தரமான குடிநீர் அவசியம் - ‘குடிநீர் மாபியா’க்களை கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

By எம்எஸ்

சென்னை திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்த 10 பேருக்கு கடந்தமாதம் 29-ம் தேதி திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் காலரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். அந்தப் பகுதியில் குழாயில் வந்த குடிநீரை குடித்ததில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசு அதை மறுத்தது.

இந்த சம்பவத்தில் ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் இருந்த 65 வயது பெண் நேற்று உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேர் நேற்று அதே புகாருடன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதேபோல, பல்லாவரம் காமராஜர் நகர் மற்றும் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் அதை மறுத்தனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையில் ‘புட் பாய்சன்’ காரணமாக அவர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், குடிநீரின் தரம் சரியில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன. மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதுவும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பது என்பது கேட்கவே காது கூசும் சம்பவமாகும்.

குடிநீர் வழங்கும் குழாய்களில் உடைப்பு மற்றும் குடிநீர் விநியோக கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அசுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கேன் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் நடைமுறை அதிகரித்து, அவர்களது லாபநோக்கம் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

‘குடிநீர் மாபியா’க்கள் என்று சொல்லப்படுவோர், வேண்டுமென்றே குடிநீர் குழாய்களில் கழிவுநீரை கலந்து அனுப்பி, அப்பகுதியில் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் உத்தியை செய்கிறார்கள் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை அரசு சார்பில் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறு செய்பவர்களை கண்டறிந்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அரசின் கடமை. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி, 100 மி.லி., குடிநீரில் கோலிஃபார்ம் பாக்டீரியா அளவு 5000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். குடிநீரின் பிஎச் அளவு 6 முதல் 9-க்குள் இருக்க வேண்டும். கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு லிட்டருக்கு 4 மி.கி., அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

தமிழகம் முழுக்க குடிநீரின் தரத்தை சோதித்து இந்த தரத்தில் குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் ஆளும் அரசை மக்கள் நலன் காக்கும் அரசு என்று ஏற்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

மேலும்