சிறப்புக் கட்டுரைகள்

ஆய்வு மாணவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டாமா?

கண்ணன் கோவிந்தராஜ்

அண்மையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் வழக்கத்துக்கு மாறான ஓர் ஒற்றுமை இருந்தது! இரண்டுமே 39ஆவது பட்டமளிப்பு விழாக்கள் என்பதுடன், இரண்டு விழாக்களிலும் ஆய்வு மாணவர்கள் இருவர் விழா மேடையிலேயே ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தது சர்ச்சையானது. ஆய்வு மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகங்களில் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை என்பதுதான் இரண்டு புகார்களின் சாரம்.

தங்கள் ஆய்வு வழிகாட்டிகள், ஆராய்ச்சிப் பணியைத் தவிர, அவற்றுக்குத் தொடர்பில்லாத வேலைகளுக்கு - வீட்டு வேலைகள் உள்பட - தங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு மாணவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

என்ன நிலவரம்? - இந்தியா​வில் ஆய்வு வழிகாட்​டிகள் இது போன்று தங்கள் மாணவர்​களைத் தங்கள் சொந்த வேலைகளுக்​காகப் பயன்​படுத்​திக்​கொள்வது என்பது பெரும்​பாலும் வழக்​கமான ஒன்று​தான். இந்தியா​வில் ஆய்வு மாணவர்​கள், மாநிலப் பல்கலைக்​கழகங்கள் - அவற்றின் இணைவு பெற்ற கல்லூரி​கள், மத்திய அரசின் பல்கலைக்​கழகங்​கள், மத்தியத் தொழில்​நுட்பக் கழகங்​கள், மத்திய அரசின் அறிவியல் ஆய்வுக்​கூடங்கள் எனப் பலதரப்​பட்ட கல்வி / ஆய்வு நிறு​வனங்​களில் தங்கள் ஆய்வுப் பணியை மேற்​கொள்​கின்​றனர்.

ஆய்வு வழிகாட்​டிகள் மூலம் உருவாகும் இப்படியான பிரச்​சினை​கள், பொதுவாக மாநிலப் பல்கலைக்​கழகங்​களில் அதிக​மாக​வும் அதற்கு அடுத்​தடுத்த நிலை​யில் உள்ள கல்வி நிறு​வனங்​களில் ஒப்பீட்​டள​வில் சற்று குறை​வான​தாக​வும் இருக்​கும். இந்த வேறு​பாட்டுக்​குக் காரணம், மத்திய அரசு நடத்​தும் போட்​டித் தேர்​வு​களில் (CSRI, ICMR) வெற்றி பெறும் மாணவர்​களுக்கு ஐந்தாண்​டு​களுக்கு ஆய்வு உதவித்​தொகை கிடைப்​ப​தால், அவர்கள் என்ஐடி, ஐஐடி, மத்திய அரசின் கட்டுப்​பாட்​டில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் போன்ற​வற்றுக்​குச் சென்று தங்கள் ஆய்வுப் பணியை மேற்​கொள்​வார்​கள். அந்த மாணவர்​களுக்கு ஆய்வு வழிகாட்டி (பொது​வாக) சம்பளமோ அல்லது

உதவித்​தொகையோ வழங்​கு​வ​தில்லை. இவர்களை ஆய்வு வழிகாட்​டிகள் தங்கள் சொந்த வேலைகளுக்​குப் பயன்​படுத்​திக்​கொள்வது மிகவும் குறைவு. அதேவேளை​யில், இப்படியான பிரச்​சினைகள் அந்த மாணவர்​களுக்​கும் இல்லாமல் இல்லை! ஆனால், மாநிலப் பல்கலைக்​கழகங்​களில் ஆய்வில் ஈடுபடும் மாணவர்கள் பொதுவாக எந்த உதவித்​தொகை​யும் இன்றி, பகுதி நேர ஆய்வு மாணவ​ராகவோ அல்லது வழிகாட்​டி​யின் ஆய்வுத் திட்​டங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நிதியி​லிருந்து உதவி​பெறும் மாணவ​ராகவோ இருப்​பார். இந்த மாணவர்​களைப் பெரும்​பாலான ஆய்வு வழிகாட்​டிகள் தங்கள் சொந்த வேலைகளுக்​குப் பயன்​படுத்​திக்​கொள்​கிறார்​கள்.

ஆய்வு வழிகாட்​டியாக இருப்​ப​தற்கு, ஆய்வு மாணவர் தனிப்​பட்ட விதத்​தில் தனக்கு எந்த வகையிலும் பணம் செலுத்துவது இல்லை என்ப​தாலோ அல்லது தன்னுடைய ஆராய்ச்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட பணத்​திலிருந்து ஆய்வு மாணவர் உதவித்​தொகை பெறுகிறார் என்ப​தாலோ, பிரதிபலனாக ஆய்வு வழிகாட்​டிகள் தங்கள் மாணவர்​களைத் தங்கள் சொந்த வேலைக்​குப் பயன்​படுத்​திக்​கொள்​கிறார்​கள்.

எப்படிப் பார்த்​தா​லும் இதை நியாயப்​படுத்த முடி​யாது. இந்தியா​வில் முன்​னாள் / இன்னாள் ஆய்வு மாணவர்கள் மத்தி​யில் இது சம்பந்​தமாக (அவர்​களின் அடையாளத்தை வெளிப்​படுத்​தாமல்) ஒரு கணக்​கெடுப்பு நடத்​தி​னால், 90 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வு வழிகாட்​டிகள் சொந்த வேலைக்கு இவர்​களைப் பயன்​படுத்​திக்​கொண்டதை ஒப்புக்​கொள்வார்​கள்.

இதன் காரண​மாகவே திறமைமிக்க இளம் மாணவர்கள் அதிக அளவில் கடந்த 10-15 ஆண்டு​களில் வெளி​நாடு​களுக்​குச் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்​திருக்​கிறது. கடந்த சில ஆண்டு​களில் வெளி​நாடு​களுக்கு ஆய்வு மாணவ​ராகச் செல்லத் தங்களிடம் ஆலோசனைக்கு வரும் மாணவர்​களின் எண்ணிக்கை 70% அதிகரித்​திருப்​பதாக வெளி​நாடு​களுக்கு மாணவர்களை அனுப்பும் ஒரு நிறு​வனம் தெரி​வித்​திருக்​கிறது.

இரண்டு ஆண்டு​களுக்கு முன்னர் என்ஐடி ஆய்வு மாணவர் ஒருவரும், சமீபத்​தில் ஐஐடி ஆய்வு மாணவர் ஒருவரும் தங்களது ஆய்வு வழிகாட்​டிகளால் மனரீ​தி​யாகத் துன்​புறுத்​தப்​படு​வ​தாக​வும், தங்களைச் சொந்த வேலைக்​குப் பயன்​படுத்து​வ​தாக​வும் குற்​றம்​சாட்டி சமூகவலை​தளத்​தில் எழுதியது - இந்தியா​வைத் தாண்டி உலகக் கல்வி​யாளர்கள் மத்தி​யிலும் பேசுபொருளானது.

விசா​ரணைக் குழுக்கள்: மாணவர்​களின் இது போன்ற பிரச்​சினைகள் குறித்து விசாரணை செய்து, தீர்​வு​காணப் பல கல்வி நிறு​வனங்​களில் மாணவர் குறைதீர்க்​கும் விசா​ரணைக் குழுக்கள் இருக்​கின்றன. ஒன்று, அவை செயல்​படு​வ​தில்லை அல்லது அவை அரிதாகவே மாணவர்​களுக்​குச் சாதக​மாகச் செயல்​படு​கின்றன. மேலும், ஆய்வு மாணவருக்​கும் அவரது வழிகாட்​டிக்​குமான உறவு முறை என்பது, அந்த மாணவர் முனைவர் பட்டம் பெற்​றவுடன் முடிந்​து​விடும் ஒன்றல்ல.

அவர் தன்னுடைய ஆய்வில் அல்லது வேலை​யில் முன்னேறிச் செல்ல தன்னுடைய ஆய்வு வழிகாட்​டி​யின் பரிந்​துரைக் கடிதம் அவருக்கு அடிக்கடி தேவைப்​படும். அதனால், எந்த ஒரு ஆய்வு மாணவரும் தன்னுடைய ஆய்வு வழிகாட்டி பிரச்​சினைகளை ஏற்படுத்​தி​னால் விசா​ரணைக் குழு​வின் முன்னரும் வெளிப்​படையாக புகாராகச் சொல்ல மாட்​டார்.

தீர்வு என்ன? - அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட வெளி​நாட்டுப் பல்கலைக்​கழகங்​களில் இதுபோன்ற பிரச்​சினைகள் பொதுவாக இருப்​ப​தில்லை. காரணம், ஆய்வு வழிகாட்​டிகள் முறை​கே​டாகச் செயல்​பட்​டால் அதை முறையாக விசாரணை செய்து, அவர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்​கப்​படும். ஆய்வு மாணவர் பாதிக்​கப்​படாத வகையில் அந்நட​வடிக்கை இருக்​கும். இந்தியா​வில் ஆய்வு வழிகாட்​டியாக இருக்​கும் பேராசிரியர்​கள், இது போன்ற செயல்​களில் ஈடுப​டாமல் இருக்கத் தகுந்த வழிகாட்டு நெறி​முறைகள் வகுக்​கப்பட வேண்​டும்.

வெளி​நாடு​களில் இருப்​ப​தைப் போல ஆய்வு மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக அளவில் ஒரு கூட்​டமைப்பை ஏற்படுத்​திக்​கொள்ள​வும் தாங்கள் சந்திக்​கும் பிரச்​சினைகளை நேரடியாக விவா​தித்து, தங்கள் பல்கலைக்கழக உயர்​மட்டக் குழு​வுக்​குத் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்​கப்பட வேண்​டும்.

விசா​ரணைக் குழுக்கள் தன்னிச்​சை​யாக​வும் பாரபட்​சமற்ற வகையிலும் செயல்​படுவதை உறுதி​செய்ய வேண்​டும். ஆய்வு மாணவர்​களைக் கண்​ணி​யமற்ற ​முறை​யில் நடத்​தும் பே​ராசிரியர்​கள் மீது சம்​பந்​தப்​பட்ட பல்​கலைக்​கழகம் கண்​டிப்பான நட​வடிக்கை எடுப்பது அவசி​யம். மத்​திய, ​மாநில அரசுகள் இதற்​குச் சரியான தீர்வு ​காணா​விட்​டால், ​திறமைமிக்க இந்​திய ​மாணவர்களை வெளி​நாடுகளிடம்​ இழப்​பதைத்​ த​விர்​க்​க முடி​யாது!

- தொடர்புக்கு: merchikannan@gmail.com

SCROLL FOR NEXT