வனங்களின் உயிர்தின்னும் பசுமைவழிச் சாலைகள்!

By செல்வ புவியரசன்

ளர்ச்சி. அதற்குத் தேவை உள்கட்டமைப்பு. எனவே சாலைகள் போட வேண்டும், மேம்பாலங்கள் கட்ட வேண்டும், ஏற்கெனவே சாலைகள் இருந்தால் அவற்றை பலவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் அப்படியே வளர்ச்சியை வேகவேகமாக எட்டிப்பிடித்துவிட முடியும். இப்படித்தான் பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியிலிருக்கும் அரசியல் தலைவர்களும் அதே வார்த்தைகளை எதிரொலிக்கிறார்கள்.

நாட்டின் வளர்ச்சியே தனது நோக்கமும் செயலும் என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பிரதமரானதிலிருந்து 28,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. சாலைப் பணிகளுக்காக மட்டுமே ரூ.3 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. சராசரிக் கணக்கில் நாளொன்றுக்கு 27 கி.மீ. சாலை போடப்படுகிறது என்கிறார் நிதின் கட்கரி. கடந்த மே 27-ல் டெல்லியின் கிழக்கில் உள்ள புறப்பகுதிகளை இணைக்கும் 135 கி.மீ. தொலைவுகொண்ட இந்தியாவின் முதலாவது பசுமை விரைவுச் சாலையையும், டெல்லி தலைநகர்ப் பகுதியில் 14 வழிச் சாலையையும் தொடங்கிவைத்தார் பிரதமர். அடுத்து, மும்பையிலிருந்து புனேவுக்கு 25 நிமிடத்தில் பயணிக்கும் இன்னொரு விரைவுச் சாலைத் திட்டம் கையெழுத்தாகியிருக்கிறது. நெடுஞ் சாலைகள், வளர்ச்சிக்கு உதவலாம். ஆனால், அவை சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிப்பவை. அதனாலேயே உருவாகும் புதிய நெடுஞ்சாலைகள் பசுமைவழிச் சாலைகள் என்ற புதிய பெயரை புனைந்துகொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைகள் விளைவிக்கும் சுற்றுச்சூழல் கேடுகளை நவீன தொழில்நுட்பத்தால் தவிர்த்து விட முடியும் என்று சொல்வதற்காக, ஸ்மார்ட் என்றும் ஓர் அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலும் சென்னையிலிருந்து சேலத்துக்கு இப்படியொரு பசுமைவழி விரைவுச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களின் வழியாக சேலத்தைச் சென்றடையும் 277.3 கி.மீ. தூர, 900 அடி அகலம் கொண்ட எட்டுவழிச் சாலையால் பயண நேரம் பாதியாகும். பயணச் செலவிலும் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்று கூறப்படுகிறது.

பலியாகும் விவசாயம்

சென்னை - சேலம் விரைவுச் சாலை ஏழு நதிகளையும் எட்டு மலைகளையும் 159 கிராமங்களையும் கடந்து செல்கிறது. சாலைப் பணிக்குத் தேவையான 2,791 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தொடங்கிவிட்டது. கையகப்படுத்தவிருக்கும் நிலங்களில் பெரும்பகுதி விவசாய நிலங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொழிற்சாலைகளின் நலன்களுக் காகவும் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துநிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. இச்சாலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்குள் பயணிக்கிறது. அதனால், 120 ஹெக்டேர் வனப் பகுதி பாதிப்புக்கு ஆளாகும். சென்னையிலிருந்து சேலத்துக்கு கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, உளுந்தூர்பேட்டை என்று மூன்று பிரதான வழித்தடங்கள் இருக்கின்றன. இருக்கிற சாலைகளையே இன்னும் மேம்படுத்தலாம், புதிய சாலைகள் எதற்கு என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும். வளர்ச்சியின் உரத்த முழக்கங்களுக்கு முன்னால் இந்த நியாயத்தின் குரல் மேலெழப்போவதில்லை.

இயற்கையை அழித்து, வாழ்வாதாரங்களை அபகரித்து உருவாகப்போகும் இந்தச் சாலைகளுக்கு அதிவிரைவு சாலைகள் என்ற பெயர் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால், அவற்றை பசுமைவழிச் சாலை கள் என்று அழைப்பது முரண்தொகை. வனங்களை ஊடுருவிச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மின் தடங்களும் வனவிலங்குகளின் உயிரைப் பறித்துக்கொண்டிருக்கின்றன. வனங்களின் உயிரறுத்துச் செல்லும் இந்தச் சாலைகளுக்கு அனுமதியளிக்கும் விதிமுறைகளை மோடி ஆட்சிக்கு வந்தவுடனேயே சுற்றுச்சூழல் அமைச்சகம் தளர்த்திக்கொண்டுவிட்டது. அழிக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு ஈடாக காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற கடப்பாடு கைவிடப்பட்டுவிட்டது. எந்த வனப்பகுதியில் சாலை போடப்படுகிறதோ அந்த வனப் பகுதியின் அலுவலர் அனுமதித்தால் மட்டுமே போதுமானது என்ற அளவுக்கு கட்டுப்பாடுகள் சுருங்கிவிட்டன.

கொல்லப்படும் வன உயிரிகள்

வனங்களின் வழியே போடப்படும் சாலைகள், வன விலங்குகளின் வழித்தடங்களில் குறுக்கிடுகின்றன. ஆனால், வன விலங்குகளின் பாதுகாப்புக்காக சுரங்கப் பாதைகளின் வழியேதான் சாலைகளை அமைக்கிறோம் என்கிறது அரசு. அத்தகைய கட்டமைப்புகள் சரியான மாற்று அல்ல என்பதையே சாலையைக் கடக்கும்போது உயிர்விடும் விலங்குகளின் தொடர்மரணங்கள் உணர்த்துகின்றன. முக்கியமாக, சாலையில் விரைந்து செல்லும் வாகனங்களில் அடிபட்டுக் காயமடையும் விலங்குகளின் எண்ணிக்கை முறையாகக் கணக்கெடுக்கப்படுவதில்லை. அடிபட்ட இடத்திலேயே உயிர் துறக்கும் விலங்கினங்களில் நாம் பெரிய விலங்குகளை மட்டுமே கருத்தில்கொள்கிறோம். ஆனால், சின்னஞ்சிறு முதுகெலும்பிகள், தவளைகள், பூச்சியினங்கள், ஊர்வன எல்லாம் கணக்கிலேயே வருவதில்லை. சுற்றுச்சூழல் அமைப்பில் இவை ஒவ்வொன்றுமே முக்கியப் பங்காற்றிவருகின்றன.

வனப் பகுதியில் வெறும் 10 கி.மீட்டருக்கும் குறைவாகத்தான் சாலைகள் போடப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறியிருக்கிறார். ஆனால், வனப் பகுதியில் ஒரு சாலை அமைத்தால், சாலையைச் சுற்றியுள்ள 10 ஏக்கர் பரப்புக்கு அதன் பாதிப்புகள் இருக்கும் என்பது தான் சுற்றுச்சூழல் ஆய்வுகள் சொல்லும் முடிவு. மேலும், சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை வாழும் உயிரினங்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிப்புக்கு ஆளாகும்.

கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கும் இதே நிலை. சாலைகளால் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் மட்டுமல்ல, அதைச் சுற்றி யிருக்கும் பல ஏக்கர் நிலமும் சூழல் பாதிப்புக்கு உள்ளாகும். பாசன வாய்க்கால்களின் இயல்பான இயக்கம் அறுபட்டு, மண்வளம் பாதிக்கப்படும். ஆனால், கையகப்படுத்தப்படாத சாலையோர நிலங்களுக்கு எந்த இழப்பீடுமே கிடைக்கப்போவதில்லை.

மலைப் பகுதிகளில் சாலைகள் போடப்படும்போது மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக நாங்கள் மரக் கன்றுகள் நட்டுச் சமன்செய்து விடுவோம் என்று சமாதானம் சொல்கிறது அரசு. ஆனால், வனங்களின் உள்ளே மரணிக்கும் மரங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, சாலையோரம் உள்ள மரங்களின் இறக்கும் விகிதம் இரண்டரை மடங்கு அதிகம் என்கிறது 2009-ல் பண்டிபூர் புலிகள் சரணாலயத் தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கை.

மலைப் பகுதி சாலைகள் மரங்களை மட்டும் வெட்டி அழிப்பதில்லை. அங்கிருக்கும் செடி, கொடிகளும் அழித்தொழிக்கப்படுகின்றன. அந்தந்த நிலப் பகுதிகளில் வாழும் பிரத்யேகமான தாவர இனங்களும் அவற்றின் கண்ணுக்குத் தெரியாத பயன்களும் கண்டுகொள்ளப் படுவதே இல்லை. அந்தத் தாவரங்கள்தான் மண்ணை யும் அங்குள்ள விலங்கினங்களையும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. மரங்களும் செடிகொடிகளும் அகற்றப்பட்டு, மலைப் பாதைகள் உருவாகும்போது, அப்பகுதி யில் நிலச்சரிவும் தவிர்க்க முடியாதது. வளர்ச்சியின் பெயரால் உருவாக்கப்படும் சாலைகளும் மேம்பாலங்களும் குறுகிய கால அளவில் பயன்களைத் தரக்கூடும். ஆனால், நீண்ட கால நோக்கில் அவை இயற்கைக்குச் சமன்செய்ய முடியாத பெரும் இழப்பையே ஏற்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு :

puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்