ஒவ்வொரு செல்போனிலும் ஒரு ஆபாசத் திரையரங்கம் இருக்கிறது!- இமையம் பேட்டி

By செல்வ புவியரசன்

ஸ்

மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத்தைப் பயன்படுத்துவதில் நம்முடைய தேசமே முன்னணியில் நிற்கிறது. போன் பயன்படுத்தும் நேரத்தில் 80% இணையதளத்தில்தான் செலவழிகிறது என்றும் சொல்கின்றன ஆய்வுகள். எந்த ஒரு கருவியும் அதன் பண்பை மக்களின் பயன்பாட்டி லிருந்தே பெறுகிறது. தகவல் தொடர்பைத் தாண்டி எந்த அளவுக்கு போன் பயன்படுகிறது என்ற கணக்கைப் பார்த்தால் கடல் அளவு பயம் கவ்வுகிறது. போன் நம்முடைய குழந்தைகளை, குடும்பங்களை, திறன்களை எப்படிச் சூறையாடிவருகிறது என்பதை எதிர்காலம் நமக்கு விரைவில் சொல்லிவிடும். படைப்பாளிகளில் தொடர்ந்து போன்களின் அபாயத்தைப் பேசியும் எழுதியும் வருகிறவர் இமையம்.

உங்கள் படைப்புகளிலும் பேச்சிலும் செல்போன்களை விளாசுகிறீர்கள். அப்படி என்னதான் கோபம்?

இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாதபடி, மனித உறுப்புபோலவே ஆகிவிட்டது செல்போன். ஆடு மாடு மேய்க்கிறவர்கள் வரைக்கும் செல்போன் கிடைத்திருக்கிறது. ஆபத்து கால உதவியில் தொடங்கி உறவுகளுடனான உரையாடல் வரை செல்போன் பெரிய உதவி யாக இருக்கிறது. தொலைத்தொடர்பில் நம் கற்பனைக்கு மிஞ்சி அது சாதனை செய்திருக்கிறது. உலக விஷயங்கள் அனைத்தையும் இருந்த இடத்தில் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு மனிதத்தன்மையை அது அழித்துக்கொண்டும் இருக்கிறது என்பது உண்மை. கையில் செல்போன் இல்லாவிட்டால் ஒருவன் துடித்துப்போகிறான்.. ஏன்? அந்த அளவுக்கு நாம் அதைச் சார்ந்திருக்கிறோம், அடிமை யாக இருக்கிறோம். இன்றைக்கு இந்தியக் குடும்பங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு அரிசி, பருப்புக்குச் செலவுசெய்வதைக் காட்டிலும் செல்போனுக்கு செய்யப்படும் செலவு அதிகம். இப்படியான செலவின் பெரும் பகுதி மனிதர்கள் தங்களைத் தாங்களே, சீரழித்துக்கொள்ள உதவுகிறது என்பதால்தான் கோபப்படுகிறேன்.

மனிதத்தன்மை என்று இங்கே எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

சமீபத்தில் ரயில் பயணத்தில் நான் பார்த்த காட்சி. புதிதாக திருமணமான ஜோடி. பல மணி நேரப் பயணம் அது. பயணத்தில் அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தை கள் ஐந்து பத்துதான் இருக்கும். இருவர் கையிலும் போன். ஊர் வந்து இறங்கும்வரை முழுக் கவனத்துடன் போனையே நோண்டிக்கொண்டிருந்தார்கள். யோசித்துப்பாருங்கள், கணவன் - மனைவி என்ற தாம்பத்திய உலகுக்குள் இப்போதுதான் வந்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு பேரும் இரண்டு விதமான மாய உலகத்துக்குள் இருக்கிறார்கள். திருமணமான புதிதிலேயே இந்தக் கதி என்றால், பின்னாளில் இந்த உறவு என்ன ஆகும்? நீங்கள் கவனித்துப் பார்த்தால், பல தம்பதி யினரை இன்று இப்படிப் பார்க்க முடியும். விருந்தினராக ஒரு வீட்டுக்குச் சென்றால், ஆளுக்கு ஒரு போனுடன் உட்கார்ந்தபடி ‘ஹாய்’ சொல்லிவிட்டு, மீண்டும் போனுக்குள் மூழ்கிவிடும் மனிதர்களைப் பார்க்க முடியும். ஒவ்வொரு மனிதனையும் செல்போன்கள் தனித்தனித் தீவுகளாக மாற்றியிருக்கின்றன. ஒவ்வொரு செல்போனும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. ஒவ்வொரு மனிதனுமே ஒரு செய்தி நிறுவனமாக மாறுகிறான். நம்முடைய இரவுகளை செல்போன் எடுத்துக்கொண்டுவிட்டது.

செல்போன்களின் ஆக்கபூர்வமான அம்சங்களோடு ஒப்பிடுகையில் இத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

இணையத்தின் மூலமாகப் படிக்கலாம், அறிவு பெறலாம் என்பதெல்லாம் உண்மைதான். மிகச் சிலர் தான் அதன் ஆக்கபூர்வமான அம்சங்களைப் பயன் படுத்துகிறார்கள். பெரும்பாலானவர்கள் அதைத் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள். ‘விபத்தில் சிலர் இறந்துவிடுகிறார்கள் என்பதற் காக வாகனப் பயணமே வேண்டாம் என்று சொல்லலாமா?’ என்று சிலர் கேட்கலாம். இரண்டின் தன்மையும் ஒன்றல்ல. காலையில் எழுந்து குளிக்கப்போவது தொடங்கி, இரவில் படுக்கப்போவது வரைக்கும் நீங்கள் செல்போனைப் போல வேறு ஒன்றைத் தேடுவதில்லை. பைத்தியமாகிக் கிடக்கவில்லை. சிறுநகரங்களில் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களின், இளைஞர்களின் செல்போனுக்கு ப்ளூ டூத் வழியாக ஆபாசப் படங்களை அனுப்புவது ஒரு வியாபாரமாகவே மாறி யிருக்கிறது. ஒவ்வொரு செல்போனிலும் ஒரு ஆபாசத் திரையரங்கம் இருக்கிறது. மனித அந்தரங்கங்களை அது நொறுக்கிவிட்டது. சென்னையில் 5,000 பேரிடம் செல்போன்களை வாங்கிக்கொண்டு, அவர்களைத் தனியாக ஒரே ஒரு நாள் விட்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களில் பலர் பைத்தியமாகிவிடுவதைப் பார்ப்பீர்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டாலும்கூட ஆச்சர்யம் இல்லை.

உங்களுடைய கதைகளில் செல்போன்களால் பெண்களின் வாழ்க்கை சீரழிவதாகத் தொடர்ந்துஎழுதிவருகிறீர்கள். இத்தகைய விமர்சனம் பெண்களின் உரிமைகளில் தலையிடுவது ஆகாதா?

செல்போன் ஒருவகையான சுதந்திரத்தைப் பெண் களுக்குக் கொடுத்திருக்கிறது. அதை நான் வரவேற் கிறேன். ஆனால், அந்தச் சுதந்திரமே அவர்களைப் பலிவாங்கும் செய்திகளைப் படிக்கிறபோது பதறாமல் எப்படி இருக்க முடியும்? இந்தச் சமூகத்தில் பெண்கள் வெளியே வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? இப்போதுதானே வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர்களை வெளி உலகத்தைப் பார்க்காமல், மீண்டும் தலை குனிய இன்னொரு உலகத்துக்குள் புதைத்துவிடுகிறதே இந்த செல்போன்? ஒவ்வொரு செல்போனும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு செல்போனும் ஒரு ஆபாசத் திரையரங்கம் என்றேன். அதில் பிரதான பாலியல் பண்டம் பெண்தானே? இதில் மறைக்க ஒன்றும் இல்லை - இன்று திருமணத்துக்குப் பிந்தைய காதல்கள் அதிகரித்திருக்கின்றன.

இருபாலருக்கும்தான். ஆனால், குடும்பம் என்ற அமைப்பில் எவ்வளவோ பலவீனம் இருந்தாலும், அதுதான் நம்முடையதைப் போன்ற நாடுகளில் பெண்களுக்கு மிச்சமுள்ள பாதுகாப்பான ஒரே அமைப்பு. குடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

நேற்று என் நண்பன் ‘டப்மாஷ்’ என்ற வேடிக்கையை அவனுடைய செல்போனில் காட்டினான். அம்மாவைப் பார்த்து, ‘நீ ஒரு சப்பை ஃபிகரு’ என்ற சினிமா வசனத்துக்கு வாயசைக்கிறான் ஒரு சிறுவன். இதுதான் செல்போன் நமக்குக் கொடுத்திருக்கும் வெகுமதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்