யா
னை தொலைந்துவிட்டால் அதைப் பானைக்குள் தேட முடியாது என்று ஒரு பழமொழி. யானையைப் பிடித்து யாரும் பானைக்குள் அடைத்துவிட முடியாது என்பது பழமொழியின் அனுமானம். 18 பேரவை உறுப்பினர்களின் தகுதிநீக்கம் பற்றிய வழக்கில் நாம் பேச வேண்டியது இதுதான். வழக்கில் வந்த தீர்ப்பின் நுணுக்கங்களைப் பற்றியல்ல!
ஜனநாயகப் பற்று உள்ளவர்கள் இந்த வழக்கை வெறும் சட்டப் பிரச்சினையாக்கி விவாதிப்பது பொருந்தாது. அரசியல் பிரச்சினைகள் நம் ஜனநாயகத்தில் அப்போதைக்கு அப்போதே சட்டப் பிரச்சினையாக, நீதிமன்ற வழக்காக உரு அழிவதுதான் பிரச்சினை. சட்ட வலையின் கண்களுக்குள் ஜனநாயக அரசியல் நுழைந்து வெளியேறிவிட முயல்வது பரிதாபம்.
எல்லாம் சட்டமயம்
‘அரசியல் வெளியைச் சட்டமயமாக்கி அதைத் தன் வசத்திலேயே வைத்துக்கொள்ளும் தன்மை உடையது அரசியல் சட்டம்.’ நமது அரசியல் சட்டத்தை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்திப் பேசும்போது, இந்த விமர்சனம் உண்டு என்பதைச் சொன்னார் அம்பேத்கர். இப்போது அரசியல் செயல்பாடுகளாக இருக்க வேண்டியனவற்றை எல்லாம் நீதிமன்ற வழக்குகளாகச் சுருக்கி சட்டம் அரசியல் களத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொள்ள விட்டுவிடுகிறோம்.
நமது ஜனநாயகத்தின் தன்மை மாறிவருவதற்கான அடையாளம் இது. இப்படிச் சுருங்கிப்போன அரசியல் நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. சட்ட வல்லுநர்களே இந்த அரசியலில் முனைப்பான பங்கேற்பாளர்களாக இருக்க முடியும். இந்த நிலையை அரசியல்வாதிகளே உருவாக்கிக்கொள்வதுதான் வியப்பு. சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது. மக்கள் பிரதிநிதிகளை இழந்த 18 தொகுதிகளுக்குமே இடைத்தேர்தல் நடத்த முடியாது. நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அரசியல் சாசனத்தை நாடு ஏற்றுக்கொண்டபோது என்ன அச்சம் இருந்ததோ, என்ன விமர்சனம் முன்வைக்கப்பட்டதோ அதை இன்று எதிர்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது அரசியல் சாசனம் வழக்கறிஞர்கள் விளையாடிக் களிக்கும் மைதானமாகிவிடும் என்று அப்போது சிலர் சொல்லி யிருந்தார்கள். மக்களை ஓரம்கட்டி வழக்குரைஞர்களின் நீதிமன்றப் பணிகளை மையப்படுத்தும் அரசியலுக்கா ஜனநாயகத்தை வரித்துக்கொண்டோம்?
தீர்ப்புகளின் ஒற்றுமை
18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்க வழக்கில், நீதிமன்றம் ஒரு அரசியல் பிரச்சினைக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இரண்டு தீர்ப்புகள் வந்தன. மாறுபட்ட தீர்ப்புகளானாலும் இரண்டு தீர்ப்புகளுமே பிரச்சினையின் அரசியல் பரிமாணத்தை வெவ்வேறு வகையில் சுட்டியுள்ளன. இப்படி ஒரு ஒற்றுமையும் அவற்றில் உண்டு.
அவைத் தலைவரின் உத்தரவு, அரசுக்கு செயற்கை யான பெரும்பான்மையை உருவாக்கிக்கொள்ளும் முயற்சி என்று சொல்கிறது ஒரு தீர்ப்பு. அந்த வகை முயற்சி அரசியல் வெளியைச் சார்ந்தது. மற்றொரு தீர்ப்பு அவைத் தலைவரின் உத்தரவில் உள்ள நிறை, குறைகளை ஆய்வதற்கில்லை என்று தனக்குத்தானே ஒரு வரம்பு விதித்துக்கொள்கிறது. அந்த உத்தரவு அரசியல் வெளியில் உள்ளது என்பதே இந்த வரம்புக்குக்கும் அடிப்படை. அதாவது, அவைத் தலைவரின் உத்தரவைப் பரிசீலிக்கலாம் என்றாலும், அப்படிப் பரிசீலிக்க வழியில்லை என்றாலும் இரண்டு நிலை களுக்குமே அடிப்படை ஒன்றுதான். அந்த உத்தரவு அரசியல் புலத்தில் உள்ளது என்பதே அடிப்படை. சட்டத்தின் சன்னமான வலைக்குள் சிக்கிக்கொண்டுள்ளது அரசியல்! மாறுபட்ட தீர்ப்புகள் அல்ல பிரச்சினை. ஜனநாயக அரசியலைச் சட்டச் சிக்கல்களாக நாமே சுருக்கிக்கொள்வதுதான் பிரச்சினை!
இப்படிப் பார்க்கும்போது, ஆட்சி அதிகாரம் நியாயமாக யாரிடம் இருக்க வேண்டும் என்பது தற்காலிகப் பிரச்சினையாகி நீர்த்துப்போகிறது. நிரந்தரப் பிரச்சினை எதுவென்றால், வழக்குகளே அரசியல் நடவடிக்கை ஆவதும், அரசியல் கட்சிகள் அதில் முனைப்பாக இருப்பதுமான இன்றைய போக்கு. இதற்குத்தான் நாம் அஞ்ச வேண்டும். அரசு நிர்வாகம் சட்டத்தை ஒட்டியதாக இருக்க வேண்டும். அரசியலும் சட்டத்தை மதிக்கலாம். ஆனால், சட்ட வியாக்கி யானம்தான் அரசியல் என்று ஆகி, நீரில் விழுந்த உப்பாக அதற்குள்ளேயே அது கரைந்துவிடக் கூடாது.
அன்றாட சோதனை
ஜனநாயகத்தில் தீர்வுகாண வேண்டியது மக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான். ஒரு உத்தரவு சரியா தவறா என்ற ஆய்வெல்லாம் இறுதியில் அந்தப் புள்ளிக்கு நகர்ந்து, அதோடு கலந்து ஒன்றாகிவிடும். ‘மக்கள் ஆதரவு யாருக்கு என்ற தீர்வைத்தான் தேர்தல் தெரிவிக்குமே, அதற்குள் என்ன அவசரம்?’ என்று நீங்கள் கேட்கலாம்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு, அரசாங்கத்துக்கு இரண்டு நியாயங்கள் வேண்டும். தேர்தல் வழியாக வரும் மக்களின் ஆதரவு ஒன்று. மற்றொன்று சட்ட மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு. சட்ட மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு என்பது அரசாங்கத்துக்கு வைக்கப்பட்ட அன்றாட சோதனை என்பார் அம்பேத்கர். அமெரிக்க அரசமைப்பிலிருந்து நம் அமைப்பு இந்த வழியில் வேறுபட்டது என்பதை அவர் பெருமை தொனிக்கும் அழுத்தத்தோடு சொல்வார். சட்ட மன்றப் பெரும்பான்மை என்ற அன்றாட சோதனையில் தமிழக அரசு அன்றைக்கு அன்றே தேர்ச்சிபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி அது தேர்ச்சிபெறுவது 18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கத்தால்தான் என்று ஒரு விமர்சனம் வருகிறது. அரசுக்கு மக்களின் ஆதரவு உண்டா என்பது தெளிவாகவில்லை என்பது அந்த விமர் சனத்தின் தவிர்க்க முடியாத தர்க்க நீட்சி.
இதற்குத் தீர்வு சொல்லும் விவாதப் புள்ளிக்கு சட்டமோ, நீதிமன்றமோ வராது. அந்தப் புள்ளியில் நிரந்தரமாக நின்றுகொண்டு இருப்பவர்கள் மக்கள். அவர்கள் தீர்ப்பைக் கேட்டுப் பெறுவது இப்போதைக்கு இயலாது. இப்படி தமிழக அரசியல் இப்போது ஒரு வழக்குக் கட்டுக்குள் இருக்கக் கூடாது! அரசியல் என்ற யானையை அந்த வெளியில் தொலைத்துவிட்டு சட்டம் என்ற பானைக்குள் அதைத் தேடக் கூடாது. அரசியலை அங்கே அடைக்க முடியாது என்று நம் தலைவர்கள் நம்ப வேண்டும்!
- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,
‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago