செ
ன்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, நீர் நிலைகளையும் மண்ணையும் அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு முக்கிய பங்கிருக்கிறது. குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் முகத்துவாரங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகளால் இறுகின. இப்போதும் கூவம், பக்கிக்ஹாம் கால்வாய், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடங்கி பல்வேறு நீர் நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகளே ஆக்கிரமித்துள்ளன.
மக்காத இந்த குப்பைகளால் பெருவெள்ளப் பாதிப்பு மட்டுமல்ல, நிலத்தடி நீரை சுருங்கச் செய்து, நிலத்தை மலடாக்கும் வேலையையும் இலவச இணைப்பாகச் செய்கிறது. உலகம் முழுவதும் சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பிளாஸ்டிக்கை உலகின் பல நாடுகளும் தடை செய்வது மற் றும் அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில்தான் சமீபத்தில் பிளாஸ்டிக் தடை அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் தடை வரும் 2019 ஜனவரி 1 முதல் அமலாகிறது. அந்த தேதியை நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, பிளாஸ்டிக் இல்லாத அன்றாட வாழ்க்கை சாத்தியமா என கேள்வி எழுகிறது. அதற்கான சாத்தியக் கூறுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கை முறையை நாம் மறுகட்டமைப்பு செய்ய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக சென்னையில் ஒரு அங்காடி ஒன்று, ‘அரிசி, பருப்பு, சிறுதானியங்கள், எண்ணெய் போன்றவற்றை பாத்திரங்கள் அல் லது துணிப்பையில்தான் பொருட்களை வழங்குவோம்’ என தங்களது வாடிக்கையாளர்களிடம் கறாரக சொல்லிவிட்டது. “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அங்காடியை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் கூடாது என்பதற்காக மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. துணிப் பைகள், பாத்திரங்களை எடுத்துவந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மாவு வகைகளை மட்டும் பிளாஸ்டிக் பைகளில் தருகிறோம். எங்களைப் போன்றே சென்னையில் 20 கடைகள் இருக்கின்றன. மளிகைப்பொருட்களில் 99 சதவீதம் பிளாஸ்டிக் கவர்களில்தான் விற்பனையாகிறது. முதல் கட்டமாக பிளாஸ்டிக் பை களை தவிர்க்க வேண்டும். இது ஒன்றும் கடினமான வேலை அல்ல” என்கிறார் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்திவரும் ராதிகா.
கண்ணுக்கு தெரியாத செலவு
பெரிய பல்பொருள் அங்காடிகள், பிளாஸ் டிக் கைப்பை ஒன்றை ரூ.6-க்கு விற்கின்றன. குறைந்தது இரண்டாவது வாங்கும் வாடிக்கையாளர்கள், தேவை முடிந்தபின் குப்பையில் வீசி விடுகின்றனர். அவைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய ஆகும் செலவு, மக்கிப் போகாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கெடுதல், நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்துவதற்கான செலவு, பிளாஸ்டிக் குப்பைகள் ஆக்கிரமிக்கும் இடங்களின் மதிப்பு ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிடும் முறையைத்தான் ‘பிளாஸ்டிக் மீதான சுற்றுச்சூழலுக்கான செலவு’ என்கிறார்கள். இவற்றையும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் விலையோடு சேர்த்துக்கொண்டால் துணிப்பைகளைவிட பிளாஸ்டிக் பைகளுக்கான விலை பல மடங்கு அதிகம். ஆனால், இந்தக் கணக்கு யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தேவையான அளவு துணிப்பைகளை தயாரிப்பது எளிதானதே என்கிறார் ‘தி யெல்லோ பேக்’ கிருஷ்ணன். கடந்த 4 ஆண்டுகளாக துணிப்பைகளை தயாரித்து விற்பனை செய்துவரும் அவர் நம்மிடம் கூறும்போது, “துணிப்பையை ஒரு ஆண்டு வரை பயன்படுத்த முடியும். ஒரு துணிப்பையை குறைந்தபட்சம் ரூ.12-க்கு உற்பத்தி செய்ய முடியும். அதே பெரிய துணிப்பையை ரூ.35-க்கு வாங்கினால் அதிக பொருட்களை வாங்க முடியும்.
துணிப்பைகளுக்கான தேவை எவ்வளவு ஏற்பட்டாலும் இந்தியா போன்ற விவசாய நாட்டில் அதன் உற்பத்தி சாத்தியமே. விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த அரசு, துணிப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். சுற்றுச்சூழலும் மாசுபடாது. பருத்தி விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக துணிப்பைகளை எளிதில் உற்பத்தி செய்து விற்க முடியும்” என்கிறார்.
தொழிற்சாலைகள் கவனத்துக்கு..
“பிளாஸ்டிக் கைப்பைகள், பாட்டில்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரும் தொழிற்சாலைகள் பின்னர், அவை என்ன ஆனது என்பது குறித்து கவலைப்படுவதில்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்தே விற்பனைக்கு அனுப்புகின்றன. ஆனால், அதனை திரும்பப் பெற இதுவரை எந்த நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை” என்கிறார் பிளாஸ்டிக் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் வாசுதேவன்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கைப்பைகளை பயன்படுத்திய பிறகு, அதை எந்த கடையில் வேண்டுமானாலும் திருப்பி அளித்தால் கணிசமான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால், பிளாஸ்டிக் பாட்டில்களை பெரும்பாலும் தூக்கி எறியமாட்டார்கள். இவற்றை முறையாக சேகரித்தால் சாலை போடவும் கழிப்பறைகள் கட்டவும் பயன்படுத்த முடியும்.
1 கிமீ சாலை அமைக்க மட்டும் ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் தேவை. பிளாஸ்டிக் சாலையால் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. பராமரிப்புச் செலவும் இல்லை. இதற்காக பகுதி வாரியாக பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க ஆட்களை அரசு நியமிக்கலாம். குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யும் ரயில்வேயும் தமிழக அரசும் முதலில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்கிறார்.
தொடரும்உற்பத்தி
தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 30 சதவீதம் பிளாஸ்டிக் மூலம்தான் கிடைக்கிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். ஜனவரி 1 முதல் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை இதுவரை நிறுத்தவில்லை. எனினும், தடை அறிவிப்புக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களுக்கான ஆர்டர்களின் அளவு குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் எஸ்.ராக்கப்பன் கூறும்போது, “தடையால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் உடனடியாக மாற்று வேலைக்குச் செல்வது கடினம். கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு, குறு நிறுவனத்தினர் பெரும் நஷ்டத்துக்கு ஆளாவார்கள். தடைக்கு பதிலாக மக்கும், மக்காத பொருட்களை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மையை திறம்பட அரசு அமல்படுத்தலாம். திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்த தேவையான உதவிகளை செய்ய எங்கள் சங்கம் தயாராக உள்ளது. மேலும், நாங்கள் விற்கும் பிளாஸ்டிக் பைகளை மீண்டும் பெற்றுக்கொண்டு, அவற்றை மறுசுழற்சி செய்து குப்பை அள்ளும் பைகளாக மாற்றித்தரவும் தயாராக உள்ளோம்” என்றார்.
தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி உள்ளனர். இந்த குழுவினர் “சிறு, குறு தொழில் நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடக் கூடாது. படிப்படியாக நாங்களே இந்த தொழிலில் இருந்து வெளியேற தயாராக உள்ளோம். இதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்கின்றனர்.
தடையை அரசு மட்டுமே நடைமுறைப்படுத்திவிட முடியாது. வியாபாரிகள், நுகர்வோர் அமைப்பினர், உணவக உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து மாவட்டம்தோறும் கூட்டங்கள் நடத்தி தடையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் தடைக்கு ஓரளவேனும் வெற்றி கிடைக்கும் என்கிறனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
பிளாஸ்டிக் புழக்கம் இல்லாத 1990-க்கு முந்தைய காலத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த பிளாஸ்டிக் தடை இருக்குமா என்பது காலத்தின் முன் நிற்கும் கேள்வி. வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வது என்பது நமக்கானது மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் கூட.
பாத்திரத்துக்கு மாறுமாபார்சல்?
ஹோட்டல்களில் முழுமையாக காகிதப் பைகளை பயன்படுத்துவது இயலாத காரியம் என்கிறார் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன். தொடர்ந்து அவர் கூறும்போது, “தடை அமலாகும்போது பிளாஸ்டிக் பைகளில் உணவை அளிக்க முடியாது. பார்சல் வாங்க வருபவர்கள் பழையபடி பாத்திரங்களை கொண்டு வர வேண்டும். இதற்கான அறிவிப்புப் பலகை வைக்க உள்ளோம். சில ஊர்களில் இப்போதும் அந்த நடைமுறை உள்ளது. வெளியூர் பயணங்களின்போது இதில் சிலசிரமங்கள் இருக்கும். சில்லறை விற்பனை, பார்சல் வியாபாரம் பாதிக்கப்படும்” என்றார்
ஐஏஎஸ்அதிகாரிகள்நியமனம்
பிளாஸ்டிக் தடையை ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்துவதற்காக 32 மாவட்டங்களை ஆறு மண்டலங்களாக பிரித்துள்ளனர். இதில், இரு மண்டலங்களுக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வணிகர்கள், உணவக உரிமையாளர்கள், நுகர்வோர் அமைப்புகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆகியோருடன் இணைந்து தடையை அமல்படுத்துவார்கள் என தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் கடந்த ஜூன் 15-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்படும் பொருட்கள்
விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பில், ‘பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்கள், குப்பை அள்ளும் பைகள், மக்கி உரமாகும் தன்மையுள்ள கைப்பைகள், மின் வயர்களில் சுற்ற பயன்படும் டேப்புகள், Woven சாக்குகள், டெட்ராபேக், பிளாஸ்டிக் டப்பாக்கள், சாஷேக்கள், எழுதுபொருட்கள் ஆகிய 12 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago