சிறப்புக் கட்டுரைகள்

அன்றாடமும் அறிவியலும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 15

ராஜன் குறை

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

உடல், நரம்பு மண்டலத்தின் மூலம் நினைவுகளைச் சேகரித்துத் தான் இயங்குவதற்கான வெளியைக் கட்டமைத்துக்கொள்கிறது. நினைவுசேகரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால்தான், தன்னைச் சுற்றியுள்ள வெளியில் உடலால் சரிவர இயங்க முடியும். உதாரணமாக, போதைப் பொருள்களை உட்கொண்டவர்களுக்கு வெளியின் பரிமாணம் குழம்பித் தெரியும். அருகில் இருப்பது தொலைவிலும், தொலைவில் இருப்பது அருகிலும் தெரியும். நம்முடைய நினைவுசேகரம் தெளிவாக இருந்தால்தான் நாம் இயங்கும் வெளி துல்லியமாகத் தெரியும். நாம் இயங்குவதற்கு எத்தகைய ஆற்றலைச் செலவழிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில்தான் காலமும்-இடமும் பிணைந்ததாக இயல்வெளியை நமது புலன்கள் உருவாக்கித் தருகின்றன.
மனிதர்​களின் புலன்​உல​கு​களின் இயல்வெளி பொதுவானதாக இருந்​ததால் அனுபவங்​களைப் பகிர்ந்து​கொண்டு வாழ்வுக்கான தொழில்​நுட்​பங்களை மனிதக் குழுக்கள் உருவாக்​கிக்​கொள்ளத் தொடங்கின. வேட்டை​யாடுதல், பயிரிடுதல், நெருப்​பினைப் பயன்படுத்​துதல், சக்கரங்கள் உள்ள வண்டிகள், நீரில் மிதக்கும் படகுகள் எனப் பல்வேறு தொழில்​நுட்பச் சாதனைகளை ஆதி மனிதர்கள் செய்தனர். அவற்றின் மூலம் மானுடப் பண்பாடு செழித்​தோங்​கியது. இவ்வகையான வாழ்வா​தாரமாக விளங்கிய அறிவுப் புலன்​களெல்லாம் அன்றாட வாழ்வனுபவங்​களின் அங்கமாக இருந்தன. பட்டறிவு சார்ந்து இருந்தன. மூத்தவர்கள் இளையவர்​களுக்கு இந்த அறிதலை வழங்கி​னார்கள்; பயிற்று​வித்​தார்கள்.

இந்த அனுபவங்​களின் ஊடாக அளவுகள் உருவாயின. எண்களைக் கொண்டு கணக்கிடுவது, வடிவியலாக வெளியைப் புரிந்து​கொள்வது ஆகிய போக்குகள் உருவான​போது, இயற்கை விதிகளைச் சூத்திரங்களாக உருவாக்கும் சாத்தி​யங்கள் தோன்றின. இதிலிருந்து அறிவியல் என்பது அறிவுசேகரத்தின் முக்கியப் பரிமாணமாக மாறியது. கட்டிடக் கலை, ஆடைகளை நெய்தல், தச்சு வேலை, மருத்​துவம், உலோகப் பொருள்களை உருவாக்​குதல், வாகனங்களை வடிவமைத்தல், விவசா​யத்​துக்கான கருவி​களைச் செய்தல், ஆயுதங்கள் தயாரித்தல் எனப் பல்வேறு தொழில்​நுட்​பங்கள் அறிவுசேகரத்​தினால் சாத்தி​ய​மாயின. ஆங்காங்கே பல்வேறு மனிதக் குழுக்கள், சமூகங்கள் அவரவர் சூழலுக்குத் தேவையான அறிவையும் தொழில்​நுட்​பத்தையும் பெற்று, அன்றாட வாழ்வில் பயன்படுத்திவந்தன.

இந்த அறிதல்களை நூல்களாக எழுதி வைத்துப் பயிலும் பழக்கமும் தோன்றியது. ஆனால், இவை ஒற்றைப் பிரதிகளாக எழுதப்​பட்டு, பிறரால் பிரதி​யெடுக்​கப்​பட்டுப் பயிலப்​படு​வதாக, மனனம் செய்யப்​படுவதாக விளங்​கிய​தால், அறிவுசேகரம் சிறு குழுக்​களின் வலைப்​பின்னலுக்குள் மட்டுமே நிகழ்ந்துவந்தது எனலாம். அதைவிட முக்கியமாக வாழ்வுக்கு, பயன்பாட்டுக்குத் தேவையானவற்றை அறிவது என்பதே முறையியலாக இருந்தது. உதாரணமாக, விஷக்​கடிக்கு வைத்தியம் செய்ய எந்தெந்த மூலிகைகள் உதவும் என்று அறிவதற்கு முயற்​சிப்​பார்கள். அந்த அறிவைப் பகிர்ந்து​கொள்​வார்கள். அதற்கப்பால் இயற்கையின் பிற பரிமாணங்களை இறைவன் செயல் என்று விட்டு​விடு​வார்கள்.

அனைத்தையும் அறிவோம் முழக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு நூல்களை நிறைய பிரதிகள் அச்சிட்டுப் பரவலாகப் பலரும் பயிலும் சாத்தியம் உருவானது. அப்போது இயற்கையின் சகல பரிமாணங்​களையும் ஆராய வேண்டும்; அனைத்து அம்சங்​களையும் அறிந்து​கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு அதிகரித்தது. தேவையோ இல்லையோ, அனைத்து​வகைத் தாவரங்​களையும் வகைப்​படுத்தி ஆராய்வது, அனைத்து உயிரினங்​களையும் பட்டியலிட்டு அவற்றின் இயக்கங்களை ஆராய்வது என்பன போன்ற செயல்​பாடுகள் பெருகின.

உதாரணமாக, இறந்தவரின் சடலத்தை வெட்டுவது ஒரு காலத்தில் பாவமாகக் கருதப்​பட்டது. ஆனால், அனைத்தையும் அறிய முற்பட்டபோது இந்தத் தடைகள் விலகின. இறந்தவர்​களின் சடலங்​களைக் கூறாய்வு செய்து, உடலின் பாகங்கள் எல்லாம் முழுமையாக அறிந்து​கொள்ள முற்பட்டது மானுடம். பின்னர், இந்த ஆராய்ச்சிக்கு உதவியாகப் புதிய கருவிகளை உருவாக்​கிக்​ கொண்டது, நுண்ணோக்கியை உருவாக்கி நுண்ணுயி​ரி​களைக் கண்டது, தொலைநோக்கியை உருவாக்கி விண்வெளியை ஆராய்ந்தது. மேலும் ​மேலும் ஆற்றல் மிக்க கருவி​களைக் கட்டமைத்து, ஆற்றல் எப்படிப் பருப்​பொருளாக மாறுகிறது என்பதை ஆராய்​கிறது.

இத்தகைய பெரும் அறிவுசேகர இயக்கம், இன்று வரலாற்றுத் தன்னுணர்வின் களமாக இருக்​கிறது. அனைத்து சிறாருக்கும் கணிதம், இயற்பியல் சூத்திரங்கள், வேதியியல் சூத்திரங்கள் என அறிமுகம் செய்து, அவர்களது தன்னுணர்வை அன்றாட வாழ்விலிருந்து வரலாற்றுத் தன்னுணர்​வுக்குப் புலம்பெயர வைக்கிறோம். அறிவியலின் விரிவு மானுடத் தன்னுணர்வின் பெரும் விரிவாக்கமாக இருக்​கிறது. அதன் துணைவிளைவான தொழில்​நுட்பம் என்பது இயற்கையின் சகல பரிமாணங்​களையும் மானுட ஆளுகைக்குள் கொண்டுவர விழைவதாக இருக்​கிறது.

அறிதலின் இன்றைய எல்லைகள்: பூமிப்​பந்தின் மேற்பரப்பில் வாழும் மானுடத்தால் பூமியின் உள்ளே என்ன நிகழ்​கிறது என்பதை முழுமையாக ஆராய்வது சாத்தியமாக இல்லை. கடும் வெப்பம், அழுத்தம் காரணமாகப் பூமிக்​குள்ளே துளையிட்டுச் செல்வது சாத்தி​ய​மாக​வில்லை. விண்வெளியைப் பொறுத்​தவரையில் மேலும் ஆற்றல்​வாய்ந்த தொலைநோக்​கிகளை உருவாக்​கி​னால், மேலும் தொலைவில் உள்ள பிரம்​மாண்ட விண்மீன் கூட்டங்கள் புலனாகின்றன. பல்லா​யிரம் கோடி வருடங்கள் பயணம் செய்ய வேண்டிய தூரத்தில் அவை உள்ளன எனக் கணக்கிடு​கிறார்கள். காலம் - இடம் என்கிற புலன்​உலகப் பிணைப்பில் இருக்கும் தன்னுணர்வு எல்லை​யற்று விரியும் வெளியைப் புரிந்து​கொள்வது எப்படி என்பது கேள்வி.

மானுடப் புலன் தரவுகளை மின்னணுத் தரவுகளாக மாற்றி, அவற்றைக் கொண்டு புலன்​உலகில் இயங்கும் ரோபாட் என்ற உலோக உடல்களை உருவாக்குவது சாத்தி​யமாகி வருகிறது. தரவுசேகரத்தின் இயக்கத்தில் கணினியே சிந்திக்கும் சாத்தியம் உருவாகி​யுள்ளது. விலங்​கி​லிருந்து மனிதரை வேறுபடுத்துவது தன்னுணர்வு என்றால், அந்தத் தன்னுணர்வைக் கணினி நுண்ணறிவில் நிரல்கள் உருவாக்​கிக்​கொள்ளும் என்கிற சாத்தியம், மானுடரின் சாராம்​சம்தான் என்ன என்கிற கேள்வியை எழுப்பு​கிறது. உடல் இயக்கத்தின் எல்லைக்கு உள்பட்ட வாழ்நாள் காலம் என்பதே மானுடத் தன்னுணர்வின் ஒரே தனித்​துவ​மாகத் தோன்றுகிறது.

SCROLL FOR NEXT