எங்கள் புத்தூர் கிராமத்திலிருந்து போக வர தினமும் ஆறு மைல் நடந்து பள்ளிப் படிப்பை முடித்த கையோடு மதுரையில் ஒரு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். வெள்ளைச் சட்டை; நான்கு முழ வேட்டி, காலுக்குச் செருப்பு என்றால் என்னவென்று தெரியாது; இப்படியான ஒரு காலத்தில்தான் கல்லூரி நூலகத்தில் விதவிதமான நூல்களைத் தேடித்தேடிப் படித்துப் பறந்து பல்வேறு உலகத்தைக் கண்டு வியந்து களிக்கும் பழக்கம் உருவானது; அப்படிப் படிக்கும்போது அகப்படும் அரிய வாசகங்கள் கல்விப் பின்புலம் இல்லாத சிறு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த எனக்குள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின; பெரிதும் வித்தியாசமாக இருந்ததனாலேயே அந்தப் பதினெட்டு வயது பையனுக்குப் பிடித்துப்போயிற்றா? இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன்; புதிராகவும் வியப்பாகவும் இருக்கிறது.
மாற்றிப் போட்ட வாசகம்
தாகூர் படைப்புக்களைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஓரிடத்தில் இப்படி வருகிறது;
“உண்மை என்பது வேறொன்றும் இல்லை; நம்பும்படியான ஆதாரங்களோடு சொல்லப்படும் பொய்தான்”
இந்த வரிகளால் பெரிதும் தாக்கப்பட்டேன் என்றே சொல்லலாம்; அதுவரை எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டேன். கூடப் படிக்கும் நண்பர்கள் “இவன் எப்பொழுதும் இப்படித்தான்; வித்தியாசமாக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பான்; ஆனால் அதிலேயும் ஓர் அர்த்தம் இருக்கும்” என்று சொல்லும் அளவிற்குத் தாகூரின் முத்திரை வாசகம் என்னை மாற்றிப் போட்டுவிட்டது.
காதல் புனிதமானது என்பார்கள் நண்பர்கள்; நான் காமமெனும் மிருக இச்சைக்கு நாகரிகமான பெயர்தான் காதல் என வாதாடுவேன். நட்பின் பெருமை பேசுவார்கள்; நானோ சுயதேவை கருதி ஒருவருக்கொருவர் அமைத்துக் கொள்ளும் ஒருவகையான உறவு; அவ்வளவுதான் என்பேன். அரசு, மக்களுக்காகப் பணிபுரிகிறது என்பார்கள். இல்லை, அது உடைமையாளர்களைப் பாதுகாக்க இருக்கிறது என்பேன். இப்படியான ஒரு பழக்கம் இன்றுவரை எனக்குள் தொடர்கிறது.
இதுபோலவே விவேகானந்தர் நூல்களை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னை இழுத்துப் போட்டுக்கொண்ட முத்திரை வாசகம் ஒன்று இருக்கிறது:
“சந்தை இரைச்சலுக்கு நடுவில் இருக்கும்போது மனத்திற்குள் பேரமைதியையும், பேரமைதி நிலவும் மலைப் பள்ளத்தாக்கில் இருக்கும்போது மனத்திற்குள் பேரிரைச்சலையும் எவன் கேட்கிறானோ அவனே பெரிய மகான்”
அப்போதைக்கப்போது இப்படியான ஒரு பாவனை செய்து கொள்கிற பழக்கம் இந்த எழுபது வயதிலும் எனக்குள் தொடர்வதை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
முத்திரை வாசகங்கள் மனிதர்கள் மேல் நிகழ்த்துகிற லீலைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். எனக்கொரு அறை நண்பன் வாய்த்தான்; பெயர் முருகவேள். நானும் அவனும் மதுரை வீதிகளில் நடந்தே கடப்போம். காலில் செருப்பிருக்காது என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்தானே. அப்பொழுதெல்லாம் தெருச்சுவர்களில் இவ்வளவு விளம்பரங்கள் எழுதுகிற பழக்கம் கிடையாது; இன்றைக்குச் சுவர் விளம்பரம் மூலமே பல அரசியல் கட்சிகள் மூச்சைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. மதுரைச் சுவர்களில் அன்றைக்குப் பரவலாக வாசிக்கக் கிடைத்தவை பைபிள் வாசகங்கள்தான்.
மழை மாலையில்..
ஒருநாள் மாலை நேரம்; மேகம் திரண்டு வேடிக்கை காட்டியது; குளிர் காற்று இதமாக முகத்தை வருடிச் சென்றது; நானும் நண்பனும் அனுபவித்து நடந்து கொண்டிருந்தோம். தூறல் விழ ஆரம்பித்தது; சட்டை பண்ணாமல் கொஞ்சம் நனைந்தால்தான் என்ன என்கிற மாதிரி அவரசப்படாமல் நடந்துகொண்டே இருந்தோம். மழை வலுக்க ஆரம்பித்தது; ஓரிடத்தில் ஒதுங்கினோம்; எதிரே வெள்ளை வெளீரென்று ஒரு சுவர்; அதில் கருத்த எழுத்தில் பைபிள் வாசகம்.
“வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள்
எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்! நான்
உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”
நான் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பனோ, மழையினால் படிந்திருந்த தூசி எல்லாம் போய்விடப் பளிச்சென்று தெரிந்த அந்த வாசகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய் முணுமுணுத்தது. மனப்பாடம் செய்துகொள்ள முயல்வது போல்பட்டது. மழை நின்றவுடன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அவன் மெளனி ஆகிவிட்டான்.
விடுதியில் இடம் கிடைக்காததால் வெளியே தனியார் விடுதியில் தங்கியிருந்தோம்; நாலணாவிற்குக் (25 பைசா) காலையில் நான்கு பெரிய இட்லி கிடைக்கும்; மதியம் எட்டணாவில் (50 பைசா) சாம்பார், ரசம், மோர், ஒரு கூட்டோடு சாப்பாடு; இரவில் மீண்டும் நான்கு இட்லி; ஒரு நாளைக்கு ஒரு ரூபாயில் வயிற்றுப் பிரச்சினை முடிந்துவிடும்; தங்கியிருக்கும் அறைக்கு மாதம் முப்பது ரூபாய்; மேல் செலவிற்கு இருபது ரூபாய்; மாதத்திற்கு எண்பது ரூபாய்; நண்பனுக்கு அந்த ரூபாயே வந்து சேராது; அப்பா இல்லை; சித்தப்பாதான் படிக்கப் போடுகிறார்; அவர் வயலில் அம்மா கூலி வேலை செய்கிறாள். இரண்டு தங்கச்சி வேறு; ஒரு தங்கைக்கு இளம்பிள்ளை வாதம். துக்கத்தில் உறைந்து போவான் நண்பன். பணம் வராத நாட்களில் என் பணம் செலவழியும். தேதி இருபது வரை தாக்குப் பிடிக்கும். கடைசி பத்து நாட்களில் பல நாட்கள் இருவருக்கும் கடலை மிட்டாயும் வாழைப்பழமும்தான் இரவுச் சாப்பாடு. இந்தச் சூழலில்தான் பைபிள் வசனம் அவனுக்குள் ஆழமாகப் பாய்ந்து ஒட்டிக்கொண்டது.
கவிதை போன்ற மயக்கம்
உறங்குவதற்குப் பாயை விரித்தோம். “டே”, அவன்தான் கூப்பிட்டான். “நான் பைபிள் வாசிக்கணும்” என்றவன், முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்த வசனத்தை அப்படியே உரக்கச் சொன்னான்; நான் பதிலுக்கு “நல்லா இருக்கில்ல! ஒரு வசன கவிதை போல இருக்கு” என்றேன்.“இல்லேடா, நான் பைபிள் வாசிக்கணும், நான் இளைப்பாற வேண்டும்; தாங்க முடியலடா” என்று குரல் கம்மியது.
அவனும் என்னைப்போல நாள்தோறும், கிழமைதோறும் எப்படி எப்படி சாமி கும்பிடணும் என்றெல்லாம் சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்தப்படாத ஒரு குடும்பத்தில் இருந்து இந்த நகரத்திற்குள் வந்தவன்; இருக்கிற வறுமைச் சூழலோடு, நகரமும் அதன் படாடோபமும் பகட்டும் அவனைப் படுத்துகிறது என்று சிந்தித்தபடி ஏதோ சமாதானம் சொல்ல முயன்றேன்.ஆனால் ஒரு வாரத்திற்குள் கருப்பு நிறத்தில் தடித்த மேலட்டை போட்ட பைபிள் அவனது புத்தக அடுக்கில் இடம் பெற்றிருக்கக் கண்டேன்.
முத்திரை வாசகங்கள் எவ்வளவு பெரிய வீச்சும் வீரியமும் கொண்டு விளங்குகின்றன என்பது தொடர் அனுபவமாக இருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஆனால் அடைவதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்று காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் 1848-இல் கட்டமைத்த ஒரு முத்திரை வாசகம், உலகத்தையே சென்ற நூற்றாண்டில் முதலாளித்துவ நாடுகள், பொதுவுடைமை நாடுகளென்று இரண்டாகப் பிளந்து போட்டுவிட வில்லையா?
இன்னும் லாபம் ஒன்றையே இலக்காகக் கொண்ட வணிக நிறுவனங்களும் முத்திரை வாசகங்களை வடிவமைத்துதான் மிக எளிதாக நுகர்வோரின் உள்ளத்தை மொத்தமாகக் கொள்ளைகொண்டு போய்விடுகின்றன. “ஆஹா! என்று எழுந்தது பார் யுகப் புரட்சி” என்ற பாரதியார் வரியை, “மதுரையில் ஆஹா என்று எழுந்தது பார் ஜவுளிக்கடைப் புரட்சி” என்று முத்திரை வாசகமாக மாற்றிப்போடும்போது விளம்பரத்துக்கு வேகம் கிடைத்துவிடுகிறது.
எதற்கும் முத்திரை வாசகங்களிடம் நாம் கவனமாகவே இருப்போம்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago