இந்தியாவில் ஒரு நிமிடத்தில் மூன்று குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘இந்தியா சைல்டு புரொடெக் ஷன்’ (India Child Protection) என்னும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், “இந்தியாவில் ஒரு நிமிடத்தில் 3 சிறுமிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடைபெறுகின்றன; அதேநேரத்தில், குழந்தைத் திருமணம் தொடர்பாக ஒரு நாளில் 3 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகப் பதிவுகள், தேசியக் குடும்ப நல ஆய்வு ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களில் 45% தெற்காசியாவில் நடைபெறுகின்றன. இதில் 34% இந்தியாவில் நடப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா - தமிழ்நாடு: இந்தியச் சட்டங்களின்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21 என வரையறுக்கப்பட்டுள்ளது. இதற்குக் குறைவான வயதுடையோர் இடையே நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 20-24 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதே குழந்தைத் திருமணத்தைக் கணக்கிடுவதற்கான பொதுவான அளவுகோல்.
அதன்படி, இந்தியாவில் 20-24 வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கம் (42%), பிஹார் (41%), திரிபுரா, (40%) ஜார்க்கண்ட் (32%), அசாம் (31%) ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளதாக தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு - 5இல் (2019 - 2021) தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்து (6%), இமாச்சலப் பிரதேசம் (5%), ஐம்மு - காஷ்மீர் (5%), லடாக் (3%), லட்சத் தீவுகள் (1%) போன்ற மாநில/மத்திய ஆட்சிப் பகுதிகளில் இதே வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் குறைவாக உள்ளனர்.
தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களிலும் குழந்தைத் திருமணங்கள் கரோனா காலத்துக்குப் பிறகு கணிசமாக அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாகத் தமிழ்நாடு அரசின் சமூகநலன் - மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வறுமையும் வேலையின்மையும்: குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணம் குடும்பத்தில் நிலவும் வறுமை. குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் வலிமையாக இல்லாதபோது, பெண் குழந்தைகளைச் சிறு வயதிலே திருமணம் செய்துவைக்கும் முடிவைப் பெற்றோர் எடுக்கின்றனர். குழந்தைகளுக்குக் கல்வி சரியாகக் கிடைக்காதபோதும், பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் கல்வி கற்பதில் தடை ஏற்படும்போதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கின்றன.
அடுத்து வேலையின்மை. உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் பிழைப்புத் தேடிப் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பெற்றோர் பாதுகாப்பு குறித்த அச்சத்தின் காரணமாக, பெண் குழந்தைகளுக்குப் பதின்பருவம் தொடங்கிய உடனேயே திருமணம் செய்துவைக்கும் போக்கும் தொடர்கிறது. குழந்தைத் திருமணம் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் கூடுதலாகப் பதிவாகிறது. கிராமங்களில் 20-24 வயதுப் பெண்களில் 27% பேர் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள். நகரங்களில் 15%.
கொடிய விளைவுகள்: குழந்தைத் திருமணங்களால் பெண் குழந்தைகளின் கல்வி பறிக்கப்படுவதால், தமது அனைத்துத் தேவைகளுக்கும் குடும்பத்தினரையே அவர்கள் சார்ந்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, இத்திருமணங்கள் சிறுமிகளைக் குடும்ப வன்முறைக்கும் சுரண்டலுக்கும் உட்படுத்துகின்றன.
இந்தியாவில் கட்டாயப்படுத்தப்பட்டுத் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகளில் 60%க்கும் அதிகமானோர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இப்பாதிப்பால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. பிரசவத்தின்போது குழந்தை இறப்பும் நிகழ்கிறது.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க... குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், குழந்தைத் திருமணங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்’ (2006) இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, குழந்தைத் திருமணம் நடத்திவைப்பவர், திட்டமிட்டவர், திருமணச் சடங்கை நிகழ்த்துபவர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படுகிறது. ஆனால், திருமணத்தை நடத்திவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர், தான் செய்துவைத்தது குழந்தைத் திருமணம் என்பது தனக்குத் தெரியாது என்பதை நிரூபித்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்கப் பெண்களின் திருமண வயதை 18இலிருந்து 21 ஆக உயர்த்த வழிவகை செய்யும் சட்டம் இமாச்சலப் பிரதேசச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தேசிய அளவிலும் இச்சட்டத்தைச் செயல்படுத்த மாநிலங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், குழந்தைத் திருமணம் தொடர்பாகப் புகார் அளிக்க 1098 என்கிற எண்ணும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னுதாரணமான அசாம்: குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு அசாம் முன்னுதாரணமாகியுள்ளது. 2021 - 2022, 2023 - 2024 காலக்கட்டங்களில் அசாமில் 20 மாவட்டங்களில் உள்ள 1,132 கிராமங்களில் குழந்தைத் திருமணம் கிட்டத்தட்ட 81% குறைந்துள்ளதாகத் தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது. அசாமில் 2021 - 2022இல், 3,225 குழந்தைத் திருமணங்கள் பதிவான நிலையில், இந்த எண்ணிக்கை 2023 - 2024இல் 627 ஆகக் குறைந்துள்ளது.
2023இல் மட்டும் குழந்தைத் திருமணம் தொடர்பாக 3,000 கைது நடவடிக்கைகளை அசாம் அரசு மேற்கொண்டிருக்கிறது.
2022இல் பதிவான, 3,563 குழந்தைத் திருமண வழக்குகளில் வெறும் 181 வழக்குகள் மட்டுமே வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டும் குழந்தை நல ஆர்வலர்கள், குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலமே அசாமில் குழந்தைத் திருமணங்கள் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
யுனிசெஃப் கணிப்பு: குழந்தைத் திருமணங்கள் அனைத்தும் கட்டாயத் திருமணங்களே எனச் சுட்டிக்காட்டும் உச்ச நீதிமன்றம், அத்திருமணங்கள் நிகழாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என வலியுறுத்தியிருக்கிறது. இந்தியாவில் 2006இல் 20-24 வயதுடைய பெண்களில் 47% பெண்கள் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்களாக இருந்தனர். 2019-21 இல் இது 23.3% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை தேசியச் சராசரியைவிட அதிகமாகவே உள்ளது.
2030க்குள் தெற்காசியாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் அவற்றை முழுமையாக அகற்ற 55 ஆண்டுகள் தேவைப்படலாம் என ஐ.நா. குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கணித்துள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு குறித்த பாடங்களைப் பள்ளிக் கல்வியில் அறிமுகப்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். குழந்தைத் திருமணங்களில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதற்கான சட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago