‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றியிருக்கும் சிம்பொனி 2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக முதன்முறையாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியாவின் முதல் சிம்பொனி வெளிவர இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இளையராஜாவுடன் நடத்திய நேர்காணலிலிருந்து...
சிம்பொனி படைத்திருக்கும் முதல் இந்தியர், அநேகமாக முதல் ஆசிய இசைக் கலைஞர் நீங்கள்தான். சிம்பொனி இயற்றுவது என எப்போது முடிவெடுத்தீர்கள்?
முடிவெடுக்க வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஏனெனில், நான் ஏற்கெனவே திரையிசையில் சிம்பொனி வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன். அதன் வழியாக சிம்பொனி குறித்து மக்களுக்குக் கற்பித்திருக்கிறேன். நான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய பாடல்களைப் பட்டியலிட்டு, மற்றவர்களின் சிம்பொனியை நான் நகலெடுத்துவிட்டதாகச் சிலர் குற்றம் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். பேச்சாளர் ஒருவர் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினால், அவர் திருக்குறளைப் படியெடுத்துவிட்டார் என்று கூறுவீர்களா? என்னுடைய நோக்கம் மக்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதுதான்.
‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலின் பின்னணி இசையைக் கவனித்தீர்கள் என்றால், அதில் சிம்பொனி வடிவம் உள்ளது. இதேபோன்று, ‘ஓ பிரியா பிரியா’, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘நினைவோ ஒரு பறவை’, ‘மடை திறந்து’ போன்ற எனது பாடல்களில் சிம்பொனியின் அம்சங்கள் ஆங்காங்கே தொனிக்கின்றன.
பிரான்ஸ் ஷுபர்ட்டை நான் நகல் எடுத்துவிட்டதாகக்கூடச் சிலர் கூறுகின்றனர். திரைப் பாடல்களை இயற்றும்போது அவரது இசை என் மனத்துக்குள் ரீங்காரம் இட்டது உண்டு. அவரது இசை எனக்குள் உத்வேகத்தை ஊட்டியதே அன்றி, அதற்கும் எனது படைப்புக்கும் நேரடித் தொடர்பில்லை. சிம்பொனி இயற்ற வேண்டும் என முடிவெடுத்தால் முதலில் சிம்பொனி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். நான் ஒரு இந்தியன், அதிலும் பட்டிக்காட்டில் பிறந்த தென்னிந்தியன்.
அப்படியிருக்க எனது இளம்பிராயத்தில் நான் கேட்டு வளர்ந்த இசையை சிம்பொனிக்குள் புகுத்திடக் கூடாது. திரையிசை அமைப்பாளர் என்கிற எனது அடையாளத்துக்கும் சிம்பொனி படைப்பில் இடமில்லை. நான் இசையமைத்த படங்களில் ஒலித்த பின்னணி இசையைப் போன்று எனது சிம்பொனி தொனிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் எழுந்துவிடக் கூடாது. எனக்குள் குடிகொண்டிருக்கும் இந்தியச் சாயல்கள் எதுவும் சிம்பொனியில் எதிரொலித்துவிடக் கூடாது. இவற்றில் ஏதேனும் ஒன்று தென்பட்டுவிட்டாலே ஓர் இந்தியர் சிம்பொனி இசைத்திருக்கிறார் எனச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவார்கள்.
ஓர் அசலான சிம்பொனியை எழுதுவதே எனது இலக்கு. அப்படியொரு சிம்பொனியை இயற்றுகையில் சிம்பொனி மேதைகளின் படைப்புகளில் இடம்பெற்ற ஒலிகளோ, கூறுகளோ எனது படைப்பில் தென்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படிச் செய்ய நேர்ந்தால் நான் பீத்தோவனையோ மொசார்ட்டையோ படியெடுத்துவிட்டதாக முத்திரை குத்திவிடுவார்கள். ஒரு சிம்பொனி படைப்பதில் நான் எதிர்கொள்ள நேரிட்ட சவால்களை விளக்கவே இவற்றை எடுத்துரைக்கிறேன்.
இந்தியாவில், சிதார் கலைஞர் ரவிஷங்கரின் பிறந்தநாளுக்கு சிதார் சிம்பொனி என்று விழா எடுத்தார்கள். இதேபோன்று பாடகி ஷ்ரேயா கோஷலும் சிம்பொனி நிகழ்ச்சி ஒன்றை மேடையேற்றினார். இது பற்றி உங்கள் கருத்து...
திரைப் பாடலைக் கீர்த்தனை என்பீர்களா? கீர்த்தனைக்கு என்று ஒரு வடிவம் உண்டு. அண்மையில், புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் செளராசியாவின் ‘குருக்குல்’ விழாவில் நான் சிறப்பிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட 25 புல்லாங்குழல் கலைஞர்கள் இசைத்த அந்த நிகழ்ச்சி, சிம்பொனி என்றழைக்கப்பட்டது. விழா மேடையிலேயே “இதனை சிம்பொனி என அழைக்கக் கூடாது” என்று ஹரிபிரசாத் செளராசியாவிடமே தெளிவுபடுத்தினேன். ஏனெனில், இந்தியாவில் சிம்பொனி என்று ஒன்று இல்லை. ஜக்ஜித் சிங் கஸல் நிகழ்த்தியபோது, அதனையும் தவறுதலாக சிம்பொனி என்றார்கள். சில கீபோர்டு இசைக் கலைஞர்கள், தபேலா வித்வான்கள், கிட்டார் வாத்தியக்காரர்கள் கூட்டாக இணைந்து வாசித்துவிட்டாலே, அது சிம்பொனி ஆகிவிடாது.
அப்படியென்றால், சிம்பொனியின் வடிவம் என்ன என்பதை விளக்க முடியுமா?
சிம்பொனியின் கட்டமைப்பு என்பது ஒரு கூற்றைப் போன்றது. அதில் முகப்புப் பகுதி (முதல் சப்ஜெக்ட்) இருக்கும். அந்த முகப்புப் பகுதிக்குள் இரண்டாம் பாகம் இசைக்கப்படும். இது குறிப்பிட்ட இசை நுணுக்கங்களைக் கொண்டு அமைய வேண்டும். இதையடுத்து இரண்டாவதாக ஒரு முகப்புப் பகுதி (இரண்டாவது சப்ஜெக்ட்) இசைக்கப்படும். இதற்குரிய பிரத்யேக ஸ்ருதியுடன் கூடிய இசை நுணுக்கங்கள் இடம்பெற வேண்டும். மேற்கொண்டு தேர்வு செய்த கருப்பொருளை ஒட்டி அதில் மேம்பாடும், புதுமையாக்குதலும் இசை ஒருங்கிணைப்பின் வழியாகவும் கவுன்டர்பாயின்ட் வழியாகவும் வெளிப்பட வேண்டும். பிறகு, எடுத்த எடுப்பில் முகப்பில் இசைத்ததை மீண்டும் இசைத்து நிறைவுப் பகுதியை நோக்கிச் செல்ல வேண்டும்.
கர்னாடக இசையில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று உள்ளதைப் போல சிம்பொனிக்கு என்று தனித்துவமான வடிவம் உள்ளது. முதல் இயக்கத்தில், முதல் கருப்பொருள் இசைக்கப்படும். இரண்டாவது அனுபல்லவி என்பதாகவும், மேம்பாடு சரணம் என்பதாகவும் அதில் பாடகர் நிரவல் செய்துகாட்டுவார் எனவும் ஒப்பீட்டளவில் விளங்கிக்கொள்ளலாம். சிம்பொனிக்கு எனத் திட்டவட்டமான விதிகளும் ஒழுங்குமுறைகளும் உள்ளன.
சிம்பொனியைப் படைத்த தருணத்தில் அங்கு வீற்றிருந்தது பண்ணைபுரத்து இளையராஜாவா அல்லது நீங்கள் சிலாகித்த மேற்கத்திய இசை மேதைகளா?
நான் அவர்களைப் போல் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? நான் படைத்திருக்கும் இசையை வைத்து மக்களே என்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும். அந்த இசைக்குரிய மரியாதை மட்டுமே எனக்கு வேண்டும்.
சிம்பொனியை ரசிக்க இசை அறிவு அவசியமா?
எந்த அறிவைக் கொண்டு நீங்கள் திரை இசையை ரசிக்கிறீர்கள்? நல்ல பாடலுக்கும் நன்றாக ஒலிக்காத பாடலுக்கும் இடையிலான வேறுபாட்டினை உங்களால் பிரித்தறிய முடிகிறதே... இவற்றை நீங்கள் எதைக் கொண்டு வேறுபடுத்துகிறீர்கள்? அறிவா அல்லது உணர்வா? உணர்வதே ஒன்றைக் குறித்த அறிவுக்கு அடிப்படை. அறிவு என்று தனியாக ஏதும் இல்லை.
ஆகவேதான் உணர்வு மட்டுமே சிம்பொனியை ரசிக்கப் போதுமானதா எனக் கேட்கிறேன்...
முதலில் சிம்பொனியைக் கேளுங்கள்... பிறகு, அதைப் பாமர ரசிகரால் ரசிக்க முடியுமா, முடியாதா என்கிற கேள்வியை எழுப்புங்கள். சங்க இலக்கியத்தைப் பற்றிப் பேசினால் மக்களுக்குப் புரியுமா எனக் கேட்பதுபோல் உங்கள் கேள்வி உள்ளது.
இந்தியச் சூழலில் ஒன்றைக் குறித்துக் குறைந்தபட்ச அறிவு அவசியம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்கிற பழமொழிபோல், நீங்கள் கேட்டுக்கேட்டுப் பழக வேண்டும். கூடவே, சிம்பொனியைச் சிலாகிக்கும் ரசனையும் வேண்டும். திரைப் பாடல்களைக் காலங்காலமாகக் கேட்டு ரசித்தவர்கள் எல்லாரும் இதையும் கேட்டு ரசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு சிம்பொனியை அமைக்கவில்லை.
சிம்பொனி எல்லாருக்குமானது அல்ல. இது வித்தியாசமானது. இதில் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது. உயர்ந்ததை உயர்ந்ததென்று கண்டுகொள்ள வேண்டும். ஆகவேதான் 2,000 ஆண்டுகள் கழித்தும் சங்க இலக்கியத்தைப் போற்றுகிறோம். தொல்காப்பியம் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆயிற்றே.
உங்களுடைய சிம்பொனியை இங்கிலாந்தில் பதிவு செய்ய முடிவெடுத்தது ஏன்?
அப்படிப்பட்ட இசைக் கலைஞர்கள் இங்கு இருந்தால் சொல்லுங்கள்... இங்கேயே சிம்பொனியைப் பதிவு செய்துவிடுவோம். லண்டனில் இருப்பதுபோன்ற இசைக் குழு இந்தியாவில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?
இந்தியாவில் உங்களுடைய சிம்பொனியை நேரடி நிகழ்ச்சியாக நிகழ்த்திக்காட்டும் திட்டம் ஏதும் உள்ளதா?
அரசாங்கம் நினைத்தால் மட்டுமே அது சாத்தியப்படும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மும்பையிலும் டெல்லியிலும் தலா 1, கொல்கத்தாவில் 3, மைசூரில் தசரா பண்டிகையின்போது நிகழ்ச்சி நடத்துவதற்காகவே பிரத்யேகமாக ஆண்டு முழுவதும் பயிற்சி எடுத்துவந்த இசைக் கலைஞர்கள் என 6 சிம்பொனி இசைக் குழுக்கள் இந்தியாவில் இருந்தன. இன்றோ அதுபோன்ற ஒரே ஒரு சிம்பொனி இசைக் குழுகூட இந்தியாவில் இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா
நன்றி: ‘தி இந்து’ நாளிதழ்