லண்டன்: மிட்டாய்க்குள் கிராமம்

By சமஸ்

குளிர் அப்பிக்கொண்டது. கைகளை இறுகக் கட்டிக்கொண்டேன். இந்தியாவில் எவ்வளவோ சுற்றியிருக்கிறேன் என்றாலும், இந்தக் குளிர் அந்நியமாக இருந்தது. விரல்கள் ஐஸ் வில்லைகள் மாதிரி இருந்தன. ஹெலன் கை குலுக்கினார். “ஒரு காபியோடு நாம் இங்கிருந்து புறப்படலாம். குளிருக்கு ஈடு கொடுக்கும்!” என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயண வழிகாட்டலுக்கு அனுப்பப்பட்டிருந்தவர் இவர். கல்லூரி மாணவிபோல இருந்தார். பிரிட்டன் வரலாறு, பிரிட்டிஷ் சமூகவியலைச் சொல்வதில் மிகுந்த தேர்ச்சியுடன் இருந்தவர் பகுதிநேரப் பணியாக பயண வழிகாட்டியாகப் பணியாற்றுவதாகச் சொன்னார். குறுகிய நாட்களில் பிரிட்டிஷ் வாழ்க்கையைக் கொஞ்சம் ஊடுருவிப் புரிந்துகொள்வதற்கு ஹெலனுடனான சம்பாஷனைகள்தான் பெரிய அளவில் உதவின.

ஹீத்ரோவிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் சென்றடைய வேண்டும். அங்குதான் தங்கவிருந்த விடுதி இருந்தது. முதல் நாள் பங்கேற்கவிருந்த கூட்டம் ஒயிட் ஹாலில் நடைபெறவிருந்தது. உலகின் மிக அதிகாரமிக்க இடங்களில் ஒன்று ஒயிட் ஹால். நாடாளுமன்ற சதுக்கம் வரை நீளும் இந்தச் சாலையில்தான் பிரிட்டிஷ் அரசின் முக்கியமான பல அலுவலகங்களும், அமைச்சகங்களும் அமைந்திருக்கின்றன. பிரிட்டிஷ் அதிகாரப் பீடத்தின் இன்னொரு பெயர் என்றும் சொல்லலாம்.

வண்டி புறப்பட்டது. கண்ணாடிக்கு வெளியே அகல விரிந்துகொண்டேயிருந்தது லண்டன். வீதியின் இரு பக்கமும் உள்ள பிரமாண்ட கட்டிடங்களையும் விரையும் சாலையையும் வெளிச்சத்தால் அதைப் போர்த்தியிருக்கும் மின் விளக்குகளையும் பார்க்கிறேன். ஒரே வீதி, ஒரே நேரத்தில் வெவ்வேறு நூற்றாண்டுகளுக்குள் இருக்கிறது. மனதுக்குள் ஆழமாக காந்தியின் வார்த்தைகள் வந்து சென்றன. “பிரிட்டன் இந்தச் செழிப்பை அடைய இந்தப் பூமியின் பாதியளவு வளம் அதற்குத் தேவைப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், இந்தியா மாதிரி ஒரு நாட்டுக்கு எத்தனை கோள்கள் தேவைப்படும்?”

ஒரு வாரத்துக்குள் ஒரு நாட்டையோ, ஊரையோ, மக்களையோ அறிந்துகொள்ள முற்படுவது சாத்தியமே அற்றது. இந்தக் குறுகிய நாட்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தினால், மேல் பார்வையிலிருந்து அதைப் பற்றி கொஞ்சம் எழுத முடியும். தொடக்கத்திலேயே அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக்கொள்வது முக்கியம். வண்டியில் ஏறியதுமே ஹெலனிடம் பயணத் திட்டத்தைப் பேசிவிட்டேன். “காமன்வெல்த் செய்தியாளர் கூடுகை நீங்கலாக தனிப்பட்ட வகையில் ஒரு செயல்திட்டம் இருக்கிறது. தொழில்மயமாக்கல் பிரிட்டனில் ஏற்படுத்திய தாக்கம்; தொழில்மயமாக்கல் பின்னணியில் சுற்றுச்சூழலையும் எளிய மக்களையும் பாதுகாத்தல்... இதுகுறித்த பிரிட்டனின் அணுகுமுறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக நீர்நிலைகள் - வனம் மேலாண்மை, சாலைகள் - பொதுப் போக்குவரத்து மேலாண்மை, உற்பத்தி – குப்பை மேலாண்மை இவை மூன்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். எளிய மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும்.”

ஹெலன் சிரித்தார். “சுவாரஸ்யமான ஒன்று சொல்லட்டுமா? நாளைய உங்கள் கூட்டம் எங்கு நடக்கிறது தெரியுமா? இந்தியா ஆஃபிஸ். பொதுவாக லண்டன் வரும் பலரும் அதிகம் பிரிட்டனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள். நீங்கள் பிரிட்டனிலிருந்து இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியா ஆஃபிஸைக் காட்டிலும் அதற்கு மிகச் சிறந்த தொடக்கம் ஒன்று இருக்க முடியாது.”

எனக்கு இது பெரும் சந்தோஷத்தைத் தந்தது. இந்தியா ஆஃபிஸைப் பற்றி வாசித்திருக்கிறேன். இன்றைய இந்திய வரலாற்றோடு மிக முக்கியமான தொடர்புகளைக் கொண்ட, இந்தப் பயணத்தில் வெளியிலிருந்தேனும் பார்த்துவிட நினைத்திருந்த இடம் அது. சாதாரண பயணியாக அங்கே நுழைவது எளிதான காரியம் அல்ல. இப்போது வாய்ப்பு தானாகத் தேடி வருகிறது.

சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையிலிருந்து தன்னுடைய நேரடி ஆளுகைக்குக் கீழ் இந்தியாவை 1858-ல் கொண்டுவந்தது பிரிட்டிஷ் முடியாட்சி. அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த அலுவலகத்தைக் கட்டினார்கள். ‘இந்தியா ஆஃபிஸ் கவுன்சில் சேம்பர்’ என்பது அப்போது அதன் பெயர். சுருக்கமாக ‘இந்தியா ஆஃபிஸ்’. 1868 முதல் 1947 வரை இந்திய விவகாரங்கள் ஒவ்வொன்றும் இந்த அலுவலகத்தில்தான் கூடி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்த இடத்தை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் தனதாக்கிக்கொண்டது.

“நீங்கள் இன்னும் காபியைக் குடிக்கவில்லை.” ஹெலன் நினைவூட்டினார். புட்டிக்குள் அடைபட்டிருந்த காபி அதற்குள் சூடிழந்து ஐஸ்காபிபோல் ஆகியிருந்தது. “லண்டனிலிருந்து புறப்படும் வரை நீங்கள் சூடான காபியை மறந்துவிட வேண்டும். பொதுவாக, இந்த மாதத்தில் கோடை தொடங்கிவிட வேண்டும். அப்படித் தொடங்கியிருந்தால் காபி கொஞ்சம் சூடு தாங்கும். பருவநிலை மாற்றம் எல்லாவற்றையும் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறது.”

“ஒரு அறிதலுக்காகக் கேட்கிறேன். பருவநிலை மாற்றம் ஒரு முக்கியமான பிரச்சினை பிரிட்டிஷ் பொதுச் சமூகத்தில் எப்படியான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது?”

“இயல்பிலேயே இங்கே மேற்கில் பருவநிலை குறித்த அக்கறைகள் அதிகம். ஒரு நாளைக்கு நான்கைந்து முறை விட்டுவிட்டு மழை பெய்யும், பெரும்பாலான நாட்கள் குளிர் நிலவும் ஊர் இது. அப்படியென்றால், நீங்கள் வெளியே புறப்படுவது என்றாலே பருவநிலையை யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும், இல்லையா? வானிலை முன்கணிப்புகள் திட்டமிடலுக்கு மிக அவசியம். ஆனால், இப்போது கணிப்புகள் மாறுகின்றன. வெறுமனே மழை, வெயில், பனி மாற்றம் என்றில்லை; பெரிய அழிவுகள் தொடங்கிவிட்டன. வேளாண்மைச் சூழலே மாறிக்கொண்டிருக்கிறது – சாகுபடி, விளைச்சல் எல்லாமே பாதிக்கிறது என்கிறார்களே? விவசாயத்தை நம்பி பெரிய மக்கள்தொகை உள்ள இந்தியாவுக்குமே இது பெரிய பாதிப்பு இல்லையா?”

“ஆமாம், இந்தியாவிலும் பாதிப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் வெகுமக்களுடைய அன்றாட விவாதத்துக்குள் பருவநிலை மாற்றம் வரவில்லை. பெயரில் ஒன்றாக இருந்தாலும் நிலத்தில் நூறாக இருக்கிறது இந்தியா. இன்னும் நவீன தொழில்களின் பலன்கள் சென்றடைந்திராத கிராமங்களையும் அதற்குள் தொழில்மயமாக்கலின் சீரழிவுகள் சூழ்ந்துவிட்டன.”

“ராட்சதத்தனமான வாழ்க்கையைக் கட்டிக்கொண்டுவிட்டோம். அதை விட முடியவும் இல்லை. தொடர முடியவும் இல்லை. பெரிய சவால்தான்... ஆனால், இங்கே ராட்சதனைக் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.”

அதன் பிறகு, பிரிட்டிஷார் எதிர்கொள்ளும் பருவநிலைப் பிரச்சினைகளை ஹெலன் விவரிக்கலானார். அவர் முடித்தபோது வண்டி விடுதியை அடைந்திருந்தது. பெயர் பதிவு, அடையாள அட்டை சரிபார்ப்பு, புகைப்படப்பிடிப்புக்குப் பிறகு ஒரு மிட்டாயை விடுதி வரவேற்புப் பெண் தந்தார். மிட்டாய்த்தாள் சுற்றப்பட்டிருந்த விதமே அலாதியாக இருந்தது. “கிராமப்புற பிரிட்டனிலிருந்து வரும் மிட்டாய் இது. லண்டன் எப்போதும் கிராமங்களை மனதின் மையத்தில் வைத்திருக்கும். இது பிரிட்டன் கிராமங்களின் நினைவை என்றும் உங்களுக்குத் தரும்” என்றார்.

விடுதியிலிருந்த வெப்பச்சாதனம் கொடுத்த கதகதப்பில் படுக்கையில் விழுந்த வேகத்தில் தூங்கிப்போனேன். காலையில் ‘இந்தியா ஆஃபிஸ்’ புறப்பட்டோம். ஒரு நகரம் ஒவ்வொரு வேளைக்கும் எப்படியெல்லாம் உருமாறுகிறது! சாலையின் இரு பக்கங்களிலும் நீள கோட் அணிந்து, கையில் குடையுடன் சாரைசாரையாக நடந்து கடக்கிறார்கள் மக்கள். சாலைகளில் கார்கள், பஸ்களுக்கு இணையாக சைக்கிள்கள் தென்படுகி ன்றன. பருவநிலையைத் தாண்டி மனிதர்கள் சார்ந்தும் நகரத்தின் முகத்தோற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது. முந்தைய இரவு பார்த்த லண்டன் காலையில் வேறாக இருந்தது.

பிரமாண்டமான கட்டிடங்கள் அணிவகுத்திருந்த சாலையில் பிரிட்டன் பிரதமரின் வீட்டுக்கு அருகில் வண்டி நிற்கிறது. அடுத்த திருப்பத்தில் இந்தியா ஆஃபிஸ் இருக்கிறது. “நாம் இங்கிருந்தே நடக்கலாம்; நடந்து செல்லும் உணர்வே வேறாக இருக்கும்” என்றார் ஹெலன். இந்தியாவிலிருந்து எங்களுடன் வந்திருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரியான ஆசாத்தும் அதையே ஆமோதித்தார்.

நாங்கள் ‘இந்தியா ஆஃபிஸ்’ வளாகத்துக்குள் நுழைந்தோம். “இதை வடிவமைத்தவர் மேத்யூ டிக்பி வயாட். 1861-1868 காலகட்டத்தில் கட்டி முடித்தார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வரலாறு உண்டு. உதாரணமாக, இந்தக் கட்டிடத்தின் புகைபோக்கி சிற்பி மைக்கேல் ரிஸ்பிராக் உருவாக்கியது. 1867-ல் இந்தக் கட்டிடம் தயாராவதற்கு முன் இதன் முற்றத்தில் துருக்கி சுல்தானுக்கு ஒரு விருந்து கொடுத்தார்களாம். அப்போதெல்லாம் இங்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பாத்திரங்களும் தங்கத்தால் செய்யப்பட்டவையாம்.” ஒவ்வொரு இடத்தையும் கடக்கையில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டுவந்தார் ஹெலன்.

சுவரின் மேல் சுற்றிலும் பதிக்கப்பட்டிருந்த சிலைகளை அவர் காட்டினார். ஆசியாவை உருவகப்படுத்தும் பெண் ஒட்டகத்திலும் ஆப்பிரிக்காவை உருவகப்படுத்தும் பெண் சிங்கத்திலும் சவாரி செய்துகொண்டிருந்தார்கள். தேம்ஸ் நதி ஒரு தேவதையாக நின்றாள். விதானம், தூண்கள், திரைச்சீலைகள் என்று எல்லா வகையிலும் மூச்சுமுட்டவைத்தது அந்தக் கட்டிடம். ஒவ்வொரு அறையின் நீள, அகல, உயரமும் வேலைப்பாடுகள் மிக்க மரக் கதவுகளும் சாளரங்களும் தரை விரிப்புகளும் எந்த ஒரு சாமானியனையும் மலைக்க வைக்கும். கூடவே அச்சத்தையும் தரும். பிரமாண்ட இடங்கள் மனிதர்களுடைய பகட்டை மட்டும் அல்ல; மக்கள் இடையே ஒரு தாழ்வுணர்வை உண்டாக்கும் உளவியலையும் குழைத்தே கட்டப்படுகின்றன என்று தோன்றியது.

எந்த இருக்கைகளில் உட்கார்ந்து இந்தியாவின் முடிவுகளை பிரிட்டிஷார் எடுத்தார்களோ அதே இருக்கைகளில் இந்தியாவின் செய்தியாளர்கள் அமர கூட்டம் தொடங்கியது. பிரிட்டன் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இப்போதும் அதற்கு இந்தியா தேவைப்படுகிறது. அந்த அறையின் மையத்தில் சர் அயர் கூட் படம் இருந்தது. சரியாக, அந்தப் படத்துக்கு முன்பிருந்த இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. “உங்கள் சென்னையில் காலமானவர் கூட். தெரியும் இல்லையா?” என்றார் ஹெலன்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் முக்கியமானதளபதிகளில் ஒருவர் கூட். 1756-ல் ராபர்ட் கிளைவுடன் சேர்ந்துகொண்டார். பிளாசி போர் வெற்றி இங்கு அவருடைய தொடக்கம் ஆயிற்று. அடுத்து, மலபார் கடற்கரையிலும் வந்தவாசியிலும் புதுச்சேரியிலும் நடந்த சண்டைகளில் பிரெஞ்சுப் படைகளை அவர் வென்றார் . முன்னதாக ஆர்க்காட்டுப் போரில் முதல் வெற்றியைப் பெற்று ஆங்கிலேயே ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வித்திட்டிருந்தாலும், தென்னிந்தியாவை பிரிட்டிஷார் தக்கவைத்துக்கொள்ள கூட் பெரிய காரணமாக இருந்தார். பின்னாளில் இந்தியாவின் தலைமை தளபதி ஆனார். 80,000 வீரர்களைக் கொண்ட படையுடன் நின்ற ஹைதர் அலியை 10,000 வீரர்களைக் கொண்ட படையைக் கொண்டு கூட் தோற்கடித்ததை அவருடைய பெரிய போராகச் சொல்வார்கள்.

அடுத்த மூன்று நாட்கள் ஒயிட் ஹால் பகுதியின் வெவ்வேறு கட்டிடங்களில் கூட்டங்கள் நடந்தன. சர்வதேசம் ஒவ்வொரு நாட்டையும் எப்படி அணுகுகிறது; பிரச்சினைகள் அவரவர் பார்வையிலிருந்து அணுகப்படுகையில் எப்படியான பரிமாணத்தை அடைகின்றன என்பதை மிக நெருக்கமாகப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு அது என்று சொல்லலாம். பின்னர் எழுதுகிறேன்.

கூட்டம் முடிந்ததும் சாலையில் நடந்தே விடுதிக்குச் சென்றுவிட முடிவெடுத்தோம். அப்போதுதான் அதைக் கவனித்தேன். லண்டனில் திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் நின்றன. “விடுதி வரவேற்பாளர் சொன்னது நினைவிருக்கிறதா, லண்டன் எப்போதும் கிராமங்களை மனதின் மையத்தில் வைத்திருக்கும்” என்று கேட்ட ஹெலனிடம் சொன்னேன், “நான் இந்த மரங்களின் கதையை முதலில் எழுத வேண்டும்!”

-சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்