திரைகடல் ஓடி திரவியங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பதற்குப் பதிலாக, கற்கக் கூடாததையெல்லாம் விரும்பிக் கற்றுத் தேர்ந்து, ஒருசாராரின் வாழ்வில் இருளை உமிழும் வணிகக் காலமிது. மீனில் பார்மாலின் கலப்படம் என்கிற செய்தி விந்தையாகக் கருதக் கூடியதல்ல. வணிக அறத்தை மீறி எதிலாவது, எதையாவது கலக்கத் தொடங்கி வெகுகாலமாகிவிட்டது. அபாயம் மேலெழுந்து வருகையில் மட்டும் அதுகுறித்த சீற்றங்கள் கடலைக் காட்டிலும் பொங்கி எழும்; பிறகு அப்படியே அடங்கிவிடும்.
உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒருநூறு உணவுக் கலப்படச் செய்திகள் இதற்கு முன்னர் தோன்றிய வேகத்தில் மறைந்தும்போயிருக்கின்றன. எப்போதுமே இவற்றைக் கண்காணிக்க வேண்டிய அரசும், அதன் துணை அமைப்புகளும் மிகை வேகத்தில் அப்படியான செய்திகளை மறைக்கத்தான் போராடுகின்றனவே தவிர, உரிய நடவடிக்கைகள் எடுக்க முனைப்புக் காட்டுவதில்லை. நுகர்வோர்தான் கடவுள் என்றார் காந்தி. உண்மையில், இந்த வணிகச் சக்கரத்தின் அச்சை உயிரை உருக்கி உருட்டிக்கொண்டு போகிறவர்கள் நுகர்வோரே. அவர்கள் கோணத்தில் எந்த ஒரு அரசும் யோசிப்பதில்லை. மீன் - பார்மாலின் விவகாரத்திலும் அதுதான் நடக்கிறது.
சென்னையின் மீன் தேவை
பல கலப்பட உந்துதல்களுக்கு நதிமூலமாக இருக்கும் சீனாவே இந்த விவகாரத்துக்கும் மூலம். கடல் நண்டில் பார்மாலினை ஊசி வழியாக ஏற்றி, அசம்பாவிதமொன்றை உலகுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். பிற நாடுகளின் நரம்பிலும் ஏறிவிட்டது அவ்விஷம். மீன்வளத் துறை சார்ந்த அமைப்பொன்று எடுத்த அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரப்படி, சென்னையைச் சுற்றியிருக்கிற இடங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 80,000 டன் கடல் மீன்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டில் நிறையத் தலைநகரங்கள் இருந்தாலும், மீன் உணவுப் பிரியர்கள் வரிசையில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. உண்மையில், தமிழகத்தில் உள்ள கடற்கரையோர மீன்களால் சென்னையின் தேவையைப் பூர்த்திசெய்யவே இயலாது. கடற்புறம் சார்ந்த 13 மாவட்டங்களின் தேவையை அங்குள்ள மீன்களே பூர்த்திசெய்துவிடுகின்றன. அவர்களின் தேவை போகத் திரளும் மிகை மீன்கள் எல்லாமும் சென்னைக்கே வருகின்றன.
சென்னை தவிர, பிற நகரங்களில் மீன் உணவுப் பழக்கம் என்பது குறைவே. உள் மாவட்டங்கள் பலவற்றில் இன்னமும் கடல் மீன்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. நன்னீர் மீன்களே அங்குள்ளவர்களை எட்டுகின்றன. இப்படித் தமிழகம் முழுக்கப் பிடிபடும் மீன்கள் எல்லாமும் முறையாகக் குளிர்ப்பதனமூட்டி சென்னையை எட்டுகின்றன. இவை விரைவாகச் சென்னையை எட்டுவதற்குத் தமிழகத்தில் தரமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன என்பதால் பிரச்சினை இல்லை. கடும் போட்டியிருக்கிற ஏலத்தில், படகிலிருந்து இறங்கிய அரை மணி நேரத்தில் அத்தனையும் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதால், பார்மாலின் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏற்றுமதியில் ஏற்படும் சிக்கல்
உள்ளூர்த் தேவை தாண்டி, பிற மாநில ஏற்றுமதி என்று வரும்போதுதான் தட்டுப்பாடு தலைதூக்குகிறது. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், நடுக் கடலிலேயே கண்டெயினர்களைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள். முதலுக்கே மோசம் என்பதைப் புரியாதவர்களா அவர்கள்? இங்கே அப்படியா? எதை வேண்டுமானாலும் கொண்டுவந்து கொட்டுகிற குப்பைத் தொட்டியாக இந்தியச் சந்தை மாறி வெகு நாட்களாகிவிட்டனவே?
ஏற்றுமதி போக, இங்கே வந்து கொட்டப்படும் மீன்களில் பார்மாலின் கலக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தை எடுத்துக்கொண்டால், நன்னீர் மீனான ஹில்சாவுக்குக் கொடுக்கும் இடத்தை வஞ்சிர மீனுக்குத் தரவே மாட்டார்கள். ஒடிஷா பகுதியில் அங்குள்ள பூர்வநிலத்தார் வாங்குகிற வகையில், உள்நாட்டு ஏற்றுமதி காரணமாக மீனின் விலை இருக்காது. அங்கிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே கடைவிரிக்கப்படும் மீன்களில் பார்மாலின் கலந்திருப்பதற்குக் குறைவான சாத்தியக்கூறுகள் உண்டு. “என் வீட்டுக்குக் கொண்டுவரும் கூடை மீனில் கலந்திருப்பதற்குச் சாத்தியம் உண்டா?” என்று கேட்டால், நேர்மையாகப் பதில் சொல்ல வேண்டுமெனில், கூடைக்காரருக்கோ, விற்கும் கடைக்காரருக்கோகூடத் தெரியாமல் கலந்திருக்கச் சாத்தியமுண்டு. மீனவர்கள் நேரடியான விற்பனையில் ஈடுபடுவதில்லை. ஆந்திரத்தில் இருந்து வரும் சரக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து வரும் சரக்கும் ஒரே மாதிரியான வியாபாரிகளிடமே குவிந்து ஒன்றரக் கலக்கிறது. அதில் எது கலப்படம் இல்லாதது என்பதை எப்படி அறிவது?
இந்த இடத்தில்தான் அரசைப் பொறுப்பாக்க வேண்டியிருக்கிறது. எளிதில் கண்காணிக்க வாய்ப்பிருக்கிற, சென்னையில் குவிந்திருக்கும் பெரிய அளவிலான மொத்த விற்பனை மையங்களிலிருந்தே உள்ளூர், வெளி மாநிலங்கள் என எல்லா இடங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன. இங்கு வந்துவிட்டால் மீனவர்களுக்கும் மீன்களுக்கும் சம்பந்தமே கிடையாது.
அரசு செய்ய வேண்டியது என்ன?
இல்லவே இல்லை என அரசு மல்லுக்கட்டுவதற்குப் பதிலாக இந்த மையங்களில் கிடுக்கிப்பிடி போட்டாலே இந்த விவகாரத்தை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். இந்த விவகாரத்தையும் பணம் குவிப்பதற்கான வாய்ப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள் கருதுவார்கள் என்றால், உண்மையில் விமோசனமில்லை. அரசு யாருக்காகவும் தடம் மாறாமல் இந்த விவகாரத்திலும் நுகர்வோர் நலன் சார்ந்தே செயல்பட விழைய வேண்டும்.
நுகர்வோர்களுக்குமே இதில் கற்றுக்கொள்ளப் பாடங்கள் இருக்கின்றன. கடற்கரையில் மணல் தடவிப் படுத்துக் கிடக்கும் மீன்களெல்லாம் அன்றைக்கு அதே கடலில் பிடித்த மீன்கள் இல்லை. செவுள் சிவப்பாய் இருந்தால் தரமானது என எந்த முத்திரையும் குத்திவிட முடியாது. கண்களை மயக்கிவிடும் அது. பாதிக்குப் பாதி விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக ஓடிப் போய்க் கையிலேந்தி விஷத்தைக் குடிக்க முடியாது. பேரம் பேசுவதில் காட்டுகிற அக்கறையை தரம் சார்ந்தும் காட்ட முயலலாம். தப்பில்லை.
இன்னொரு கோணம் மிக முக்கியமானது. மாம்பழத்தில் கார்பைடு கல் வைப்பதாலேயே அதைச் சாப்பிடும் பழக்கம் அருகிவருகிறது. மீன்கள் விவகாரத்திலும் எதிர்காலத்தில் இப்படியான நிலை வரலாம். விளைவிப்பவரோ, கடலுக்குள் உயிரைப் பணயம் வைத்துப் போய் மீனைக் கரைக்குக் கொண்டுவருகிறவரோ இதுபோன்ற கலப்படங்களில் ஈடுபடுவதில்லை. சிக்கல் இல்லாத காலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் உற்பத்தியாளர்களுக்குக் கிடைப்பதென்னவோ குறைவான சதவீதமே. விற்பவர் ஒருபொருள் துவண்டால் இன்னொரு பொருளுக்கு விரைவில் மாறிவிடுவார். ஆனால், அதிக லாபம் கருதி எவரோ செய்யும் பாவங்களுக்காக, செய்கிற தொழிலைவிட்டு வெளியேற இயலாத இவர்களே சிலுவை சுமக்கிறார்கள்!
- சரவணன் சந்திரன், எழுத்தாளர், ஊடகவியலாளர்,
தொடர்புக்கு: saravanamcc@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago