பிளாஸ்டிக் ஞானம்

By தங்க.ஜெயராமன்

“கையை வீசிக்கொண்டு கடைத்தெருவுக்கு வருகிறாயே. ஒரு பை ண்டுவரக்கூடாதா?”  சிடுசிடுத்துகொண்டே மளிகைக் கடை கணக்குப்பிள்ளை  தாளில் சுருள்விட்டு, வீசை துவரம்பருப்பை அதில் கொட்டி குலுக்குவார். தலைக்கு மேலிருந்து இறங்கும் சணலை பிரி உடைத்து, இணுக்கி, கட்டிக் கொடுப்பார்.  அந்த காகிதத்தையும் சணலையும் சீக்கிரமே மண் தின்றுவிடும். இன்றைக்கு மளிகைப் பொருள் வரும் பிளாஸ்டிக் பைகளை மண்  ஜீரணிக்கவில்லையே என்று உலகமே கவலைப்படுகிறது. இவ்வளவு பெரிய விஷயம் காகிதச் சுருளில் இருந்ததது அப்போது யாருக்குத் தெரியும்?

நாகரிகத்தின் சுவடு

மாயாவிகள் நினைத்த மாத்திரத் தில், நினைத்த உருவத்தை எடுத்துக் கொள்வார்கள். பிளாஸ்டிக் ஒரு மாயாவி. இவ்வளவு வேகமாக அது பரவியது இந்த சக்தியினால்தான்.  தன் இடம் என்று ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்த பொருளையெல்லாம் அதனதன் இடத்திலிருந்து ஊதி ஒழித்துவிட்டது பிளாஸ்டிக். இப்படி ஒழிந்தவை வெறும் பட்டியலாக இருக்காது.  ஊருக்குள் வந்த காட்டு விலங்கின் அடிச்சுவடு போல கால இருளில் மறைந்த நாகரிகத்தை யூகிக்க உதவும் சுவடுகளாக இருக்கும்.

பாடம் செய்து கச்சிதமாக வெட்டிய வாழை மட்டையில் மூக்குப்பொடி மடித்துத் தருவார்கள். வாழை இலை புழங்காத இடங்களில் சாப்பாட்டுக்கு வாழைச்சருகு. பாயசத்துக்கு வாழைத் தொன்னை. தொடுத்த பூவை கட்டித்தர வாழை, தாமரை இலைகள்.  தெப்பம் கட்டி  மிதந்துகொண்டே குளத்தில் கிள்ளிய தாமரை இலைக்கட்டுகள் உணவுக்கடை களுக்கு விநியோகமாகும். இட்லி கடைகளில் பொட்டலம்போட தாமரை இலைதான். தகர டின்களில் தயிர் வந்தது. கொடைரோட்டிலிருந்து கொடி முந்திரி ஒத்த அளவு மண் பானைகளில் அடைத்து வரும்.

தாழம்பெட்டி

மக்கள் எப்போதும் பையும் கையுமாகவே திரிந்தார்கள் என்று கற்பனை செய்துகொள்ளாதீர்கள். அவசரக்காரர்களுக்கென கடைத்தெருவில் தாழம் பெட்டி இருந்தது. காய்ந்த தாழை மடலில் பின்னிய பைகளைத்தான் பெட்டி என்பார்கள். போகும் இடத்திலிருந்தபடியே விருந்தாளியாகப் போகிறவர்கள் தாழம்பெட்டியில் பழங்களை வாங்கிச் செல்வார்கள். மீன் சந்தைகளிலும் இந்தப் பெட்டிகள்  இருக்கும். ஆற்று மதகுகளில்  கிடைக்கும் மீனை பிடி வைக்கோலில் வைத்து காரையைக்கொண்டே சுருணையாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள்.  ஒரே முறை பயன்படுத்தி எறிந்துவிடும் இதுபோன்ற பைகள் அப்போதும் இருந்தன. ஆனால் பூமி அவற்றை எளிதாகச் செரித்துக்கொண்டது.

பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து நண்பர் வெற்றிலை போடுவதைப் பார்த்தேன். எத்தனை வகை வெற்றிலைச் செல்லத்தை இந்த பிளாஸ்டிக் ஒழித்துவிட்டது! ஒன்றுக் குள் ஒன்றாக அடுக்கிக்கொள்ளும் பெட்டிகளும் அவற்றை மூடிக்கொள்ள ஒரு மேல்  பெட்டியுமாக ஈச்ச ஒலையில் பின்னிய வெற்றிலைச் செல்லம் இருந்தது. தடிப்பான தாள்களை அடுக்கி ஒரு மூலையில் நூல் கயிறு கட்டி பொட்டலமாக மடித்துக் கொள்ளும் வெற்றிலைச் செல்லம், ஜம்பமாக இருந்த வெள்ளி, பித்தளைச் செல்லம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

பழங்குடிச் சமுதாயமல்ல

பனை ஓலை, பனை அகணி, ஈச்ச ஓலையில் பின்னிய கூடைகள் இருந்தன. நாற்காலிகளும், கட்டில்களும்கூட பனை அகணியில். அகணிக்கு மாற்றாக பின்பு பிளாஸ்டிக் நாடா வந்ததது.  பனை ஓலைக் கொட்டான்  வண்ணமயமாக ஓலை மணம் மாறாமல் கிடைக்கும். குழந்தைகளுக்கு கிலுகிலுப்பைகூட பனை ஓலையில்.  கிழித்த பாளையைக் கொண்டு வேலி கட்டினோம். அதற்கும் இப்போது பிளாஸ்டிக் நாடா.  ஓணாங்கொடியை கயிறாக வைத்து வீடே கட்டிக்கொள்ளும் காலம் நினைவிலிருக்கிறது.

அப்போதும் இதே சமுதாயம்தான், பழங்குடிச் சமுதாயமல்ல.  காகிதக் கூழோடு வெந்தயத்தைச் சேர்த்து அரைத்து சிறிய கொட்டான்கள் செய்துகொள்வதில் பெண்களுக்கு அப்போது ஆர்வம். மாட்டுக்கு பிண்ணாக்கு வாங்குவற்கென்றே எங்கள் வீட்டில் ஒரு காகிதக் கொட்டான். நாமே செய்துகொள்ளும் பொருட்களை ப்ளாஸ்டிக் குறைத்துவிட்டது. வாங்கி நுகர்வோராக மட்டுமே நாம் இருக்கமுடியும்.

மைசூர் குத்துப் புளி பனை ஓலை, ஈச்ச ஓலை பாய்களில் சுற்றி கடைகளுக்கு வரும். சில்லரையாக எண்ணெய் வாங்கினால் எண்ணெய் தூக்கோ, சீசாவோ இல்லாமல் முடியாது.  பள்ளிக்கூடத்துக்கு தண்ணீர் கொண்டுபோக ஆளாளுக்கு சீசா வைத்திருப்போம். இப்போது  மாணவர்கள்  விதம் விதமான பிளாஸ்டிக் பாட்டிலோடு வருகிறார்கள். மருத்துவரிடம் போனால் அங்கே கம்பவுண்டர் தண்ணீர் மருந்துக்கு சீசா கொண்டு வந்தாயா என்று முந்திக்கொண்டு கேட்பார்.

விபூதி குடுக்கை

விபூதியை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொள்வதை பார்க்கிறேன்.   அப்போதெல்லாம் முற்றிய சுரைக்காயைக் குடைந்து குடுக்கையாக்கி அதில் விபூதி இருந்தது. இப்போது பகட்டு வெள்ளையில் விபூதி. அந்த வேற்றுக்களையைக் கண்டால் அதுவும் பிளாஸ்டிக் பொடியோ என்று பயம். மரத்திலிருந்து பதநீர் இறக்குவதற்கும் சுரை குடுக்கை. இன்றைய ரசனைக்கு தட்டையாக, சதுரமாக இருப்பவற்றில் ஒரு மோகம். இனிப்புகள்  இந்த வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் வருகின்றன. என் நண்பர் புது மூங்கில் கூடைகளில் பூந்தி, லாடு, ஜாங்கிரியை நிரப்பி, பெண்ணுக்கு சீதனப் பலகாரம் கொடுத்தனுப்பிய நினைவு.

ஆல்வின் டோப்ளர் (Alvin Toffler) ஒரு அமெரிக்க பத்திரிகையாளர். 1970ல் வந்த  “எதிர்கால அதிர்ச்சி” என்ற தன் நூலில் பிளாஸ்டிக் கேடு பற்றியும் எழுதினார். தலை வாரும் பிளாஸ்டிக் சீப்பு மண்ணுக்குள் சென்றால் அழியாமல் அப்படியே கிடக்குமாம். அவரே கான்க்ரீட் கேடுபற்றியும் எழுதினார். பழைய வீடு ஒன்று பிரித்து விற்றதை பார்த்திருக்கிறேன். இரண்டே நாட்களில் வீடு இருந்ததாகவே தெரியாமல்   மண்மேடாக ஜீரணித்துவிட்டது. அங்கே பறங்கி முளைத்து, கொடி ஓடி காய்த்துக்கிடந்தது. கான்க்ரீட் கட்டடங்களை இடிக்கும்போது நீங்கள் பார்த்திருந்தால் நம் சமுதாயமல்ல, பழைய சமுதாயம்தான் பூமியை மதிக்கத் தெரிந்தது என்று புரியும்.

நிரந்தரத்தில் ஆசை

அக்காலத்து அரண்மனைகளை இப்போது காண முடியாது. அரண்மனை மேடு, மாளிகைத்திடல், மாளிகை மேடு என்ற பொட்டல்களை மட்டுமே பார்க்கமுடியும்.  அடுத்துவரும் சமுதாயத்துக்கு மண்ணை அப்படியே விட்டுச்செல்லும் உண்மையான அக்கறை என்று இதைச் சொல்லவேண்டும். மக்கி மடிவதையும், மண் அரிப்பதையும் இன்று வெறுக்கிறோம். நிரந்தரத்தில் வந்த பத்தாம்பசலி நேசம்! பிளாஸ்டிக் மூர்க்கமாகப் பரவியதற்கு இதுவும் காரணம்.

முனிகளின் சாபத்தினால் கண்ணனின் துவாரகையில்  ஒருவருக்கு முசலம் (உலக்கை) பிறந்தது. அதை ஒழித்துவிட வேண்டுமென்று அராவி தூளாக்கி இரைத்தார்கள்.

ஒவ்வொரு துகளும் ஆயுதம்போன்ற செடியாக முளைத்தது. கைமீறி வளர்ந்துவிட்ட பிளாஸ்டிக் தொழில் நுட்பத்தின் கதையும் இதுதானோ! இந்த ஞானத்தில் உலகத்தை பூமியாக, அதை மண், நீர், காற்று என்று பார்க்க இப்போதுதான் பழகுகிறோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்