இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த ஆண்டு எளிதான ஆண்டாக அமையவில்லை என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். 2024 முதல் 2025 வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் (அதாவது ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான காலாண்டில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.7% வளர்ச்சி கண்டது.
இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி என்றாலும், உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகள், பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் வலுவாக இருக்கிறது என்றே கருதப்பட்டது. முதல் காலாண்டில் செலவு சார்ந்த, உற்பத்தி சார்ந்த காரணிகள் இரண்டும் சிறப்பாகச் செயல்பட்டன. நுகர்வுச் செலவு (7.4% அதிகரித்தது), மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (7.5%), ஏற்றுமதி (8.7%) ஆகியவை வலுவாக இருந்தன.
உற்பத்தித் துறையில் எதிர்பார்த்ததைவிட வலுவான வளர்ச்சி இருந்தது. நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறை 7% வளர்ச்சியடைந்தது. கட்டுமானத் துறையும் 10.5% வளர்ச்சியுடன் வலுவாகச் செயல்பட்டது. ஆனால், இரண்டாவது காலாண்டின் முடிவில் செப்டம்பரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாகச் சரிந்தது.
பின்னணி என்ன? - வளர்ச்சி குறைவதற்குப் பல காரணிகள் உள்ளன. முதலாவதாக, பலவீனமான வெளிநாட்டுத் தேவை காரணமாகப் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. அதிக இறக்குமதியால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தது.
அதிகரித்த புவிசார் நிச்சயமற்ற தன்மைகள், எரிசக்தி விலை வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்தியது. இந்திய பங்குகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெளியேறினர். அதே நேரத்தில், அந்நிய நேரடி முதலீட்டு வரத்து சீராக வளர்ந்தது ஒரு நேர்மறையான அம்சம்; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் 2024இல் 64.8 பில்லியன் டாலர் அதிகரித்தது.
இரண்டாவதாக, நுகர்வோர் செலவின சக்தியைக் (Consumer spending) குறைப்பதில் பணவீக்கம் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது. அக்டோபரில், சில்லறை உணவுப் (Retail food) பணவீக்கம் 10.87% ஆகவும், ஒட்டுமொத்தப் பணவீக்கம் 6.21% ஆகவும் இருந்தன. இது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 2-6% வரம்பைவிட அதிகம்.
கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாக முந்தைய காலாண்டில் ஊதியங்கள் சுருங்கின. ஊதிய வளர்ச்சி, பணவீக்கத்தின் காரணமாக ஊதியத்தின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணிகள் நுகர்வோர் செலவின சக்தியைக் குறைத்ததால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. குறைந்த நுகர்வோர் செலவின சக்தியின் தாக்கம் கடந்த காலாண்டில் நிறுவன லாபங்களில் பிரதிபலித்தது.
சுதாரித்துக்கொண்ட எம்.பி.சி. பணவீக்க அபாயங்களை உணர்ந்து, ரிசர்வ் வங்கி தனது சொந்த வளர்ச்சிக் கணிப்புகளைக் கீழ்நோக்கித் திருத்தியுள்ளது. 2025 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கண்ணோட்டம் 7.2% இலிருந்து 6.6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதிக் கொள்கைக் குழு (MPC) டிசம்பர் கூட்டத்தில் அதன் நிலைப்பாட்டை ‘நடுநிலைக்கு’ மாற்றியது. இலக்குக்குள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் பொறுப்பை இந்தக் கண்ணோட்டம் காட்டுகிறது.
இதன் விளைவாக, டிசம்பர் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், கொள்கை வட்டி விகிதத்தை (ரெபோ விகிதம்) ரிசர்வ் வங்கி குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்தது. மாறாக முந்தைய காலாண்டில் இருந்த ரெபோ விகிதம் மாற்றப்படாமல், 6.5% ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அடுத்த காலாண்டில் மொத்த நுகர்வோர் செலவினங்களில் இந்த நிலைப்பாட்டின் தாக்கத்தை நாம் உணர்வோம்.
மூன்றாவதாக, தொழிலாளர் சந்தை சில அடிப்படை முரண்பாடுகளை வெளிப்படுத்தியது. தொழிலாளர் சந்தையில் சில சுவாரசியமான போக்குகளைக் காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS) எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய 2024 அறிக்கையின்படி, பெருந்தொற்றுக் காலத்தில் சரிந்த மொத்த வேலைவாய்ப்பில் சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பங்கு ஒரு சாதாரண வளர்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, 2019 முதல் 2020 வரை, உற்பத்தி - சேவைத் துறைகளில் சம்பளம் பெறும் வேலைகளின் பங்கு மொத்த வேலைகளில் கிட்டத்தட்ட 23% ஆக இருந்தது. கோவிட் பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு, இந்தப் பங்கு 21% ஆகக் குறைந்தது. சமீபத்திய 2023-2024 காலமுறைத் தொழிலாளர் படை கணக்கெடுப்பின் தரவுகளின்படி மொத்த வேலைகளில் சம்பளம் பெறும் வேலைகளின் பங்கில் 21.7% என்கிற மிதமான அதிகரிப்பு பதிவானது.
துறைகளுக்கிடையேயான சிதைவைப் பார்க்கும்போது, ஒருபுறம் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பின் பங்கு 2019-20இல் 11.2% ஆக இருந்து 2023-24இல் 11.4% ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், சேவைத் துறையில், ‘பிற சேவைகள்’ (Business and Professional services) சார்ந்த துணைத் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் இதன் வேலைவாய்ப்புப் பங்கு 2019-20 மற்றும் 2023-24ஆம் ஆண்டுகளில் அதன் நிலையான வளர்ச்சியைத் (11.9%) தொடர்கிறது.
மறுபுறம், அதிக வேலை உருவாக்கும் துறைகள் கட்டுமானம் (2023-24இல் 12.2%), வர்த்தகம், ஹோட்டல்கள், உணவகங்கள் துறை (2023-24 இல் 12.2%) ஆகும். ஆனால் இந்தத் துறைகள் முறைசாரா, நிச்சயமற்ற, சுயதொழில் சார்ந்த வேலைகளின் அதிகச் செறிவைப் பதிவுசெய்துள்ளன. இத்தகைய வேலைகள் ஊதிய வேலைகளுடன் தொடர்புடைய நன்மைகளையும், எந்தச் சமூகப் பாதுகாப்பையும் வழங்காது.
ஏற்றத்தாழ்வின் விளைவுகள்: மேற்கண்ட இரண்டு தரவுகளும், தொழிலாளர் சந்தையில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பில் உருவாகியுள்ள ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றன. ஒருபுறம், உற்பத்தி - சேவைகள் (குறிப்பாக ‘பிற சேவைகள்’ துணைத் துறை) போன்ற துறைகள் வேலைகளில் தேக்கநிலை வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. மறுபுறம் கட்டுமானம், ஹோட்டல்கள் - உணவகங்கள், விவசாயம் போன்ற வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகள் முறைசாரா, சாதாரண, தரம் குறைந்த வேலைகளையே உருவாக்குகின்றன.
தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அடிப்படை முரண்பாடுகள் நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன. தற்போதைய வளர்ச்சிப் பாதையானது, பொருளாதார வளர்ச்சி-வேலைவாய்ப்பு உருவாக்கம்-வேலைகளின் தரம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை முரண்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர்களுடைய ஊதியப் பங்கில் ஏற்பட்டுள்ள நீண்டகாலச் சரிவு இத்தகைய முரண்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
2024ஆம் ஆண்டு வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடுமாற்றம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் உள்ள அடிப்படை முரண்பாடுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எச்சரிக்கை சமிக்ஞையாகப் பார்க்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் அளவின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வுகளால் வளர்ச்சியில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து அரசியல் சித்தாந்தங்களிலும் பொருளாதார, சமூகச் சமத்துவமின்மையால் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்த ஒருமித்த கருத்து உள்ளது. சமத்துவமற்ற வளர்ச்சி என்பது பொருளாதாரம், அரசியல் ஆகிய இரண்டு துறைகளுக்கும் நிச்சயமாக எதிர்மறை ஆபத்தையே ஏற்படுத்தும். எனவே, இந்தியாவின் வளர்ச்சி உத்தியானது வளர்ச்சி-வேலைவாய்ப்பு முரண்பாட்டை மீண்டும் உருவாக்குவதைத் தவிர்க்கும் வகையில் வகுக்கப்பட வேண்டும்!
- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago