மராட்டியத்தில் மகுடம் யாருக்கு?

By வெ.சந்திரமோகன்

அளவில்லா மசாலா அம்சங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் களம். இன்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் சபதம், பாசப் போராட்டம், பழிவாங்கும் வேட்கை, ஏமாற்றம், துரோகம், உள்ளடி வேலைகள், வைராக்கியம் என ஏகப்பட்ட அம்சங்கள் காணக்கிடைத்தன.

பின்னடைவும் பாய்ச்​சலும்: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்த மாநிலங்​களில் மகாராஷ்டிரம் முக்கிய​மானது. மொத்தம் உள்ள 48 தொகுதி​களில் பாஜக ஒன்பது இடங்களி​லும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏழு இடங்களிலும் வென்றன. திகைத்​துப்போன மகாயுதி கூட்டணி அரசு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘முக்​யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு​வந்தது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் அந்தத் திட்டத்​துக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை எதிர்க்​கட்​சிகள் தட்டின. பலனில்லை. இப்படியான திட்டங்கள், தங்கள் சரிவைத் தவிர்க்கும் என உற்சாகமடைந்த மகாயுதி கூட்டணி, முன்பைவிட கூடுதல் சுறுசுறுப்புடன் இந்தத் தேர்தலை எதிர்​கொள்​கிறது.

அதேவேளை​யில், மகாயுதி கூட்ட​ணியில் ஏகப்பட்ட குழப்​பங்கள். தான்தான் அடுத்த முதல்வர் என்பதில் தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியாக இருக்​கிறார். மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதி​களில் 140 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்​தி​யிருப்பதன் மூலம் முதல்வர் பதவி தங்களுக்கே என்பதை பாஜக மறைமுகமாக உணர்த்தி​விட்டது.

பழிதீர்க்கும் தருணம்: மகா விகாஸ் அகாடி கூட்ட​ணியைப் பொறுத்​தவரை, முதல்வர் நாற்காலி மீது உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கண் இருக்​கிறது. இதயக் கோளாறால் பாதிக்​கப்​பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்து​கொண்ட பிறகும், ஓய்வெடுக்​குமாறு மருத்​துவர்கள் பரிந்​துரைத்த நிலையிலும் தேர்தல் பிரச்​சா​ரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டார் உத்தவ் தாக்கரே.

“என் கடைசி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரத்தைக் காப்பாற்றப் போராடு​வேன்” என்று சூளுரைத்​திருக்​கிறார். அதேபோல், அரசியல் அதிகாரத்​துக்​காகக் குடும்பத்தை உடைத்தார் என்று அஜித் பவாரைப் பற்றி ஆதங்கத்​துடன் பேசினார் சரத் பவார். இந்தத் தேர்தலில் வெல்வது சரத் பவாருக்குக் கெளரவப் பிரச்சினை மட்டுமல்ல; மகள் சுப்ரியா சுலேவின் எதிர்​காலத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பும்கூட.

சர்ச்சைப் பேச்சும் சங்கடமும்: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்​படும் என்று மகா விகாஸ் அகாடி கூட்டணி அறிவித்த நிலையில், “இது இந்துக்​களைப் பிளவுபடுத்தும் முயற்சி. இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பாஜக தலைவர்கள் பேசத் தொடங்கி​விட்​டார்கள்.

‘கட்டேங்கே தோ பட்டேங்கே’ (ஒற்றுமையாக இல்லை​யென்​றால், அழிக்​கப்​பட்டு​விடு​வோம்) என யோகி ஆதித்​ய​நாத்​தும், ‘ஏக் ஹைன் தோ, சேஃப் ஹைன்’ (ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்​போம்) எனப் பிரதமர் மோடி முன்வைத்த முழக்​கமும் - முஸ்லிம்​களுக்கு எதிரான வழக்கமான இந்து அணிதிரட்​டல்கள் என்றே பார்க்​கப்​படு​கின்றன.

பாஜகவுடன் கைகோத்​திருந்​தாலும் மதச்சார்பற்ற கட்சி என்கிற பிம்பத்தை விட்டுவிட விரும்பாத அஜித் பவாரின் தேசிய​வாதக் காங்கிரஸ் கட்சி, இதை வெளிப்​படை​யாகவே கண்டித்தது. அஜித் பவார் கட்சியின் சார்பில் முஸ்லிம்​களும் வேட்பாளர்களாக நிறுத்​தப்​பட்​டிருப்பது குறிப்​பிடத்​தக்கது.

இன்னொரு புறம், யோகி, மோடி பேச்சுக்களை பாஜகவைச் சேர்ந்த பங்கஜா முண்டே, அசோக் சவான் போன்ற தலைவர்களே எதிர்த்தனர் என்பது தனிக்கதை. ஏக்நாத் ஷிண்டேவைப் பொறுத்​தவரை, தான் பாஜகவின் கைப்பாவை அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

பட்டும்ப​டா​மலும் காய் நகர்த்து​கிறார். ஐந்து ஆண்டு​களுக்கு முன்பு பாஜகவுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பேச்சு​வார்த்தை கெளதம் அதானி இல்லத்தில் நடைபெற்​ற​தாக​வும், சரத் பவார், அமித் ஷா, பிரஃபுல் படேல் உள்ளிட்​டோருடன் அதானியும் அதில் கலந்து​கொண்​ட​தாகவும் ஒரு இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் அஜித் பவார் கூறியது சர்ச்​சையைக் கிளப்​பியது. தேசியவாத காங்கிரஸுடன் பாஜக பேச்சு​வார்த்தை நடத்தியது உண்மை என்றாலும் அதானி குறித்து அஜித் பவார் கூறியது உண்மை அல்ல என்று ஃபட்னவீஸ் விளக்​கமளித்​தார்.

வினையும் எதிர்​வினையும்: தெலங்​கா​னாவில் முஸ்லிம்​களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்​படு​வதுபோல, மகாராஷ்டிரத்​திலும் வழங்கப் பரிந்துரை செய்யப்​போவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பாஜகவுக்கு வாகான ஆயுதமானது. முஸ்லிம்​களின் வாக்குகளை அறுவடை செய்ய ‘வோட் ஜிகாத்​’தைக் காங்கிரஸ் கொண்டு​வருதாக ஃபட்னவீஸ் விமர்​சித்தார். சோலாப்​பூரில் பிரச்​சா​ரத்​தின்போது ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைஸியும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைஸியும் சர்ச்​சைக்​குரிய வகையில் பேசிய​தாகத் தேர்தல் ஆணையத்​துக்கு சிவசேனா (ஷிண்டே) கடிதம் எழுதியது.

சாதி மதக் கணக்குகள்: தமிழ்​நாட்டில் இருப்​பதுபோல, மகாராஷ்டிரத்​திலும் இடஒதுக்​கீட்டுக்கான உச்சவரம்பு 50%ஐத் தாண்டி அதிகரிக்​கப்​படும் என்று காங்கிரஸ் தெரிவித்​திருக்​கிறது. மராத்தா இடஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடத்திய மஜோன் ஜராங்கே பாட்டில், மகா விகாஸ் அகாடி, மகாயுதி இரண்டுமே மராத்​தாக்​களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வர​வில்லை என்று பேசிவருபவர். இவர் தனது ஆதரவாளர்​களைத் தேர்தலில் நிறுத்​தியது பேசுபொருளான நிலையில், திடீரென அந்த முடிவைத் திரும்பப் பெற்றார்.

மராத்​தாக்கள், தலித்துகள், முஸ்லிம்​களுக்கு இடையிலான ஒற்றுமை குலைந்​து​விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்ததாக விளக்​கமளித்​தார். உண்மை​யில், சரத் பவாரின் வேண்டு​கோளுக்கு இணங்கியே பின்வாங்​கினார் எனப் பேசப்​படு​கிறது. இதன் அனுகூலம் மகா விகாஸ் அகாடிக்குக் கிடைக்கும் என்று கருதப்​படு​கிறது.

மகாராஷ்டிர சிறுபான்​மை​யினரைப் பொறுத்தவரை முஸ்லிம்​களுக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் கிறிஸ்​து​வர்கள். எனினும், மாநிலச் சிறுபான்​மை​யினர் ஆணையத்தின் ஒன்பது உறுப்​பினர்​களில் ஒருவர்​கூடக் கிறிஸ்​துவர் அல்ல என்பதால், அம்மதத்​தினர் ஷிண்டே அரசு மீது அதிருப்​தியில் உள்ளனர். இதன் பலன் மகா விகாஸ் அகாடி கூட்ட​ணிக்குக் கிடைக்​கலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அனைத்​திந்திய கிறிஸ்துவ சங்கம் மகா விகாஸ் அகாடி கூட்ட​ணிக்கு வெளிப்​படையான ஆதரவைத் தெரிவித்து​விட்டது.

ஆர்எஸ்​எஸ்-ஐச் சார்ந்​திருக்கும் தேவை பாஜகவுக்கு இல்லை என்கிறரீ​தியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியது 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்குப் பின்னடைவைத் தந்தத​தாகப் பேசப்​படு​கிறது. ஆர்எஸ்​எஸ்​ஸுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஃபட்னவீஸ் இந்த முறை பிணக்கைத் தீர்த்து​விட்டார் என்கிறார்கள். ஆர்.எஸ்​.எஸ்​-சின் சகாயம் மீண்டும் கிட்டி​யிருப்பது பாஜகவுக்குப் பலம் சேர்க்கும் எனக் கருதப்​படு​கிறது.

முக்கியப் பிரச்​சினைகள்: விதர்பா பகுதியில் விவசா​யிகள் பாஜக மீது அதிருப்​தியில் இருக்​கின்​றனர். வெங்காயம், சோயாபீன்ஸ், பருத்தி, கரும்பு போன்ற பயிர்​களுக்கான கொள்முதல் விலை மிகக் குறைவு எனக் குமுறும் விவசா​யிகளைக் கவர, மகா விகாஸ் அகாடி கூட்டணி முயல்​கிறது. ஒவ்வொரு​வருக்கும் ஏழு கிலோ உணவு தானியம், 450 ரூபாய்க்கு சிலிண்டர், ரூ.15 லட்சம் மதிப்​பிலான மருத்​துவக் காப்பீடு எனப் பல்வேறு வாக்குறு​திகளை முன்வைத்​திருக்​கிறது.

மகாராஷ்டிரத்தின் முதன்மையான குடிமக்கள் பழங்குடிகள்தான் என்றும் 8,500 பழங்குடி இளைஞர்​களுக்கு வேலைவாய்ப்பு அளிக்​கப்​படும் என்றும் ஷிண்டே அறிவித்​திருக்​கிறார். ஆனால், 2006இல் கொண்டு​வரப்பட்ட வன உரிமைச் சட்டத்தில் பழங்குடிகளுக்கு அளிக்​கப்​பட்​டிருந்த அதிகாரத்தை, பாஜக அரசு நீர்த்​துப்​போகச் செய்து​விட்​ட​தாகக் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

மகாராஷ்டிரத்​துக்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்​களையும் வேலைவாய்ப்பு​களையும் குஜராத்​துக்கு பாஜக கவர்ந்​துசென்​ற​தாகக் காங்கிரஸ் குற்றம்​சாட்​டியது. தேர்தல் பிரச்சார கடைசி நாள் செய்தி​யாளர் சந்திப்பில் அதானி - மோடி குறித்து அதிரடியாக ராகுல் பேசியது பாஜகவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்​தி​னாலும், சரியான பதிலடி தரவும் அக்கட்​சி​யினர் தயங்க​வில்லை.

ராஜீவ் காந்தி ஆட்சிக்​காலத்​தில்தான் தான் வளர்ந்ததாக அதானியே குறிப்​பிட்டதாக பாஜவினர் சுட்டிக்​காட்​டினர். கூடவே, அதானி​யுடன் ராபர்ட் வத்ரா, சசி தரூர் உள்ளிட்டோர் இருக்கும் ஒளிப்​படத்​தையும் வெளியிட்​டனர். ராஜஸ்​தானில் அசோக் கெலாட் முதல்வராக இருந்த​போதும், தெலங்​கா​னாவின் தற்போதைய காங்கிரஸ் ஆட்சி​யிலும் அதானி குழுமத்​துடன் கையெழுத்தான வணிக ஒப்பந்​தங்​களையும் பட்டியலிட்​டிருக்​கிறது பாஜக.

கூட்டத்தில் அதானி​யுடன் சரத் பவாரும் அமர்ந்​திருந்ததாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், ராகுலின் இந்த உத்தி எதிர்​மறையான விளைவு​களையே ஏற்படுத்​தி​இருக்​கிறது சமீபத்தில் நடைபெற்ற ஹரியாணா சட்டமன்றத் தேர்தலைப் போலவே மகாராஷ்டிரத்​திலும் முன்பைவிட அதிக இடங்கள் கிடைக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்​திருக்​கிறார். அது நம்பிக்​கையா, ஆரூடமா என 23ஆம் தேதி தெரிந்​துவிடும்​!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்