உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், வெற்றிகரமாகத் தேர்தல்களை நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். அரசமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜனநாயத்தின் ஆணிவேரான வாக்காளர்கள் தினம் (ஜன. 25) நாளை கொண்டாடப்படும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாலசுவாமி ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி:
வாக்கு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும் அதன் நம்பகத்தன்மை குறித்தும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? - தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரம் பற்றி வேறு மாதிரி பேசுவார்கள். தோல்வி அடைந்தால் வாக்கு இயந்திரம் தவறு என்று சொல்வார்கள். உச்ச நீதிமன்றத்திலேயே இது சார்ந்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ‘நீங்கள் வெற்றி பெற்றால் வாக்கு இயந்திரம் சரி, தோற்றால் தவறா?’ என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றமே எழுப்பியுள்ளது. இதைப் பற்றி மேலும் பேசுவதில் பெரிய அர்த்தம் இல்லை.
வாக்குப்பதிவு சிசிடிவி பதிவுகள் ஆவணங்கள் ஆகாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அதன் நம்பகத்தன்மையைக் குலைக்காதா? - இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் தவறு கிடையாது. சிசிடிவி பதிவு ஆவணங்கள் முற்றிலும் கொடுக்கப்படக்கூடியவை அல்ல என்று தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. இந்த ஆதாரம் தேவை என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், அப்போது ஆணையம் கொடுக்கும். சிசிடிவி பதிவு ஆவணங்களைப் பரவலாக எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இனிமேல் இருக்க மாட்டார் என மாற்றப்பட்டது சரியா? - தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அப்படி ஒரு சட்டம் இயற்றாதவரை தலைமை நீதிபதி உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு குழு நடைமுறையில் இருக்கும் என்றுதான் நீதிமன்றம் சொன்னது. இது ஒரு தற்காலிக ஏற்பாடு. மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துவிட்டது. அதில் தலைமை நீதிபதி இல்லை. இது நாடாளுமன்றத்தின் முடிவு. அதில் தவறு இல்லை.
ஒருவேளை அந்தக் குழுவில் நீதிபதியும் இருந்து ஒருவரை நியமிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆறு மாதங்கள் கழித்து அந்த நியமனம் தவறு என்று வருவதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீதித் துறையின் பெயரும் கெட்டுப்போய்விடும் அல்லவா? எனவே, நீதித் துறையை அந்தப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்பது என்னுடைய கருத்து. நியமனம் உள்பட எந்த ஒரு சர்ச்சையிலும் நீதிமன்றம்தான் இறுதி விசாரணை நடுவர் அமைப்பு. எனவே, ஆரம்பக் கட்டச் செயல்பாட்டில் நீதித் துறையை அதில் தொடர்புபடுத்தாமல் இருப்பது நல்லது.
தேர்தல் நாளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்கிற குற்றச்சாட்டு இன்னமும் தொடர்கிறது. இன்னொரு புறம் 100% வாக்குப்பதிவு என்கிற இலக்கை எட்ட முடிவதில்லை. இந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - நம் நாட்டுத் தேர்தல் நடைமுறையில் எல்லோருக்கும் ஒரு பங்கு இருக்கிறது. அவரவர் அவரவருடைய பணியை ஒழுங்காகச் செய்ய வேண்டும். எனக்கு ஒரு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள். அதை நான் ஒழுங்காகப் பயன்படுத்த மாட்டேன்; ஆனால், அதில் தவறு நேர்ந்தால் பிரச்சினை செய்வேன் என்று சொல்வது சரியான முறையல்ல. அதுதான் இங்கு நடக்கிறது. முதலில் வாக்காளர் வரைவுப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அது இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அதை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள்? வரைவுப் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும். பெயர் விடுபட்டிருக்கிறதா, இறந்தவர் பெயர் இருக்கிறதா, அயல்நாட்டவர் உள்ளிட்ட தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா, பல ஆண்டுகளாக வாக்களிப்பவர் பெயர் நீக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
அதற்காகத்தான் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலுக்கு முன்பாகத் தன் பெயர் இருக்கிறதா என்பதைப் பார்த்த பிறகுதான் வாக்களிக்கவே செல்ல வேண்டும்.
ஒரு பெயரை நீக்கும் முன் தேர்தல் பணியாளர்கள் விசாரணை செய்ய வேண்டும். சில இடங்களில் ஒழுங்காக விசாரணை செய்யப்படாமல் இருக்கலாம். பெயரை நீக்குவது, சேர்ப்பதற்கான அதிகாரம் தாசில்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தனக்குக் கீழ் உள்ள பணியாளர்கள் விசாரித்துச் சொல்லும் தகவல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு சரியாக வேலை செய்ய வேண்டும்.
ஒரு பெயரைச் சேர்ப்பதற்கு என்னென்ன முயற்சிகள் செய்யப்படுகின்றனவோ, அதைவிட ஒரு பெயரை நீக்குவதற்கு இரண்டு மடங்கு முயற்சியெடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, பெயர் நீக்கம் என்பது தவறு ஏதும் இல்லாமல் தெளிவாகவும் சரியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஒருவரை நீக்கினால், அவருடைய வாக்குரிமை போய்விடும். எனவே, அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. சில இடங்களில் தவறுகள் நேரலாம். எந்தெந்த அதிகாரிகளுக்குப் பணிகள் கொடுத்திருக்கிறார்களோ அவர்கள் அந்தப் பணியைச் சரியாகச் செய்ய வேண்டும்.
அரசியல் கட்சிகள் என்பவை ஜனநாயகத்தில் முக்கியமான அம்சம். அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை வைத்து வாக்காளர்களின் பெயர்களைச் சரிபார்க்க வேண்டும். தவறு ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே சொல்ல வேண்டும். எல்லோரும் ஒருங்கிணைந்துதான் இதைச் செய்ய வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இதைக் கொண்டுவரத் தடையாக இருப்பது எது? - தேர்தல் சீர்திருத்தத்தை யார் செய்ய வேண்டும்? நாடாளுமன்றம்தானே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அங்கு இருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்குச் சீர்திருத்தம் தொடர்பாக விருப்பம் இருக்கிறது? என்னென்ன திருத்தங்கள் சொல்லப்படுகின்றனவோ, அவையெல்லாம் அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தக்கூடியவை. அவர்களுடைய காலை அவர்களே வெட்டிக்கொள்வார்களா? அதனால்தான் 1998இலிருந்து கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுகளால் சில மாறுதல்கள் வரும்.
தேர்தல் சீர்திருத்தம் என்று சொல்லக்கூடிய மாறுதல்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றம் செய்ததைவிட நீதிமன்றம் செய்ததே அதிகம். தேர்தல் மேம்பாடு என்று சொல்லக்கூடிய விஷயங்களில் நான்கோ ஐந்தோதான் நாடாளுமன்றம் செய்தவை. வாக்குரிமைக்கான வயதை 21லிருந்து 18ஆகக் குறைத்தது, கட்சித் தாவல் தடைச் சட்டம் எனச் சிலவற்றைத்தான் நாடாளுமன்றம் செய்தது. அதற்கு மேற்பட்ட திருத்தங்களை நீதிமன்றமே செய்துள்ளது. யார் இதைச் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்வதில்லை. நாம் எதிர்பார்ப்பு வைக்காதவர்கள்தான் இதைச் செய்கிறார்கள்.
- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in