ஆபத்துக்கு உதவும் எலி வளை சுரங்கத் தொழிலாளர்களை அங்கீகரிக்க வேண்டாமா?

By எம்எஸ்

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் இடதுகரை கால்வாய்க்காக சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 8 பேர் மண் சரிவில் சிக்கி உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்திய ராணுவம், கடற்படை,தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை என அனைத்து தரப்பினரையும் உதவிக்கு வரவழைத்த நிலையிலும், கடந்த 3 நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியாக வேறு வழியின்றி ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கம் சரிந்து விழுந்து 41 பேர் சிக்கிக் கொண்டபோது, ராட்சத எந்திரங்களே பழுதாகி கைவிட்ட நிலையிலும், எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து உள்ளே சென்று 41 பேரையும் உயிருடன் மீட்டுக் கொண்டு வந்தனர். அவர்கள் தற்போது தெலங்கானா விபத்திலும் மீட்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் சுரங்கத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால், அதில் எப்படி நுழைந்து சிக்கியுள்ளவர்களை மீட்க முடியும் என்பதை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

எலி வளை சுரங்கத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் தடை செய்யப்பட்ட தொழிலாளர்கள். கடந்த 2014-ல் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு தடை விதித்துவிட்டது. இருந்தாலும், சட்டவிரோத தொழிலாளர்களாக அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் ஆபத்து ஏற்படும்போது அவர்களது உதவி நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை சட்டவிரோத தொழிலாளர்கள் என்று முத்திரைகுத்தி புறந்தள்ளுவது நியாயமல்ல.

இன்னும் சொல்லப்போனால், ஆழ்குழாய் கிணற்றில் அடிக்கடி குழந்தைகள் விழும் சம்பவங்களில் கூட அவர்களின் உதவியைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து சிந்திக்கவேண்டும். உத்தராகண்ட் சுரங்கப் பணியாளர்களை மீட்ட பிறகு அவர்கள் அளித்த பேட்டியில், ‘‘எங்களது பணியை அங்கீகரிக்க வேண்டும். வீட்டுமனை வழங்க வேண்டும்’’ என்று கேட்டிருந்தனர். அதைக்கூட அவர்களுக்கு செய்யவில்லை. உதவிக்கு மட்டும் அவர்கள் தேவை; மற்றபடி அவர்கள் சட்டத்திற்கு புறம்பானவர்கள் என்று கூறுவது சுயநலமிக்க சுரண்டல் மனப்பான்மையாகவே இருக்க முடியும்.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவர்கள் பணிபுரிவதை மனதில் வைத்து அவர்களையும் அவர்களது பணியாற்றும் விதத்தையும் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றமும் அரசும் அறிவித்திருக்கலாம். ஆனால், அதிநவீன இயந்திரங்கள், ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையால் கூட முடியாத சில காரியங்களை அவர்களால் செய்ய முடிகிறபோது அவர்களது பணியையும் அங்கீகரிப்பதே நியாயமான செயலாகும். அத்தகைய தொழிலாளர்களுக்கு அடிப்படை தொழில்நுட்ப அறிவையும், குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் உருவாக்கித் தந்து பாதுகாப்பான முறையில் அவர்கள் பணியாற்ற உதவுவதுடன் அவர்களது உழைப்பை அங்கீகரிக்க வேண்டும்.

ஆபத்து காலங்களில் உதவுவதற்கான பயிற்சிகளை அளித்து அவர்களையும் பேரிடர் மீட்புப் படையின் ஒரு அங்கமாகச் சேர்ப்பதே அவர்களுக்கு கற்றறிந்த சமூகம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 mins ago

கருத்துப் பேழை

18 mins ago

கருத்துப் பேழை

24 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

2 days ago

மேலும்