சிறப்புக் கட்டுரைகள்

இருட்டைப் போன்ற கறுத்த வெளிச்சம் | நாவல் வாசிகள் 1

எஸ்.ராமகிருஷ்ணன்

நாவல் என்பது உண்மையின் மாற்று வடிவம்; அது ஒரு விசித்திரமான நெசவு. நாவலில் நிஜமும் நினைவும் ஒன்று சேர்ந்து நெய்யப்படுகின்றன. காலத்தில் உறைந்தும் மறந்தும் போன நினைவுகளை நாவல் உயிர்பெறச் செய்கிறது. நாவல் இல்லாமல் போயிருந்தால் சரித்திரம் இவ்வளவு துடிப்புடன் உயிர்பெற்றிருக்காது.

நாவலின் மகத்தான கதாபாத்திரங்களை நாவல்வாசிகள் என்றே நாம் அழைக்கலாம். நாவலில் வரும் சில கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவர்களாக நம் மனதில் தங்கிவிடுகிறார்கள். தி.ஜானகிராமனின் வாசகர்களுக்கு ‘மோகமுள்’ளில் வரும் பாபுவும் ஜமுனாவும் வெறும் கதாபாத்திரங்கள்தானா என்ன? ‘மரப்பசு’ நாவலில் அம்மிணியை, ஜெயகாந்தனின் ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவலின் ‘ஹென்றி’யை, வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலின் பிலோமியை யாரால் மறக்க முடியும்? தலைமுறை கடந்து சென்றாலும் அவர்கள் என்றும் இளமையாக நாவலில் வாழ்கிறார்கள். எழுத்தில் பிறந்து எழுத்தில் வாழ்கிறவர்களுக்கு ஒரு போதும் மரணமில்லை.

டால்ஸ்டாயின் ‘அன்னாகரீனனா’ நாவல் வெளியாகி 148 வருஷங்கள் ஆகின்றன. ஆனால், அந்நாவல் கதாபாத்திரமான அன்னாகரீனனாவிற்கு வயதாகவில்லை. நாவலில் வரும் அதே வயதில்தான் எப்போதுமிருக்கிறாள். புத்தகத்திற்கு வயதாகும் போது அதன் கதாபாத்திரங்களுக்கு வயதாவதில்லை என்பதே எழுத்தின் மகத்துவம். ‘நாவல் என்பது ஒரு தீவு’ என்கிறார் ஸ்காட்லாந்து எழுத்தாளார் ராபர்ட் லூயீஸ் ஸ்டீவன்சன். ஒரு தீவுபோல் மற்றொரு தீவு இருப்பதில்லை. ஒவ்வொன்றும் வித்தியாசமானவைதான். அதே சமயம் தீவு வாழ்க்கை என்பது விசித்திரமானது. தீவில் நுழைவதற்கு எல்லாப் பக்கமும் வழி இருப்பது போலவே ஒரு நாவலுக்குள் நுழைவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. நாவலின் முதல் அத்தியாயம் என்பது படகுத்துறை போன்ற நுழைவாயில் மட்டுமே.

இரு சகோதரர்களின் கதை: ஜீலானி பானு, ஒரு உருது எழுத்தாளர் ஆவார். அவரது ‘அய்வானே கஜல்’ என்ற நாவல் 1963இல் வெளியானது. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்த நாவல் தமிழில் ‘கவிதாலயம்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் என்கிற மத்திய அரசின் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்த நாவலை முக்தார் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். ஹைதராபாத்தில் கஸல் கவிதைகள் பாடுவதில் ஆர்வம் கொண்ட வாஹித் ஹுசேன், அவருடைய சகோதரர் அஹ்மது ஹுசேன் ஆகியோர் வாழ்க்கையைச் சொல்லும் இந்த நாவல் பாரசீகக் கம்பளம் போலப் பல்வேறு வண்ண இழைகளால் நெய்யப்பட்டிருக்கிறது.

கவிதாலயம் எனும் பிரம்மாண்டமான மாளிகையில் வசிப்பவர்களின் வாழ்க்கை. அவர்களின் கலையார்வம், சமய ஈடுபாடு, சிற்றின்ப நாட்டம், அதிகாரப் போட்டி, சொத்திற்கான மோதல், காலமாற்றம் ஏற்படுத்தும் நெருக்கடிகள், வீழ்ச்சிகள் எனப் பலவற்றையும் நாவல் விவரிக்கிறது. அத்தோடு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளும் நாவலில் ஊடாடுகின்றன. நாட்டின் அரசியல், வீட்டின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை நாவல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. நாவலில் அபூர்வமான பெண் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் கேட்டிராத அவர்களின் குரலை, ஆசைகளை, கண்ணீரை ஜீலானிபானு எழுத்தில் உண்மையாகப் பதிவுசெய்திருக்கிறார். கவிதாலயம் என்ற அந்தப் பிரம்மாண்டமான மாளிகை ஒரு குறியீடு போலவே நாவலில் சித்தரிக்கபடுகிறது. அந்த மாளிகையில் ஜாகீர்தாரர்களாகச் செல்வச் செழிப்போடு வாஹித் ஹுசேன் குடும்பம் வாழ்கிறது.

இசையும் கவிதையுமாக வாழும் ஆண்கள் உன்னதமான கலை, கவிதை ஆன்மீகம் என மகத்தான விஷயங்களைப் பேசுகிறார்கள்; தேச விடுதலையைப் பற்றி விவாதிக்கிறார்கள்; நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். உத்தரவிட்டே பழகிய அவர்களுக்குச் சுகபோகமே பிரதானம். அவர்கள் தங்களின் பழைய நினைவுகளிலே முழ்கியிருக்கிறார்கள். வெளியுலகுடன் தொடர்பு மிகக் குறைவு. இன்னொரு பக்கம் அந்த வீட்டில் வாழும் பெண்கள் இருக்கிறார்கள். சமையலறையில் இருந்தபடியே அவர்களும் தேசத்தின் போக்கினை பற்றி விவாதிக்கிறார்கள் அரசியல் பேசுகிறார்கள். ஆனால், அக்குரல் முன்கட்டில் இருப்பவர்களுக்குக் கேட்பதில்லை.

குழந்தையின் முதல் வெளிச்சம்: இரண்டாவது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப்பட்ட இளம் பெண்களின் ஆசைகள், கனவுகள், ஏமாற்றங்கள், குடும்ப அதிகாரத்தைக் கைப்பற்ற பெண்களுக்குள் நடக்கும் போட்டி, அதில் ஏற்படும் வெறுப்பும் கசப்பும் என எல்லாம் நாவலில் சொல்லப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் வரவேற்பறைக்கும் சமையற்கட்டுக்குமான இடைவெளி என்பது நாம் நினைப்பதுபோல பத்து அடியோ இருபது அடியோ அல்ல; அது பல நூற்றாண்டுகளின் இடைவெளி.

கல்வியின் துணை கொண்டு தனக்கு விருப்பமான வேலை, காதல், பயணம் என ஆசைகளை நனவாக்கிக் கொண்ட புதிய தலைமுறை பெண்களையும் நாவல் சித்தரிக்கிறது; அவர்கள் சந்தித்த எதிர்ப்பையும் அவமானங்களையும் உண்மையாகப் பேசுகிறது. கலைடாஸ்கோப் கண்ணாடித் துண்டுகள் சுழற்றச் சுழற்றப் புதிய தோற்றம் கொள்வதுபோல இந்நாவல் கதாபாத்திரங்கள் பல்வேறு நிகழ்வுகளின் சுழற்சியால் புதிய தோற்றம் கொள்கிறார்கள். கவிதாலயத்தில் நோயுற்ற பெண்களுக்கு ஆங்கில முறை மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பது குற்றமாகக் கருதப்பட்டது.

ஆங்கில மருந்துகளை மதத்தால் விலக்கபட்ட பொருளாகக் கருதினார்கள். ஆகவே பிரவசத்திற்குக்கூட மருத்துவரை அழைக்க மாட்டார்கள். மருத்துவச்சிதான் பிரவசம் பார்ப்பது வழக்கம். அதுவும் இருட்டறையில்தான் பார்க்கப்படும். அப்படிப் பதூல் பேகத்திற்குப் பிரவசம் நடக்கிறது அந்த அறையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது, “கோரிபேகம் இங்கு ஒரு விளக்கை அனுப்பி வையுங்கள். இருளில் மூச்சுத் திணறுகிறது”. அதற்குப் பதூலின் மாமியார் இப்படிப் பதில் அளிக்கிறார், “வேண்டாம் அம்மா, நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு முதல்முறையாக மண்ணெண்ணெய் விளக்கு காட்டுவதில்லை”. இந்த வரியைக் கடந்து நாவலைப் படிக்க முடியவில்லை.

பிறந்த குழந்தை காணும் முதல்வெளிச்சம் எவ்வளவு முக்கியமானது. பகலில் பிறந்த குழந்தைகள் வெயிலின் மினுக்கும் ரேகைகளைக் கண்டிருப்பார்கள். ஆனால், இரவில் பிறக்கும் குழந்தைகள் கண்ட முதல் வெளிச்சம் எது? காடா விளக்கா, அரிக்கேன் விளக்கா, நாற்பது வாட்ஸ் பல்பா, டியூப் லைட்டின் வெளிச்சமா, நெய் விளக்கின் ஒளியா, இருட்டைத்தான் கறுத்த வெளிச்சமாகப் பார்த்துக் கொண்டிருந்ததா?

பிரசவ வலி தாங்க முடியாமல் பதூல் பேகம் துடிக்கிறாள். அவளைக் கோபத்துடன் திட்டுகிறாள் பஷீர் பேகம். பிரவசிக்கும் பெண்ணிடம் அன்பு காட்டுவதால் அந்த வலியின் வேகம் அதிகரித்துவிடும் என்று அவள் அறிந்திருக்கிறாள். மகளின் பிரவசத்திற்கு உடன் நிற்கும் பதூலின் தாய் உள்ளூர நடுங்கியபடி நிற்கிறாள். அந்தக் காட்சி திரைப்படம் போலக் கண்ணில் தெரிகிறது. இந்த இடத்தில் ஜிலானிபானு எழுதுகிறார், ‘மனிதப் படைப்பின் உரிமையை ஆண்டவன் பெண்ணிடம் ஒப்படைத்திருக்கிறான். ஆனால், எந்தப் பெண்ணும் தனது உடலிருந்து தன்னைப் போல அடக்கமான, வலிமையற்ற உருவம் தோன்றுவதை விரும்புவதில்லை’. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை.

விசேஷ நாட்களில் கவிதாலயத்தில் எண்ணிக்கையற்ற தீபங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன. அன்று அந்த மாளிகை பேரழகு கொண்டதாக உருமாறுகிறது. அந்த ஒளிரும் விளக்குகளைப் போல நாவலில் வரும் கதாபாத்திரங்களும் மின்னுகிறார்கள். கவிதாலயத்தின் துயரப் பாடல் காலத்தை மீறி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

SCROLL FOR NEXT