இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்தில் 19 பேர் உயிரிழப்பதாகச் சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், சாலை விபத்து குறித்து வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
முந்தைய பத்தாண்டுகளில் 100 விபத்துகளுக்கு 28 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2012 – 2022 காலக்கட்டத்தில் 100க்கு 36ஆக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புற விரிவாக்கம், நீண்ட பயண தூரம், கார் பயன்பாடு அதிகரிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரித்தல் போன்றவை சாலை விபத்து அதிகரிப்பதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாருக்குப் பாதிப்பு அதிகம்? - பாதசாரிகள், இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோரே சாலை விபத்துகளால் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நகர்ப்புற விரிவாக்கம் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 53% இந்தியர்கள் நகர்ப்புறப் பகுதிகளில் வசிப்பதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. நகர்ப்புறப் பகுதிகள் தொடர்ச்சியாக விரிவடைந்து வருவது மக்களின் பயண நேரத்தை அதிகரித்திருக்கிறது.
உதாரணத்துக்கு, தினமும் சராசரியாக இரண்டு மணி நேரத்தைப் பயணத்துக்காக மட்டுமே இந்தியத் தொழிலாளர்கள் செலவிடுவதாக பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்ட ஊழியர்களுக்கான பயணத் தீர்வு நிறுவனமான ‘மூவின்சின்க்’ (MoveInSync) தெரிவிக்கிறது.
நகரங்கள் விரிவடைந்துவரும் அதேவேளையில், தேசிய - மாநில நெடுஞ்சாலைகள் நகர்ப்புற நெடுஞ்சாலைகளாக மாறி, பயணிகள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளாகின்றன. இவ்வாறு மாறுதலுக்கு உள்ளாகும் சாலைகள் நகர்ப்புறத் தரக் குறியீடுகளின்படி உருவாக்கப்படுவதில்லை. இச்சாலைகளில், பாதசாரிகள் கடந்து செல்வதற்கான வழிகள், சிக்னல்கள் இல்லாத நிலையில், பாதசாரிகள் பாதுகாப்பற்ற சூழலில் சாலையைக் கடக்க முயலும்போது விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
டெல்லி ஐஐடியில் இயங்கும், ‘போக்குவரத்து ஆராய்ச்சி - காயம் தடுப்பு மைய’த்தால் தயாரிக்கப்பட்ட ‘சாலைப் பாதுகாப்பு அறிக்கை - 2024’இல், இந்தியாவில் சாலை விபத்து இறப்புகளைக் குறைப்பதற்கான சர்வதேச இலக்குகளை அடைவதில் மந்த நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தைக் குறைக்க வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சாலைகள் விரிவாக்கம்: இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் கடந்த 9 ஆண்டுகளில் 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014இல் 91,287 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் நவம்பர் 2023வரை 1,46,145 கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நான்கு வழிச்சாலைகள் 2014இல் 18,371 கி.மீ. தூரம் இருந்த நிலையில், நவம்பர் 2023வரை 48,422 கி.மீ. ஆக அதிகரித்துள்ளன. விரிவடையும் சாலைகளுக்கு ஏற்ப உரிய சாலைப் பராமரிப்பு இல்லாத சூழலில் சாலை விபத்தில் இறப்புகளும் அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2022இல் சாலை விபத்து மூலமான இறப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் 36%, மாநில நெடுஞ்சாலைகளில் 24% எனப் பதிவாகி உள்ளது.
மாநிலங்கள் நிலவரம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன; 2018-2022 காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்தில் 7.77 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகச் சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,08,882 பேரும், தமிழ்நாட்டில் 84,316 பேரும், மகாராஷ்டிரத்தில் 66,370 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 58,580 பேரும், கர்நாடகத்தில் 53,448 பேரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.
காரணங்கள்: பொதுவாக மனிதத் தவறுகள், பாதுகாப்பற்ற சாலைகள், மோசமான வாகனப் பராமரிப்பு, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. 2022இல் மட்டும் இந்தியா முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2022இல் அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகள் 12.8% ஆகவும், அதனால் ஏற்படும் இறப்புகள் 11.8% ஆகவும் காயமடையும் நிகழ்வுகள் 15.2% ஆகவும் அதிகரித்துள்ளன. சாலையில் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டிச் செல்வது விபத்து ஏற்பட 9% காரணமாகிறது. கனமழை, மூடுபனி போன்ற வானிலை நிகழ்வுகளும் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கின்றன.
கடுமையான அபராதங்கள்: சாலை விபத்துக்கு முதன்மைக் காரணமாக உள்ள அதிவேகப் பயணத்தைக் கட்டுப்படுத்த 2019இல் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டத்தின்கீழ் கடுமையான அபராதங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சாலை விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்க மின்னணு - செலுத்துச்சீட்டுத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது இதன் மூலம் தடுக்கப்படும்; சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. ஆனால், இந்நடவடிக்கைகள் சாலை விபத்தைக் குறைக்கப் போதுமானதாக இல்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குச் சாலைப் பாதுகாப்புத் தணிக்கைகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது; இவை சாலை வடிவமைப்பு முதல் பராமரிப்பு வரை சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய முயல்கின்றன.
பரிசோதனை முயற்சி: நீண்ட தூரத்திலிருந்து வாகனத்தை ஓட்டிவரும் ஓட்டுநர்களின் சோர்வை நீக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே ஓய்வு நிலையங்களையும், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ வசதி அளிக்கும் மையங்களையும் அமைப்பதன் மூலம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
இந்தியாவில் நான்குவழி நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு நான்குவழிச் சாலைகளின் வேகத்தை மணிக்கு 55-57 கி.மீ. ஆகக் குறைப்பதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனப் பரிந்துரைக்கிறது. இத்தகைய ஆலோசனைகளைப் பரிசோதனையாக அரசு முயன்று பார்க்க வேண்டும்.
சாலைப் பயனர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் இயக்கம், வடிவமைப்பு, பராமரிப்பு - பாதுகாப்பு போன்ற அம்சங்களைக் கண்காணித்து அவற்றின் தரநிலையை உறுதிப்படுத்துவது, கிராம - நகரப் பகுதி என அனைத்துத் தரப்பு மக்களையும் சாலை விபத்து தொடர்பான விழிப்புணர்வு சென்றடைவதை உறுதிப்படுத்துவது ஆகியவை அவசியம். சாலை விபத்துகள் ஏற்படுத்தும் இழப்பின் தீவிரத்தை உணர்ந்து, அதைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago