எம்ஜிஆரின் உயிரக்காரர்!

By சமஸ்

சென்னை சைதாப்பேட்டை. கலைஞர் கருணாநிதி வளைவை நெருங்கும்போதே மீன் வாடை தூக்குகிறது. அங்கிருந்து நூறடி தூரத்தில் இருக்கிறது திருக்காரணீஸ்வரர் மீன் சந்தை. சந்தைக்குள் கால் எடுத்துவைத்து நுழையும் முன்னரே, காதுக்குள் நுழைந்துவிட்டார் டி.எம்.சௌந்தரராஜன்.

‘ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ, ஆடும் மனதிலே ஆறுதல் காணீரோ...’

வரிசையாக மீன் கடைகள், எதிர்ப்படும் இட்லி தோசை ஆயாக்கள், டீ பையன்களைத் தாண்டி ‘ஆயிரத்தில் ஒருவ’னை நூல் பிடித்துக்கொண்டே சென்றால், ஒரு சின்னக் கடையில் மீன் வெட்டிக்கொண்டிருக்கிறார் கண்ணாடி போட்ட பெரியவர் சேகர்.

“இங்கே எம்ஜிஆருக்கு மீன் அனுப்பியது...”

வாக்கியத்தை முடிப்பதற்குள், “ஆமா, இங்கதான். அதுக்கு இன்னாபா?” என்கிறார்.

அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன்.

சென்னையில் உள்ள கடற்கரைகள், மீன் சந்தைகள் அத்தனையிலும் இவரைத் தேடிக்கொண்டிருந்தேன். விசேஷம் ஒன்றும் இல்லை. அவரிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அந்தக் கதை நான் தேடிக்

கொண்டிருந்த கேள்விக்கான பதிலைத் தரலாம் என்று சொன்னார் ஒரு நண்பர்.

அப்படி என்ன இருக்கிறது எம்ஜிஆரிடம்?

பொதுவாக, தமிழக அரசியல்வாதிகள் கடற்கரைச் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு மிகச் சொற்பம். இதில் கட்சி பேதம் ஏதும் இல்லை. இன்றளவும் நல்லதோ கெட்டதோ கொஞ்சமேனும் கடற்கரைச் சமூகத்திடம் அக்கறையாக இருந்த தலைவர் என்றால், லூர்து அம்மாள் சைமன் பெயரைத்தான் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் பயணத்தில் என்னைக் கவனிக்க வைத்த விஷயங்களில் ஒன்று, கடற்கரையில் எம்ஜிஆருக்கு இருக்கும் செல்வாக்கு.

எம்ஜிஆர் இறந்து கால் நூற்றாண்டாகி இருக்கலாம். இன்னமும் கடலோரத்தில் அவரை அடித்துக்கொள்ள ஒரு ஆள் வரவில்லை. அதற்காக எம்ஜிஆர் மீது அவர்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சென்னையில் மெரினா கடற்கரையை ‘அழகுபடுத்தும்’ திட்டத்துக்காக மீனவக் குடியிருப்புகள் அகற்றப்பட்டது; மீனவர்கள் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, மண்டைக்காடு கலவரத்தின்போது அரசின் நிலைப்பாடு எதையும் அவர்கள் மறக்கவில்லை. அவை எல்லாவற்றையும் குறிப்பிடுகிறார்கள்; அவற்றையெல்லாம் தாண்டியும் எம்ஜிஆரை நேசிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சினிமா கவர்ச்சியும் ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’ படங்களும் மட்டுமே இந்த நேசத்தின் தூண்கள் என்று நான் நம்பவில்லை. வேறு என்ன காரணங்கள் என்று தேடியபோது நிறைய கிடைத்தன. தனிப்பட்ட வகையில் கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்த பலருடன் அவருக்கு இருந்த உறவுக் கதைகள் அவற்றில் முக்கியமான ஒன்று. சேகரிடம் இருப்பதாக நான் கேள்விப்பட்ட கதை அப்படிப்பட்டது. அந்தக் கதையின் சுருக்கத்தை மட்டும் நண்பர் எனக்குச் சொல்லியிருந்தார்: “எம்ஜிஆர் வீட்டுக்கு வாடிக்கையாக ஒரு கடையிலிருந்து மீன் போகும். அந்த மீன்காரருடன் எம்ஜிஆருக்கு நெருக்கமான உறவு இருந்தது.”

யார் அந்த மீன்காரர்?

நாமும்தான் மீன் சாப்பிடுகிறோம். மீன்காரர் பெயர்கூட நமக்குத் தெரியாதே? ஒரு மாநிலத்தின் மூன்று முறை முதல்வர். அவர் காலத்தின் முடிசூடா மன்னராக இருந்த ஒரு மனிதருக்கு, ஒரு சாமானிய மீன்காரருடன் உறவு இருந்தது என்றால், அது முக்கியமானதல்லவா? அந்த மீன்காரர் யார், அவருக்கும் எம்ஜிஆருக்குமான உறவுக் கதையின் முழு வடிவம் என்ன என்று தேடிச்சென்றபோதுதான், சேகர் சிக்கினார். எம்ஜிஆர் கதையைக் கேட்டபோது, வெட்டிய மீன்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

“எங்கப்பா பேரு கண்ணன். என்.கே. கண்ணன். தலிவரை எங்கப்பா அண்ணன்னு கூப்புடுவாரு. நாங்கல்லாம் பெரியப்பான்னுதான் கூப்புடுவோம். மொதமொதல்ல ராமாவரம் தோட்டத்துலேர்ந்து ஆளுங்க வந்து மீன் வாங்கினு போய்க்கிறாங்க. நல்லாருக்கவும் அப்பறமேல்ட்டு இங்கியே வாங்க ஆரமிச்சாங்க. ஒருநா ‘மீன் நல்லாருக்கே, யாருகிட்டபா வாங்குறீங்க, அந்தாளை வரச் சொல்லுங்க’னு சொல்லிகிறாரு. அப்பா போய்ப் பாத்துருக்காரு. அப்போலேந்து பழக்கம்.

வாரத்துல ஆறு நா இங்கேருந்து தோட்டத்துக்கு மீன் போவும். செவ்வாக் கெழம மட்டும் போவாது. விரால் மீன்னா தலிவருக்கு உசுரு. அதேமேரி வஞ்சிரக் கருவாடு ரொம்பப் புடிக்கும். அவருக்கு மட்டும் இல்ல; தோட்டத்துல வேல செய்ற எல்லாருக்குமே போவும். ஒவ்வொரு பொங்குலுக்கும் தோட்டத்துக்கு வர் சொல்லுவாரு. எல்லாரையும் விசாரிப்பாரு...’’

“அப்படி அழைக்கிறப்ப, எம்ஜிஆர் ஏதாவது தரும் வழக்கம் இருந்துச்சா? உங்க அப்பா உங்க குடும்பத்துக்காவும், உங்க சமூகத்துக்காவும் எதையாவது கேட்டு செஞ்சிருக்காரா?”

“பொதுவா, எல்லாருக்கும் எதனா கொடுப்பாரு. ஆனா, எங்கப்பா எதையும் வாங்க மாட்டாரு. ‘நீங்க எவ்ளோ பெரிய மனுசன்... உங்களைப் பாக்குறதே பெரிய சந்தோசம்’னு சொல்லிட்டு வந்துடுவாரு. ஆனா, இவுரு எதனா செஞ்சு எடுத்துட்டுப்போவாரு. அதனாலேயே அப்பா மேல பெரிய பாசம் தலிவருக்கு. என் தங்கச்சி பாக்கியம் கல்யாணத்துக்குச் சொல்லப் போனப்ப, அப்பாகிட்ட ‘இந்தக் கலியாணம் முழுக்க என் செலவு... நீ ஒண்ணும் பேசக் கூடாது’ன்னுட்டாரு. அவரே முன்னாடி நின்னு கலியாணத்தை முடிச்சுவெச்சாரு. 1977 தேர்தலப்போ திடீர்னு அப்பாவ ஒரு நா கூப்புட்டாரு. ‘சைதாப்பேட்டைக்கு நீதான் வேட்பாளரு’ன்னுட்டாரு.”

“அப்பா தேர்தல்ல நின்னாரா?”

“நின்னாரு. ஆனா, மூவாயிரத்துச் சொச்ச ஓட்டுல தோத்துட்டாரு. ஆனா, தலிவர் அரசியல்ல எவ்ளோ பெரிய எடத்துக்குப் போனாலும் அப்படியே இருந்தாரு. என்னோட இன்னோரு தங்கச்சிக்கு இதய நோய். கடைசியா அவரு அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகப் போனாருல்ல, அந்தச் சமயத்துல நாங்க பாக்கப் போனப்ப இதைத் தெரிஞ்சுகினு ரொம்ப வருத்தப்பட்டாரு. அமெரிக்காவுக்கு அழைச்சுக்கிட்டுபோய் சிகிச்சை பண்ணுவோம்னு ஆறுதல் சொன்னாரு. நல்ல மனுசன் போய்ச் சேந்துட்டாரு.”

கண்ணனின் மரணத்துக்குப் பின் சரிவைச் சந்தித்திருக்கிறது அவருடைய குடும்பம். சேகரும் அவருடைய திருமணமாகாத தங்கை தனமும் சின்ன அளவில் மீன் வியாபாரம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு முந்நூறு நானூறு கிடைக்

கும் என்கிறார்கள். “தலிவர் இருந்த எடத்துல தலிவி. இன்னிக்கு நாம எங்கேயோ, அவுங்க எங்கேயோ இருக்கலாம். ஆனா, மனசுல இருக்காங்க” என்கிறார் சேகர், சுவரில் தன் தந்தை - தாயுடன் எம்ஜிஆர் இருக்கும் படத்தையும் தூரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் படத்தையும் காட்டி.

கடலோடிகள் சமூகத்தில் உயிரக்காரர் என்றொரு வார்த்தைப் பிரயோகம் உண்டு. தமக்கு அரிசி, காய்கறிகள், உணவுப் பொருட்களை வழங்கும் விவசாயிகளை உயிரக்காரர் என்று சொல்வார்கள் கடலோடிகள். அதாவது, உணவு கொடுத்தவர் உயிருக்கு இணையானவர் என்று பொருள். கடலோடிகளும் உயிரக்காரர்கள்தான். ஆயிரத்தில் ஒருவர்தான் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறார்!

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்