கால்பந்து மூலம் சாத்தியமாகட்டும் சமூக மாற்றம்!

By ஆதி வள்ளியப்பன்

‘இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்' என்பது பிரபல கூற்று. அப்படிப் பார்த்தால், 'உலகின் மிகப் பெரிய மதம் கால்பந்துதான்’. ரஷ்ய கால்பந்துத் திடல்களில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்னால் சேர்ந்திசைபோல 'ஹோ'வெனத் தொடங்கிய ரசிகர்களின் உற்சாகக் கூக்குரலும், ஒவ்வொரு கோல் போடப்படும்போதும் ஆழிப் பேரலைபோல் எழுந்து ஆடும் ரசிகர் கூட்டமும், போட்டிகள் முழுவதும் நீடித்த பரவச உணர்வும் இந்தப் ‘பிரத்யேக மத’த்தின் முதன்மை அடையாளங்கள்.

எளிமையான விதிகள், எளிமையான நடைமுறைகள் போன்றவற்றின் காரணமாக உலகம் விரும்பும் விளையாட்டாகத் திகழ்கிறது கால்பந்து. காலனி ஆதிக்கத்தைச் செலுத்திய மேற்கத்திய நாடுகளில் தோன்றியிருந்தாலும், கால்பந்து விளையாட்டுக்கான ஆன்மா வேரூன்றியிருப்பது வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும்தான் எனலாம்.

குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகள் கால்பந்து விளையாட்டின் புனிதத் தலங்களாகவே ரசிகர்களால் நம்பப்படுகின்றன. இந்தியாவில் மேற்கு வங்கம், கேரளம், வட சென்னை என எங்கெல்லாம் உழைக்கும் மக்களும் எளிய மக்களும் அதிகமாக வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கால்பந்துக்கு என்று தனித்த இடம் உண்டு. 300 கோடியில் தொடங்கி 350 கோடிப் பேர்வரை உலகக் கால்பந்துப் போட்டிகளை ரசிக்கிறார்கள்.  அந்த வகையில், வேறு எந்த விளையாட்டைவிடவும் அதிகமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் விளையாட்டு இது!

அதிரடித் திருப்பங்கள் நிறைந்தது

எண்ணிக்கைக் கணக்குகள் ஒருபுறம் இருக்க, எந்த ஒரு விநாடியும், நிமிடமும் ஒரு அணிக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ மாறிவிடக்கூடிய சாத்தியமே கால்பந்தை உயிர்ப்புள்ளதாகவும் உலகெங்கும் கொண்டாடப்படும் விளையாட்டாகவும் மாற்றியுள்ளன. எந்நேரமும் ஆட்டத்தின் போக்கு மாறிவிடக்கூடிய இந்த 'சஸ்பென்ஸ் தன்மை'யே கால்பந்தின் உயிர். நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆச்சரியங்களுக்குக் குறைவேயில்லை!

நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி 80 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பையின் முதல் சுற்றிலே இந்த முறை வெளியேறியது. தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாதான் ஜெர்மனியை வெளியேற்றியது. அதற்கு முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் சாம்பியனாக நுழைந்த ஜெர்மனிக்கு, விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை வழங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது மெக்சிகோ (தரவரிசை எண் 15).

இறுதிப் போட்டிக்கு நிச்சயம் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா அணிகள்  காலிறுதியைக்கூடத் தாண்டவில்லை. அதேநேரம், இந்த உலகக் கோப்பையில் யாராலும் எதிர்பார்க்கப்படாத குட்டியூண்டு நாடான குரோஷியா (தரவரிசை எண் 20) அதிரடி ஆட்டம் இறுதிப் போட்டி வரை சென்று திகைப்பை ஏற்படுத்தியது. கால்பந்தைத் தனித்துவமாக்குவது இதுபோன்ற ஆச்சரியங்கள் நிறைந்த அம்சங்கள்தான்!

மாற்றத்தின் அடையாளங்கள்

விளையாட்டு என்பதைத் தாண்டி, பல்வேறு சமூகக் காரணங்களும் மாற்றத்தின் அடையாளங்களாகக் கால்பந்தை முன்னிறுத்துகின்றன. அமெரிக்கர்களுக்கே அமெரிக்கா என்று முழங்கும் டிரம்புக்கு வெற்றி கிடைக்கிறது; இந்தியா இந்துக்களுக்கே எனும் கருத்தாக்கம் நம் நாட்டில் வலுப்பெற்றுவருவதைப் பார்க்க முடிகிறது. இதுபோன்ற ஒரு சூழலில், உலகம் என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உலகக் கோப்பைக் கால்பந்து திகழ்கிறது.

ஏழைகள், அகதிகள், நிறவெறியால் பாதிக்கப்பட்டவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என நெருக்கடிக்கு உள்ளான பின்னணியிலிருந்து உருவான வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பேசப்பட்ட பல கதைகளின் நாயகர்கள்.

'தங்கப் பந்து விருது' பெற்ற குரேஷியாவின் லுகா மோட்ரிக், போர்ச் சூழலில் பிறந்து வளர்ந்தவர்; 'சிறந்த இளம் வீர'ருக்கான விருதைப் பெற்ற பிரான்சின் கிளியன் எம்பாப்பே, பீலேவுக்குப் பிறகு, இளம் வயதில் இறுதிப் போட்டியில் கோல் அடித்த பெருமைக்குரியவர். இந்த உலகக் கோப்பையில் பிரான்ஸின் முக்கியத் துருப்புச்சீட்டாக இருந்த ஆப்பிரிக்கர்; பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க வம்சாவளி வீரர் ரொமேலு லுகாகு, ஏழ்மை நிறைந்த காங்கோலீஸ் அகதியாக இருந்து பெல்ஜியம் அணியின் பிரிக்க முடியாத பாகம் ஆனார். இப்படிப் பலரைச் சுட்டிக்காட்டலாம்.

ஆப்பிரிக்க பிரான்ஸ்!

'ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையில் எஞ்சியுள்ள கடைசி ஆப்பிரிக்க அணி' என்று பிரான்ஸ் பரிகசிக்கப்பட்டது. அணியின் 23 வீரர்களில் 12 பேர் ஆப்பிரிக்க வம்சாவளியினர். களமிறக்கப்பட்ட வீரர்களிலும் பாதிப் பேர் கறுப்பின வீரர்கள் என்பதே இதற்குக் காரணம். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆதிக்கவாதிகள் இன்றுவரை ஆப்பிரிக்கர்களின் உடல் திறன், அறிவாற்றலைத் தாழ்த்தியே பேசிவருகிறார்கள். ஆனால், உலக வரலாறும் அறிவியல் உண்மைகளும் வேறுவிதமாகவே இருந்துவருகின்றன. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதற்கு முக்கியக் காரணம் அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆப்பிரிக்க வம்சாவளியினர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உடல் திறன்களில் மட்டுமல்லாமல், கால்பந்து போன்ற சிந்திக்கக்கூடிய விளையாட்டுகளில் அவர்களே ராஜா என்பது இந்தப் போட்டி மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

அதேநேரம், பிரான்ஸைப் போன்று மாற்றங்களையும் பன்முகத்தன்மையையும் குறைந்தபட்சமாகவேனும் அங்கீகரிக்கும் போக்கு, ஐரோப்பா மட்டுமின்றி உலகெங்கிலுமே பரவ வேண்டிய ஒன்று. தேச எல்லைகளைத் தாண்டி, உலக மக்களின் நலனை விரும்புபவர்களின் விருப்பம் அதுதான். இந்தச் சூழலில், உலகப் பன்மைத்தன்மையின் சில கீற்றுகளை, குறைந்தபட்ச மாற்றங்களை இந்த உலகக் கோப்பை நம் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அவை தூரத்து இடிமுழக்கமாக மட்டும் அல்லாமல், உலகச் சமூகம் விரைவில் கண்டாக வேண்டிய மாற்றங்களுக்கான அச்சாரமாக அமையட்டும்!

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு:

valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்