நாற்பது வருடங்களுக்கு முன்னால், தஞ்சாவூர் அய்யங்கடைத் தெருவில் ‘யுவர் மெஸ்: உங்கள் சாப்பாட்டு மெஸ்' மிகவும் பிரபலம். இதை நடத்தியவர் எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரும் இங்கே வந்து இலக்கிய ரசனையையும் சாப்பாட்டு ருசியையும் ஒருசேர அனுபவித்துச் செல்வார்கள். யுவர் மெஸ்ஸின் மாடியில் உள்ள கூடத்தில் விரிந்து கிடக்கும் ஜன்னல்கள் வழியே காற்று கடல்போல் வீசும். அந்தக் கூடத்தின் சுவர் முழுவதும் கு.ப.ரா., புதுமைப்பித்தன், ரசிகமணி, ஆர்யா வரைந்த பாரதி படம், பங்கிம் சந்திரா, தாகூர் படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கும். பழம்பெரும் எழுத்தாளர்கள் ந. பிச்சமூர்த்தி, எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, ஜி. நாகராஜன் மட்டுமின்றி, அடுத்த தலைமுறை எழுத்தாளர்களான பாலகுமாரன், மாலன், வண்ணநிலவன் ஆகியோரும் அங்கு வந்துசெல்வது உண்டு.
வாழை இலையில் பரிமாறப்பட்ட இலக்கியம்
‘யுவர் மெஸ்' மாடியில் நடக்கும் இலக்கிய அரட்டையின் இடையே வகைவகையான பட்சணங்கள் வாழை இலைகளில் வரும். அதுவும் க.நா.சு. வந்துவிட்டால், அவருக்காகவே மெதுபக்கோடாவும் பாதாம் அல்வாவும் தயாரிக்கப்படும். வாழை இலைகளில் ருசி மிகுந்த பட்சணங்கள் மட்டுமின்றி இலக்கியமும் பரிமாறப்படும். ஜெயகாந்தன் இங்கே வந்து தங்கி ப்ரகாஷின் உபசரிப்பில் மகிழ்ந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் இலங்கையிலிருந்தும் எழுத்தாளர்கள் வருவார்கள்.
டெல்லியிலிருந்து வெங்கட் சாமிநாதன் வருவார். யுவர் மெஸ்ஸின் பட்சண இன்பம், ஊர் திரும்ப முடியாதபடி அவர்களைக் கட்டிப்போட்டுவிடும்.
புதுவையிலிருந்து அடிக்கடி யுவர் மெஸ்ஸுக்கு வந்த இளைஞர் ஒருவர், மாதக் கணக்கில் தங்கிவிட்டுப் போவார். நேர்த்தியாக வெள்ளை ஜிப்பாவில் காட்சிதரும் அவர், தெருவைப் பார்த்து ஜன்னலில் சாய்ந்துகொண்டு புகைத்தபடி இருப்பார். அவர்தான் பிரபஞ்சன். ஒல்லியான தோற்றத்தில் எதுவும் பேசாமல், ஆனால் மூத்த எழுத்தாளர்கள் பேசுவதை, கன்னத்தில் கையூன்றிக் கவனித்தபடி இருப்பார் மாலன்.
மீன் ஊறுகாயும் கோலா உருண்டையும்
யுவர் மெஸ்ஸில் அபூர்வமான ஆரோக்கிய உணவுகள் தயாரிக்கப்பட்டன. மூலச்சூடு போக்கும் பிரண்டை ஊறுகாய், நெஞ்சுச் சளியை நீக்கும் தூதுவளை ரசம், குடலைச் சுத்தம்செய்யும் மணத்தக்காளி தண்ணிச்சாறு, பத்தியக் குழம்புகள், பிரண்டை வற்றல் குழம்பு, துவையல், முடக்கத்தான் தோசை, கல்யாண முருங்கை அடை, கொழுக்
கட்டை வகையறாக்கள், உலகப் புகழ் பெற்ற சுண்டியா என்னும் கோலா, மீன் ஊறுகாய் இப்படியான தஞ்சாவூர் ஸ்பெஷல் அயிட்டங்கள் யுவர் மெஸ்ஸின் மெனுவில் இடம் பெற்றிருந்தன. அசைவ உணவுக்காகத் தனி சமையற்காரர்கள் இருந்தார்கள். மராட்டிய சமையல் பெண்கள், துர்காபாய் சகோதரிகளின் கைப்பக்குவத்தில் சமையல் வாசனை தெருவோடு போகிறவர்களையும் சுண்டியிழுக்கும்.
மராட்டிய மன்னர் காலத்து அசைவ உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார் தஞ்சை ப்ரகாஷ். தாமே நேரடியாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சமையல் அறையில் புகுந்துவிடுவார். பதார்த்தங்களை ருசிபார்த்துக் குறைநிறைகளைச் சொல்லி விட்டு வருவார்.
சுற்றுவட்டாரத்தில் இருந்த அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் யுவர் மெஸ் வரப்பிரசாதமாக இருந்தது. மதிய வேளைகளில் ஆள் உயர டிபன் கேரியர்களுடன் அலைமோதும் கூட்டத்தை அங்கேதான் பார்த்தேன். மெஸ்ஸின் நிர்வாகத்தை மீசை முருகேசனும் இருளாண்டியும் கவனித்துக்கொண்டார்கள். இருவருமே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.
வியாபாரம் செய்து காசுபார்க்கும் ஆசை ப்ரகாஷ் உட்பட அங்கு யாரிடமும் இல்லை. வயிற்றைக் காயப்போட்டு இலக்கிய சர்ச்சை ஒருபோதும் நடந்தது இல்லை. பசியால் லேசாக முகம் வாடினாலும் போதும் ப்ரகாஷ் கண்டுபிடித்துவிடுவார். தன்னை மறந்து இலக்கிய அரட்டையில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு கீழே போவார்.
மூடப்பட்ட சாளரம்
யுவர் மெஸ்ஸில் தினமும் பத்துப் பன்னிரண்டு பேருக்குக் குறையாமல் சாப்பாடு பரிமாறப்பட்டது. தஞ்சாவூர் தாட் இலையில் சைவ, அசைவ உணவுப் பிரியர்கள் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு, மாடி ஹாலில் வெற்றிலை பாக்கு போட்டுக் குதப்புவார்கள். சிகரெட், பீடிப் புகை ஹோமமும் நடக்கும். சிலர் இலக்கியப் பேச்சையும் சிலர் தூக்கத்தையும் தொடர்வார்கள். ப்ரகாஷ் யாரையும் எதற்கும் கடிந்துகொள்ளவே மாட்டார்.
யுவர் மெஸ்ஸை நடத்துவதில் தொழில்ரீதியாகத் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் - சோதனைகளைத் தவறியும் தனது இலக்கிய நண்பர்களிடம் அவர் வெளியிட்டதில்லை. உடனே தீர்த்தாக வேண்டிய, தலைபோகிற பிரச்சினையுடன் வந்திருக்கும் மெஸ் மேனேஜர் முருகேசனைக் காக்கவைத்துக் கம்பராமாயணத்தை அலசிக்கொண்டிருப்பார். மெஸ் விவகாரத்தை மறந்து முருகேசனும் இலக்கிய விசாரத்தில் மூழ்கிவிடுவார்.
இலக்கியம் பேசத்தான் அவர் அந்த மெஸ்ஸை நடத்தினார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம். சில லட்சங்கள் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் கவனத்துடன் மெஸ்ஸை நடத்தியிருந்தால், தஞ்சையின் புகழ்பெற்ற ஹோட்டல் முதலாளியாக ஆகியிருப்பார். இத்தனைக்கும் ஹோட்டல் தொழில்நுட்பங்கள் அவருக்கு அத்துப்படி. ஆனால், அவருக்கு இலக்கியமே பிரதானமாக இருந்தது. அதனாலேயே, காலப்போக்கில் யுவர் மெஸ் மூடப்பட்டுவிட்டது.
‘...என்றும் தமிழ் ஆன்மாவைத் தேடி ஒளிரும் வாழ்வே வியாபார விற்பனை விலையகமாக மாறிவிட்டபோது, யுவர் மெஸ் மட்டுமே நிலைக்குமா? ரசனையையும் ருசியையும் மட்டுமே வாழ்வாகக் கொள்ள அனுமதிப்பார்களா நம் மக்கள்?' என்று தஞ்சை ப்ரகாஷ் வருத்தத்துடன் ஒருமுறை குறிப்பிட்டார். ஜீரணிக்க முடியாத வருத்தம் அது.
- தஞ்சாவூர்க் கவிராயர், எழுத்தாளர், தொடர்புக்கு: t hanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago