2001 செப்டம்பர் 11இல் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தகக் கட்டிடமான இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது, உலகமே அமெரிக்காவுக்குத் துணைநின்றது. இன்று, உலக நாடுகள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள இறக்குமதிக்கான தீர்வை, பல உலக நாடுகளை இணைத்து இத்தனை காலமாகக் கட்டி அமைத்திருந்த உலக வர்த்தக அமைப்பை அதுவே தகர்த்துவிட்டதோ என எண்ண வைக்கிறது. மற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
குமுறும் வல்லரசு: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளிநாட்டு வணிகப் பரிவர்த்தனையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இல்லாமல், செலவு பல மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு நாட்டின் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறையும்போது, இந்நிலை ஏற்படுகிறது.
இதனால் அமெரிக்கா பெரும் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் மூன்றாம் உலக நாடுகளில் இவ்வாறு பிரச்சினை ஏற்படுவது இயல்பானது. ஆனால், உலகப் பொருளாதாரத்தில் முதன்மையான இடத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கு அப்படி அல்ல.
இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது, உலகளவில் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்தது. உலக உற்பத்தியில் ஏறக்குறைய பாதி அமெரிக்கா வசம் இருந்தது. இப்போது அது 16% ஆகக் குறைந்துவிட்டது. மற்ற நாடுகள் தங்கள் உற்பத்தித் திறனை வளர்த்துக்கொண்டது ஒரு காரணம். அமெரிக்காவில் ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான செலவைவிட, பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்கக்கூடிய ஆற்றலும் மனித வளமும் பிற நாடுகளில் உருவானது இரண்டாவது காரணம்.
அத்துடன், மக்களின் சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், நாட்டின் பாதுகாப்பு எனத் தனது வருவாயின் பெரும் பகுதியை (ஏறக்குறைய 67%) செலவழிக்கிறது. இதற்கிடையில் வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக் போன்ற பல போர்களில் ஈடுபட்டதால், பெரும் பொருட்செலவைச் சந்தித்தது.
வீட்டிலோ, நாட்டிலோ வருவாய்க்கு மீறிச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கும் போது, புதிதாக வருவாயைப் பெருக்கவில்லை என்றால், ஏதேனும் ஒரு கட்டத்தில் அதிரடியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது.
அதைத்தான் அமெரிக்கா இப்போது செய்துள்ளது. “எங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்குப் பிற நாடுகள் விருப்பம் போலத் தத்தம் நாட்டில் தீர்வை விதித்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, இன்று எங்களைப் பெரும் இன்னல்களில் ஆழ்த்தி உள்ளன. எங்களுடைய நட்பு நாடுகளே இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளன” என்று டிரம்ப் குமுறினார். நியாயம்தானே?
சங்கிலித் தொடர் பாதிப்பு: தற்போதைய அதிரடி நடவடிக்கைகளால் பலன்கள் கிடைத்து, அமெரிக்கா மீண்டு வந்தால் நன்மைதான். ஆனால், நடைமுறையில் இது அவ்வளவு எளிதல்ல. இத்தனை காலம் உலகத்தைக் காக்க வந்த ரட்சகராக நடந்துகொண்டதால், பல்வேறு நாடுகள் அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருந்தன. எனவே, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பல நாடுகளையும் ஒட்டுமொத்தமாக உருக்குலையச் செய்யக்கூடும்; குறிப்பாக, அமெரிக்காவின் எல்லை நாடுகளான கனடா, மெக்ஸிகோ இரண்டும் கடும் பாதிப்பைச் சந்திக்கும்.
பல நாடுகள் உற்பத்திச் செலவைக் குறைக்க, தங்கள் தொழிற்சாலைகளை இவ்விரு நாடுகளில் அமைத்துப் பொருள்களை உற்பத்தி செய்து, அமெரிக்காவுக்குள் அனுப்புகின்றன. பொருள்கள் குறைந்த விலையில் அமெரிக்கர்களுக்குக் கிடைத்தாலும், இது நாட்டின் பொருளாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கிறது. முக்கியமாக, அந்நியச் செலாவணி இழப்பும் உள்நாட்டு வேலைவாய்ப்பு இழப்பும் ஏற்படுகின்றன.
சென்ற நூற்றாண்டிலும், உலகம் இதேபோன்ற வரலாறு காணாத பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. நிதிமுறிவு ஏற்பட்டு பல நாடுகள் வீழ்ச்சி அடைந்தன. இரண்டாம் உலகப் போருக்கே அது தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 96 ஆண்டுகள் கழித்து, இன்று உலகம் மீண்டும் அதே நிலையைச் சந்திக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.
ஆனால், பல நாடுகளிடையே அணு ஆயுதங்கள் குவிந்துள்ளதால் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில், புவிசார் அரசியலில் ஆச்சரியமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். ‘அமெரிக்கா இல்லையென்றால் என்ன? ஏன் மற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியைத் திருப்பிவிடக் கூடாது?’ எனப் பல நாடுகள் யோசிக்கத் தொடங்கும்.
இந்நிலையில், முக்கியமான ஒன்றை நாம் மறக்கக் கூடாது: நாடுகளுக்கு இடையிலான வணிகம், உண்மையில் அந்தந்த நாட்டில் உள்ள முதலீட்டாளர்களின் வணிகமே. பல முதலீட்டாளர்கள் உலகளவில் நிறுவனங்களை வைத்திருப்பவர்கள். அவர்கள் இப்போதே தங்கள் பொருள்களுக்குப் புதிய சந்தைகளை வேறு நாடுகளில் தேடத் தொடங்கியிருப்பார்கள். இதுவரை பகை நாடுகளாக இருந்தவர்கள் ஒன்றுகூடும் வாய்ப்பு உள்ளது; நண்பர்கள் பிரியலாம்.
அமெரிக்காவின் நட்பு நாடுகளாக, குறிப்பாகக் கிழக்காசியப் பகுதிகளில் பாதுகாப்பு அரண்களாக விளங்கும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இப்போது சீனாவுடன் இணைந்து தீர்வை எதிர்கொள்வது எனத் தீர்மானித்துள்ளன. அமெரிக்காவுக்கு இது பெரும் பின்னடைவு.
இது ஒருவேளை நடந்துவிட்டால், அமெரிக்கா ஆசிய பசிபிக் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை இழக்க நேரிடலாம். உலக நாடுகள் நீண்ட காலமாக அமெரிக்க டாலரைப் பன்னாட்டு வர்த்தகத்துக்கான நம்பகமான கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியான வீழ்ச்சி, அமெரிக்காவுக்கே இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு உதவுமா? - நிச்சயமாக உதவாது. காரணம், உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான தொழில்கள் அமெரிக்காவில் தயாராக இல்லை; முதலீடு செய்யும் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது; மற்ற நாட்டின் முதலீட்டாளர்களும் முன்வர மாட்டார்கள். உள்நாட்டு உற்பத்திக்காக, வெளிநாட்டிலிருந்து கச்சாப் பொருள்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிவரும். அவற்றுக்கும் தீர்வை வரி சேர்க்கும்போது, உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இந்தோனேசியா, வியட்நாம் அல்லது திருப்பூரில் வேலை செய்பவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தைவிட, அமெரிக்கர்களுக்குப் பல மடங்கு ஊதியம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இதன் விளைவாக, உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் விலை உயர்ந்தே இருக்கும். இதனால், அமெரிக்கச் சாமானியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இப்போது எளிதாக வாங்கிக்கொள்வதுபோல் இருக்கும் பொருள்களுக்கு, இனிக் கூடுதலான விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ பொருளாதாரக் கொள்கை முடிவுகளை எடுத்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா?
நிலைமை மாறுமா? - ஒருவகையில், உலக வர்த்தகத்தை அமெரிக்கா ஒட்டுமொத்தமாகக் கலைத்துள்ளது. எல்லாரும் என்ன செய்வது என்று கவலையோடும் கோபத்தோடும் பரிதவிக்க, அமெரிக்கா மீண்டும் நாடுகளை ஒவ்வொன்றாக அழைத்து, தக்கவாறு புதிய ஒப்பந்தங்களை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனை உண்மையாக்கும் விதமாக, தீர்வை உயர்வை நடைமுறைக்குக் கொண்டுவருவதை 90 நாள்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் நமது ஏற்றுமதியின் பங்கு 2.8% என்பதால், நாம் எவ்வாறு நடந்தாலும் அவர்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால், நமது ஏற்றுமதி வணிகத்தில் அமெரிக்கா முன்னணி வகிக்கிறது (ஏறக்குறைய 18%).
இது தடைபட்டால், நமது பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், நமது நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளையும் வருவாயையும் தருவது கணினி மென்பொருள் துறை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால், இங்குள்ள பல கணினி நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய சூழல் வரும். சீன–அமெரிக்க வணிக உறவு சீர்குலையும்போது, இந்தியாவுக்குப் பெரும் வாய்ப்பு உள்ளதாகப் பலர் நினைக்கிறார்கள். அது தவறு. இந்தியா உற்பத்தித் துறைகளில் பெருமளவு பின்தங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலும் நாம் இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம். ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவானாலும், மிகக் குறைவானவர்களே திறன் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதற்காகப் புதிய பாடத்திட்டங்களையும், செயல்முறைக் கல்வியையும் வடிவமைத்தால் நாம் விடிவுக் காலத்தை எதிர்பார்க்கலாம்.
- தொடர்புக்கு: olivannang@gmail.com