் கடைகள். அந்தப் பேருந்து நிலையம், ‘பழைய பஸ் ஸ்டாண்ட்' ஆகிவிட்டது. ஏழெட்டுப் பேருந்துகள் மட்டுமே நிற்கக்கூடிய விஸ்தீரணம் கொண்ட, அதன் சிதிலமடைந்த சிமெண்ட் தடங்களில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன. பேச்சரவம் அற்ற இரவுகளில் ஒரு வயோதிகரின் பேரமைதியுடன் மவுனமாக உறைந்து கிடக்கிறது பழைய பேருந்து நிலையம். காற்றில் அவ்வப்போது கசியும் இளையராஜாவின் பாடல்களைச் சுவாசிக்கும் தருணங்களில் அதனிடமிருந்து ஒரு மெல்லிய பெருமூச்சு கேட்கிறது.
- எஸ்.ராஜகுமாரன்,எழுத்தாளர்-ஆவணப்பட இயக்குநர். தொடர்புக்கு - s.raajakumaran@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago