இரவை நோக்கித் துரத்தப்படும் விலங்குகள்... ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!

By ஆசை

சென்னை போன்ற நகரங்களில் இன்னும் கட்டிடம் ஏதும் கட்டப்படாமல் சிறிய திடல் ஒன்று தென்பட்டால், அங்கே ஒரே நேரத்தில் பல குழுக்கள் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்தக் குழுவின் பந்தை அந்தக் குழுவின் ஃபீல்டர் எடுத்துப்போடுவதை சகஜமாகக் காணலாம். வெளியாட்களுக்கு யார் எந்தக் குழு என்றே தெரியாது. அந்தத் திடலுக்கு ஒரு சண்டியர் கூட்டம் கிரிக்கெட் விளையாட வருகிறது என்றால் என்ன ஆகும்? சின்னப் பையன்களும், பிரச்சினை ஏதும் வேண்டாம் என்று நினைப்பவர்களும் ஒதுங்கிக்கொள்வார்கள். சண்டியர்கள் வராத நேரத்தில் மற்றவர்கள் அங்கு வந்து விளையாடுவார்கள். அந்தத் திடலை நம் பூமியாகக் கற்பனை செய்துபாருங்கள். மனிதர்கள் என்ற சண்டியர்கள் மற்ற உயிரினங்களுக்கு, முக்கியமாகப் பாலூட்டிகளுக்கு அச்சம் ஏற்படுத்தி, அவற்றின் இயல்பான பழக்கங்களையே மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஆய்வொன்றின்படி, மனிதர்களின் குறுக்கீட்டுக்கு அஞ்சி பல்வேறு பாலூட்டி விலங்குகள் இரவுநேர விலங்குகளாகிக்கொண்டிருக்கின்றன.

பகலில் ஓய்வெடுத்துவிட்டு இரவில் சுறுசுறுப்பாக இரைதேடி உண்ணும் விலங்கு களுக்கு இரவாடிகள் (Nocturnal Animals) என்றும், இரவில் ஓய்வெடுத்துவிட்டுப் பகலில் இரைதேடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் உயிரினங்களுக்குப் பகலாடிகள் (Diurnal Animals) என்றும் பெயர். இன்னும் வெவ்வேறு நேரத்துக்குத் தகுந்தவாறு பலவகை பிரிவுகள் இருக்கின்றன. இப்படிச் செயல்படும் நேரத்தை உயிரினங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உணவு, உறைவிடம், பாதுகாப்பு என்று பல்வேறு காரணிகள் உண்டு. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தின் விளைவாக இப்படிப்பட்ட பழக்கங்கள் உயிரினங்களுக்கு உருவாகும். ஆனால், மனித இனத்தின் வருகைக்குப் பிறகு, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் நவீன யுகத்தின் வருகைக்குப் பிறகு, அந்த விலங்கினங்களில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மனித ஆதிக்கத்தால் உணவு, உறைவிட இழப்பு ஏற்பட்டு விலங்கினங்கள் அழிந்துபோவது, வேற்றிடங்களுக்குத் துரத்தப்படுவது போன்ற நிகழ்வுகளை நாம் கண்டுவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது விலங்குகளின் காலம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மாறிவருவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகெங்கும் ஆறு கண்டங்களில், 62 விலங்குகளை ஆராய்ந்து பார்த்த அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழுவினர்தான் இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் விலங்குகளின் நடமாட்டம் முன்பைவிட 1.36 மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.

பெருச்சாளி, மரநாய் போன்றவை இயல்பாகவே இரவு நேரத்தில் இரைதேடி உண்ணும் விலங்குகள்தான். ஆனால், புலிகள் பகல் நேரத்தில்தான் சுறுசுறுப்பாக இருக்கும். நேபாளத்தில் மனித நடமாட்டம் உள்ள இடங்களில் புலிகள் கொஞ்சம் கொஞ்சமாக இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்கள் நடமாடும் அதே இடத்தில், எந்தத் தொந்தரவும் இல்லாமல் புலிகள் இரவு நேரத்தில் நடமாடத் தொடங்கியிருக்கின்றன.

இதேபோல் கலிஃபோர்னியாவில் உள்ள கோயோட் நாய்கள் பகலில் அணில்களையும் பறவைகளையும் கொஞ்சமாக வேட்டையாடித் தின்றுவிட்டு, இரவில் சுதந்திரமாக எலிகள், முயல்கள் போன்றவற்றையும் வேட்டையாடத் தொடங்கியிருக்கின்றன. ஜிம்பாப்வேயில் சேபில் இரலை மான்கள், பகல் நேரத்தில் நீர் கிடைக்காததால், இரவு நேரத்தில் நீர் தேடி அலைகின்றன.

இதில் என்ன பிரச்சினை... மனிதர்கள் உறங்கிய பிறகு இரை தேடினால் அவற்றுக்கும் நமக்கும் நல்லதுதானே என்று நமக்குக் கேள்விகள் தோன்றலாம். இயற்கை என்பது மிகவும் நுண்ணிய வலைப்பின்னலைக் கொண்டது. பகல் நேர விலங்குகளுக்கும் அவற்றால் வேட்டையாடி உண்ணப்படும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சமன்பாடு இருக்கும்; அதேபோல் இரவு நேர விலங்குகளுக்கும் அவற்றால் வேட்டையாடி உண்ணப்படும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சமன்பாடு இருக்கும். அந்தச் சமன்பாடு தற்போது பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பகல் நேரத்தில் வேட்டையாடப்படாத விலங்குகள் அதிகமாகப் பெருகுவதும், இரவு நேரத்தில் அதிகமாக வேட்டையாடப்படுவதால் சில விலங்கினங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவதும் நிகழலாம்.

விலங்கினங்களில் எண்ணிக்கை மாறுபடுவது சுற்றுச்சூழலில் வண்ணத்துப்பூச்சி விளைவைப் போல கடுமையாகப் பிரதிபலிக்கும். இயற்கையில் பரிணாம மாற்றம் என்பது லட்சக்கணக்கான ஆண்டுகளாக நுண்ணிய மாற்றங்கள் ஏற்பட்டு நிகழ்வதாகும். ஆனால், நவீன யுகத்தில் விலங்குகளின் பரிணாம மாற்றங்கள் முன்பைவிட வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. விலங்குகளுக்கு மட்டுமல்ல, மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனித இயல்பிலும் உடலிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களும் நிறைய. இயற்கை இவ்வளவு வேகத்தை அனுமதிக்காது என்பதை நாம் உணர்வதில்லை.

இந்த பூமி எல்லா உயிரினங்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கான திடல். மனிதர்களும் விளையாடலாம். அடுத்தவர்கள் வீசும் பந்து நமக்கருகே வந்து விழும்போது, அவர்களை நோக்கித் தூக்கிப் போடலாம். ஆனால், இடையே புகுந்துகொண்டு திடலையே ஆக்கிரமித்தோம் என்றால், ஒருகட்டத்தில் அந்தத் திடலும் நமக்கு இல்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்