தமிழக அரசின் முன்னெடுப்பில் மூன்றாவது பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. 2022இல் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு சாத்தியப்படும் என்று 2021இல் யாரேனும் சொல்லியிருந்தால் நான் நம்ப மறுத்திருப்பேன். வேறு எந்த மாநில அரசும் கைக்கொள்ளாத முன்னெடுப்பு இது.
2007, 2008 ஆகிய ஆண்டுகளில் புத்தகச் சந்தைகளின் மெக்காவான பிராங்பர்ட் புத்தகச் சந்தையில் அலைந்து திரிந்ததுமே உணர்ந்த விஷயங்கள் இவை. இந்திய மொழிகளின் இலக்கியம் உலக அரங்கை எட்டிட நமக்கு ஓர் இலக்கிய நிறுவனமும் நமது படைப்புகளை வெளியிட முன்வரும் அயல் பதிப்பாளர்களை ஊக்குவிக்கும் மொழிபெயர்ப்புக்கான நல்கைத் திட்டமும் இன்றியமையாத தேவைகள். இந்தியப் பண்பாட்டு நிறுவனங்களுடன் சில ஆண்டுகள் உரையாடிக் களைத்த பின்னர், அது சாத்தியமில்லை என்கிற மனச்சோர்வு ஏற்பட்டது. பல பதிப்பாளர்களுக்கான அரங்குகளில், இலக்கிய விழாக்களில், ஊடகங்களில் தனியார் நிதி ஆதரவுடன் அத்தகைய ஒரு நல்கை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசியபோதும், மாநில அரசுகள் தத்தமது மொழிகளுக்கு இத்தகைய நல்கைகளை நிறுவலாமே எனக் கருத்துப் பகிர்ந்தபோதும், இம்முன்னெடுப்பு தமிழகத்திலிருந்து தொடங்கும் என எண்ணியதில்லை. எனவே, என் பார்வையில் இது ஓர் அசாதாரணமான நிகழ்வு.
தமிழக அரசுக் கல்வி அமைச்சகத்தின் பொதுநூலகத் துறை இக்கண்காட்சியை முன்னெடுக்கிறது. மொழிபெயர்ப்பு நல்கையைப் பாடநூல் நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. தமிழ்ப் படைப்புகளை உலகுக்கு எடுத்துச்செல்வதும் தமிழ்ப் பதிப்புலகை உலகச் சூழலோடு இயைந்து இயங்கச்செய்வதும் இவற்றின் நோக்கங்கள்.
மூன்றாண்டு அனுபவத்தின் பின்புலத்துடன் இவற்றை எப்படி முன்னெடுக்கலாம்? உலகின் வெற்றிகரமான திட்டங்கள் எப்படிச் செயல்பட்டன? நாம் பத்தாண்டு காலச் செயல்திட்டத்தைக் கைக்கொள்ள வேண்டும். தமிழை உலகுக்கு எடுத்துச்செல்ல முக்கிய மைல்கற்களை வரையறுத்துக்கொள்ள வேண்டும். முக்கிய இலக்குகளாக எனக்குத் தெரிபவை இவை:
1. இந்திய, உலக அரங்கில் முக்கியமான விருதுகளைத் தமிழ்ப் படைப்புகள் பெற வேண்டும்.
2. பிராங்பர்ட் புத்தகச் சந்தையில் ‘தமிழ்ப் பண்பாடு’ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். இந்தியா இரண்டு முறை அழைக்கப்பட்டாலும் இந்திய இலக்கியம் உலகுக்குப் பயணிக்க வகைசெய்ய முடியவில்லை. இது வெறுமனே அழைக்கப்படுவது மட்டுமல்ல; மிகச் சிறப்பான முன்தயாரிப்பின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தக்கூடியது.
3. தமிழ் இலக்கியம் உலக மொழிகளில் இயல்பாக மொழிபெயர்க்கப்படும் காலத்தைச் சமைப்பது.
நார்வே என்கிற முன்னுதாரணம்: இரு பத்தாண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் ஆரம்பித்து, பன்னாட்டுப் புத்தகச் சந்தைகள், கருத்தரங்குகள் எனத் தொடர்ந்து பயணித்துவரும் எனக்கு இதுவரை ஊடாட முடியாத நாடுகளையும் மொழிகளையும் சேர்ந்த பதிப்பாளர்களை ஒவ்வோர் ஆண்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகச் சந்தையில் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. நூறு மொழிகளில் ஒன்றாக பிராங்பர்ட்டில் தடம் பதிப்பது வேறு. தமிழ்ப் பதிப்பாளர்களுடன் உரையாட, நமது விருந்தினர்களாக சென்னை வரும் அயல் பதிப்பாளர்களுடன், நம்முடைய நல்கைத் திட்டத்தின் பின்புலத்துடன் நமது தலைநகரில் சந்திப்பது நிச்சயம் வேறுதான். உலகச் சூழலுடன் இணைந்திடப் புதிய தலைமுறைப் பதிப்பாளர்களுக்கு இதுவொரு கொடுப்பினை.
இரண்டு திட்டங்கள்: வெற்றிகரமாகத் தமது இலக்கை எட்டியுள்ள இரண்டு நல்கைத் திட்டங்களை அறிந்துகொள்வது நமக்குப் பயன்தரக்கூடும். ஒன்று, நோபல் பரிசை முக்கிய இலக்காகக் கொண்டு சாதித்தது. மற்றொன்று, ஒரு நோபல் பரிசிலிருந்து தொடங்கி உலகை எட்டியது.
முதலாவதாக - நார்வே நாட்டின் இலக்கிய நிறுவனமான நோர்லா. இந்நாட்டின் மக்கள்தொகை சென்னையைவிட 20% குறைவு. 15 ஆண்டுகளுக்கு முன்னர் நோர்லாவின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, பிராங்பர்ட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதையும் நோபல் பரிசு பெறுவதையும் தமது இலக்கியம் உலக மொழிகளில் சரளமாகப் பயணிப்பதையும் இலக்காகக் கொண்டிருந்தார்கள். அனைத்தையும் சாதித்துவிட்டார்கள். இது அரசு நிதியுடன் இயங்கும் சுயாட்சி நிறுவனம். பெரிய மாற்றமில்லாத கையளவான ஒரு குழு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்தச் சுதந்திரமும் தொடர்ச்சியும் மிக முக்கியம்.
உலகப் பதிப்புச் சூழல் பற்றிக் கற்றுக்கொண்டே இருக்கலாம். தொடர்புகள் விரிந்துகொண்டே செல்லும். இலக்குகளும் வழிமுறைகளும் தெளிந்துகொண்டேவரும். 2008ஆம் ஆண்டு முதல் முறையாகச் சந்தித்த நோர்லாவின் முகவரைத்தான் இந்த ஆண்டும் சந்தித்தேன். இத்தனை ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பரஸ்பர அறிதலும் நட்பும் நம்பிக்கையும் மதிப்புமிக்கவை. இந்த ஆண்டு பிராங்பர்ட் புத்தகச் சந்தையில் நிர்மாணிக்கப்பட்ட சென்னை பன்னாட்டுப் புத்தகச் சந்தை அரங்கில் நோர்லாவின் இயக்குநர் மார்கிட் வால்சாவை யதேச்சையாகச் சந்தித்தேன். 12 ஆண்டுகளுக்கு முன்னர் நோர்லாவின் அழைப்பின் பேரில் ஆஸ்லோ சென்றிருந்தபோது, அவர் வீட்டில் இந்திய பதிப்புத் துறையினருக்கு அளிக்கப்பட்ட விருந்தைப் பற்றி உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தபோது இத்தொடர்ச்சியின் முக்கியத்துவம் மனதில் உறுதிப்பட்டது.
முயற்சியே திருவினையாக்கும்: துருக்கியின் டேடா - துருக்கி இலக்கியத்தை உலகுக்கு எடுத்துச்செல்ல அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம். துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் நோபல் பரிசு பெற்ற முகாந்திரத்தில் இது தொடங்கப்பட்டது. இவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் 2007இல் பிராங்பர்ட் பதிப்பாளர் பயிற்சித் திட்டத்தில் என்னுடன் பங்கெடுத்த நேர்மின் மோலஓலு. முதலில் ஓரான் பாமுக்கின் ஒரு படைப்பை மொழிபெயர்க்க டேடாவுக்கு விண்ணப்பித்தேன். அன்று துருக்கி அரசு அவரைக் கைதுசெய்துவிடும் என்கிற அளவுக்கு முரண்பாடு முற்றியிருந்தது. ஆனாலும் டேடா எனக்கு நல்கை வழங்கியமை பதிப்பாளர்களைத் தணிக்கை செய்யாத சுதந்திர நிறுவனம் அது என்கிற நம்பிக்கையை விதைத்தது. நான் டேடாவைப் பலப்பல இந்தியப் பதிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தக் காரணியாக இருந்த இந்த நம்பிக்கையை, அந்நிறுவனம் இன்றுவரை காப்பாற்றிவருகிறது.
2007இல் முதல் அடியை எடுத்துவைத்த நேர்மினின் கலம் ஏஜென்சி இன்று உலகின் முன்னணி இலக்கிய முகவர் நிறுவனம். சென்னை பன்னாட்டுச் சந்தைக்குப் பல விதங்களிலும் ஆதரவு அளித்த நேர்மின் டேடாவின் தூதராகக் கடந்த ஆண்டு கெளரவிக்கப்பட்டார். துருக்கி இலக்கியத்தை உலக மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் முதன்மைச் சக்தியாக நேர்மின் இயங்கிவருகிறார். இதற்காக அவர் செலுத்திய அசாத்தியமான உழைப்பு, மேற்கொண்ட பயணங்கள் தலைசுற்ற வைப்பவை. அதற்கு டேடா ஆதரவளித்தது. அவருக்கோ பாமுக்குக்கோ பிற துருக்கி எழுத்தாளர்களுக்கோ உச்சவரம்பு நிர்ணயித்துக் கால்கட்டு போடவில்லை. உலகப் பதிப்பாளர்களின் தேர்வுகளைத் தாம் வழிநடத்தக் கூடாது என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள். டேடாவின் நுகர்வோரான பிற நாட்டுப் பதிப்பாளர்களுக்குத்தான் ஆண்டுக்கு இத்தனை நல்கைகள் என வரையறுத்தது. அங்கு மட்டுமென்ன சிறுமதியாளர்கள் சலம்பாமலா இருந்திருப்பார்கள்? அதற்குச் செவிசாய்க்கப்பட்டிருந்தால் துருக்கி இலக்கியம் உலகுக்குச் செல்லும் வேகம் மட்டுப்பட்டிருக்கும். எல்லாப் பதிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பது முக்கியம். ஆனால், முயற்சி எடுப்பவர்களுக்கே காரியம் கைகூடும் என்பது மாற்ற முடியாத விதி.
2009இல் இஸ்தான்புல்லில் நான் சந்தித்த டேடாவின் நைசர் கரா பே இச்சந்தைக்கு வந்திருக்கிறார் என்பது ஒரு நிறுவனத்தின் நினைவுக் கிடங்குகளாகச் சில பத்தாண்டுகள் தொடர்பவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேற்படித் திட்டங்களிலிருந்தும் இன்னும் பல நாடுகளின் செயல்முறைகளிலிருந்தும் கற்று நமது வழிமுறைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது அவசியமானது.
தமிழக அரசின் பண்பாட்டு முன்னெடுப்புகள் தமிழ்க் கொடியை உயரப் பறக்கவிடும் காலம் இது. அவர்கள் முயற்சி வெற்றிபெறுவது தமிழ் இலக்கியத்தின், பதிப்புலகின் வெற்றியாகவே அமையும்.
- பதிப்பாளர், காலச்சுவடு பதிப்பகம்
தொடர்புக்கு: publisher@kalachuvadu.com