அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

By மு.இராமனாதன்

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5) நடக்கவிருக்கிறது. சரி பாதி வாக்காளர்கள் ஏற்கெனவே வாக்களித்துவிட்டார்கள். வாக்குச் சீட்டைப் பெற்று, வீட்டிலிருந்தோ அஞ்சல் வழியாகவோ வாக்களிக்கவும் வசதி உண்டு. பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் சாவடிகளிலும் வாக்குப் பெட்டிகளிலும் வாக்கைச் செலுத்தலாம். அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் இல்லை. மாகாண அரசுகள்தான் தேர்தலை நடத்துகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் இந்த வழிமுறைகளில் மாற்றம் இருக்கும். ஆனால் எல்லோரும் அதிபர் வேட்பாளருக்கு நேரடியாக வாக்களிப்பார்கள்.

வெகுமக்கள் வாக்கு: '538' எனும் இணையதளத்தின் நவம்பர் 1ஆம் தேதி வரையிலான கருத்துக்கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 47.9% வாக்குகள் பெறுவார்; குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 46.8% வாக்குகள் பெறுவார். அதாவது கமலா வெறும் 1.1%தான் முன்னணியில் இருக்கிறார். கணிப்புகள் 3% முன்பின்னாக இருக்கும் என்று அந்தத் தளங்களே தெரிவிக்கின்றன. இவை வெகுமக்கள் வாக்கு (popular vote) எனப்படும். இதில் கூடுதல் வாக்குகள் பெறுவதால் ஒருவர் அதிபராகிவிட முடியாது. 2016இல் ஹிலாரி கிளிண்டன்,டொனால்ட் டிரம்ப்பைவிட 28 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். 2000இல் அல் கோர் (ஜனநாயகக் கட்சி) ஜார்ஜ் புஷ்ஷைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம்பெற்றார். ஆனால் இருவராலும் அதிபராக முடியவில்லை. ஏன்? அவர்கள் தேர்வர் குழுவில் (electoral college) போதிய வாக்குகளைப் பெறவில்லை.

தேர்வர் குழுவின் பணி: அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருக்கின்றன. ஒன்றிய அரசின் சட்டங்கள் செய்வது இரண்டு அவைகள். முதலாவது, உறுப்பினர் அவை (House of Representatives) அல்லது கீழவை. இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் அதன் மக்கள்தொகைக்கேற்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். நாடு முழுமைக்கும் மொத்தம் 435 உறுப்பினர்கள். இரண்டாவது, செனட் அல்லது மேலவை. இதில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தலா இரண்டு உறுப்பினர்கள். மாகாணத்தின் பரப்போ மக்கள்தொகையோ பிரச்சினையில்லை. கலிபோர்னியாவுக்கு இரண்டு உறுப்பினர்கள். அலெஸ்காவுக்கும் இரண்டு உறுப்பினர்கள். இப்படியாக, 50 மாகாணங்களுக்கு 100 உறுப்பினர்கள்.

இவ்விரண்டு அவைகளில் இடம்பெறும் உறுப்பினர் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டுபிரதானக் கட்சிகளும் மேற்குறிப்பிட்ட தேர்வர் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பார்கள். தேர்வர் குழுவில் 538 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுபவர் அதிபராவார். இந்தத் தேர்வர் குழு வாக்குகளை வேட்பாளர்கள் எவ்விதம் பெறுகின்றனர்? இதில்தான் விநோதம்!

ஜார்ஜியா மாகாணத்துக்கு 16 தேர்வர் குழு வாக்குகள். 2020 தேர்தலில், இந்த மாகாணத்தில் ஜோ பைடன் 49.47% வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 49.24% வாக்குகளும் பெற்றனர். இதன்படி 16 தேர்வர் குழு வாக்குகளும் இரண்டு வேட்பாளர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது அப்படி நடப்பதில்லை. கூடுதல் வாக்குகள் பெற்ற வேட்பாளருக்கே 16 வாக்குகளும் போகும். இந்த எடுத்துக்காட்டில்,16 தேர்வர் குழு வாக்குகளையும் பைடன் பெற்றார். இதனால்தான் கூடுதலான வெகுமக்கள் வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் ஹிலாரி கிளிண்டனும் அல் கோரும் வெற்றிவாய்ப்பை இழந்தார்கள்.

ஊசல் மாகாணங்கள்: இதில் இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. 50 மாகாணங்கள் இருந்தாலும் இவற்றில் 40க்கும் மேற்பட்ட மாகாணங்கள் பராம்பரியமாக ஏதேனும் ஒரு கட்சியை ஆதரித்து வருபவை. எடுத்துக்காட்டாக, முன்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களில், கலிபோர்னியா ஜனநாயகக் கட்சிக்கும், அலெஸ்கா குடியரசுக் கட்சிக்கும் ஆதரவானவை. இப்படியான மாகாணங்களில் இரண்டு கட்சிகள் பெறும் வாக்குகளில் கணிசமான வேறுபாடு இருக்கும். அப்படி அல்லாத, கடும் போட்டி நிலவுகிற மாகாணங்களும் இருக்கும். இந்தத் தேர்தலில் அப்படியான மாகாணங்கள்: அரிசோனா, ஜார்ஜியா, மிஷிகன், நெவாடா, வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின். இவை ஊசல் மாகாணங்கள் (swing states) என்றும் போர்க்கள மாகாணங்கள் (battleground states) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த ஏழு மாகாணங்களையும் சேர்த்து 93 தேர்வர் குழு வாக்குகள் இருக்கின்றன. இந்த மாகாணங்களின் வெற்றி தோல்வி சில ஆயிரம் வாக்குகளில் தீர்மானமாகும். இந்த வாக்குகளைப் பெறுபவர்தான் அடுத்த அதிபர். அதாவது, சில மாகாணங்களின் சில ஆயிரம் வாக்குகள் ஒரு தேசத்தின் அதிபரைத்தீர்மானித்துவிடும். ஆகவே இரண்டு வேட்பாளர்களும் இந்த ஏழு மாகாணங்களில் தீவிரமாகப் பரப்புரையாற்றி வருகின்றனர்.

யார் எந்தப் பக்கம்?: இந்தத் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்த விஷயங்கள் கருக்கலைப்பும் குடியேற்றமும். முன்னதை ஜனநாயகக் கட்சியும் பின்னதைக் குடியரசுக் கட்சியும் முன்னெடுத்தன. கருக்கலைப்புக்கு மற்ற பல நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் நாடு தழுவிய அனுமதி இருந்தது. 2021இல் உச்ச நீதிமன்றம் அந்த உரிமையை ரத்துசெய்தது. இனி அந்தந்த மாகாணங்கள் கருக்கலைப்பை ஏற்கவோ தடை விதிக்கவோ செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற நீதியரசர்களை அதிபர்கள்தான் நியமிக்கிறார்கள் என்பதையும் தற்சமயம் ஒன்பது நீதியரசர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சி அதிபர்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகு குடியரசுக் கட்சி ஆட்சி செலுத்தும் 13 மாகாணங்களில் கருக்கலைப்புத் தடை செய்யப்பட்டுவிட்டது. இன்னும் சில மாகாணங்களில் அது விதிமுறைகளுக்கு உட்பட்டது. இதைத்தான் ஜனநாயக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

அடுத்து, குடியேற்றப் பிரச்சினை. டிரம்ப் தனதுஆட்சிக்காலத்தில் சட்டபூர்வமான குடியேற்றக்காரர்களைப் பெருமளவில் குறைத்தார். மெக்சிகோ எல்லையில் ஒரு சுவரைக் கட்டத் தொடங்கினார். பைடன் இந்தக் கட்டுமானத்தை நிறுத்தினார். மெக்சிகோ குடியேற்றக்காரர்களை, அவர்கள் சட்டபூர்வமாகவோ சட்டத்துக்குப் புறம்பாகவோ எவ்விதம் உள்நுழைந்தாலும், அவர்களைத் தடைசெய்ய வேண்டும் என்கிறார் டிரம்ப். அவர்கள் போதைப்பொருள் கடத்துகிறார்கள், உள்ளூர் வேலைவாய்ப்பைப் பறிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர், கமலா ஹாரிஸுடனான ஒரு விவாதத்தில் அவர்கள் குடிமக்களின் செல்லப் பிராணிகளைக் கொன்று தின்கிறார்கள் என்றார். இந்தப் பரப்புரை உள்ளூர்வாசிகளிடம் நன்றாக எடுபடுகிறது; கமலாவின் அணியினர் போதிய அளவில் அதை எதிர்கொள்ளவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்தத் தேர்தலில் கறுப்பினத்தவரும் சிறுபான்மையினரும் குடியேற்றக்காரர்களும் அதிக அளவில் கமலாவை ஆதரிக்கிறார்கள். வெள்ளை இனத்தவரில் அதிகமானோர் டிரம்ப்பை ஆதரிக்கிறார்கள். பெண்களில் அதிகமானோர், குறிப்பாக இளம் பெண்கள் கமலாவையும்; ஆண்கள், அதிகமும் இளைஞர்கள் டிரம்ப்பையும் ஆதரிக்கிறார்கள். நகரவாசிகள், தொழிற்சாலையில் பணியாற்றுவோரில் கணிசமானோர் கமலாவையும்; கிராமவாசிகள் விவசாயிகளில் அதிகம் பேர் டிரம்ப்பையும் ஆதரிக்கிறார்கள். போலவே, தாராளவாதத்தினரும் (liberals) வலதுசாரிகளும் பிரிந்து நிற்கிறார்கள்.

எதிரும் புதிருமாக நிற்கும் இந்த வேட்பாளர்கள் ஒன்றுபடும் புள்ளிகளும் உண்டு. அவற்றில் ஒன்று இஸ்ரேல் ஆதரவு. யார் அதிபராக வந்தாலும் பாலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்தத் தேர்தலில் இதுவும் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது. அரேபிய அமெரிக்கர்களும் இஸ்லாமியர்களும் பராம்பரியமாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள். அவர்களால் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க முடியாது.இந்தத் தேர்தலிலும் முடியாது. ஆனால் தங்கள்எதிர்ப்பைக் காட்ட அவர்களில் சிலர் தேர்தலைப்புறக்கணிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். பைடன் அரசின் தொழிற்கொள்கையில் அதிருப்தியுற்ற இடதுசாரிகளும் வாக்களிப்பதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களது புறக்கணிப்பு டிரம்ப்புக்குச் சாதகமாக அமையும்.

யார் வென்றால் இந்தியாவுக்கு நல்லது? டிரம்ப் அதிபரானால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேற விழையும் இளைஞர்களுக்கு விசா கெடுபிடிகள் கூடுதலாக இருக்கலாம். மற்றபடி யார் வந்தாலும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரியமாற்றம் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சீனாவுக்கான மாற்றாக இந்தியாவை அமெரிக்கா முன்னிறுத்தி வருகிறது. இந்தக் கொள்கை தொடரும்.

கமலா வெற்றி பெற்றால், அவர் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இருப்பார். இந்தியத் தாய்க்கும் கறுப்பினத் தந்தைக்கும் பிறந்த குடியேற்றக்காரர் அதிபரானார் என்கிற பெருமையும் அமெரிக்காவுக்குக் கிடைக்கும். டிரம்ப் வென்றாலும் அது வரலாற்றில் இடம்பெறும். இதற்கு முன்பும் பல தலைவர்கள் இரண்டு முறை அதிபர்களாக இருந்திருக்கிறார்கள் (ரீகன், புஷ், கிளிண்டன், ஒபாமா). ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக இரண்டுமுறை அதிபராக இருந்தவர்கள். டிரம்ப் தேர்வானால், ஒரு முறை அதிபராக இருந்து, அடுத்த முறைதோற்று, மூன்றாவது முறை போட்டியிட்டு அதிபராவது - வரலாற்றில் முதல் முறையாக இருக்கும். நான்கு கிரிமினல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளோடு அதிபராகிற முதல் நபராகவும் டிரம்ப் இருப்பார். இன்னும் இரண்டு தினங்களில் யார் புதிய அதிபர் என்பது தெரிந்துவிடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

26 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்