சாதனைகள்
இந்து தமிழ் திசை இயர்புக் விற்பனை அமோகம்: ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான இயர் புக் சென்னை புத்தகக் காட்சியில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. முழுமையான தேர்வு வழிகாட்டியாக இருக்கும் இந்த நூல், காலங்காலமாக விற்பனையில் இருக்கும் மற்ற இயர் புக்குகளைவிட அதிகமாக விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இயர் புக்கில் 25-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் கவனம்பெற்ற 40 விஷயங்களுக்கான விரிவான விளக்கங்கள் ‘ஏன்? எதற்கு? எப்படி?' பகுதியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தடம்பதித்த 50 ஆளுமைகள் குறித்த அறிமுகச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் கேள்வி-பதில் தொகுப்பு, தமிழின் முக்கிய நூல்களும் ஆசிரியர்களும், ரயில்வே தேர்வுகளில் வெற்றிக்கான வழி ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
நல்ல உணவு: புத்தகக் காட்சியில் தீராக் குறையாக நீடித்தது அதன் உணவகம். இந்த உணவகங்கள் கடந்த காலத்தில் வெறும் லாபநோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டுவந்தன. வாசகர்கள் இளைப்பாறலுக்காகவே உணவகம் என்பதைத் தாண்டி, விற்பனைக்காகவே என்றிருந்தது அதன் நடவடிக்கை. ஆனால், இந்த ஆண்டு புத்தகக் காட்சி நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த உணவகம், சுவையும் தரமும் மிக்கதாக இருந்தது என வாசகர்கள் பலரும் தெரிவித்தனர். உணவு வகைகளின் விலையும் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. வாசகர்கள் பலருக்கு இந்த உணவகம் வயிற்றுக்கும் விருந்தளித்தது.
எல்லாப் பதிப்பகங்களுக்கும் அரங்கு!: கடந்த சில ஆண்டுகளில் புத்தகக் காட்சியில் சில பதிப்பகங்களுக்கு அரங்கு ஒதுக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சை ஆகியிருந்தது. இந்தப் பிரச்சினையைப் பலரும் சுட்டிக்காட்டிப் பேசினர். இந்தப் புத்தகக் காட்சியில் பெரும்பான்மையான பதிப்பகங்களுக்கு அரங்குகள் ஒதுக்கப்பட்டன. பால் புதுமையினருக்காக அரங்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. பார்வையற்றவர்களுக்கான அரங்கும் ஒதுக்கப்பட்டது.
அதிகமான நாவல்கள்: எந்தப் புத்தகக் காட்சியையும் விட இந்தப் புத்தகக் காட்சியில் அதிகமான நாவல்கள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்பு நாவல்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, க்ரியா, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் நாவல்களை வெளியிட்டுவந்த சூழலில், இம்முறை சிறு குறும் பதிப்பகங்கள் பல இம்முறை நாவகளை வெளியிட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இனவரைவியல் நாவல்களான ‘ஊத்தாம்பல்லா’, ‘ஞானவெட்டியான்’ போன்ற நாவல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் பேசுபொருளாக இருந்தன. சோ.தர்மன், என்.ராம் போன்றவர்களின் நாவல்களுடன் புதியவர்கள் பலரின் நாவல்களும் வெளியாகியுள்ளன.
ஓய்வுக்குத் தனி அரங்கு!: புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்கள் ஓய்வெடுக்க ஓர் அரங்கு இல்லை என்பது பெருங்குறையாக இருந்தது. கடந்த காலங்களில் இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்தது. இந்தாண்டு இந்தக் குறையை பபாசி களைந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஓய்வெடுப்பதற்கெனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதுபோல் முறையான தண்ணீர் வசதியும் செய்து தரப்பட்டிருந்தது.
சோதனைகள்
மந்தமான விற்பனை: இந்த ஆண்டு புத்தகக் காட்சி விற்பனை எப்போதும் இல்லாத அளவு மந்தமாக இருந்ததாகப் பெரும்பாலான பதிப்பாளர்கள் தெரிவித்தனர். வழக்கமாகப் பொங்கல் பண்டிகை நீண்ட பொது விடுமுறையைக் கணக்கில் வைத்துப் புத்தகக் காட்சி திட்டமிடப்படும். அந்த விடுமுறை நாட்களில் மக்கள் புத்தகக் காட்சிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் அப்படித் திட்டமிடப்படும். ஆனால், விடுமுறை நாள்களில் பொதுமக்கள் வர மாட்டார்கள். அதனால் விற்பனை ஆவதில்லை என பபாசி புதிதாக யோசித்து டிசம்பர் 27இல் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கியது. மாதக் கடைசி என்பதால் முதல் நான்கைந்து நாட்கள் கூட்டமே இல்லை. இன்று புத்தகக் காட்சி நிறைவடையும் இந்தச் சந்தர்ப்பத்தில், முன்கூட்டியே தொடங்க பபாசி எடுத்த தீர்மானம் தோல்வி என்பதையே உணர்த்துகிறது.
புத்தக வழிகாட்டிகள் தேவை: இந்திய அளவில் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சி இதுதான். ஆனால், அதற்குரிய நுட்பங்களை இந்தப் புத்தகக் காட்சி கைக்கொண்டுள்ளதா என்பது கேள்விக்கு உரிய ஒன்றுதான். உதாரணமாக, நாட்டார் வழக்காற்றியல் துறை நூல்கள் வாங்க விரும்பும் ஒருவர் புத்தகக் காட்சி முழுக்கச் சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கும். வங்க மொழிபெயர்ப்புகள் வாங்க விரும்பும் ஒருவர் ஒவ்வொரு அரங்காகச் சுற்றிக்கொண்டு இருக்க வேண்டியிருக்கும். புத்தகங்களைச் சென்றடைய உதவும் வகையில் கல்லூரி மாணவர்களை வழிகாட்டிகளாக வைக்கலாம். மாணவர்களுக்கும் அது நல்ல செயல்பாடாக இருக்கும். மக்களுக்கும் உதவும்.
நுழைவுச் சீட்டு மையம் உள்ளே அமைக்க வேண்டும்!: ஒவ்வொரு அரங்க வரிசைக்கு வெளியே நுழைவுச் சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் சுமார் 200 நுழைவுச் சீட்டுகள் அனுமதிக்கப்படுகின்றன. எல்லா அரங்கு வரிசையிலும் வாசகர்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நுழைவுச் சீட்டு மையம் வெளியே இருப்பதால் முதல் வரிசை மையத்தில் சீட்டு வாங்குபவர் அதற்கு அடுத்த வரிசையிலோ மூன்றாவதிலோ நுழைந்துவிடுகிறார். இதனால், சில அரங்கு வரிசையில் வாசகர்கள் வருகை குறையும்; விற்பனையும் பாதிக்கப்படும். இதைக் களைய அரங்கு வரிசைக்குள்ளே நுழைவுச் சீட்டு மையம் அமைக்கப்பட வேண்டும்.
கழிப்பறைப் பிரச்சினை: எல்லாப் புத்தகக் காட்சி முடிவிலும் இந்தப் பிரச்சினையை எழுதுவது ஒரு தேய்வழக்காகிவிட்டது. ஆனாலும் இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணம் உள்ளது. பெருங்கூட்டம் இந்த முறை வரவில்லை என்றாலும் கழிப்பறைக்காகப் பலரும் காத்திருக்கும் சூழல் இருந்தது. எதிர்பார்த்தபடி லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தால் கழிப்பறை வசதிக்காகத் திண்டாடி இருப்பார்கள். மேலும், கழிப்பறைச்
சுத்தமும் சரியான ரீதியில் பேணப்படவில்லை. வருங்காலங்களிலாவது பபாசி இதில் கவனம்கொள்ள வேண்டும்.
சமதளமற்ற தரை: பெரும்பாலான புத்தகக் காட்சியில் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக தரைத்தளம் இருக்கும். இந்தப் புத்தகக் காட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. பாதையின் குறுக்காக வயர் செல்லாத வகையில் ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தாலும் தரை சமதளமின்றி அமைக்கப்பட்டிருந்தது. இதனால், சிலர் கால் இடறிக் கீழே விழுந்தனர். தள அமைப்பில் பபாசி கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
டிஸ்கவரி நூல் வெளியீட்டுச் சர்ச்சை: புத்தகக் காட்சி வெளி அரங்கில் நடந்த டிஸ்கவரி புக் பேலஸ் நூல் வெளியீட்டு விழா பெரும் சர்ச்சையைக் கிளப்பித் தலைப்புச் செய்தியாகிவிட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து தொடங்கி சீமான் உரை வரை பெரும் சர்ச்சைதான். இதற்காக பபாசி தரப்பும் டிஸ்கவரி புக் பேலஸ் தரப்பும் மாறி மாறி விளக்கங்கள் கொடுத்தன. டிஸ்கவரி இதற்கான விளக்கத்தை அளித்தும் அந்தப் பதிப்பகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. புத்தகக் காட்சிக்கான ஓர் ஆண்டுக் காலத் தடையை பபாசி விதித்துள்ளது. பபாசியின் விதிமுறைகள் தெரியவில்லை. ஆனால், ஜனநாயகபூர்வமாக இந்தத் தடை கண்டிக்கப்பட வேண்டியது.
அரங்குக்கு அதிகக் கட்டணம்: புத்தகக் காட்சிகளில் அரங்குகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தது சர்ச்சையாக இருந்தது. அதனால் சில பதிப்பகங்கள் நான்கு அரங்குகளுக்குப் பதிலாக இரண்டு அரங்குகளாக எடுத்தனர். நீலம் பதிப்பகம் நான்கு அரங்குகள் கேட்டதாகவும் அதற்கு அதிகமான கட்டணம் பபாசி தரப்பில் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து ‘நீலம்’ இதழில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதனால் நீலம் பதிப்பகம் இரண்டு அரங்குகள் மட்டுமே எடுத்துள்ளனர். காலச்சுவடு பதிப்பகத்துக்கும் அரங்கை ஒதுக்குவதில் சிக்கல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. பபாசி லாப நோக்கின்றி, பதிப்பாளர் நலன் சார்ந்தும் செயல்பட வேண்டும்.