ஹீதர் ஆம்ஸ்ட்ராங் (Heather Armstrong) என்னும் வலைப்பதிவரை உங்களுக்குத் தெரியுமா? வலைப்பதிவுலக முன்னோடிகளில் ஒருவரான ஹீதரை இப்போது நினைவுபடுத்துவதற்கான காரணம், ஒருகாலத்தில் இணையப் புகழ் என்பது தன்னிச்சையானதாகவும், ஒருவித அப்பாவித்தனம் கொண்டதாகவும் இருந்ததைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான். அதோடு, ஹீதர் தொடர்பான அடைமொழியும் முக்கியமானது. அவர் ‘அம்மா பதிவர்’ (mommy blogger) என அழைக்கப்பட்டார். எண்ணற்ற அம்மா பதிவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.
இணையம் மூலம் தனது சுயத்தைக் கண்டறிந்து, அதன் மூலம் பிரபலமடைந்த சாமானியர்களில் ஒருவர் என்பதுதான் அவரது முக்கிய அடையாளம். இப்போது நாம் ‘குழந்தைச் செல்வாக்காளர்கள்’ (Kidfluencers) என்னும் புதிய இணையப் பிரிவினரை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
கைப்பாவையாகும் பிள்ளைகள்: சமூக ஊடக உலகில் இப்போது செல்வாக்காளர்கள் என்னும் பிரிவினர் இயல்பாக இருந்தாலும், ‘ஃபேஷன்’ முதல் நிதித் துறை வரை பல பிரிவுகளுக்கு எனத் தனிச் செல்வாக்காளர்கள் உருவாகியிருக்கின்றனர். என்றாலும், குழந்தைச் செல்வாக்காளர்களின் எழுச்சி சமூக ஊடக உலகம் எங்கே செல்கிறது என்கிற கவலையை உருவாக்குவதோடு, குழந்தைகள் உரிமை, பெற்றோர்களின் பங்கு தொடர்பான வலுவான கேள்விகளையும் முன்வைக்கிறது.
குழந்தை செல்வாக்குத் தன்மையின் இருண்ட பக்கத்தை உணர்த்தும் வகையில் அண்மையில் வெளியாகியுள்ள ‘மோசமான செல்வாக்கு’ (Bad Influence) என்னும் நெட்ஃபிளிக்ஸ் ஆவணத் தொடர் இந்தப் போக்கின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகிறது. யூடியூபில் புகழ்பெற்று விளங்கும் சிறுமி பைபர் ராக்கெல் (Piper Rockelle), அவரது சகாக்கள் ஆகியோரின் இணைய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், எப்போதும் துடிப்பும் துள்ளலுமாக இருக்கும் அவர்களது வாழ்க்கை எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
‘தி ஸ்குவாடு’ என அறியப்படும் இந்தப் பட்டாளத்தின் காணொளிகள் லட்சக்கணக்கான உறுப்பினர்களை ஈர்த்து, விளம்பர வருவாயாக டாலர்களைக் கொட்ட வைத்திருக்கிறது. வண்ணமயமாகக் காட்சி தரும் இந்தச் சிறாரின் வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை; இவர்களைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத வர்த்தக வலை பின்னப்பட்டிருக்கிறது என்கிறது இந்தத் தொடர். எல்லாவற்றையும், ராக்கெல்லின் அம்மாவும், மேலாளருமான டிபானே கட்டுப்படுத்துகிறார். அவரே அனைவரையும் இயக்குகிறார். தினமும் 10க்கும் மேற்பட்ட காணொளிகளை எடுக்கச்சொல்லி, அவற்றில் அதிகம் கவனத்தை ஈர்க்கக்கூடியதை வெளியிட வைக்கிறார். பிள்ளைகள் அவரது கைப்பாவையாக இருக்கின்றனர்.
வர்த்தக வலை: உண்மையில், குழந்தைச் செல்வாக்காளர்களின் இருண்ட பக்கமாகவே இது அமைகிறது. இவர்கள் யூடியூபில் மட்டுமல்லாமல், இன்ஸ்டகிராமிலும் (இன்ஸ்டாகிட்ஸ்), டிக்டாக்கிலும்கூட நிறைய இருக்கின்றனர். குழந்தைச் செல்வாக்காளர்கள் பகிர்ந்துகொள்ளும் உள்ளடக்கமும் இக்காலக் குழந்தைகள் மீது செலுத்தும் தாக்கமும் மோசமானவை. இன்ஸ்டா செல்வாக்காளர்களைப் பார்த்து, தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டு, போதுமான அளவு சாப்பிடாமல் உடல் இளைத்து வருத்திக்கொள்வது பல பதின்பருவப் பெண்களின் பிரச்சினையாக மாறிவருகிறது.
இந்த இடத்தில் செல்வாக்காளர்கள் என்னும் சொல்லின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகத்தில் தங்களுக்கு எனக் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள - தங்கள் பதிவுகள் மூலம் அவர்கள் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளவர்கள் செல்வாக்காளர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களை ஆதர்சமாகக் கருதும் குழந்தைகளும், இளம் பருவத்தினரும் அவர்கள் செய்வதுபோலவே செய்யப் பழகுவதோடு, அவர்கள் முன்னிறுத்தும் வர்த்தகப் பொருள்களை வாங்கவும் தயாராக இருக்கின்றனர்.
செல்வாக்காளர்களில் பலர் ‘கிரியேட்டர்கள்’ என அறியப்பட்டாலும், இவர்கள் வெறும் கிரியேட்டர்கள் அல்ல: தங்களைப் பின்தொடர்பவர்கள் மீது தாக்கம் செலுத்தும் திறன் கொண்டவர்கள். இணையப் புகழ் மட்டும் இவர்கள் அடையாளம் அல்ல, அதன் மூலமான செல்வாக்கு, தாக்கம் ஆகியவற்றின் காரணமாக வர்த்தக நிறுவனங்களும் பிராண்டுகளும் இந்தச் செல்வாக்காளர்களை நாடுகின்றன; வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன. சுய வெளிப்பாட்டின் மூலம் கிடைக்கும் புகழ், வருவாய், வர்த்தக நோக்கத்தில் வலையாகப் பின்னப்படுகிறது.
இப்படி செல்வாக்கு பெறும் இளம் தளிர்கள் ‘குழந்தைச் செல்வாக்காளர்கள்’ என வகைப்படுத்தப்படுகின்றனர். 2015இல் யூடியூபில் அறிமுகமான ரயான் காஜி (Ryan Kaji- Ryan’s World) தான், இணையத்தின் முதல் குழந்தை செல்வாக்காளராகக் கருதப்படுகிறார். ரயான் பொம்மையை வைத்து விளையாடுவதைக் காணொளியாகப் பகிர்ந்துகொண்டு உலகப் புகழ்பெற்றார். ரயானின் காணொளிகளை இயக்கி வெளியிட்டது அவரது பெற்றோர்தான். பொம்மைகளைப் பெட்டியிலிருந்து பிரித்து விளையாடிப் பார்த்து விமர்சிக்கும் ‘அன்பாக்ஸிங்’ ரகத்தைச் சேர்ந்த இந்தக் காணொளிகள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைந்து, விளம்பர வருவாய் மூலம் கோடிகளை வருவாயாகக் கொண்டுவந்தன.
ரயான் அறிமுகமான காலத்தில், ஒரு சிறுவனின் காணொளி உலகம் என்பது புதுமையானதாக இருந்தது. இதே காலத்தில்தான், இணையத்தில் வீடியோ கேம் ஆடுவதைப் பகிர்ந்துகொண்டு பிரபலமான ‘பியூடைபை’ (pewdiepie) என்கிற நபரும் பிரபலமானார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ரயானின் இணையப் புகழ் பல அலைவரிசைகளை உள்ளடக்கிய வர்த்தக சாம்ராஜ்யமாக விரிவடைந்தாலும், இது விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. ஆனால் மேலும் பல குழந்தைச் செல்வாக்காளர்கள் உருவாவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று, நெட்ஃபிளிக்ஸ் தொடரில் இருண்ட பக்கமாக வெளிப்படுத்தப்படும் அளவுக்குக் குழந்தைச் செல்வாக்காளர்கள் போக்கு வளர்ந்திருக்கிறது.
குழந்தைகளை இலக்காகக் கொண்ட விளம்பரங்கள் வழக்கமானவைதான் என்றாலும், சமூக ஊடகம் சார்ந்த ஆக்கங்களில், விளம்பரம், விமர்சனம், பொழுதுபோக்கு சார்ந்த கலவையாக இருப்பது இதுவரை இல்லாத தாக்கத்தை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர். பெரும்பாலான குழந்தைகள் யூடியூப் காணொளிகளைப் பார்த்து வளரும் போக்கும் சுட்டிக்காட்டப்படுகிறது.
சமூக ஊடக மோகம் இந்தப் போக்குக்கு முக்கியக் காரணம் என்றாலும், இலக்கு வாடிக்கையாளர்களைச் சென்றடைய செல்வாக்காளர்களை வர்த்தக நோக்கில் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் - பிராண்டுகள் அளிக்கும் ஆதரவு இன்னொரு முக்கியக் காரணம். அத்துடன், குழந்தைகளின் பெற்றோர்களும் இன்னொரு காரணம். இணையத்தில் பிள்ளைகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டு பெருமைப்படுவது ஒரு பக்கம் இருக்க, குழந்தைகளின் திறனையும், வெளிப்பாட்டையும் காணொளிகளாக்கி இணையப் புகழ்பெற வைக்கும் விருப்பம் பலருக்கு இருக்கிறது.
மாறிப்போன போக்கு: குழந்தைச் செல்வாக்காளர்களாக உருவாக்கப்படும் அப்பாவிச் சிறார்கள் இதை விரும்புகின்றனரா என்பது குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இது குழந்தைத் தொழிலாளர்கள் நிலைக்கு நிகரானது எனப் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள் விளையாட்டிலும், கற்றலிலும் ஈடுபட்டு மகிழ்வதற்கு மாறாக, கேமராவுக்கு போஸ் கொடுக்க நேர்வதை நிர்ப்பந்தமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், இந்தக் காணொளிகள் எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்தும் கவலையோடு விவாதிக்கப்படுகிறது.
குழந்தைகளின் செயல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளும் பெற்றோர்களின் போக்கு, பகிர்ந்த வளர்ப்பு (sharenting) எனும் புதிய சொல்லை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் - குறிப்பாக பிரான்ஸில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சமூக ஊடகம் என்பது சுயவெளிப்பாட்டுக்கு வழிசெய்து தரக்கூடியது; தகவல் பரிமாற்றத்தின் மூலம் மெய்நிகர் சமூகத்தின் அங்கமாக உணரும் இணக்கத்தை அளிக்கக்கூடியது என்கிற நிலை மாறி, இப்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை, வைரல் தன்மை, வீச்சு போன்றை முன்வைக்கப்பட்டு வர்த்தக நோக்கும், சந்தைப் பொருளாக முன்னிறுத்தப்படுவதும் முதன்மையாகி இருக்கின்றன. போதும், குழந்தைகளையும் பயனாளிகளையும் அவர்களாகவே இருக்க விட்டுவிடுங்கள் எனச் சொல்வதைத் தவிர, வேறு என்ன சொல்வது?
- தொடர்புக்கு: enarasimhan@gmail.com