அப்பா இனியேனும் ஏற்றுக்கொள்வாரா?- சத்யஸ்ரீ ஷர்மிளா பேட்டி

By ச.கோபாலகிருஷ்ணன்

மிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துள்ள முதல் திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இவர் 18 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். 2007-ல் சேலம் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் கடந்த சனிக்கிழமை (ஜூன் 30, 2018) அன்று பார் கவுன்சில் உறுப்பினராகியிருக்கிறார். இந்தப் பயணம் பற்றியும் வருங்காலத் திட்டங்கள் பற்றியும் ‘இந்து தமி’ழிடம் பகிர்ந்துகொண்டார்:

தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியிருக்கிறீர்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிக் கூறுங்கள்?

பொதுவாகவே, திருநங்கைகள் வாழ்வில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் வாழ்ந்துவருகிறோம். நான் ஒரு வழக்கறிஞராக ஆவதற்கு நிறையவே கஷ்டங்களை எதிர்கொண்டேன். 2007-ல் சட்டப் படிப்பை முடித்தேன். ஆனால் அப்போது ஒரு திருநங்கை, வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொள்ள வழி இல்லை. 2014-ல் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் இதை மாற்றியது. அதன் பிறகு, எங்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கைகளுக்கு அங்கீகார மும் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியது. அதன் மூலமாகத்தான் என்னாலும் வழக்கறிஞராக முடிந்தது.

சட்டம் படிக்க வேண்டும் என்று எப்போது, எதற்காக முடிவெடுத்தீர்கள்?

நான் சட்டம் படிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. நான் சின்ன வயதிலிருந்தே துணிச்சலாக இருப்பேன். எதையும் மன உறுதியுடன் எதிர்கொள்வேன் என்று என் அப்பா நினைத்திருக்கிறார். அதனால் என்னை வழக்கறிஞராக்க விரும்பினார். நானும் சின்ன வயதிலிருந்தே என்னை ஒரு திருநங்கையாக உணர்ந்ததால் சட்டம் பயில்வது வருங்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. எனவே, சட்டக் கல்வியில் சேர்ந்தேன்.

கல்லூரிப் படிப்பில் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வழியில்லை. எங்கும் சுதந்திரமாகச் செல்வதற்குக் கூச்சமாக இருக்கும். ஒரு வீடு எடுத்துத் தங்கினேன். முதலில் தனியாக இருந்தேன். பிறகு, என்னைப் புரிந்துகொண்ட வகுப்புத் தோழர்கள் என்னுடன் இணைந்து தங்கினார்கள். அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். என்னால் வெளியிடங் களுக்கும் பயமில்லாமல் பயணிக்க முடிந்தது. அவர்கள் என்னை ஊக்குவிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

ஆசிரியர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?

ஆசிரியர்கள் எல்லோரும் மிகுந்த ஆதரவாகவே இருந்தார்கள். நான் கல்லூரிக் கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்பேன். பல்கலைக்கழக அளவில் பரிசு களையும் வென்றிருக்கிறேன். இதனால் ஆசிரியர்கள் என் மீது கூடுதல் அக்கறை காட்டினார்கள். பாலின அடையாளத்தை வைத்து உடன் படிப்பவர்கள் கிண்டலடிப்பார்கள் என்ற பயம் இருந்தது. சில இடங்களில் அது நடக்கவும்செய்தது. ஆனாலும் முடிந்த அளவு சமாளித்து வெளியே வந்துவிட்டேன்.

படிப்பு முடிந்து இந்தப் பத்தாண்டுகளை எப்படிக் கடந்தீர்கள்?

நான் சிறுவயதிலிருந்தே என்னைத் திருநங்கையாக உணர்ந்ததால் அப்போதிலிருந்து எங்கள் சமுதாயத் தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது, அவர்களது அன்றாட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்வது என்று இருந்தேன். பள்ளிக் கல்வியை முடித்த காலத்திலேயே திருநங்கை சமுதாயத்தினருடன் தொடர்பில் இருந்தேன். ஷர்மிளா அம்மா என்பவர்தான் எனக்கு ‘குரு அம்மா’வாக இருக்கிறார். அவர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். குறிப்பாக, நான் கல்வியை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்கான உதவிகளைச் செய்தார். என் அக்கா தேவியும் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொள்வதற்கான வழிமுறைகளில் பெரிதும் உதவினார். நாங்கள் இருவருமே ஷர்மிளா அம்மாவிடம் வளர்ந்ததால் சகோதரிகள். ‘சகோதரன்’,‘ சினேகிதி’, ‘தோழி’ போன்ற அமைப்புகள், சகோதரிகள் சுதா, ஜெயா, ரேணுகா போன்ற பலர் எல்லா நேரமும் என்னுடன் இருந்து பெரிதும் உதவினர். மூத்த வழக்கறிஞர் பூங்கொடி அம்மாவும் பெண் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் நளினி, செயலர் ஆதிலட்சுமி, பொருளாளர் ராஜஸ்ரீ ஆகியோரும் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொள்வதற்கான முயற்சியைத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை எனக்கு உதவியும் ஊக்கமும் அளித்துவருகின்றனர். இத்தனை பேரின் உதவியுடன் தான் ஒரு திருநங்கை இந்த நிலையை அடைய முடிகிறது.

ஒரு வழக்கறிஞராக திருநங்கை சமூகத்துக்கு என்னென்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுவாக எந்த இடத்திலும் சட்டம் தெரிந்தவர் களுக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கும். திருநங்கை கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது. எனவே, ஒரு வழக்கறிஞராக திருநங்கைகளின் தேவைக்காக ஒரு இடத்துக்குச் சென்றால் கண்டிப்பாக அங்கு கண்ணியமாக நடத்தி வேலையையும் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த வகையில் திருநங்கை சமூகத்தினரின் வளர்ச்சிக்கு என்னால் உதவ முடியும் என்று நம்புகிறேன்.

இந்திய சட்டத் துறை மாற்றுப் பாலினத்தவர்களை அணுகும் விதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

2014-க்கு முன்பு திருநங்கைகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அந்தத் தீர்ப்புக்குப் பிறகு 100% இல்லை என்றாலும் 25% நிலைமை மாறியிருக்கிறது என்று சொல்லலாம். தீர்ப்புகளையும் சட்டங்களையும் அரசுதான் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு எந்த அளவுக்கு அக்கறையுடன் அதைச் செய் கிறதோ அந்த அளவுக்கு மாற்றங்கள் நடக்கும். 2014 தீர்ப்பில் சொன்ன விஷயங்களை முழுமையாக அமல் படுத்தினாலே பல மாற்றங்கள் நிகழும்.

திருநங்கைகள் பல துறைகளில் நுழைந்துவருகிறார்கள். ஆனால், அவர்களில் பலர் இன்னும் முன்னேறவில்லை. சமூகம் அவர்கள் மீது வைத்திருக்கும் இழிவான பார்வையும் முழுதாக மாறிவிடவில்லை. இவற்றை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு கை தட்டினால் ஓசை வராது. சமுதாயத்தில் வளர்ச்சியடைந்த பிரிவினர், வளர்ச்சி அடைந்துகொண்டிருப் பவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். பொதுச் சமூகத்தினர் எங்களை எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்களோ அந்த அளவு எங்களால் முன்னேற முடியும். திருநங்கைகள் பாலியல் தொழிலில் வேண்டுமென்றோ விரும்பியோ ஈடுபடுவதில்லை. வேலைவாய்ப்பு இல்லாத அல்லது திருநங்கை என்பதற்காகவே வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழலில் வேறு வழியில்லாமல்தான் அதுபோன்ற தொழில்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. தொழில்துறையினரும் அரசுத் துறையினரும் திருநங்கைகளுக்கு ஆதரவு தர வேண்டும். இத்தனை தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன, எத்தனை திருநங்கைகளை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் ஒரே ஒரு திருநங்கைக்கு வேலை கொடுத்தால்கூட இந்த நிலை மாறிவிடும்.

குடும்பத்தைப் பிரிந்திருக்கிறீர்கள். உங்களை வழக்கறிஞராக்குவது உங்கள் தந்தையின் கனவு என்று சொன்னீர்கள். இப்போது உங்கள் குடும்பத்தைத் தொடர்புகொள்ள முடிந்ததா?

இல்லை. 2007-லிருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை. ஆனால், இப்போது தொடர்புகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஊடகங்களின் ஆதரவால் இப்போது என் பழைய நண்பர்கள் ஒவ்வொருவராகத் தொடர்புகொள்கிறார்கள். நான் வக்கீல் ஆக வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அவரின் ஆசை நிறைவேறியிருக்கிறது. அவரும் என்னைத் தொடர்புகொள்வார், ஏற்றுக்கொள்வார் என்ற ஆசை இருக்கிறது. நடக்கும் என்று நம்புகிறேன்.

- ச.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்