நாம் கண்காணிப்பாளராக மாறினால்தான் அரசுப் பள்ளிகளைக் காக்க முடியும்!

By வே.வசந்தி தேவி

ல்வி ஆண்டு தொடங்குகிறது. குழந்தைகளின் குறுகிய ஒரு மாத கால குதூகலம் முடிந்தது. நமது கல்வி அமைப்பின் அவலங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முன்னிறுத்தி, சிந்திக்க வேண்டிய நேரம். பாடத்திட்ட மாற்றம் இவ்வாண்டின் பாராட்டுக்குரிய பெரும் சாதனை. ஆனால், பாடத்திட்டம் மட்டுமே இன்றைய பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்தக் கல்வி அமைப்பும் சீர்திருத்தம் வேண்டி நிற்கிறது.

கல்வி இன்று அனைத்துக் குடும்பங்களின் மிகப் பெரும் தவிப்பு. அடித்தட்டு, கீழ் நடுத்தரவர்க்க மக்கள் மீள முடியாத கல்விக் கடனில் மூழ்கிக்கொண்டிருக்கின்றனர். அனைத்தையும் இலவசமாக அளிக்கும் அரசுப் பள்ளிகளை விட்டு, மாணவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அரசுப் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் மூடப்படு வதாகச் செய்திகள் வருகின்றன. அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்ற உண்மையோ, தனியார் பள்ளிகள் மேம்பட்டவை என்ற பிரமையோ - இதையெல்லாம் எப்படி மாற்றுவது? இருக்கின்ற அமைப்பில், இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி நம்முடைய கல்விச் சூழலை எப்படிப் பாதுகாப்பது?

சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அரசுகள் பொறுப்பற்று இருக்கும்போது, சட்டம் குறித்த புரிதல் மக்களிடையே முற்றிலும் இல்லாத நிலையில், கல்வி என்ற அடிப்படை வாழ்வாதாரத்தைப் பெறுவது எப்படி? நிலைமைக்கான மாற்றை எங்கே தேடுவது? ஜனநாயக நாட்டில் மாற்றம் பிறக்கும் மூலாதாரம் மக்கள் சக்தி ஒன்றே.

மக்கள் கையில் அதிகாரம்

சில மாநிலங்களில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மக்கள் கருவியாகக் கையில் எடுத்து, இயங்காத அரசு இயந்திரத்தை ஓரளவேனும் இயங்க வைத்திருக்கிறனர். ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் கூர்ந்து கண் காணித்து, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நன்கு செயல்பட வைத்திருக்கிறார்கள். அவற்றைப் போல், கல்வியில் சட்டம் அளித்திருக்கும், ஆனால் நடைமுறையில் பொய்த்துப்போயிருக்கும் அதிகாரங்களை மக்கள் கையிலெடுக்க வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு

கல்வி உரிமைச் சட்டம், அனைத்து அரசு.. அரசு உதவி பெறும் பள்ளிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தையும், பள்ளிக்கு வேண்டிய திட்டமிடும் அதிகாரத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுவிடம்தான் அளித்திருக்கிறது. இது என்ன குழு? யார் இதன் உறுப்பினர்? 20 பேர் கொண்ட இக்குழுவில் 75% பெற்றோர், பாதிப் பேர் பெண்கள், ஆசிரியர், உள்ளாட்சி உறுப்பினர், வெளியிலிருந்து ஒரு ஆர்வலர்.

குழுவின் அதிகாரங்கள்

பள்ளிக்குத் தேவையான அனைத்தும் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்தல்; அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, அவற்றைப் பெறுதல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல், நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுவதைக் கண்காணித்தல், ஆசிரியர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதையும், நன்கு கற்பிப்பதையும் உறுதிசெய்தல் மற்றும் பல. இத்தனை அதிகாரம் கொண்ட குழுக்கள் நம் பள்ளிகளில் இருக்கின்றனவா.. இயங்குகின்றனவா?

குழுக்கள் பெயரளவில்தான் இருக்கின்றன. பள்ளித் தலைமை ஆசிரியரோ, மற்றவரோ தன்னிச்சையாகக் குழுக்களை அமைக்கின்றனர். கூட்டம் நடந்ததாகக் கையேட்டில் எழுதி, உறுப்பினரின் கையெழுத்தைப் பெறுகின்றனர். பள்ளியில் எந்த மாற்றமும் நடப்பதில்லை. குழுக்கள் திறம்பட இயங்கினால்தானே பள்ளிகளின் குறைகள் தீர்க்கப்படும்?

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சட்டப்படி அமைக்கப்பட வேண்டும். பள்ளியின் மேற்பார்வை முழுமையாகக் குழுவின் கையில் இருக்க வேண்டும். பள்ளிகளில் உறுதிசெய்யப்பட வேண்டிய தரவரைவுகள் ( Norms and Standards) ஒவ்வொரு பள்ளியிலும் எத்தகைய அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று சட்டம் விரிவாகக் கூறுகிறது. அனைத்து அரசு, உதவி பெறும், தனியார், கட்ட ணம் வசூலிக்கும் பள்ளிகளிலும் அவசியம் இருக்க வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், கழிப்பறைகள், தண்ணீர், விளையாட்டு மைதானம், நூலகம் போன்றவையும், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் தகுதி அனைத்தும் சட்டத்தில் வலியுறுத்தப்படுகின்றன. இவை இல்லாத பள்ளிகள் இழுத்து மூடப்பட வேண்டும். பல பள்ளிகளில் கழிப்பறை உண்டு, தண்ணீர் இல்லை. போதுமான ஆசிரியர் இல்லை. பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை. கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர் இல்லை.

கல்வி உரிமைச் சட்டம் விதித்துள்ள தரங்கள் எல்லாப் பள்ளிகளிலும் நிறைவேற்றுவது அரசின் கடமை. இவற்றைக் கண்காணிப்பது குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் பொறுப்பு. நிறைவேற்றத் தவறு வதும், கண்காணிக்கத் தவறுவதும் சட்ட மீறல் மட்டுமல்ல, குழந்தை உரிமை மீறல் குற்றமுமாகும். ஒவ்வொரு ஊர் பள்ளியிலும் இந்த அடிப்படைகள் இருக்கின்றனவா என்பதைப் பள்ளி மேலாண்மைக் குழு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உறுதிசெய்ய வேண்டும்.

மாணவர் பங்கேற்பு

கல்வியின் பயனாளிகள் (stakeholders) மாணவர்கள். அதன் பங்குதாரர்களாக (share holders) அவர்களை ஏற்று, உரிமைகளை அவர்களுக்கு அளித்தால், அதன் பாதுகாவலர்களாகவும் திகழ்வார்கள். பள்ளியின் குறைகளைப் பட்டியலிட்டு, மாற்றம் தேட, மற்றவர்களை உந்துவார்கள்.

கிராம சபைகள்

அடுத்து, பள்ளிகள் கிராம சமுதாயத்தின் விலையுயர்ந்த சொத்து. அவற்றை மேம்படுத்துவது அதன் பொறுப்பு. ஆனால், கல்விப் பிரச்சினைகள் கிராம சபைக் கூட்டங்களில் எழுப்பப்படுவதே இல்லை. கிராம சபைகள் தான் இந்திய ஜனநாயகத்தின் ஆதார அமைப்புகள். உள்ளுர் சமுதாயம் குறித்த அனைத்து அதிகாரங்களும் அதன் கையில்தான் உள்ளன. ஆனால், கிராம சபைகள் நகைப்புக்குரியனவாகச் சீரழிந்து கிடக்கிறன. அவற்றின் அதிகாரம் அனைத்தும் நடைமுறையில் பறிக்கப்பட்டு, அதிகாரிகளும், அரசியலாளரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இன்று தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் இல்லை என்பதனால் மட்டும் அல்ல; அதற்கு முன்னும் இதே நிலைதான்.

ஆண்டு முழுவதும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே கூட வேண்டும். ஆட்சியாளர்கள் எழுதிக்கொடுத்த தீர்மானங்களை மட்டுமே, மாநிலத்தின் அனைத்துக் கிராம சபைகளும் நிறைவேற்ற வேண்டும். கேரளத்தில் கிராம சபைகள் சிறப்பாக இயங்கி, தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்கின்றன. கிராம சபைகள் தங்கள் ஊர் அரசு, தனியார் பள்ளிப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

என்ன ஆயிற்று எங்கள் வரிப்பணம்?

நாடு முழுதும், அனைத்துப் பொருட்கள் மீதும் 3% கல்வி வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும், நகர சபையிலும், மாநகராட்சியிலும் வசூலிக்கப்படும் கல்வி வரி, அப்பிரிவுப் பள்ளிகளுக்குச் செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது? அது எங்கே போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன் படுத்தி, ஒவ்வொரு பஞ்சாயத்து / நகரம் / மாநகரம் ஆகியவற்றில் வசூலிக்கப்படும் வரித்தொகை குறித்த விவரங் கள் பெறப்பட்டு, தங்கள் பகுதி அரசுப் பள்ளிகளுக்குச் செலவழிக்க வற்புறுத்தலை உருவாக்க வேண்டும்.

ஊருக்குப் பத்துப் பேர்

பூனைக்கு மணி கட்டுவது யார்? செயலிழந்து கிடக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கும், கிராம சபைக்கும் உயிரூட்டுவது யார்? ஒவ்வொரு ஊரிலும், நகரங்களின் ஒவ்வொரு பள்ளியைச் சுற்றிய சமுதாயத்திலும் பத்துப் பேர், அக்கறை கொண்ட ஆர்வலர்கள் முன்வந்து கைகோத்தால் சாதிக்க இயலாததா? வெள்ளமும் புயலும் தாக்கும்போது, திரண்டு எழும் லட்சியப் படை, ஜீவாதாரமான கல்வி காக்க எழுந்து வாராதா? உணர்வுகொண்ட, உறுதிகொண்ட, ஒன்றுபட்ட மக்கள் சமுதாயம் இன்றைய சீரழிவுக் காலத்திலும் கல்வியைக் காக்க முடியும். ஜனநாயகம் காக்க முடியும். கண்காணிப்போம்.. கல்வி காப்போம்!

- வே.வசந்திதேவி,

தலைவர், பள்ளிக் கல்வி மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு, புதுச்சேரி.

தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்