சிறப்புக் கட்டுரைகள்

வரலாற்று இடைவெளிகளைக் கேள்விகளால் நிரப்ப வேண்டும் - நேர்காணல்: வரலாற்றறிஞர் பொ.வேல்சாமி

மண்குதிரை

பொ.வேல்சாமி, தமிழின் முதன்மையான மாற்றுச் சிந்தனையாளர். அச்சு, கல்வெட்டு போன்ற திருத்தமான ஆதாரங்களை முன்வைத்து திறக்கப்படாத வரலாற்றின் புதிய வாசலைத் திறந்துகாட்டுகிறார். அவரது சமீபத்திய நூல்களான ‘இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்;, ‘சோழர் ஆட்சியிலும் அடிமைகளா?’, ‘பழந்தமிழ் நூல்கள் நவீனமான வரலாறு’ ஆகியவை என்சிபிஎச் (அரங்கு எண்: F-9) வெளியீடாக வந்துள்ளன. அது குறித்த நேர்காணல் இது.

இந்தப் புதிய நூல்கள் பற்றி...

மக்கள், வாசிப்பவற்றை நிஜம் என நினைப்பார்கள். ஆனால், அது உண்மையாக இருக்காது. அந்த மாதிரியான வரலாற்றுச் செய்திகளின் பின்னால் உள்ள உண்மையை இந்த நூலில் எழுதியிருக்கிறேன்.

திருக்குறள் பதிப்பு பற்றிப் புதிய விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்...

தமிழ்நாட்டில் திருக்குறள் சுவடிகளே இல்லாமல் போய்விட்டது. அயோத்திதாசர்தான் சுவடி எடுத்து எல்லீஸிடம் கொடுத்தார். எல்லீஸ் பதிப்பித்ததுதான் அச்சில் வந்தது. இல்லையென்றால் காணாமல் போயிருக்கும் என்றெல்லாம் ஒரு பரவலான பேச்சு. ஆனால், எல்லீஸ் பதிப்பித்தது 129 குறளைத்தான். அதே 1812இல் தஞ்சாவூரைச் சேர்ந்த மலையப்பிள்ளையின் மகன் ஞானப்பிரகாசம் திருக்குறளையும் நாலடியாரையும் சேர்த்து முழுமையாகப் பதிப்பித்தார். எல்லீஸின் நண்பர் கிங்ஸ்லே 1796இல் திருக்குறளின் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளார். 1806இல் ஜெர்மனில் குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நூல்கள் காலக்கட்டத்தில் காணாமல் போகவில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்குத் தெரிந்திருக்கிறது; சிலருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. வெளிநாட்டு அறிஞர்கள் சிலருக்குச் சங்க நூல்கள் பற்றித் தெரிந்திருந்த காலக்கட்டத்தில் நம்மூர் புலவர்களுக்கு அது தெரியாமலும் இருந்திருக்கிறது.

வரலாற்றில் இனப் புறக்கணிப்பு இருக்கிறதா?

வரலாறு என்பதே 19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இங்கு கிடையாது. இந்தக் காலக்கட்டத்தில் இது நடந்தது என்கிற மாதிரியான வரலாற்றுத் தொகுப்பு நமக்கு இல்லை. அவ்வளவு பெரிய கோயில் தஞ்சாவூரில் இருக்கிறது. 1907வரைக்கும் அது யார் கட்டியது என்பது தெரியாது. யாரோ ஒரு சோழன் கட்டியது என்றுதான் சொல்லப்பட்டுவந்தது. உ.வே.சா., ஆபிரகாம் பண்டிதர், சீனிவாசம் பிள்ளை, உமாமகேஸ்வரன் பிள்ளை போன்ற பெரும் அறிஞர்களுக்குமே தெரியாது. கோயில் கல்வெட்டு தமிழில்தான் எழுதப்பட்டுள்ளது. நமக்குக் கல்வெட்டு வாசிக்கவும் தெரியவில்லை. ஹல்ட்ஸ்ச் (Hultzsch) என்கிற வெளிநாட்டுக்காரர்தான் இதைச் சொல்கிறார். அவர் சொன்ன பிறகுதான் ராஜராஜசோழன்தான் இதைக் கட்டினார் என்கிற செய்தி வரலாறு ஆனது. வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றை மொழிபெயர்க்க வெளிநாட்டுக்காரர்கள் ஒரு நூற்றாண்டுக்காலம் வேலை பார்த்திருக்கிறார்கள். தமிழ் இசையை, கர்நாடக சங்கீதம் திருடிவிட்டது என்று ஒருவர் பேசுகிறார். கூட்டத்தில் கைத்தட்டல்கள். தமிழ் இசைதான், கர்நாடக சங்கீதம். ஆனால், நாம் ஏன் நம் இசைப் பண்களைத் தொலைத்தோம், பரதநாட்டியம் நம்முடைய கலை. ஆனால், நூல் ஏன் வடமொழியில் இருக்கிறது? ஏனென்றால் சாதிதான் இந்த மறதிக்குப் பின்னாலுள்ள காரணம்.

வளம் மிக்க நம் பண்பாடு எப்போது சுருங்கிப் போனது?

ஏழாம் நூற்றாண்டு வரை கேள்வி கேட்பது அனுமதிக்கப்பட்டு இருந்தது. மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி போன்ற நூல்களில் பெண்களே கேள்வி கேட்பதுபோன்ற பதிவுகள் இருக்கும். தர்க்கப் பாரம்பரியம் தமிழ்ப் பண்பாட்டில் உள்ளதுதான். ‘கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்கிற கேள்விக்குப் பதில் தேடாதே. எந்தக் கோழி, எந்த முட்டை எனப் பதில் கேள்வி கேள்’ என்று தமிழ் பெளத்த அறிஞர் எழுதியிருக்கிறார். எப்போது கேள்வி கேட்பது தடைசெய்யப்பட்டதோ அப்போது தமிழ்ச் சமூகம் சுருங்கிப்போகத் தொடங்கியது.

எப்போது இந்தத் தடை வந்தது?

முன்பு அரசனே முதன்மையானவன். ஆனால், வைதீக மரபில் கடவுள்தான் முதன்மையானவன். சங்க இலக்கியத்தில் அரசனே முக்கியம். ஆனால், வைதீக மரபு, கேள்வி கேட்காதே... சொல்வதைக் கேள் எனச் சொல்கிறது.

வரலாற்றின் அபத்தங்களை நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்...

நான் நகைச்சுவையாக எழுதவில்லை. ஏற்கெனவே இருப்பதுதான் அப்படி இருக்கிறது. நான் சொன்னால் யார் நம்புவார்கள்? 1960இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட மலரில் மறைமலையடிகள் போன்ற மறைந்த அறிஞர்கள் வாழ்த்துச் சொல்லியிருப்பார்கள். செந்தலைக்கவுதமன், எல்லீஸும் ஆறுமுக நாவலரும் நண்பர்கள் என்று சொல்கிறார். எல்லீஸ் இறந்து மூன்று வருடத்துக்குப் பிறகுதான் நாவலர் பிறக்கிறார். இந்த அபத்தங்கள் எல்லாக் காலக்கட்டத்திலும் நடந்திருக்கிறது. ‘தமிழ் மக்கள் உழைப்பாளிகள், திறமைசாலிகள். ஆனால், சமூகத்தில் புகழ்பெற்ற ஒருவர் என்ன சொன்னாலும் நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் முன்னேற்றம் தடைபடும்’ என்று கால்டுவெல் 1875இல் எழுதியிருக்கிறார்.

உ.வே.சாமிநாதய்யருக்கு முன்பே சங்க இலக்கியத்தைத் தொகுக்கும் வேலை நடந்திருக்கிறது என்கிறீர்கள்...

உ.வே.சா.வின் பங்களிப்பு சிறப்பானது. ஆனால், அதற்கு முன்னால் இந்தப் பணி இங்கு நடந்திருக்கிறது. அவர் பெரிய பண்டிதர், அவருக்கு ஆறுமுக நாவலரின் பங்களிப்பு பற்றித் தெரியாதது எப்படி எனத் தெரியவில்லை. அதை ஏன் அவர் சொல்லவே இல்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆறுமுக நாவலரைத் தமிழ்த் தாத்தா என்று முன்னிறுத்துகிறீர்கள்...

ஆறுமுக நாவலர் 1860இல் தொகுத்த திருக்கோவை நூலில் இனி வெளிவரும் நூல்கள் பட்டியலில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பலவற்றுக்கும் உரைகள் வெளிவரப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அந்த நூல்கள் வெளிவரவே இல்லை. அவையெல்லாம் வெளிவந்திருந்தால் இவர்தான் தமிழ்த் தாத்தா. அப்போது உ.வே.சா.வுக்கு வயது வெறும் ஐந்துதான் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தமிழ்ப் பண்பாடு என்கிற பெருமிதத்தைப் பகடி செய்வது போன்ற ஒரு தொனி இதில் இருக்கிறது...

பெருமிதமாகச் சொல்வது சந்தோஷம்தான். ஆனால், அது மட்டுமில்லை இதுவும் சேர்ந்துதானே இருக்கிறது. மனிதர்கள் இருக்கும் இடத்தில் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். ஒரு சமூகம் அப்படித்தான் இருக்கும். புண்ணை மூடி மறைக்கக் கூடாது. ஒருவன் 200 மனைவிகளுடன் இருந்திருக்கிறார். சொந்தத் தகப்பன், மகளைச் சந்தையில் விற்றிருக்கிறான். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது.

வரலாற்றின் இடைவெளியை எப்படிப் புனைவால் நிரப்புவது?

ஒருத்தர் சொல்வதை மட்டும் கேட்கக் கூடாது. கேள்வி கேட்க வேண்டும். மனிதர்களுக்கு இடையில் கேள்வி கேட்டு உரையாடல் இருக்க வேண்டும். அப்படிக் கேள்விகள் இல்லையென்றால், விலங்குகள் போல் நடத்தத் தொடங்கிவிடுவார்கள். பின்னால் வரக்கூடிய
தலைமுறைகள் இதைக் கவனிக்கும். அவர்களுக்காகவாவது சில உண்மைகளை நாம் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும்.

- தொடர்​புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

SCROLL FOR NEXT