தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து, ‘சங்க இலக்கிய ஆய்வில் நவீனக் கோட்பாட்டு அணுகுமுறைகள்’ என்னும் தலைப்பில் 2010 பிப்ரவரியில் 10 நாள் பயிலரங்கம் ஒன்றை நடத்தின. அதில் ஆறாவது நாள் ‘தலித்திய அணுகுமுறை’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த வந்திருந்தார் ராஜ் கெளதமன். அப்போது அவர் புதுச்சேரி அரசினர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். முனைவர் பட்ட ஆய்வாளராக அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட நான், அப்போதுதான் அவரை நேரில் பார்த்தேன்.
அன்று அவர் ஆற்றிய உரையில், அதுவரையிலான தமிழ் ஆய்வுகளின் போக்குகளையும், அவற்றின் பலன் சமகாலத்தில் கலை, இலக்கிய, அரசியல், கல்விப்புலங்களில் என்னவாக மாறியிருக்கிறது அல்லது மாற்றப்பட்டு இருக்கிறது என்பதையும் விளக்கியதோடு, தமிழ் இலக்கியத்தை தலித் அணுகுமுறையில் அணுகவேண்டிய தேவையையும், அப்படிச் செய்யும்போது ஏற்படுகிற விளைவுகளையும் தலித் பண்பாட்டு உருவாக்கத்தின் அவசியத்தையும் முன்வைத்தார்.
அதற்குப் பிறகு, அடுத்தடுத்து வந்துகொண்டிருந்த அவரது நூல்களை வாசித்துக்கொண்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2020 ஜனவரியில் ராஜ் கெளதமனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ‘திறனாய்வுச் செம்மல்’ விருது வழங்கும் நிகழ்விலும் 2022 ஏப்ரலில் நீலம் பண்பாட்டு மையம் வழங்கிய ‘வானம் இலக்கிய விருது’ நிகழ்விலும் அவரது ஆய்வுகளைப் பற்றி உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
அதற்குப் பிறகு அவரோடு நெருங்கிப் பழகியது சிறிது காலம்தான் என்றாலும், அதற்குள்ளாக அவரது வாசிப்பு உலகத்தையும் வாசிப்பதற்கான புத்தகத் தேர்வையும் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆங்கில நூல்களை அதிகம் வாசித்ததோடு அன்றி, பிடித்த நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் வெகு சில தமிழ்ப் பேராசிரியர்களிலும் ராஜ் கெளதமன் முன்னவராக இருந்தார்.
» புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பழங்குடி பாடல் மூலம் நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.
ஆய்வுகள்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு புதுப்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் கெளதமன், தொடக்கக் கல்வியை உள்ளூரிலும் மேல்நிலைக் கல்வியை மதுரை செயின்ட் மேரிஸ் பள்ளியிலும் கல்லூரிக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் முடித்தார். 1970களின் முற்பகுதியில் படித்துவிட்டுத் தனது சொந்த ஊரில் இருந்தபடி வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில், அவருக்கு இடதுசாரி இயக்கங்களோடு தொடர்பு ஏற்பட்டது.
அவர்களோடு இணைந்து வாசித்து விவாதிப்பது, நூலகம் செல்வது, எழுதிப் பார்ப்பது என்று பொழுதைப் போக்கிய அவர், மேலை இலக்கியங்களை, குறிப்பாக ரஷ்ய இலக்கியங்களைத் தேடித்தேடி வாசித்தார். அதன் வழியாக அவர் மேலைநாட்டு மறுமலர்ச்சி காலத் தத்துவங்களை உள்வாங்கினார்.
இதே காலத்தில் தமிழில் ராஜ் கெளதமனுக்கு அமைந்தது போலவே பலருக்கும் ஆழ்ந்த வாசிப்பு அமைந்துவிட்டிருந்தது. பின்னாளில் அவர்களும் பேராசிரியர்களாக, ஆய்வாளர்களாகத் தகவமைத்துக் கொண்டனர். அவர்களிடமெல்லாம் தமிழின் பழைய மரபுசார் விளக்கவியல் ஆய்வுமுறையே நீட்சிப்பட்டுக்கொண்டிருக்க, அவர்களில் இருந்து ராஜ் கெளதமன் வேறுபட்டார். தமிழ் இலக்கியங்களையும் பண்பாட்டுக் கட்டுமானங்களையும் தமிழ் மனநிலைக்கு வெளியில் நின்று விவாதித்தார். அவருடைய ஆய்வு அணுகுமுறையின் தனித்துவமாக அதைச் சொல்ல முடியும்.
அவரது ஆய்வு முடிவுகள் தமிழின் பழைய கற்பிதங்களையும் சார்புநிலை ஆய்வுகளின் அரசியல் பாசாங்கையும் உடைத்தன. அறம், புலனடக்கம், ஈகை, கல்வி, அறிவு, துறவு, சான்றாண்மை ஆகிய சொற்களுக்கும் அவை உணர்த்தும் பொருண்மைக்கும் சொல்லப்பட்டு வந்த விளக்கத்திலிருந்து மாறுபட்ட ராஜ் கெளதமன், இச்சொற்களை ‘அதிகாரத்தின் வேலையாட்கள்’ என்றார். இது தமிழ் ஆய்வுலகம் நீண்ட காலம் நிகழ்த்திவந்த வேர்ச்சொற்கள் ஆய்வுகளுக்குப் பிறகு சொற்களுக்குள் நிற்கும் சொல்லப்பட்ட, சொல்லப்படாத பொருள்களை மாற்றுப் பண்பாடு சார்ந்து புரிந்துகொள்வதற்கான சூழலின் தொடக்கமாக அமைந்தது.
ராஜ் கெளதமன் எழுதத் தொடங்கிய காலத்தில் ‘மறுவாசிப்பு’ கலாச்சாரம் தொடங்கிவிட்டிருந்தது. அப்போது பெரும்பான்மையான ஆய்வாளர்கள் நவீன வாசிப்பின் ஒரு முறையியலாக மறுவாசிப்பைப் புரிந்து எழுதிக்கொண்டிருந்தனர். ஆனால், ராஜ் கெளதமன் “மறுவாசிப்பு ‘ஒடுக்கப்பட்டோரின் வாசிப்பு’ முறை, அது உலகுக்கு நவீனமல்ல. மிகப் பழையது” என்றார்.
உலகம் முழுக்க ஏற்கெனவே இருக்கும் எழுத்துகளையும் கலை வடிவங்களையும் மறுவாசிப்பு செய்தவர்கள் ஒடுக்குகிறவர்கள் அல்ல; அவர்களால் ஒருபோதும் மறுவாசிப்பு செய்ய முடியாது. ஏனென்றால், காலமெல்லாம் ஒருபக்கச் சார்பாகப் பெரிதுபடுத்தப்பட்டு வந்திருக்கும் எழுத்தும் கலையும் அவர்களால் அவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஒடுக்கப்பட்டவர்களே அவற்றை மறுவாசிப்பு செய்ய முடியும் என்றார்.
இந்த விளக்கத்துக்குப் பிறகு மறுவாசிப்பு என்பதன் மீதான புரிதலே மறுவாசிப்புக்கு உள்ளானது. இப்படித் தமிழ் ஆய்வுலகில் பல புதிய மடைமாற்றங்களை உருவாக்கினார். இன்றைக்குச் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், திறனாய்வு சார்ந்து கல்விப்புலங்களில் சமர்ப்பிக்கப்படும் முனைவர் பட்ட ஆய்வேடுகளில் ராஜ் கெளதமனின் ஆய்வுகள் தவறாது மேற்கோள் காட்டப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு இளைய தலைமுறை ஆய்வாளர்களைத் தன் ஆய்வுகளின் பக்கம் அவர் ஈர்த்திருக்கிறார்.
என்றாலும் அவரது ஆய்வுப் பங்களிப்புக்கு அந்த வெளிச்சம் மிகக் குறைவு. அவரது மிகச் சிறந்த நூல் என ‘தலித் பண்பாடு’ நூலைச் சொல்லலாம். பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான கலை இலக்கியப் பண்பாடே ‘தலித் பண்பாடு’ எனச் சொன்ன அவர், அதைத் தமிழ்ச் சூழலுக்குள் மட்டும் பொருத்திப் பார்க்காமல், உலகம் முழுமைக்குமாக விரித்தார். பிறப்பால் ஒடுக்கப்படும் கறுப்பின, பெண்ணிய பண்பாட்டுக்குக் கூறுகளோடு இணைத்துப் பேசி, சிக்கலின் தீவிரத்தைப் பெரும்பான்மைக்கு உரியதாக நிறுவ வேண்டும் என்றார்.
உண்மையில், உலகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள், கணிசமான அளவுள்ள கறுப்பர்கள், தலித்துகள் ஆகியோர்களின் பிரச்சினைகள் அடிப்படையில் ஒற்றுமைக் கூறுகளைக் கொண்டவை. அவை பெரும்பான்மைச் சமூகத்தின் பிரச்சினைகளாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மையாகச் சிதறடிக்கப்பட்டு, பிராந்திய ஆண்மையச் சிறுபான்மைச் சமூகம் பெரும்பான்மையாகக் கட்டமைக்கப்பட்டு, அதிகாரத்தில் கோலோச்சும் நிலையைச் சரியாகப் புலப்படுத்தினார்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் தலித் பண்பாட்டை மலைவாழ், இனக்குழுப் பண்பாட்டுடன் இணைந்து பிறவகைப்பட்ட தேசிய இனங்களிலிருந்து தனித்த ஒன்றாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற நிலைப்பாடு கொண்ட அவர், அதன் அடிப்படையில் ‘தலித் பண்பாடு’ என்பது பிறப்பால், பாலினத்தால் ஒடுக்கப்படுகிற யாவருக்கும் உரியது என்றார்.
தலித் பண்பாட்டின் முக்கியமான வேலைத் திட்டமாக - தலித்துகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்தல், எதிரியின் பலவீனங்களைப் பிரச்சாரம் செய்தல், புரட்சிகரச் சிந்தனை, போராட்டம், பிரச்சினைகளைச் சமூக நம்பிக்கை அடிப்படையில் அணுகுவதைத் தவிர்த்து, சமூக அறிவியல் அடிப்படையில் அணுகுதல் ஆகியவற்றை முன்வைத்தார். இது 1990களின் பிற்பகுதி முதற்கொண்டு வெளிவந்த தமிழ் தலித் புனைவுகளுக்கும் ஆய்வுகளுக்கும் ஒரு வரையறையாக அமைந்தது.
புனைவுகளும் மொழிபெயர்ப்புகளும்: தமிழ் ஆய்விலும் புனைவிலும் ஒருசேரப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மிகச் சிலரில் ஒருவரான ராஜ் கெளதமன் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச்சுமை’ ஆகியவற்றைத் தன் வரலாற்றுப் புனைவாக எழுதினார். பொதுவாக, ஆய்வுகளின் மொழிநடையில் ஒரு வகையான தீவிரத்தனம் மட்டுமே வலியுறுத்தப்படும். ராஜ் கெளதமன் ஆய்வுகளில் தீவிரம் தூக்கலாக இருந்த அதே அளவுக்குப் பகடியும் இருந்தது. சிக்கலான பொருள் ஒன்றின் மீதான ஆய்வைச் சிரித்துக்கொண்டே வாசிக்கலாம்.
‘லண்டனில் சிலுவைராஜ்’ அவரது பயண அனுபவங்கள். ‘பாவாடை அவதாரம்’, ‘ராக்கம்மா பேத்தி’, ‘பாம்புச்சட்டை’, ‘ஊமை நாய்க்கர்’ ஆகியன சிறுகதைகள். ‘பாலற்ற பெண்பால்’, ‘பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும்’, ‘கிளி எழுபது’, ‘அன்பு என்னும் கலை’, ‘பாலியல் அரசியல்’ ஆகியன மொழிபெயர்ப்புகள். மேடைகளில் அதிகம் பங்கெடுக்காத ராஜ் கெளதமன் கடைசி வரை எழுத்திலும் வாசிப்பிலும் தீவிரத்தோடு இயங்கினார். எந்த அமைப்புகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் சுயாதீன கம்பீரத்தோடு வாழ்வை முடித்திருக்கிறார்.
- தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago